Lankamuslim.org

மூன்றாவது சக்தியொன்றைக் கட்டியெழுப்ப ஒன்றுபட வேண்டும்.

leave a comment »

NFGG- SRI LANKAநல்லாட்சிக்கான தேசிய முன்னணி வேண்டுகோள்: 2015 ஜனவரி 08 ஆம் திகதி இந்த நாட்டின் பெரும்பான்மையானோர் -சுமார் 62 லட்சம் வாக்காளர்கள்- பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு ஒரு ஆணையை வழங்கினர். இதே ஆணையும் கடப்பாடும் ஜனாதிபதிக்கு மட்டுமல்ல, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் உள்ளது.

எனினும், இந்த மக்கள் ஆணையை இரு தரப்பினருமே முறையாக மதித்து செயற்படவில்லை என்பது கவலைக்குரியது மட்டுமல்ல, இந்நாட்டை பெரும் அழிவுப் பாதைக்கும் இட்டுச் சென்றுள்ளது. ஜனநாயக அரசியலில் மக்கள் ஆணையை மதித்து நடப்பதே அரசியல் தர்மமாகும். எனவே, இனிமேலாவது அன்று மக்கள் வழங்கிய ஆணையை மதித்து நடக்க வேண்டுமென நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இரு தரப்பினரையும் வேண்டிக் கொள்கிறது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலை குறித்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2015 ஜனவரி 08 மக்கள் ஆணையை மதிப்பதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு முதன்மையான கடமைப்பாடும் பொறுப்பும் உள்ளது. அவரை முன்னிறுத்தியே 62 லட்சம் மக்கள் தமது ஆணையை வழங்கினர். எனவே, அந்த ஆணையை மதித்து, மக்களுக்கு நம்பகமாக நடந்து கொள்வது ஜனாதிபதியின் முதன்மையான கடப்பாடும் அரசியல் தர்மமுமாகும். இதே கடப்பாடு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் உள்ளது என்பதையும் இங்கு வலியுறுத்துகிறோம்.

2015 ஜனவரி 08 மக்கள் ஆணை இந்த நாட்டில் ஆட்சி மாற்றத்தையல்ல (Regime change) – ஆட்சி முறை மாற்றத்தையே (Sytem change in Governance) வேண்டி நின்றது. அதை மைத்திரி – ரணில் இரு தரப்பினரும் மதித்து செயலாற்ற வேண்டும். அதற்காகவே நாட்டு மக்களும், சிவில் அமைப்புகளும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உட்பட பல அரசியல் கட்சிகளும் தமது ஆதரவைத் தெரிவித்தன.

இந்த அரசியல் குழப்பங்களுக்கு காரணமாக அமைந்த ரணில் – மைத்திரி தரப்பு முரண்பாடுகள் மக்கள் நலனையோ நாட்டு நலனையோ அடிப்படையாகக் கொண்டதாக இருக்கவில்லை. ஒருவருக்கு கழுத்தறுத்து விட்டு அடுத்தவர் அதிகாரக் கதிரையைக் கைப்பற்றும் போட்டியே இதற்குக் காரணமாகும்.

எனினும், கடந்த 2018 ஒக்டோபர் 26 ஆம் திகதியன்று, ஏற்கனவே மக்களால் தோற்கடிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதியை அதிரடியாக பிரதமராக நியமித்தது, நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதியின் இந்த செயற்பாடானது, அவரை நம்பி வாக்களித்த 62 லட்சம் மக்களின் முதுகில் குத்திய துரோகமாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளது. ஜனாதிபதியின் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை- அடிப்படை அரசியல் தர்மத்திற்கு முரணான செயலை- நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. அரசியலமைப்பை மதித்து செயலாற்ற வேண்டியது, ஜனாதிபதியின் அடிப்படைக் கடமையாகும்.

இங்கு ஒரு விடயத்தை வலியுறுத்துவது மிக அவசியம். 2015 ஜனவரி 08 இல் மக்கள் வழங்கிய ஆணைக்கு செய்யப்பட்ட துரோகம் என்பது, 2018 ஒக்டோபர் 26 ஆம் திகதி தொடங்கிய ஒன்றல்ல. ரணில் – மைத்திரி ஆட்சிப் பொறுப்பேற்ற காலத்தின் ஆரம்ப நாட்களிலிருந்தே தொடர்ச்சியாக பல விதத்திலும் இது நடந்தே வந்துள்ளது.

19 ஆவது திருத்தச் சட்டம், தகவலறியும் சட்டம் போன்ற ஓரிரு முன்னேற்றகரமான சட்டத் திருத்தங்கள், ஜனநாயக சூலில் ஏற்பட்ட முன்னேற்றம் தவிர, நடைமுறையில் மக்கள் எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை. இப்போது மைத்திரியால் அரவணைக்கப்பட்டிருக்கும் நபர்களை, ரணிலும் தனது சொந்தத் தேவைகளுக்காக வேறு வழிகளில் அரவணைத்து பாதுகாத்தே வந்துள்ளார். ஆக, 62 லட்சம் மக்களின் ஆணைக்கு செய்யப்பட்ட துரோகத்தில் ரணில் தரப்புக்கும் கணிசமான பங்கிருக்கிறது.

2014 டிசம்பர் மாதம் 01 ஆம் திகதி, காலம் சென்ற மதிப்புக்குரிய மாதுளுவாவே சோபித தேரரின் தலைமையில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன், சிவில் மற்றும் அரசியல் அமைப்புகள் செய்து கொண்ட உடன்படிக்கையினை மீறும் செயலாகவும் இது அமைந்துள்ளது. அந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட ஒரு தரப்பு என்றவகையில், நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கும் இவர்கள் அனைவரும் துரோகமிழைத்துள்ளனர்.

குறிப்பாக, ஜனாதிபதியின் இந்தத் துரோகத்தை பெரும் வரலாற்றுத் துரோகமாகவே நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கருதுகிறது. ஒரு வகையில் ரணிலும் இதில் பங்குதாரர்தான் என்ற அடிப்படையில், இதற்குரிய தக்க பாடத்தை உரிய தருணத்தில் மக்கள் இவர்களுக்குப் புகட்டுவார்கள் என்று நம்புகிறோம்.

2015 ஜனவரி 08 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும், 2015 ஓகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலிலும், மக்கள் தமது ஆணையை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளது, அடுத்த தேர்தல் வரையுள்ள காலகட்டத்திற்காகும்.

ஆனால், அந்தக் கால எல்லை முடிவதற்குள் ஜனாதிபதி அவர்கள் அரசாங்கத்தைத் தட்டிப்பறித்து, மக்களால் தோற்கடிக்கப்பட்ட சக்திகளிடம் ஒப்படைப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார், ஜனாதிபதியின் இந்த செயற்பாட்டை எந்தவகையிலும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல் தர்மத்திற்கு முரணான இந்த செயற்பாட்டிற்கு துணைபோகின்றவர்களும் இந்த வரலாற்றுத் துரோகத்தின் பங்காளர்களாகவே கருதப்படுவர்.

மேலும், 2015 ஜனவரி 08 மாற்றத்தின் முக்கிய பங்குதாரர்களாக இருந்து செயற்பட்ட அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள், தொழிற் சங்கங்கள் ஜனாதிபதியின் இந்த தன்னிச்சையான முடிவுக்கு துணைபோகக் கூடாது என்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வேண்டிக் கொள்கிறது.

பாராளுமன்றத்தில் எந்தவொரு தரப்பும் பெரும்பான்மையைப் பெற்றிராத சூழலில், 2015 இன் மக்கள் ஆணையின் கால எல்லை முடியும் வரை அரசாங்கத்தைத் தொடர்ந்தும் கொண்டு செல்கின்ற பொறுப்பு பாராளுமன்றத்திற்கே உள்ளது.

பாராளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கைகொண்டு மக்களின் வாக்குகளைப் பெற்று, தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்ற 225 உறுப்பினர்களும் தமது கட்சி அரசியல் பேதங்களை மறந்து, மக்களின் ஆணையை- நாட்டின் பொது நன்மையை – மதித்து நடப்பதே அரசியல் தர்மமாகும்.

இப்போது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னால் இரண்டு தெரிவுகள் உள்ளன.

1) 2015 மக்களாணையை மதித்து அடுத்த தேர்தல் வரைக்கும், 2015 இல் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கத்தை தொடர்ந்தும் கொண்டு செல்வதற்கு துணைபுரிதல். அல்லது,

2) வழமையான சாக்குப் போக்குகளைச் சொல்லி தமது சுயநல அரசியலை முதன்மைப்படுத்தி ஜனாதிபதியின் தன்னிச்சையான முடிவுக்குத் துணை போதல்.

இந்த இரண்டு தெரிவுகளில் பாராளுமன்றத்தில் உள்ள கட்சிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் எதனைத் தெரிவுசெய்யப் போகின்றார்கள் என்பதனை மக்கள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கின்றனர்.
எனவே பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகள் – அதிலும் சிறுபான்மை சமூகத்தைப் பிரதி நிதித்துவப்படுத்தும் கட்சிகள்- பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். குறிப்பாக, முஸ்லிம் கட்சிகள் கூடிய பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வது காலத்தின் தேவையாகும்.

2015 மாற்றம் என்பது வெறும் மரபு ரீதியான கட்சி அரசியல் அடிப்படையில் நடைபெற்ற மாற்றமல்ல. மாறாக, இலங்கையின் சமூக, அரசியல், பொருளாதாரப் போக்கில் பல்வேறு மாற்றங்களை முன்நிறுத்தி மேற்கொள்ளப்பட்ட மாற்றம். இனப் பிரச்சினைத் தீர்வு, சமாதான சகவாழ்வு, ஊழலற்ற நிருவாகம், பொருளாதாரத்தைக் கட்டுயெழுப்புதல், ஜனநாயக சூழலைப் பேணிப் பாதுகாத்தல் போன்ற அடிப்படையான மாற்றங்களைச் செய்வதற்கே இந்த அரசாங்கத்திற்கு ஆணை வழங்கப்பட்டது. ‘அதற்காகவே ஐக்கிய தேசியக் கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்த தேசிய அரசாங்கத்தை நாங்கள் உருவாக்குகின்றோம்’ எனவும் அப்போது மக்களுக்குச் சொல்லப்பட்டது. இது மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

எனினும், கடந்த நான்கு வருட கால கசப்பான அனுபவங்களும், ஜனாதிபதியினதும் பிரதமரதும் செயற்பாடுகளும் மிகுந்த ஏமாற்றத்தையே தந்துள்ளன. வழமை போலவே மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை மறந்துவிட்டு, அரசியல் காய் நகர்த்தலுக்காகவே தத்தமது பதவிகளை இரு தரப்பினரும் பாவித்து வந்தனர். இதன் விளைவாகவே நாடு இன்று பெரும் குழப்ப நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது. இதற்கான முழுப் பொறுப்பையும் ஜனாதிபதியும், பிரதமருமே ஏற்க வேண்டும்.

சுதந்திரத்தின் பின், தொடர்ந்தும் எமது தேசத்தை மாறி மாறி ஆட்சிசெய்து வந்த ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கங்கள், 70 வருடங்களாக மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை மீறியே ஆட்சி செய்து வந்துள்ளன. தமக்குக் கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இரண்டு பிரதான கட்சிகளும் நாட்டை முன்னேற்றுவதற்குப் பதிலாக, தமது கட்சிசார் நலன்களை முதன்மைப்படுத்தி, அரசியல் காய் நகர்த்தல்களுக்காகவே அதிகாரத்தையும் சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தி வந்துள்ளனர்.

2015 இல் இரண்டு பிரதான கட்சிகளும் சேர்ந்து ஆட்சியமைத்தபோது, இதற்கு மாற்றமான ஒரு சூழ்நிலையையே மக்கள் எதிர்பார்த்தனர். ’70 வருடங்களாக பிரிந்திருந்து செய்யமுடியாததை, நாமிருவரும் இணைந்து செயற்படுத்துவோம்’ என்று மக்களுக்கு நம்பிக்கையூட்டியே ஜனாதிபதியும், பிரதமரும் ஆட்சியைக் கைப்பற்றினர்.

ஆனால், மக்களின் எதிர்பார்ப்பிற்கு மாற்றமாக, கடந்த காலத்தை விட மிக மோசமான கட்சி அரசியல் அதிகாரப் போட்டிக்குள் இருவரும் சிக்கிக்கொண்டனர். ஒரே அரசாங்கத்துக்குள் இருவரும் சமாந்தரமாகப் பயணிக்கத் தொடங்கினர். இதனால்தான் எமது நாடு இன்று மிக மோசான அரசியல் குழப்பத்திற்குள் தள்ளப்பட்டுள்ளது,

யார் பிரதமர் என்பதை விட, நாட்டுக்கும் மக்களுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் எது அத்தியாவசியம் என்பதே நமது கவனத்திற்குரிய விடயமாக இருக்க வேண்டும். அந்த அடிப்படையிலேயே விடயங்கள் முதன்மைப்படுத்தப்பட வேண்டும். நாட்டின் பொருளாதாரம் மரணப் படுக்கையில் கிடக்கும் இந்த சந்தர்ப்பத்தில், அரசியல் ஸ்திரத் தன்மை என்பது முதன்மையான விடயமாகும்.

மூன்று வாரங்களுக்கு பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அரசியல் குழப்பம் இன்னும் தீவிரமடையப் போகின்றது. இது நாட்டின் ஸ்திரத் தன்மையையும் பொருளாதாரத்தையும் கடுமையாகப் பாதிக்கப் போகின்றது. எனவே, ஜனநாயக வழியிலும், அரசியலமைப்பு சட்டத்திற்கு அமைவாகவும், ஒரு சில தினங்களுக்குள் இந்த அவசியமற்ற இழுபறி நிலை முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.

இந்த இரண்டு பிரதான கட்சியினரும், தனித்தும் இணைந்தும் நாட்டைக் கட்டியெழுப்பத் தகுதியற்றவர்கள் என்பதனை நாட்டு மக்களுக்கு நிரூபித்து விட்டார்கள். தொடர்ந்தும் இவர்களின் கைகளில் இந்த நாட்டை விட்டுவைப்பது மிகமோசமான நிலைக்கே இட்டுச் செல்லும்.

எனவே, இந்நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு, இந்தாட்டின் மீது உண்மையான பற்றும், தூரநோக்கும் கொண்ட பலமான மூன்றாவது அரசியல் சக்தியொன்றின் அவசியம், காலத்தின் தேவையாக மாறியுள்ளது. இவ்வாறானதொரு மூன்றாவது சக்தியைக் கட்டியெழுப்புவதற்கு, இன, மத, கட்சி வேறுபாடின்றி அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும். குறிப்பாக புத்திஜீவிகள், சமயத் தலைவர்கள், சிவில் அமைப்புகள், முற்போக்கு சக்திகள், இளைஞர் அமைப்புக்கள், பெண்கள் அமைப்புகள் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறானதொரு சக்தியைக் கட்டியெழுப்புவதில், செயலூக்கம் மிக்க ஒரு பங்காளராக இணைந்து செயற்படுதற்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) மிகுந்த பற்றுறுதியுடன் இருக்கின்றது. எனவே, இலங்கைத் திருநாட்டின் அனைத்து மக்களும் இவ்வாறானதொரு புதிய மாற்றத்திற்கு ஒத்துழைக்க முன்வருமாறு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அழைப்பு விடுக்கிறது.

Advertisements

Written by lankamuslim

நவம்பர் 5, 2018 இல் 6:22 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: