Lankamuslim.org

One World One Ummah

வரலாற்றை இருட்டடிப்பு செய்யும் பாடநூல்கள்

leave a comment »

Balochistanநமது நாட்டின் கல்விக் கொள்கைக்கமைய ஆறாம் வகுப்பு முதல் பதினொராம் வகுப்புவரை வரலாறு ஒரு கட்டாய பாடமாகவுள்ளது. அதேபோல் ஏனைய கட்டாய பாடங்களாக கணிதம், மொழி, சமயம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய பாடங்களுள்ளதுடன் அழகியல் மற்றும் தொழில் நுட்பப் பாடங்களென வேறு பல பாடங்களும் உள்ளன. வரலாறு என்பது உண்மைச் சம்பவங்களின் தொகுப்பாகும். கட்டுக்கதைகளோ, கற்பனைக் கதைகளோ, திரிவுபடுத்தல்களோ, மறைப்புக்களோ இல்லாது நிகழ்ந்தவற்றை அவ்வாறே விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடாது பக்கச் சார்பின்றி எடுத்துரைப்பதே வரலாற்றின் பெறுமதியாகும்.

ஆனால் நமது நாட்டில் பாடசாலைகளில் கற்பிக்கப்படும் வரலாற்றுக் கல்வியானது குறைபாடுகள் நிறைந்த பக்கச் சார்பானது என்று தெளிவாக உணரக் கூடியதாகவுள்ளது. உண்மையில் இலங்கைத் தீவின் முழுமையான வரலாறு பாடப்புத்தங்களில் உள்ளடக்கப்படவில்லை. இலங்கையின் வரலாறு விஜயன் வருகையுடன் ஆரம்பமாகின்றது என்று கூறுகின்றனர். மகாவம்சத்தை ஆதாரமாகக் கொள்கின்றனர். விஜயன் வந்த காலத்தில் அவனுடன் வந்த உபதிஸ்ஸன் என்ற பிராமணர் நாட்டின் நாலாபக்கங்களிலுமிருந்த ஐந்து சிவாலங்களைச் சென்று வழிபட்டதாகவும் அவை நகுலேஸ்வரம், கேதீஸ்வரம், கோணேஸ்வரம், முன்னேஸ்வரம், தொண்டீஸ்வரம் எனும் ஐந்தென்றும் வரலாற்றாய்வாளர் சேர். போல் ஈ. பீரிஸ் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். இலங்கைத்தீவின் வரலாறு 2500 ஆண்டுகள் பழைமையானதென்றால் அதன் ஆரம்பத்தில் குறிப்பிட வேண்டியது பஞ்சேஸ்வரங்கள் என்று நாம் போற்றும் மேற்படி ஐந்து சிவாலயங்களே. ஆனால், இலங்கைத்தீவின் வரலாற்றுப்பாடத்தில் அது இல்லை. சிவ வழிபாட்டில் ஈடுபட்டவர்கள் இந்துக்கள், தமிழர்கள் என்பது இல்லையென்று மறுக்க முடியுமா?

வரலாற்றின்’ தொடக்கம் இவ்வாறுள்ள போது கி. பி. 1505இல் போர்த்துக்கேயர் இலங்கையில் அடியெடுத்து வைத்த காலத்தில் இத்தீவில் கோட்டை, கண்டி, யாழ்ப்பாணம் என்று மூன்று சுதந்திர நாடுகள் இருந்தன. கோட்டை மற்றும் கண்டி இராச்சியங்கள் சிங்கள அரசுகள் என்று கூறப்பட்ட நிலையில் யாழ்ப்பாண அரசு தமிழ் அரசாக நல்லுரைத் தலைநகராகக் கொண்டு தமிழ் அரசரால் ஆளப்பட்டது என்பது வரலாறு. இவவாறுள்ள நிலையில் பாடசாலை மாணவ, மாணவியருக்கான வரலாற்றுப் பாடநுலில் யாழ்ப்பாணத் தமிழரசு பற்றிய தெளிவான வரலாற்றுப் பதிவுகள் எதிவுமில்லை.

கோட்டை அரசு சுயவிருப்பின் பேரில் தானாகவே அந்நியரான போர்த்துக்கேயரிடம் சரணமடைந்து அவர்களது ஆளுகைக்குட்பட்டது. அதேபோல் கண்டியரசு கண்டியின் சிங்களப் பிரதானிகள் மற்றும் பெளத்த மதகுருமாரினால் ஒப்பந்தம் மூலம் 1815 இல் ஆங்கிலேயரிடம் கையளிக்கப்பட்டது. ஆனால், யாழ்ப்பாணத் தமிழ் அரசு போர்த்துக்கேயருக்கு அடிபணியாது இறுதிவரை போரிட்ட வீர வரலாற்றைக் கொண்டது. பின்னாளில் போர்த்துக்கேயர் மற்றும் ஒல்லாந்தருக்கு அடிபணியாது சுதந்திர அரசாகச்செயற்பட்ட வன்னித் தமிரசும் இறுதிவரை ஆங்கிலேயருடன் போராடிய வீரவரலாறு கொண்டது. மூன்றாம் நூற்றாண்டில் கிழக்கிலங்கையில் மண்முனைத் தமிழரசு ஒன்று இருந்தமையும் பதிவிலுள்ளது. அது மட்டுமல்ல நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இந்துக்கள், தமிழர்கள் வாழ்ந்தமைக்கும் ஆண்டமைக்கும் பல வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.

வரலாறு என்பது ஒரு நாட்டின் நிலப்பரப்புக்குள் வாழ்ந்த மக்கள், அவர்கள் தொடர்பான வாழ்க்கை முறைகள் ஆட்சிமுறை, கலாசாரம், பண்பாடு, மொழி, சமயம் உட்பட அனைத்து அம்சங்களும் உள்ளடக்கியதாகும். அதுவே பெறுமதியான வரலாறாகும். நமது நாட்டின் பாடசாலை மாணவ, மாணவியருக்கான வரலாற்றுப் பாடத்தில் இலங்கையின் ஆதிக்குடிகளான தமிழர்கள், இந்துக்கள் பற்றிய வரலாற்று விபரங்கள் நிகழ்வுகள் மறைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இலங்கைத்தீவு ஒருநாடாகக் கொள்ளப்படுமாயின் யாழ்ப்பாணம், வன்னி, மண்முனை அகிய தமிழர் ஆண்ட பகுதிகளின் வரலாறு புறந்தள்ளப்படுகிறது.

இப்பாடக் குறைபாடு தொடர்பாக எனது கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவாந்தா பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார். அதனைத் தொடர்ந்து கல்வியமைச்சில் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தலைமையில் இரண்டு கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. அதில் தேசிய கல்வி நிறுவனம், கல்வி வெளியீட்டுத் திணைக்களம், கல்வி அமைச்சு, பல்கலைக்கழக கல்வியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தமிழர் வரலாறு இடம்பெறாமைக்கு இம்மூன்று காரணங்களா என்று நான் அவர்களிடம் கேள்வியெழுப்பினேன். முதலாவது அனுராதபுரத்துக்கு அப்பால் பண்டைய இலங்கையின் எல்லை இல்லை என்பது காரணமா? அல்லது தமிழர்களும் இந்நாட்டில் வாழ்ந்தார்கள், ஆண்டார்கள் என்ற உண்மையை மறைக்கும் இனவாத நோக்கமா? அதுவுமில்லாவிட்டால் கோட்டை மற்றும் கண்டி இராச்சியங்களைப் போலல்லாது இறுதிவரை அந்நிய ஆக்கிரமிப்புக்கெதிராகப் போராடிய பெருமை இந்நாட்டுத் தமிழர்களுக்கு உரித்தாகக் கூடாது என்ற காழ்ப்புணர்ச்சியா என்று கேட்டேன்.

அதற்கு இவ்வாறில்லை. தமிழர் தரப்பிலிருந்து வரலாற்றுப் பாட ஆக்கத்திற்கு உரிய பங்களிப்பு வழங்கப்படாமையே இந்நிலைக்கான காரணம் என்று பதில் வழங்கப்பட்டது. இதனைப் பொருத்தமான பதிலாக ஏற்றுக்கொள்ள முடியாது. இருப்பினும் எதிர்காலத்தில் விடப்பட்ட தவறுகள் திருத்தப்படும். தமிழர் வரலாறும் இடம்பெற வழி செய்யப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், தொடர்ந்தும் அதே முறையில் தமிழர் வரலாறு, யாழ்ப்பாணத்தமிழ் அரசின் வரலாறு, வன்னித் தமிழ் அரசின் வரலாறு போன்ற தமிழர் சார்ந்த வரலாறுகள் இடம்பெறாத வரலாற்றுப்பாடமே தொடர்கின்றது.

இவ்வாறு உண்மை வரலாறு மறைக்கப்படடுவதால் தமிழர்கள் இந்நாட்டின் அந்நியர்கள், ஆக்கிரமிப்பாளர்கள், வேண்டத் தகாதவர்கள் என்ற எண்ணத்தைச் சிறுவயது முதலே பிள்ளைகள் மனதில் பதியச் செய்யும் வாய்ப்பு அதிகமாயுள்ளது. இது நாட்டின் இனங்களுக்கிடையே நம்பிக்கை நட்புறவு, இணக்கப்பாடு போன்றவற்றுக்கு வேட்டு வைப்பதாயுள்ளது.

சிறுவயது முதலே கட்டியெழுப்ப வேண்டிய இனங்களுக்கிடையேயான புரிந்துணர்வுக்கும், சகவாழ்வுக்கும் பாதகமான இச்செயற்பாடு பொறுப்புவாய்ந்த கல்வித்துறையிலிருந்து வெளிப்படுவது ஒன்றுபட்ட நாடு, தேசிய சகவாழ்வு, இனங்களுக்கிடையேயான நம்பிக்கை போன்ற அனைத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

தற்போது நடைமுறையிலுள்ள வரலாற்றுப் பாடநூல் இனங்களுக்கிடையே ஒற்றுமைக்கு உகந்ததல்ல. கல்வித்துறையினர் கவனம் செலுத்த வேண்டும். வரலாற்றுப் பாடநூல் தொடர்பான கலந்துரையாடல்களுக்குத் தலைமை தாங்கிய இராஜாங்க அமைச்சரும் கவனம் செலுத்த வேண்டும்.

த. மனோகரன்
கல்விக் குழுச்செயலாளர்
அகில இலங்கை இந்து மாமன்றம்

தினகரன்

Advertisements

Written by lankamuslim

ஒக்ரோபர் 25, 2018 இல் 6:01 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: