Lankamuslim.org

One World One Ummah

மோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படும் அஸ்ஸாம் முஸ்லிம்கள் !!

with one comment

qazaqwazaதெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ: குடியுரிமையின் பயன் வாக்குரிமையே எனச் சுருங்கிய நிலையில், ஒருவர், யாருக்கு வாக்களிக்கக்கூடும் என்பது, அவருக்குக் குடியுரிமை வழங்குவதைத் தீர்மானிக்கும் அளவுகோலாகிறது. நாடுகள் மெதுமெதுவாகத் தமது சமூக நலன்களைத் தனியார் மயமாக்கி, சமூகப் பாதுகாப்பு என்பது, கேள்விக்குரித்தான நிலையில், குடியுரிமையின் பயன் வாக்களித்தல் என்றாகிவிட்டது. இது இன்றைய நவதாராள உலக அரசியலின் தவிர்க்கவியலாத யதார்த்தம்.

அண்மையில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அஸ்ஸாமில், வெளியான தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (National Register of Citizens) நான்கு மில்லியன் மக்களின் பெயர்கள் விடுபட்டமை, பாரிய பிரச்சினை ஆகியுள்ளது.

விடுபட்டோரில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள். அவர்கள், பங்களாதேஷில் இருந்து வந்தவர்கள் என்று கூறி, அவர்களுடைய குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது.

இன்று மத்திய அரசாங்கத்தில், அதிகாரத்தில் இருக்கும் பா.ஜ.க அரசாங்கத்தின், ‘இந்து இந்தியா’ நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகவே, இதை நோக்க வேண்டும்.

அஸ்ஸாமில் வசிக்கும் 32.9 மில்லியன் மக்களில், 28.9 மில்லியன் மக்கள் இப் பதிவேட்டில் இடம் பெற்றுள்ளனர். நான்கு மில்லியன் பேர் விடுபட்டுள்ளனர். அவர்களில், இரண்டு இலட்சம் பேருக்கு மட்டுமே, தக்க சான்றுகளைக் காட்டி, குடிமக்கள் பதிவேட்டில் மீள இணையும் வாய்ப்புத் தரப்பட்டிருக்கிறது.

எஞ்சியோர் அகதி முகாம்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து அவர்களுடைய ‘சொந்த’ நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவர் என்று மத்திய அரசாங்கம் சொல்லியுள்ளது. அத்துடன், “இவ்வாறான நடைமுறைகள் ஏனைய மாநிலங்களிலும் தொடரும்” என்று கூறி, மத்திய அரசாங்கம் பீதியூட்டியுள்ளது.

நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசாங்கம் முன்னெடுத்துவரும், முஸ்லிம் விரோத நிகழ்ச்சி நிரலின் பகுதியாகவே, இதைக் கணிக்க வேண்டும். இப்பிரச்சினையின் தீவிரத்தை உணர, அதன் அடியாழங்களைத் தேடுவது தகும்.

1826ஆம் ஆண்டுக்கு முன், அசாம் இந்தியாவின் ஒரு பகுதியல்ல. அப்போது அது, மூன்றாம் பர்மிய சாம்ராஜ்ஜியத்தின் மேற்குப் பிரதேசமாக இருந்தது.

1824இல் பர்மாவுக்கு எதிராக, ஆங்கிலேயர் தொடுத்த ‘ஆங்கிலேய-பர்மிய யுத்தம்’ எனும் போரில் தோல்வியடைந்த பர்மா, ஆங்கிலேயருடன் ‘யெந்தபோ உடன்படிக்கை’ (Treaty of Yandabo) எனப்படும் உடன்படிக்கையில் ஒப்பமிட்டது.

அதன்படி, பர்மிய அரசர் பகியதோவ், அஸ்ஸாம் பிரதேசத்தை ஆங்கிலேயரிடம் கையளித்தார். அவ்வாறு, ஆங்கிலேயர் இன்னொரு நாட்டிடமிருந்து கட்டாயமாகப் பறித்து, இந்தியாவுடன் இணைத்த பகுதியே அசாம் என்ற பிரதேசமாகும். இந்த வரலாறு முக்கியமானதாகும்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் ஒவ்வொன்றுக்கும், இவ்வாறானதொரு கதை உண்டு. ஒரு கதையை மட்டும் இங்கு பதிகிறேன்.

1891இல் பிரித்தானிய அரசாங்கம், மணிப்பூர் மன்னரைப் போரில் வென்று, மணிப்பூரைத் தனது ஆட்சியின் கீழ் கொண்டுவந்தது. ஆனால் மணிப்பூர், பிரித்தானிய இந்தியாவுடன் இணைக்கப்படவில்லை. அனைவருக்கும் வாக்குரிமை என்ற அடிப்படையில், 1948இல் மணிப்பூர் தனது முதல் தேர்தலை நடாத்தியது. தேர்தலுக்குப் பின், ‘பிரஜா சாந்தி’ என்ற கட்சியின் தலைமையில், கூட்டணி ஆட்சி அமைந்தது. இத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியும் போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

1949 ஒக்டோபரில், மணிப்பூர் மக்களின் கடும் எதிர்ப்புக்கிடையே, மணிப்பூர் இந்தியாவுடன் கட்டாயமாக இணைக்கப்பட்டது.

மணிப்பூர் மன்னர் புத்த சந்திராவை, பேச்சுவார்த்தைக்கென அழைத்து, ஷில்லாங்கில் வீட்டுக் காவலில் வைத்த இந்திய அரசாங்கம், இராணுவத்தைக் குவித்து, அவரை மிரட்டி, மணிப்பூரை இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தத்தில் ஒப்பமிட வைத்தது.

மக்கள் தேர்ந்தெடுத்த அரசும் மந்திரி சபையும் கலைக்கப்பட்டன. இதுவே இந்தியா, மணிப்பூரை ஆக்கிரமித்த வரலாற்றின் சுருக்கம்.

இனி, அஸ்ஸாமின் கதைக்கு மீள்வோம். பிரித்தானிய ஆட்சிக்குட்பட்ட காலத்தில், பிரித்தானியர், வங்காளத்தில் அமுல்படுத்திய விவசாயக் கொள்கைகளும் பொருளாதாரக் கொள்கைகளும் விவசாயிகளையும் கைவினைஞர்களையும் ஓட்டாண்டிகளாக்கின.

பெருந்திரளானோர் கொலனியாட்சி புகுத்திய, ஜெமிந்தார் முறையின் கீழ் அல்லலுற்றனர். அதேநேரம், ஆங்கிலேயர்கள் புதிதாக ஆக்கிரமித்த அஸ்ஸாமில், வளமான நிலங்கள் நிறைய இருந்தும், அவற்றின் மூலம் நில வருவாய் கிடையாததால், வங்கத்தின் கிழக்குப் பகுதி மக்களை, புதிய நிலப்பகுதியில் குடியேறுமாறு ஆங்கிலேயர்கள் ஊக்குவித்துள்ளனர். அப்படிக் குடியேறியோர், அஸ்ஸாமிய நிலங்களைப் பண்படுத்தி, விவசாயத்தில் ஈடுபட்டனர்.

புதிதாகக் குடியேறும் வங்காளிகளின் தொகை அதிகரித்துச் சென்ற ஒரு கட்டத்தில், 1920ஆம் ஆண்டில் கொலனியாட்சி, வங்க விவசாயிகளின் இடப்பெயர்ச்சிக்குக் கட்டுப்பாடு விதித்தது.

அதற்கு முன் கோல்பாரா, நொகாவ்ன், காம்ரூப் போன்ற மாவட்டங்களின் முஸ்லிம்களின் தொகை அதிகரித்துவிட்டது. அரசாங்கத்தின் அலட்சியமான பொருளாதாரக் கொள்கைகளின் விளைவால், ஒன்றுபடுத்திய இந்தியாவின் ஒரு மாநிலத்திலிருந்து, இன்னொரு மாநிலத்துக்கு இடம்பெயர்ந்தவர்களே, இன்று ‘சட்டவிரோத’மாகக் குடியேறியவர்கள் எனக் குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளனர்.

இத்தனைக்கும் இவர்கள், பங்களாதேஷ் பிரிவினையின் போது, தாங்கள் குடியேறிய மண்ணுக்கு விசுவாசமாக, இந்திய நாட்டை நம்பி, அதன் இறையாண்மையை ஏற்று, அங்கேயே தங்கியவர்கள்.
இவர்கள் அஸ்ஸாமின் மொழியையும் பண்பாட்டையும் தமதாகக் கொண்டனர். உதாரணமாக, துப்ரி மாவட்டத்தில் முஸ்லிம்களின் சனத்தொகை 74.29 சதவீதமாகும். அவர்களுக்குள், அஸ்ஸாம் மொழி பேசுபவர்கள் 70.09 சதவீதமாகும். இது வௌியே பேசப்படுவதில்லை.

பெங்காலிய முஸ்லிம்களுக்கும், அஸ்ஸாமிய இந்துக்களுக்கும் இடையிலான மோதலாக மாறியுள்ள, இன்றைய நெருக்கடியின் ஆரம்பம் புதினமானது. அஸ்ஸாமியர்களோடு முதலில் முரண்பட்டோர், பங்களாதேஷ் முஸ்லிம்கள் அன்றி, வங்காளி பேசும் இந்துக்கள் தான்.

அஸ்ஸாமை இந்தியாவுடன் இணைத்த பின், அஸ்ஸாமின் உள்நாட்டு அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கியோர் அஸ்ஸாமியர்கள்தான். அத்துடன், இந்திய அரசிடமிருந்து கிடைத்து வந்த பலன்களைப் பெருமளவு அனுபவித்தோரும் நடுத்தர வர்க்க அஸ்ஸாமியர்களேயாவார்.

அரசு வேலைகளிலும் சலுகைகளிலும் அஸ்ஸாமிய நடுத்தர வர்க்கத்துக்குப் போட்டியாக, வங்காளி பேசும் இந்துக்கள் வந்தனர். அஸ்ஸாமியர்களும் வங்காளிகளும் மோதிய முதல் கலவரம், 1960இல் நடந்தது.

இது இரு வேறு மொழிகள் பேசும், இந்துக்களுக்கு இடையில் நடந்த கலவரம். இதில் முஸ்லிம்களுக்குப் பங்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து அஸ்ஸாம் மாணவர்கள் சங்கம் (All Assam Students Union, AASU) தொடக்கிய ‘அஸ்ஸாம் இயக்கம்’, பங்களாதேஷ் முஸ்லிம் ‘ஊடுருவிகளுக்கு’ எதிரானதல்ல; அது அந்நியர்களுக்கு எதிரான இயக்கம் என்றே முதலில் சொல்லியது. அதற்கு, உள்ளூர் மட்டத்தின் அதிகார வர்க்க ஆதரவாக இருந்தது.

இதற்கிடையே, எழுபதுகளில் இடதுசாரிகள் அஸ்ஸாமில் ஓரளவுக்குச் செல்வாக்குப் பெற்றனர். 1974இல் நடந்த கவுஹாத்தி மாநகரசபைத் தேர்தலில், இடதுசாரிகள் முதன்முறையாக வெற்றி பெற்றனர்.

பங்களாதேஷிலிருந்து இடம் பெயர்ந்த முஸ்லிம்களது மட்டுமின்றி, வங்கமொழி பேசும் இந்துக்களினதும் பல்வேறு பழங்குடியினரின் ஆதரவையும் இடதுசாரிகள் பெற்றிருந்தனர்.
அச்சமயம் எழுச்சிபெற்ற, அஸ்ஸாமிய இனவாதிகளுக்கு, அது ஒரு நெருக்கடியை உண்டாக்கியது.

உள்ளூர் பழங்குடியினரையோ, மாநிலத்துக்கு வெளியே, குறிப்பாக டெல்லியில் அரசியல் செல்வாக்குடைய வங்காளி பேசும் இந்துக்களையோ தமது வெறுப்புப் பிரசாரத்தின் இலக்காக்குவது ஆபத்தானது என உணர்ந்தனர்.

எனவே, ‘அந்நியர்களுக்கு எதிரான’ என்ற நிலைப்பாடு, ‘பங்களாதேஷ் முஸ்லிம் ஊடுருவல் காரர்களுக்கு எதிரான’ என மாறியது.

அதையடுத்து, நடந்த கலவரங்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டார்கள். பிரிக்கப்படாத நாகோன் மாவட்டத்தில், 1983 பெப்ரவரி 13ஆம் திகதி நிகழ்ந்த ‘நெல்லீய்’ படுகொலையில் ஏறத்தாழ 10,000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகளும் பெண்களும் ஆவார்.

இப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரும் முகமாக, ராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய மத்திய அரசாங்கம், அஸ்ஸாம் இயக்கத்தினருடன் 1985ஆம் ஆண்டு, ‘அஸ்ஸாம் உடன்படிக்கை’யை ஏற்படுத்தியது.

இதன்படி, பங்களாதேஷ் பிரிவினைக்கு முந்திய நாளான, 1971 மார்ச் 24 வரை அஸ்ஸாமில் இருந்தோர், தொடர்ந்தும் அஸ்ஸாமில் இருக்க அனுமதிக்கப்படுவர். குறித்த திகதிக்குப் பின்னர் வந்தவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள்.

இதில் கவனிக்கவேண்டியது யாதெனில், பங்களாதேஷ் பிரிவினைக்கு, இந்தியாவே தூண்டித் துணை செய்தது. பாகிஸ்தானுக்கு எதிரான முரண்பாட்டில், பங்களாதேஷ் ஒரு கருவியாக வாய்த்தது.

இந்திரா காந்தி, அந்த நோக்கில் பங்களாதேஷின் உருவாக்கத்துக்காகப் பாகிஸ்தானுடன் போர் தொடுத்தார். அவ்வேளை பங்களாதேஷிலிருந்து வந்த அகதிகள், இந்தியாவில் வரவேற்கப்பட்டனர்.

பாகிஸ்தானை எதிர்த்த பங்களாதேஷின் ஷேக் முஜிபுர் ரஹ்மானை, இந்தியா ஆதரித்தது. இந்திய மத்திய அரசாங்கம், அவருடைய ‘முக்தி பாஹனி’ இயக்கத்துக்கு ஆயுதங்களும் போர்ப் பயிற்சியும் அளித்தது.

போரில் பாகிஸ்தான் தோற்று, பங்களாதேஷ் பிரிந்ததோடு, அகதிகளின் நல்வாழ்வும் முடிவுக்கு வந்தது. ஷேக் முஜிபூர் ரஹ்மானின் வீழ்ச்சியையடுத்து, இராணுவ ஆட்சியும் அதையடுத்து ஜனநாயக ஆட்சியும் இந்திய ஆதிக்கத்தை எதிர்த்து வந்தால், இந்தியாவிலிருக்கும் பங்களாதேஷ் ஏழைகளை விரட்டுவதற்கு இந்திய அரசாங்கமும், இந்துமத வெறியர்களும் தீவிரம் காட்டினர்.

இன்றைய பங்களாதேஷும் இந்தியாவின் மேற்கு வங்க மாநிலமும் மொழியாலும் இனத்தாலும் பண்பாட்டாலும் ஒன்றுபட்ட மக்கள் வாழும் தொடர்ச்சியான பிரதேசமாகும்.

மேற்கு வங்கத்தில் இந்துக்களும் கிழக்கு வங்கத்தில் முஸ்லிம்களும் பெரும்பான்மையினராயினும், இரு மதங்களைச் சேர்ந்தோரும் இரு பகுதிகளிலும் கணிசமான அளவில் வாழ்கின்றனர்.

வங்க தேசிய இனம் இந்தியாவின் முதிர்ந்த சில தேசிய இனங்களில் ஒன்றாகும். அதனால், அதிகம் விளக்காமலேயே இம்மக்களின் நெருங்கிய உறவைப் புரிந்து கொள்ளலாம்.

கொலனி ஆட்சியின்போது, 1905இல் கர்சன் பிரபு என்ற ஆங்கிலேய வைஸ்ராய், வங்கத்தை மேற்கு, கிழக்கு என மத அடிப்படையில் பிரித்தார். ஆயினும் பிரித்தானியரின், பிரித்தாளும் சூழ்ச்சியை, வங்காள மக்கள் தீரத்துடன் போராடி முறியடித்தனர்.

மத வேறுபாடு கடந்து, வங்காளிகள் என்ற முறையில், அவர்கள் நடாத்திய இப்போராட்டம், ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வாகும்.

ஆயினும், அதன் பிறகு, இந்திய விடுதலைப் போராட்டம், இந்து மதச்சார்பாவதை பிரித்தானியர் ஆதரித்தனர். எதிர் விளைவாக, முஸ்லிம் லீக் தோன்றியதோடு வங்கம் மதத்தால் பிளவுண்டது.

1979 முதல் 1985 வரை அஸ்ஸாமிய இனவாதிகள் நடத்திய படுகொலைகள், இன்றும் ஆறாத புண்களாக இருக்கின்றன. வடகிழக்கில் ஊர் மட்டத்தில், பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்த மக்களிடம், ஓர் ஐக்கியம் ஏற்படலாகாது என்பதில், இந்திய ஆளும் வர்க்கம் மிகத் தெளிவாகவே உள்ளது.

வடகிழக்கில் உள்ள போடோ, குக்கி, மிசோ, நாகா ஆகிய பல்வேறு இனக்குழுக்களுக்கிடையே, இந்திய ஆளும் வர்க்கம் தீராத இன மோதல்களை மூட்டியது.

சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் வெள்ளையர் காலத்தில், அஸ்ஸாமில் குடியேறிய வங்காளிகளின் நிலைமை, இலங்கையின் மலையகத் தமிழர்களினதும் மலேசியத் தமிழர்களினதும் நிலைமைகளை ஒத்ததே.

இப்போது, அஸ்ஸாமில் நடப்பன, அரசியல் நோக்கங்களுக்கான திட்டமிட்ட செயற்பாடுகள். அஸ்ஸாமில் உள்ள முஸ்லிம்களின் வாக்கு தமக்கு எதிரானது என பா.ஜ.க, அரசாங்கம் நன்கறியும்.

அதைக் குறைப்பதன் மூலம், தனது ஆட்சியைத் தொடர்ந்து தக்கவைக்க, இவ்வாறான முஸ்லிம் விரோத சிந்தனைகளை முன்தள்ளி, முஸ்லிம்களின் வாக்குரிமையை நீக்க முனைகிறது.

இதனாலேயே அஸ்ஸாம் பற்றிய விவாதமொன்றில் கருத்துரைத்த பா.ஜ.கவின் அஸ்ஸாம் மாநிலத் தலைவர், “இவ்வாறு ஒதுக்கப்பட்டு, குடியுரிமை மறுக்கப்பட்டவர்கள், பொருளாதார அகதிகளாக வந்திருப்பின் அவர்களுக்கு இந்தியாவில் வேலை செய்யும் உரிமத்தை வழங்கலாம்; ஆனால் வாக்குரிமையை வழங்க இயலாது” என்றார்.

ஆகக் குறைந்த ஊதியத்துக்குப் பணியாற்றக்கூடிய கூலியுழைப்பாளிகளின் தேவையை, முதலாளித்தும் அறியும். ஆனால், அவர்களுக்கு வாக்குரிமையை மறுப்பதன் பின்னால் உள்ளவை, அரசியல் நோக்கங்களே.

காலநிலை மாற்றமும் விவசாயத்தின் அழிவும் தீவிர உலகமயமாக்கலும் இந்தியா, பரவலான கிராமிய இளைஞர்களை அள்ளிவந்து பெருநகரங்களில் குவிக்கிறது. மறுபுறம், பெருநகரங்களின் மிகை வளர்ச்சிக்குத் தீனிபோடத் தேவையான கூலியுழைப்பாளிகளின் தொகை கூடிக்கொண்டே போகிறது.

அதனால், ஏராளமான கூலியுழைப்பாளிகள் இந்தியாவின் வட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு இடம்பெயர்கிறார்கள். அவர்களுக்கு எதிரான தமிழ்த்தேசியவாத வன்முறைகள், இன்று அஸ்ஸாமில் பா.ஜ.க செய்வதைப் போன்றன என்பதை நினைவுபடுத்த வேண்டும்.

இன்று, அஸ்ஸாமில் உருவாக்கப்பட்ட நெருக்கடியை, பா.ஜ.க அரசாங்கம் திட்டமிட்டு உருவாக்கியது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. நான்கு மில்லியன் மக்கள் திடீரென நிர்க்கதிக்கு ஆளாகியுள்ளனர்.

முஸ்லிம் விரோதப் பிரசாரத்துடன் அஸ்ஸாமில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க, முதலில் வைஷ்ணவ மடங்களுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்துள்ளனரென்று, முஸ்லிம் அகதிகளை விரட்டியது.

2017 செப்டெம்பர் மாதம், கசிரங்கா சரணாலயத்தை ஒட்டிய வனப்பகுதிகளை ஆக்கிரமித்து, வீடுகளைக் கட்டியதாகக் கூறி, 200 கட்டடங்களை இடித்துத் தள்ளினர். அதை எதிர்த்துப் போராட்டங்கள் நடந்தபோது, துணை இராணுவப் படை நடாத்திய துப்பாக்கிச் சூட்டில், இருவர் பலியாகினர்.

அஸ்ஸாமிலிருந்து பங்களாதேஷிகளைத் துடைத்தெடுக்கும்வரை, இப்பணி தொடரும் என அம்மாநில நிதியமைச்சர் அறைகூவினார். இப்போது நான்கு மில்லியன் பேர் பதிவேட்டிலிருந்து காணாமல் போயிருப்பது, இதன் இன்னொரு பகுதியே.

2014ஆம் ஆண்டு, தேர்தல் அறிக்கையில் பா.ஜ.க, ‘இடருக்குள்ளாகும் அனைத்து இந்துக்களினதும் தாய்வீடாக’ இந்தியா இருக்கும் எனக் குறிப்பிட்டிருந்தது. அதன்படி, 2016ஆம் ஆண்டு கொண்டுவந்த குடியுரிமைச் சட்டத் திருத்தத்தின் படி, முஸ்லிம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் சிறுபான்மையினராக வாழ்ந்த இந்துக்களும் சீக்கியரும் பார்சிகளும் கிறிஸ்தவர்களும் இந்தியாவில் சட்டவிரோதமாகக் குடியேறுவோர் பட்டியலில் சேர மாட்டார்கள். ஆறு ஆண்டுகள் இந்தியாவில் வசித்தால், அவர்கள் இந்தியக் குடிமக்களாக ஏற்கப்படுவர்.

அதாவது, பாகிஸ்தானிலிருந்து சட்டவிரோதமாக நுழைந்த ஒருவருக்கு ஆறு ஆண்டுகள் கழித்து, இந்திய அரசு குடியுரிமை வழங்கும். ஆனால், ஆண்டாண்டுகாலமாக இந்தியாவில் வசித்தாலும், முஸ்லிமாக இருந்தால் குடியுரிமை கிடையாது என்பதையே அஸ்ஸாம் சுட்டுகிறது.

இன்று உலகெங்கும் தீவிர தேசியவாத வெறி செல்வாக்குச் செலுத்துகிறது. அது மேற்குலகில் மட்டுமல்ல, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று பேசப்படும் இந்தியாவிலும் நடக்கிறது என்பது கவனிப்புக்குரியது. ‘நான் இந்தியனா’ என்ற கேள்விக்கு, ‘நீ இந்துவா’ என்ற கேள்வியே பதிலாகிறது.-TM

Advertisements

Written by lankamuslim

ஓகஸ்ட் 10, 2018 இல் 8:27 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. தவறான பார்வைகள். நாட்டின் பிரஜை யார் என்று தீர்மானிக்க எந்த அரசுக்கும் உரிமையுண்டு ( இலங்கையையும் சேர்த்து). எந்தவிதமான புரிதலும் இல்லாமல், பிரச்சார நோக்கில் மட்டுமே எழுதப்பட்டுள்ள கட்டுரை இது. மன வருத்தமெண்டெனக்கு.

    Amaruvi Devanathan

    ஓகஸ்ட் 17, 2018 at 8:06 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: