Lankamuslim.org

மடல்-3: முஸ்லிம் சோதரனுக்கு மடல்

leave a comment »

fdswaswdeவை.எல்.எஸ்.ஹமீட்: அன்பின் சோதரனே! இன்று முஸ்லிம்கள் எதிர்நோக்கும் இக்கட்டான சூழ்நிலைக்கு தீர்வுகாண முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்க வேண்டும்; என்று மிகத்தூய்மையான எண்ணத்துடன் நீ அவ்வப்போது பேசுகிறாய். உனது எண்ணத்தில் இருக்கின்ற அதே தூய்மையுடன் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து அதே தூய்மையுடன் நமது பிரச்சினைகளை அணுகமுடியுமானால் நம்மைவிட வெற்றிபெற்ற சமூகம் இருக்கமுடியாது. ஆனால் இது சாத்தியமா? இல்லையெனில் ஏன்? என்பது தொடர்பாக இதனை ஆய்வுசெய்ய வேண்டிய சிலகோணங்கள் தொடர்பாக கடந்த இரு மடல்களிலும் ஆராய்ந்தோம்.

அதில் மூன்றுவகைக் கூட்டமைப்புகள் தொடர்பாக பார்த்தோம். இதில் நாம் எதிர்பார்ப்பது எந்தவகை? அது நிரந்தர இலக்கைக்கொண்ட நிரந்த அல்லது நீண்டகால கூட்டமைப்பா? அவ்வாறாயின் அது தொடர்பாக நாம் அடையாளம் காணவேண்டிய அடிப்படை அம்சங்கள் தொடர்பாகவும் பார்த்தோம்.

வரலாறு
———-
நாம் பார்த்த மூன்றுவகைக் கூட்டமைப்புகளுள் தேர்தல்கால கூட்டமைப்பு என்பது ஒரு தேர்தலில் அதிகூடிய ஆசனங்களைப் பெறுவதையே பிரதான இலக்காக்கொண்டது; எனப் பார்த்தோம்.

இணைந்த வட-கிழக்கு பிரிக்கப்பட்டதன்பின் முதலாவது கிழக்குமாகாணசபைத் தேர்தல் 2008ம் ஆண்டு நடைபெற்றது. இத்தேர்தலில் முஸ்லிம்களின் பிரதான எதிர்பார்ப்பு முஸ்லிம் முதலமைச்சராக இருந்தது. இதனைச் சாத்தியப்படுத்த அனைத்து முஸ்லிம் கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிடவேண்டும்; என்ற கோரிக்கை பரவலாக எழுந்தது.

இது தொடர்பாக பாராளுமன்றக் கட்டடத்திலும் வெளியிலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதில் “உம்மா” போன்ற அமைப்புக்கள் முக்கிய பங்காற்றின. ஆனாலும் வெற்றிபெறவில்லை. சில முஸ்லிம்கட்சிகள் முஸ்லிம் முதலமைச்சர் தேவையில்லை; என்று பகிரங்கமாகவே மேடைகளில் பேசினார்கள். அதனை ஏற்றுக்கொண்டு நமது மக்களும் வாக்களித்தார்கள்.

அதேபோன்று 2010ம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு இவ்வாறான ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தமுடியுமா? என்றொரு முயற்சி முன்னெடுக்கப்பட்டது. இன்டகொன்டினென்டல் ஹோட்டலில் கூட்டங்கள் நடந்தன. ஆனால் சாத்தியப்படவில்லை. வெறும் தேர்தலுக்கான ஒரு கூட்டமைப்பிற்கே ஒற்றுமைப்படாதவர்கள் இலட்சியத்துடன்கூடிய ஒரு நிரந்தர அல்லது நீண்டகால கூட்டணிக்கு உடன்படுவார்களா? என்பதையும் நாம் மனதில் வைத்துக்கொண்டுதான் இவ்விடயத்தை ஆராயவேண்டும்.

நாம் எதிர்பார்க்கும் கூட்டமைப்பின் இலக்கு என்ன?
—————————————————————-
தமிழர்களைப் பொறுத்தவரை தாம் ஆளப்படுவதற்குத் தயாராக இல்லை. தம்மைத்தாமே ஆளவேண்டும். அதற்கான அதிகாரம்கொண்ட மத்தியஅரசு தலையிட முடியாத ( சமஷ்டி) சுயாட்சி வேண்டும்; என்பது அவர்களுடைய பிரதான வரையறுக்கப்பட்ட இலக்கு. (அந்த இலக்கை அடைவதற்காக உருவாக்கப்பட்டமைப்பே இன்று சிதறிக்கொண்டிருக்கின்றது). எங்களுக்கு அவ்வாறான ஏதாவது ஒரு வரையறுக்கப்பட்ட இலக்கு இருக்கின்றதா?

அவர்கள் ஓர் நிலப்பிராந்திய சமூகம் ( Territorial Community). அவர்கள் தங்களைத் தாங்களே ஆளுவது ஓரளவு சாத்தியம். நாம் சிதறிவாழும் சமூகம். சாத்தியமா? எனவே நமக்கு அவ்வாறான வரையறுக்கப்பட்ட இலக்கு இருக்கமுடியாது. ( நாம் ஆளப்படுவதற்கு அதிகாரப்பகிர்வை ஆதரிக்கின்ற ஒரு பரிதாபத்திற்குரிய சமூகம் என்பது வேறு கதை).

நமது இலக்குகள் என்பவை பொதுவான இலக்குகள். நாமும் இந்நாட்டில் ஏனைய பிரஜைகளைப்போல் கௌரவமான, சமவுரிமையுள்ள, பாதுகாப்பான சமூகமாக வாழவேண்டும். அதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். இவ்வளவுதான் நமது இலக்குகள்.

இவை மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனுக்கும் அடிப்படை உரித்துடையதுதானே! இவை ஏன் இலக்காக அமையவேண்டும்? இதற்கான விடை, இன்று இவைகளை நாம் இழந்து தவிக்கின்றோம். இவற்றை அடைத்துந்துகொள்ளவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது. எனவே எல்லோருக்கும் அடிப்படை உரித்தான ஒன்றை நமது இலக்காக கொள்ளவேண்டிய துரதிஷ்ட நிலையில் இருக்கின்றோம்.

ஏன் இவற்றை இழந்தோம்?
————————————
இந்நாட்டில் இனவாதம் சுதந்திரத்திற்கு முன்பே முனைப்பெடுத்து விட்டது. அது 1915ஆம் ஆண்டு முஸ்லிமகளைத்தான் பதம் பார்த்தது. அதன்பின் அது தமிழர்களை நோக்கித்திரும்பியது. மூன்று தசாப்த யுத்த நிறைவிற்குப்பின் அது மீண்டுமொரு விகார முகத்தோடு முஸ்லிம்களை நோக்கித் திரும்பியிருக்கிறது. இதற்குப் பின்னால் பலதரப்பட்ட சக்திகள், அவற்றின் மறைகரங்கள், வெளிக்கரங்கள் என்று பல காரணிகள் இருக்கின்றன. இவற்றிற்குப் பின்னால் அரசுகளின் ஒத்தடம் அல்லது அவற்றின் மெத்தனங்கள் இவை வீறுகொண்டெழுவதற்குக் காரணமாக இருக்கின்றன.

இன்றைய ஜனாபதித் தேர்தல்முறை, விகிதாசாரத்தேர்தல் என்பன சிறுபான்மைகளுக்கு, குறிப்பாக முஸ்லிம்களுக்கு பாரிய ஓர் அரசியல் பலத்தை வழங்கியிருக்கின்றன. ஆயினும் தனித்துவ அரசியலுக்குப் பின்னால் சென்ற முஸ்லிம்களில் ஒரு பகுதியினர்கூட மீண்டும் தேசியக்கட்சிகளில் சங்கமித்துவிடலாமா? என்று சிந்திக்கின்ற அளவு தனித்துவ அரசியல் தோல்வி நிலையைத் தழுவியிருக்கின்றது.

தனித்துவ அரசியலின் தோல்விப்பாதை இன்று சமூகத்தின்மீது ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற விரக்தி அவர்களை இவ்வாறெல்லாம் சிந்திக்கத் தூண்டுகின்றது. சமூகத்தின் இந்த விரக்திக்கு சமூகமே காரணம்; என்பதை சமூகம் சிந்திக்க மறுக்கிறது. தன்விரக்திக்கு தானே காரணமாக இருந்துகொண்டு “ தனித்துவ அரசியல் கோட்பாட்டையே” குறைகாண முற்படுவதும் அதற்கு மாற்றுத்தீர்வாக தேசிய அரசியலுக்குள் சரணாகதியடைய முற்படுவதும் ஆபத்தான நிலைகளாகும்.

தனது பிழையை அடையாளம் காணாமல் அன்று எது பிழையென்று புதிய பாதையில் காலடியெடுத்து வைத்தோமோ அந்த புதிய பாதையை பிழைகண்டு அன்று அனுபவரீதியாக பிழைகண்ட பழைய பாதைக்குள் புக முற்படுகிறோம்.

அன்று பயணம்செய்த வாகனம் பொருத்தமற்றது; என்று ஓர் புதிய வாகனத்தைத் தெரிவுசெய்கிறோம். அதன் முதற்சாரதி மறைந்த நிலையில் புதிய சாரதியை நியமனம் செய்கின்றோம். சாரதி பிழையென அடையாளம் காணும்போது சாரதிக்குப்பதிலாக வாகனத்தைக் குறைகூறுகின்றோம்.

இன்று தனித்துவ அரசியலின் நிலைமை என்னவென்றால் ஒரு தனித்துவக் கட்சியின் தலைமை ஆசனத்தில் அமர்கின்ற தனிநபர்களை “ கோடீஷ்வரர்களாக, குபேரர்களாக ஆக்குவதுதான் தனித்துவ அரசியல் என்கின்ற புதியவிதி பிறந்து விட்டது. இன்னும் சொல்லப்போனால் இன்று தனித்துவ அரசியல் “ தாதா அரசியலாக மாறிவிட்டது “.

பாதாள உலகத் தாதாக்கள் தங்களது பாதுகாப்புக்காகவும் தங்களது தொழில்களை தங்குதடையின்றி செய்வதற்காகவும் அடியாட்களை நியமித்திருப்பார்கள். அவர்களுக்கு துப்பாக்கிபோன்ற பயங்கர ஆயுதங்கள் வழங்கப்படும். அவர்களது ஒரே பணி, தன் எஜமானை எதிர்ப்பவர்களை வேட்டையாடுவது. அதன்மூலம் எதிர்ப்புகளைப் பணியவைத்து தன் எஜமானின் தொழில் சிறப்பாக நடக்க உதவுவது.

முஸ்லிம் சோதரனே!

இன்று நம் முஸ்லிம் அரசியலும் இந்த நிலையில் இருப்பதை நீ காணவில்லையா? நிழல் உலக தாதா எவ்வாறு கல்வியறிவில்லாதவனை, நியாயங்களைச் சிந்திக்க முடியாதவையாதவனை, தன் அடியாளாக நியமிக்கின்றானோ அதேபோன்று இன்று தலைவர்கள் என்கின்றவர்கள் பெரிதாக படிக்காமல் பெற்றோருக்கு சுமையாக இருக்கும் இளைஞர்களை கவருகிறார்கள். தாதா தன் அடியாட்களுக்குத் துப்பாக்கி வழங்குவதுபோன்று இவர்கள் தம் அடியாட்களுக்கு இலவச தொலைபேசி, சிம்காட் போன்றவைகளை வழங்குகிறார்கள்.

இவர்களது பணி தமது எஜமானர்களுக்கு துதி பாடுவதும் அவர்களை விமர்சிப்பவர்களின் தன்மானத்திற்கு விலைபேசுவதுமாகும்.

விமர்சனம் இல்லாமல் அரசியல் இருக்க முடியாது. ஜனநாயக அரசியலில் முதுகெலும்பு எதிர்க்கட்சி அரசியலாகும். எதிர்க்கட்சி அரசியலில்லாதபோது அது சர்வாதிகார அரசியலாக மாறுகின்றது. ஒரு கருத்துக்கு மட்டும் இடம் இருந்தால் அது ஜனநாயகம் இல்லை. உதாரணமாக கம்யூனிச நாடுகளை அல்லது மன்னராட்சி நாடுகளை ஜனநாயக நாடு என்பதில்லை. ஏனெனில் அங்கு ஒரு கருத்துற்குத்தான் இடமுண்டு.

இன்று முஸ்லிம் அரசியலும் சர்வாதிகார அரசியலாக மாறிவிட்டது. அவர்களின் பிழைகள் சுட்டிக்காட்டப்படக்கூடாது. அவ்வாறு சுட்டிக்காட்டினால் அவற்றிற்கு ஜனநாயக ரீதியில் பதிலளித்து தன்பக்க நியாயத்தை நிறுவ முற்படுவதில்லை. ஏனெனில் நியாயங்கள் தம்மிடம் இருப்பதில்லை. எனவே ஜனநாயக விமர்சனங்களுக்குப் பதிலளிக்காமல் விமர்சித்தவரின்மீது இந்த அடியாட்கள் மூலமாக சேறுபூசப்படுகின்றது. அவர்களது மானம் சந்திக்கு இழுக்கப்படுகின்றது. இதற்கு இன்றைய சமூக வலைத்தளங்கள் பெரிதும் துணைபோகின்றன.

முஸ்லிம் சோதரனே!

சிந்தித்துப்பார். சமூகத்திற்காக அரசியல் செய்பவர்கட்கு அடியாட்கள் எதற்கு. எனவே, இன்று முஸ்லிம் அரசியல் சுயநலத்திற்கான ஒரு சூதாட்டமாக மாறிவிட்டது. முஸ்லிம் கூட்டமைப்பு வேண்டுமென்கின்றாய். மறுவார்த்தையில் கூறுவதானால் ‘ சூதாட்ட கூட்டமைப்பு வேண்டுமென்கின்றாயா?

சுயநலன்கள் ஒன்று சேர்வதால் பொதுநலன் உண்டாக முடியுமா? சுயநலன்கள் அவ்வாறு ஒன்றுபடுவது சாத்தியம் என்றுதான் நினைக்கிறாயா?

உனை நினைக்கும்போது கவலையாக இருக்கிறது. உன் எண்ணம் தூய்மையாக இருக்கின்றது. தூய்மை இருக்கவேண்டிய இடத்தில் தூய்மை இல்லையே! உன் எண்ணம் சமூகமாக இருக்கின்றது. சமூகத்திற்காகவே நாம் என்கின்றவர்களின் உள்ளத்தில் சமூகம் இல்லையே!

(இன்ஷா அல்லாஹ் தொடரும் )

Advertisements

Written by lankamuslim

ஜூலை 28, 2018 இல் 7:13 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: