Lankamuslim.org

முஸ்லிம் அரசியல்வாதிகள் : மக்களின் நிலைப்பாடு என்ன ?

leave a comment »

Hakeemமைத்திரி – ரணில் அரசாங்கம், முஸ்லிம்களைத் திருப்திப்படுத்தவில்லை என்பதற்காக, மஹிந்த ஆட்சி செய்த தவறுகள் எல்லாம், சரியாக மாறிவிடாது.– உலக அரசியல் அரங்கில், நாமறிந்த காலத்தில் கேள்விப்பட்டிராத அரசியல் திருப்பமொன்று, இலங்கையில் ஏற்பட்டிருக்கின்றது. ஒரு திரைப்படத்தின் ‘கிளைமக்ஸ்’ காட்சி போல, அன்றேல் திருப்புமுனை போல, இந்த மாற்றம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆனால், இந்த நகர்வுகள் எங்கே சென்று முடியப் போகின்றன என்பதும் அவை, முஸ்லிம்கள் மீது, எவ்வாறான விளைவுகளைக் கொண்டு வரப்போகின்றன என்பதும்தான் தெரியவில்லை.

நல்லாட்சி அரசாங்கம், சாத்தியமான எதிர்பார்ப்புகளுடன் உருவாக்கப்பட்டது என்பதையும் அரசாங்கத்துக்கு மக்கள் வழங்கிய ஆணை, முன்னைய ஆட்சியாளர்களுக்கு எதிரானது என்பதையும் நாம் மறந்து விடவில்லை.

ஆனால், நாட்டு மக்களின், குறிப்பாக, சிறுபான்மையினங்களின் மக்களின் பார்வையில், அரசாங்கம் எவ்விதம் செயற்பட்டது என்பதையும் மக்களின் எதிர்பார்ப்புகள் எங்ஙனம் தவிடுபொடியாக்கப்பட்டன என்பதையும் கூட, வரலாறு குறித்து வைத்திருக்கின்றது.

இவ்வாறான ஒரு சூழலில், மூன்று பெருந்தேசியக் கட்சிகளும் தனியே ஆட்சியொன்றை நிறுவத் திராணி இல்லாத அரசியல் இக்கட்டொன்றுக்குள் சிக்கியிருந்த போதிலும், கடுமையான முக்கோண அரசியல் அதிகாரப் போட்டியை, தமக்கிடையே வளர்த்துக் கொண்டிருந்தன.

என்னதான் தேசிய அரசாங்கம் என்று பேசிக் கொண்டாலும், அடுத்த முறை தனியே, தமது கட்சி ஆட்சியை நிறுவும் விதத்தில், தமது அணியைப் பலப்படுத்த வேண்டும் என்ற போட்டி, மைத்திரிபால சிறிசேனவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இருந்தது.

யாருடன் கூட்டுச் சேர்ந்தாவது, மீண்டுமொரு முறை அதிகாரத்தைப் பெற்று, ஒரு சுற்றுச் சுற்றிவர வேண்டுமென்ற தீராவேட்கை, மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு இருந்தது. வெளிநாட்டுச் சக்திகளும் உள்நாட்டுச் சதித் திட்ட வகுப்பாளர்களும் இதற்குள் புகுந்து, அரசியல் செய்து கொண்டிருந்தனர். இதுதான் இன்றைய நிலைக்கு, அடிப்படைக் காரணம் எனக் கூறலாம்.

கடந்த வாரம், எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி, முன்னாள் ஜனாதிபதியும் ஒன்றிணைந்த எதிரணியின் தலைவரும் பொதுஜன பெரமுனவின் பிரதானியுமான மஹிந்த ராஜபக்‌ஷவை, புதிய பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிரடியாக நியமித்தார்.

அத்துடன், தன்னால் முன்னர் நியமிக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, அப்பதவியில் இருந்து நீக்கி, இவ்விரண்டுக்குமான வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்டார்.

இலங்கை அரசியலை மட்டுமல்லாமல், உலக அரசியல் அரங்கையே நீண்டநேரம் அதிரவைத்த ஒரு செயற்பாடாக, மைத்திரிபால சிறிசேனவின் இந்த அரசியல் நடவடிக்கை அமைந்திருக்கின்றது. முத்தரப்பு அரசியல் போட்டி, கூட்டு அரசாங்கத்துக்குள் காணப்பட்ட முரண்பாடுகள் என்பவற்றுக்குப் புறம்பாக, இவ்வாறான அதிர்ச்சி வைத்தியமொன்றை, ஜனாதிபதி கொடுப்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி, பிரதமராகவிருந்த ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை, ஜனாதிபதியையும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரையும் கொல்வதற்குச் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக நாமல் குமார என்ற பொலிஸுக்குத் தகவல் வழங்கும் நபர் குறிப்பிட்டமை, நாலக சில்வா கைது செய்யப்பட்டமையும் அவர் வழங்கிய தகவல்களும், அரசாங்கத்தின் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களுக்குச் சதித்திட்டங்களுடன் தொடர்பிருப்பதாகக் கசிந்த தகவல்கள், தெற்காசியப் பிராந்தியத்தின் புலனாய்வுக் குழு ஒன்றுக்கும் கொலைத் திட்டங்களுக்கும் இடையில் தொடர்பிருக்கலாம் எனச் சாடைமாடையாக அரசியலரங்கில் பேச்சடிபட்டமை, இந்தியாவினதும் சீனாவினதும் ஆதிக்க அரசியல், நாட்டின் பொருளாதார வங்குரோத்து நிலைக்கான பின்புலங்கள் என, எண்ணிலடங்காத நீண்டகால, உடனடிக் காரணங்கள் இதற்குப் பின்னால் இருக்கின்றன.

நமக்குத் தெரிந்த, ஊகங்களுக்கு அப்பாற்பட்ட காரண காரியங்களும் இந்த அதிரடி நடவடிக்கைக்கு இட்டுச் சென்றிருப்பதாகச் சொல்ல முடியும்.

“அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தின் கீழ், பிரதமர் ஒருவரை நீக்கும் அதிகாரம், ஜனாதிபதிக்கு இல்லை” என்று ஆரம்பத்தில் கூறப்பட்டது. பின்னர், “இல்லையில்லை விசேட சந்தர்ப்பங்களில் அவ்வாறான ஒரு நகர்வை மேற்கொள்வதற்கான அதிகாரத்தை, ஜனாதிபதிக்கு அரசமைப்பு வழங்கியிருக்கின்றது” என்று சொல்லப்பட்டது.

இந்த வாதப் பிரதிவாதங்கள் எல்லாம் ஒருபுறத்தில் போய்க்கொண்டிருக்க, தமது தரப்பை நிலைநிறுத்துவதற்கான எல்லா நகர்வுகளையும், ஜனாதிபதியும் புதிய ‘பிரதமரும்’ சேர்ந்து மேற்கொண்டுள்ளனர்.

பெரும்பான்மைப் பலத்தை உறுதி செய்வதற்கான காலஅவகாசத்தை எடுத்துக் கொள்ளும் உள்ளெண்ணத்தோடு, நாடாளுமன்றத்தை ஒத்திவைத்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்கள் சிலரையும் நியமித்து, மறுதரப்பில் இருப்போருக்கு ஒரு செய்தியைச் சொல்லியிருக்கின்றார்.
எது எவ்வாறிருப்பினும், யார் என்ன பதவிக்கு வந்தாலும் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தமையும், அதனூடாக நாட்டில் ஸ்தம்பித நிலை ஒன்றை ஏற்படுத்தியிருப்பதும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்ற அபிப்பிராயம், பரவலாக முன்வைக்கப்படுகின்றது.

சர்வதேச நாடுகள், நாடாளுமன்றத்தைக் கூட்டி, பிரச்சினையைத் தீர்க்குமாறு கடுமையாக வலியுறுத்தி இருக்கின்றன. மஹிந்தவோ, ரணிலோ யார் பிரதமரானாலும் பிரச்சினையில்லை; ஆனால், நாடாளுமன்ற நடைமுறைகளின் ஊடாகப் பெரும்பான்மைபலம் நிரூபிக்கப்பட்டு, இந்தச் சச்சரவுகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்ற மனோநிலையில் மக்கள் இருக்க, அதே எண்ணத்தோடு, நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டும் முயற்சியில் சபாநாயகர் ஈடுபட்டு வருகின்றார்.

அந்த அடிப்படையில், ஏற்கெனவே உத்தேசிக்கப்பட்டிருந்த தினமான நவம்பர் 16ஆம் திகதிக்கு முன்னரே, ஐந்தாம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கின்ற, அன்றாட அரசியல் நிகழ்வுகளுக்குள், பல்வேறு விடயங்கள் உள்ளன. பிரதான கட்சிகளின் நலன், சர்வதேச நாடுகளின் அபிலாஷைகள், வெளிச் சக்திகளின் எதிர்பார்ப்புகள், தேசிய அரசியல் நிலையும் நாட்டிலுள்ள அனைத்து இன மக்களின் மனநிலையும் என, அவ்விடயங்கள் நீண்டு செல்கின்றன.

எனவே, முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில், இந்த அதிரடி மாற்றங்களின் பின்னணி தொடர்பான, மேற்சொன்ன விடயங்களை மாத்திரம் சிந்திக்காமல், அதற்கப்பாற் சென்று, தமது சமூகத்தின் நிலையும் நிலைப்பாடும் என்ன, என்னவாக இருக்க வேண்டும் என்பது பற்றிச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.

ஏனெனில், முஸ்லிம்கள் இரண்டாவது சிறுபான்மையாக வாழ்கின்ற இந்நாட்டில், எந்தப் பெரும்பான்மையினக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், திருப்திப்படும் விதத்தில் நமது பிரச்சினைகள் தீர்க்கப்படப் போவது இல்லை; நம்முடைய அபிலாஷைகள் நிறைவேறப் போவதும் இல்லை.

அப்படி நிகழுமென்றால், இத்தனை வருடங்களாக நீடிக்கும், முஸ்லிம் சமூகத்தின் தலையாய பிரச்சினைகள் பலவற்றுக்குத் தீர்வு காணப்பட்டிருக்க வேண்டும்.

இப்போது, “எங்களுக்குப் பெரும்பான்மை இருக்கின்றது” என்று, பரஸ்பரம் இரு தரப்புகளும் பிரசாரம் செய்தாலும், அரசியல்வாதிகள் கடைசி நொடியிலும் குத்துக்கரணம் அடிக்கலாம் என்றபடியால் நாடாளுமன்றம் கூடி, உறுப்பினர்கள் எழுத்துமூல ஆதரவை முன்வைக்கும் தருணம் வரைக்கும், இந்தப் பிரசாரங்கள் எதையும் நம்ப முடியாது. எனவேதான், முஸ்லிம் கட்சிகள், எம்.பிக்களின் ஆதரவை இரு தரப்புகளும் தொடர்ச்சியாகக் கோரி வருகின்றன.

இது, தேசிய அளவிலான அரசியல் நெருக்கடி. அரசமைப்பு ஊடான ஆட்சிமாற்றச் சதி என்று கருதப்படுகின்ற போதிலும் கூட, முஸ்லிம்களுக்கு இது நல்லதொரு வாய்ப்பையும் தந்திருக்கின்றது என்பதை, நினைவில் கொள்ள வேண்டும்.

எனவே, முஸ்லிம் கட்சிகளும் ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகளும் சொந்த நலனை அன்றி, சமூகத்தின் நலனைக் கருத்தில் கொண்டே, யாரை ஆதரிப்பது என்ற முடிவை எடுக்க வேண்டும்.

மைத்திரி – ரணில் அரசாங்கம், முஸ்லிம்களைத் திருப்திப்படுத்தவில்லை என்பதற்காக, மஹிந்த ஆட்சி செய்த தவறுகள் எல்லாம், சரியாக மாறிவிடாது. மறுபுறத்தில், மஹிந்த செய்தது தவறு என விமர்சிக்கும் அருகதையை, ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் தக்கவைக்கவும் இல்லை; முஸ்லிம்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்ததாகப் பெருமையடிக்கவும் இடமில்லை.

எனவே, இந்த நாட்டில் ‘புரட்சிகர’ ஆட்சிமாற்றத்துக்கு வித்திட்ட ரணில் விக்கிரமசிங்கவுக்கு, நன்றிக்கடன் செலுத்துவதா, அரசாங்கத்துக்கு வெளியில் இருந்தால் ஆபத்தாகி விடுமோ என்ற பயத்தில், மஹிந்த – மைத்திரி கூட்டணியை ஆதரிப்பதா என்றோ, முஸ்லிம் அரசியல் தலைமைகள், தற்போது சிந்தித்துக் கொண்டிருக்கலாம்.

இவ்விடத்தில், இன்னுமொரு விடயத்தைப் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும். இன்றைய சூழலில், முஸ்லிம் அரசியல்வாதிகளின் நிலைப்பாடு ஒருபுறமிருக்கையில், நாட்டில் வாழும் முஸ்லிம் மக்களின் நிலையும் நிலைப்பாடும் என்ன என்ற கேள்வி எழுகின்றது.

இந்நாட்டு முஸ்லிம்கள், முஸ்லிம் அரசியல்வாதிகள், மஹிந்தவை ஆதரிக்க வேண்டும், அல்லது ரணிலைப் பாதுகாக்க வேண்டும் என்று போட்டிபோட்டுக் கொண்டு கருத்து வெளியிடுவது, சமூக நலன் அடிப்படையிலானதா என்ற வினா எழுகின்றது?

உண்மையில், பெரும்பாலான அரசியல் தலைவர்கள், தங்கள் சொந்த நலன்களை முன்னிறுத்தியே, கருத்து வெளியிடுகின்றனர். வேறு, சில முஸ்லிம்கள், நமது அரசியல் தலைவர்கள் போல, ரணில், மைத்திரி, மஹிந்தவின் வெளிப்புற அரசியல் கவர்ச்சிகளுக்காகவே, ‘ஆதரவு’ தெரிவிப்பதாகத் தெரிகின்றது. இது ஆரோக்கியமானதல்ல.

அதுபோன்று, ஒருவேளை முஸ்லிம் கட்சிகளும் கணிசமான நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரு குறிப்பிட்ட தரப்பை ஆதரிக்க முடிவு செய்து, அந்தத் தரப்பால் ஆட்சியமைக்க முடியாமல் போய்விட்டால், முஸ்லிம் அரசியல்வாதிகளின் கொள்கைக்காக, அமைச்சுப் பதவி போன்ற அதிகாரமில்லாத நிலையில், அவர்கள் கூறுகின்ற காரணங்களின் நியாயங்களை உணர்ந்து கொண்டு, அவர்களுக்குப் பின்னால் நின்று, எதிர்க்கட்சி அரசியல் செய்யவும் தயாராக இருக்க வேண்டும்.

தமது தலைவன் அமைச்சராக, பலமான எம்.பியாக இருக்க வேண்டுமென்றால், கொள்கை, பற்றுறுதி பற்றி, அரசியல்வாதிகளுக்குப் புத்தி சொல்லத் தேவையில்லை. முதலில் மக்கள், தங்கள் மனோநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

முஸ்லிம்கள் பேரம் பேசுவதை மேற்கொண்டு, தமது பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்குப் பல சந்தர்ப்பங்கள் இதற்கு முன்னரும் கிடைத்தன. ஆட்சிமாற்றங்கள், நம்பிக்கையில்லாப் பிரேரணைகள், வரவு – செலவுத்திட்ட வாக்கெடுப்புகள், சட்டமூல நிறைவேற்றங்கள், அரசியல் நெருக்கடிகள் எனப் பல வாய்ப்புகள் கிடைத்தன. இதில், 99 சதவீதமான வாய்ப்புகள் சமூகத்துக்காக அல்லாமல், அரசியல்வாதிகளின் சொந்த நலனுக்காகவே பயன்பட்டன என்பது கற்பனையல்ல. அப்படியான ஒரு வாய்ப்பே, இப்போது கிடைத்திருக்கின்றது.

எனவே, இதை நன்றாகப் பயன்படுத்த வேண்டும். யாருக்கு ஆதரவளிப்பது, யாருடன் சேர்ந்து அரசாங்கத்தை நிறுவுவது என்ற விடயம் ஒருபுறமிருக்க, முஸ்லிம் கட்சித் தலைவர்களும் எம்.பிகளும் யாருக்கு ஆதரவளித்தாலும், அதை முஸ்லிம்களின் நலனை முன்னிறுத்தியதாக மேற்கொள்வதற்கு இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும்.

முஸ்லிம்களின் பிரச்சினைகள், கோரிக்கைகள் பட்டியலிடப்பட்டு இரு தரப்புகளுக்கும் முன்வைக்கப்பட்டு, அதைக் குறுகிய காலத்துக்குள் நிறைவேற்றுவதாக, எழுத்து மூலம் உடன்படும் தரப்புக்கு, ஆதரவளிப்பது குறித்துப் பரிசீலிக்கலாம்.

அந்த உடன்படிக்கை, ஒவ்வொரு முஸ்லிம் பொதுமகனுக்கும் தெரியப்படுத்தப்படுவதுடன், குறிப்பிட்ட காலத்துக்குள் அந்த அரசாங்கம் நிறைவேற்றத் தவறுமாயின், ஒரு நிமிடம் கூட யோசிக்காமல், அரசாங்கத்தை உடைத்துக் கொண்டு முஸ்லிம் கட்சிகள் மட்டுமன்றி, அனைத்து முஸ்லிம் எம்.பிக்களும் வெளியில் வரும் தைரியத்தைப் பெற வேண்டும். அப்படிச் செய்தால், இன்னுமொரு முறை ஆட்சியாளர்கள், முஸ்லிம்களுக்கு வாக்குறுதியளித்து ஏமாற்ற மாட்டார்கள்.

அவ்வாறில்லாமல், ‘எங்கள் கட்சிக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள இரு அமைச்சுப் பதவிகளைத் தாருங்கள், பிரதியமைச்சு தாருங்கள்’, ‘தேசியப்பட்டியல் எம்.பி ஒன்று தரவேண்டும்’ என்று, பதவிகளுக்காகவோ, பணம் போன்ற வெகுமானங்களுக்காகவோ, வேறு ஒரு தரப்புக்கு ஆதரவளிப்பதோ, பேரம் பேசலுக்கான வாய்ப்புக் கிடைத்தும் அதைப் பயன்படுத்தாமல், விசுவாசத்தை வெளிக்காட்டுவதற்காக ஆதரவளிப்பதோ புத்திசாலித்தனமானதல்ல. அதைவிட நடுநிலை வகிப்பதே பரவாயில்லை- மொஹமட் பாதுஷா .-TM

Advertisements

Written by lankamuslim

நவம்பர் 5, 2018 இல் 4:01 பிப

கட்டுரைகள், பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: