Lankamuslim.org

இது மைத்திரியின் வீட்டு திருமணம் போன்ற தனிப்பட்ட விடயமல்ல !!

with one comment

eng-abdurrahuman“சிறுபிள்ளைத்தனமான பொறுப்பற்ற நடவடிக்கைகளை நிறுத்தி, அரசியல் சாசனத்தையும் நாட்டின் சட்டத்தையும் மதித்து நடப்பதற்கு ஜனாதிபதி முன்வந்தால் மாத்திரமே இன்றைய அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண முடியும்”
NFGG பிரதி தவிசாளர் அப்துர் ரஹ்மான்

“நாட்டைப் பாதுகாப்பதற்காக தனது உயிரையே கொடுக்கத்தயாராக இருப்பதாக வாக்குறுதியளித்து , ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன இன்று தனது உயிருக்கு அச்சுறுத்தல் என்று காரணம் சொல்லி முழு நாட்டையும் பணயம் வைத்திருக்கிறார். நாட்டில் நிலவும் தீவிர அரசியல் நெருக்கடி நிலைக்கு பொதுத்தேர்தல் கூட தீர்வாக முடியாது. தனது சிறுபிள்ளைத்தனமான பொறுப்பற்ற நடவடிக்கைகளை நிறுத்தி,
அரசியல் சாசனத்தையும் நாட்டின் சட்டத்தையும் மதித்து நடக்க ஜனாதிபதி முன்வருவது மாத்திரமே இதற்கான தீர்வாகும்” என நல்லாட்சிக்கான
தேசிய முன்னணியின் (NFGG) பிரதித்தவிசாளர் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் தீவிர அரசியல் நெருக்கடி குறித்து வெளியிட்டுள்ள தனது அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பொறியிலாளர் அப்துர் ரஹ்மான் தனதறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

“ இந்நாட்டு வரலாற்றில் கண்டிராத அரசியல் நெருக்கடி நிலையினை கடந்த ஒக்டோபர் 26ம் திகதி ஜனாதிபதி மைத்திரி தொடங்கி
வைத்திருந்தார். நாட்டின் சட்ட ஒழுங்கினை நாசமாக்கி , பொதுச்சொத்துக்களை கொள்ளையடித்து, இனவாத சக்திகளை ஊக்கி வளர்த்து, மக்களின் உரிமைகளை நசுக்கிய முன்னாள் ஆட்சியாளர்களிடமிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காகவே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிக்கு மக்கள் வாக்களித்தனர். ஆனால் இன்று அதே அராஜக முன்னாள் ஆட்சியாளர்களின் கைகளில் மீண்டும் மைத்திரி ஆட்சியை கையளித்திருப்பதானது, அவரை நம்பி வாக்களித்த 62 லட்சம் மக்களுக்கும் அவர் இழைத்த மிகப்பாரிய துரோகமாகும். தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதனாலேயே தான் இவ்வாறான முடிவிற்கு தள்ளப்பட்டதாக அவர் கூறிவருவதானது சிறுபிள்ளைத்தனமானதாகும். உண்மையில் தன்னையும், தனது குடும்பத்தையும் அழிக்கவிருந்தார்கள் என அவரால் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் கைகளிலேயே இன்று அவர் ஆட்சி அதிகாரத்தினை வழங்கியுள்ளார் என்பதை மறந்து விட்டார்.

இலங்கையில் நிலவி வருகின்ற மிகவும் பிற்போக்கான, ஜனநாயக-சட்ட விரோதமான சூழ்நிலைகளை பற்றி இன்று உள்நாட்டு மக்கள் மாத்திரமன்றி முழு உலகமும் மிகுந்த கவலை கவலை கொண்டுள்ளார்கள். ஒரு பிரதமரை நியமிப்பதாயினும் நீக்குவதாயினும், அதற்கான தெளிவான சட்டவரைபுகள் எமது அரசியல் யாப்பில் காணப்படுகின்றன. ஒன்றில் பிரதமர் தானாக முன்வந்து இராஜினாமா செய்வது அல்லது பாராளுமன்றத்தில் அவரது அரசாங்கம் முறையாக பதவி கவிழ்க்கப்படுதல் வேண்டும். பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டு அது தோற்கடிக்கப்பட்டிருந்த நிலையிலேயே கடந்த 26ம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்சவை புதிய பிரதமராக நியமிப்பதாக ஜனாதிபதி அதிரடியாக அறிவித்தார். இது நாட்டின் அரசியல் யாப்பிற்கும், பாராளுமன்ற ஜனநாயகத்திறகும் முற்றிலும் முரணான ஒன்றாகும். பாராளுமன்றில் மஹிந்த ராஜபக்சவிற்கு போதிய பெரும்பான்மை இல்லை என்பதினை அறிந்து வைத்திருந்த நிலையிலேயே ஜனாதிபதி இந்த முடிவினை அறிவித்திருந்தார். இந்த சட்டவிரோத அரசாங்கத்திற்கு பாராளுமன்ற ஆதரவினைப் பெற்றுக்கொள்வதற்காக பெரும் பிரயத்தனங்களை மஹிந்த-மைத்திரி அணியினர் மேற்கொண்டனர். எனினும் பாராளுமன்றத்தில் அதற்கான பெரும்பான்மையினை பெற்றுக்கொள்ள முடியாது போன சந்தர்ப்பத்தில் செயற்கையாக குறுக்கு வழியில் அதனை சாதிக்க முயுற்சித்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களை பல நூறு மில்லியன்களுக்கு பேரம்பேசி பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முயற்சித்தனர். அதுவும் தோற்றுப்போன நிலையில் ஜனநாயக வழி முறைக்கு விரோதமான முறையில் பாராளுமன்றத்தை ஜனாதிபதி ஒத்திவைத்தார்.

எந்த முயற்சிகளினாலும் பாராளுமன்ற பெரும்பான்மையினை பெற்றுக்கொள்ள முடியாது போன போது அவர் பாராளுமன்றத்தைக் கலைத்தார். இதன் மூலம் கடந்த ஜனாதிபதித்தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணைக்கிணங்க உருவாக்கப்பட்ட 19வது திருத்தச்சட்டத்தினை அவர் மிக அப்பட்டமாக மீறினார். இதற்கான இடைக்கால தடை உத்தரவினை உச்ச நீதிமன்றம் வழங்கியதன் பலனாக பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்பட்டது.
ஆரம்ப நாட்களில் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வுகளின்போது, தங்களின் இயலாமையை மறைப்பதற்காக பாராளுமன்ற செயற்பாடுகளை முடக்குவதற்கான வன்முறைகளை பாராளுமன்றத்திகுள்ளேயே மஹிந்த-மைத்திரி அணியினர் அரங்கேற்றினர். சபாநாயகர் உட்பட இந்த நாட்டின் பொலீஸ் துறையினரையும் மிகவும் அவமதிக்கும் வகையிலும் முழு உலக நாடுகளும் கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் இவர்களுடைய காடைத்தனமான செயற்பாடுகள் அமைந்திருந்தன. இவையனைத்தும் மைத்திரியின் ஆசீர்வாதத்துடனேயே நடைபெற்றது என்பது இங்கு ஊன்றிக்கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும். பாராளுமன்ற பெரும்பான்மையினை மஹிந்தவினால் நிரூபிக்க முடியும் என ஜனாதிபதி கூறி வந்த நிலையில், இதுவரை 5 தடவைகள் பாராளுமன்றம் கூடி,எதிரணியினரால் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டு மஹிந்த அணியினர் தோற்கடிப்பட்டுள்ளனர்.

இருப்பினும், சிறு பிள்ளைத்தனமான காரணங்களை கூறிக்கொண்டு , பாராளுமன்றத்தின் பெரும்பான்மை தீரமானங்களயும் அரசியல் சாசனத்தின் சட்ட விதிமுறைகளையும், ஏற்று நடப்பதற்கு மைத்திரி மறுத்து வருகிறார். இந்நிலையில் ஐ.தே.மு. தரப்பினருக்கு அறுதிப்பெரும்பான்மை இருப்பதனை த.தே.கூட்டமைபினரால் மைத்திரிக்கு அனுப்பி வக்கப்பட்ட கடிதம் உறுதி செய்துள்ளது.

இந்நிலையலும் கூட, எதிர்வரும் 5ம் திகதி மீண்டும் வாக்கெடுப்பினை நடாத்தி பெரும்பான்மையினை நிரூபிக்கும்படி அவர் ஐ.தே.மு. அணியினரைக் மைத்திரி கேட்டுக்கொண்டுள்ளார். அவ்வாறு , மீண்டும் பெரும்பான்மையினை நிரூபித்தாலும் கூட் ‘தனக்கு ரணிலை பிடிக்கவில்லை, தனக்கு பிடித்தவரையே பிரதமராக நியமிப்பேன்’ என அவர் தொடரந்தும் அடம் பிடித்து வருகின்றார். இந்த விடயத்தில் அரசியல் சாசனம் என்ன சொல்கின்றது என்பதனை அவர் பொறுப்புடன் உணரத்தவறிவிட்டார். பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினைப் பெற்ற ஒருவரை பிரதமராக நியமிக்க முடியும் என்றுதான் அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்டுள்ளதே தவிர, ஜனாதிபதிக்கு பிடித்த ஒருவர்தான் பிரதமராக இருக்க முடியும் என்று அதில் எங்கும் சொல்லப்படவில்லை. ஜனாதிபதியொருவர், பிரதமரை நியமிப்பதென்பது நாட்டில் ஸ்திரமான அரசாங்கத்தை கொண்டு செல்வதற்கான மிகப் பொறுப்பு வாய்ந்த ஒரு விடயமே அன்றி அது அவரது வீட்டு திருமணம் போன்ற தனிப்பட்ட விடயமல்ல அல்ல.

இறுதியாக பாராளுமன்ற பெரும்பான்மையினை தாங்கள் பெறுவது சாத்தியமில்லை என்பதனை முடிவுற அறிந்து கொண்ட மைத்திரி- மஹிந்த தரப்பினர் நாட்டின் தற்போதைய இறுக்கமான அரசியல் நிலைக்கு பொதுத்தேர்தல் ஒன்றிற்கு செல்வதே ஒரே தீர்வு என தெரிவித்துள்ளனர்.
பொதுத்தேர்தல் ஒன்றின் மூலம் அரசாங்கம் ஒன்றை தீர்மானிப்பது உண்மையில் அரசியல் யாப்பிற்கோ அல்லது ஜனநாயகத்திற்கோ முரணானது
அல்ல. எனினும் இந்தத்தேர்தல் நடாத்தப்பட வேண்டுமென கோரப்படுகின்ற காலமும் நோக்கமும் மிகத்தவறானதாகும். கபடத்தனமானதாகும். அப்படியே இத்தேர்தலில் UNP தலைமையிலான கூட்டணி வெற்றிபெறுகின்ற பட்சத்தில்கூட தனக்குப்பிடித்தவர்களையே பிரதமராக நியமிப்பேன் என ஜனாதிபதி குதர்க்கமாக நடந்து கொள்ள மாட்டார் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் கிடையாது.

எனவேதான் நாட்டில் நிலவும் தீவிர அரசியல் நெருக்கடி நிலைக்கு பொதுத்தேர்தல் கூட தீர்வாக முடியாது. ஜனாதிபதி தனது சிறுபிள்ளைத்தனமான பொறுப்பற்ற நடவடிக்கைகளை நிறுத்தி, அரசியல் சாசனத்தையும் நாட்டின் சட்டத்தையும் மதித்து நடக்க முன்வந்தால் மாத்திரமே இதற்கு தீர்வு காண முடியும்”

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 3, 2018 இல் 2:40 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

 1. உறுதியான அரசாங்கம் ஒன்றினை அமைக்க பிரதான இரு கட்சிகளுக்கும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில், யாரை பிரதமராக நியமிப்பது என்பது குறித்து இறுதித் தீர்மானம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே எடுக்க வேண்டும் என நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

  சர்வதேசத்தின் தேவைக்கு ஏற்ப இந்நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது எனவும் அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

  காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலையின் வருடாந்த கலை நிகழ்வு நேற்று (02) நடைபெற்றது.

  இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

  அமைச்சர் அங்கு கருத்து தொடர்ந்து தெரிவிக்கையில், இந்த நாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்படுத்திய அரசியல் மாற்றத்தினால் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமையானது அரசியலில் பெரும் பிரச்சினைக் குரிய விடயமாக மாறியுள்ளது. இந்த தீர்மானம் வேறு எந்தவொரு தனிப்பட்ட சொந்தப் பிரச்சினைகளுக்காக எட்டப்பட்டவை அல்ல. முற்று முழுதாக, நாட்டின் நன்மை கருதியே இந்த தீர்மானம் ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்டது.

  இலங்கை நாட்டையும், மக்களையும், தேசிய சொத்துக்களையும் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த வளம் பொருந்தியதொரு நாட்டை கையளிக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

  குறிப்பாக, இன்று அரசாங்கத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆட்சியிலுள்ள எமது அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. இந்நிலையில், எதிர்கட்சிகள் இணைந்து அரசுக்கு எதிராக சட்டமூலங்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளன.

  உண்மையில் இவ்வாண்டு இறுதியை நோக்கி நகரும் இந்த வேளையில் நாங்கள் பல்வேறுபட்ட தேவைகளுக்காகவும், குறைநிறப்பு திட்டங்களுக்காகவும் பாராளுமன்றத்தை அனுக வேண்டிய தேவை எமக்குள்ளது. பாராளுமன்றத்தில் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவு திட்ட அறிக்கை இதுவரையில் சமர்ப்பிக்கப்படாத நிலையில் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் எந்தவிதமான பணத்தையும் யாருக்காகவும் அரசாங்கம் செலவு செய்ய முடியாது.

  ஆனால், டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை எமக்கு செலவு செய்யும் அதிகாரம் இருக்கின்றது. பாராளுமன்றத்தில் பிரேரணைகளை சமர்ப்பித்து எமது நிர்வாகங்களை முடக்கலாம் என்ற எதிர்கட்சிகள் நினைக்கின்றன. அது சட்டரீதியான ஒரு செயல் அல்ல. இந்த அரசாங்கத்தையும், அமைச்சர்களையும் பாராளுமன்றம் ஏற்கனவே அங்கீகரித்துள்ளது.

  அவ்வாறே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனநாயகத்திற்கு விரோதமான எந்தவொரு செயற்பாட்டையும் செய்யவில்லை. அதற்கு அவர் ஒருபோதும் ஆயத்தமாக இருக்கவே இல்லை. இந்த நாட்டை சிறந்ததொரு பிரதமரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே ஜனாதிபதியின் தேவையாக இருந்தது. இதற்காகவே ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற பல கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

  ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து எவரேனும் ஒருவரை பிரதமராக நியமித்து கடந்த 26 ஆம் திகதிக்கு முன்னர் இருந்த தேசிய அரசாங்கத்தை மீண்டும் அமுல்படுத்தினால் அதற்கான ஒத்துழைப்புக்களை தமது கட்சி வழங்குவதாக தமது நிலைப்பாட்டை ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

  எனவே, ஜக்கிய தேசிய கட்சியிலிருந்து எவரேனும் ஒருவரை பிரதமராக நியமிப்பதற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சி பெரும்பான்மையை நிரூபிக்கின்ற வேளையில் ரணில் விக்கிரசிங்கவை பிரதமராக்குவதற்காக 113 ஆசனங்களை அவர் பெற்றிருக்கவில்லை.

  எதிர்கட்சியிலிருந்து ஒரு சிலரே ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்குவதற்கு விரும்புகின்றனரே தவிற எழுத்து மூலமாக இதுவரையில் அதற்காக எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வில்லை. 100 பேர் மாத்திரமே ரணில் விக்கிரமசிங்குவுக்கு ஆதரவாக இருக்கின்றார்கள். அதேவேளை, 103 பேர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக இருக்கின்றார்கள்.

  ஆகவே, மஹிந்த ராஜபக்ஷவை விட 113 ஆசனங்களை ஒருவர் பெருவராக இருந்தால் அவரை பிரதமராக நியமிப்பதற்கு ஜனாதிபதி தயாராகவே உள்ளார். அத்துடன், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீண்டும் வாபஸ் பெறலாமா என்றும் அல்லது நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதா என்பது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் நாம் கலந்துரையாடிக் கொண்டிருக்கின்றோம். விரைவில் ஒரு நல்லதொரு தீர்மானத்தை எட்டவுள்ளோம்.

  யாரை பிரதமராக நியமிப்பது என்று கூறமுடியாது அந்த தீர்மானத்தை ஜனாதிபதியே எடுக்கவேண்டும். வெளிநாட்டு ஏகாதிபத்தியத்தை கொண்டு இந்நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு ஒருபோதும் நாங்கள் இடமளிக்க மாட்டோம் என நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மேலும் தெரிவித்துள்ளார்.

  Ajmal

  திசெம்பர் 3, 2018 at 5:43 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: