Lankamuslim.org

முஸ்லிம் நாடுகளின் சர்வாதிகாரிகள் வீழ்த்தப்படும்வரை அல்குத்ஸின் விடுதலை சாத்தியமா ??

leave a comment »

எஸ்.எம்.மஸாஹிம் (இஸ்லாஹி)

zaqazaqqwsxறியாத், கெய்ரோ, டமஸ்கஸ் மற்றும் இஸ்லாமிய , அரேபிய நகரங்கள், மக்களை அடிமைப்படுத்தும் , எதிரிகளுக்கு விசுவாசம் காட்டும், அப்பாவிகளையும் சுதந்திர சிந்தனையாளர்களையும் படுகொலை செய்யும், சிறையில் அடைக்கும் மிலேச்சத்தனமான சர்வாதிகாரிகள் மற்றும் அடிமை முகவர்களிடம் இருந்து மீட்கப்படாத வரை அல்-குத்ஸை இழிவான சயோனிஸ சக்திகளிடம் இருந்து மீட்கமுடியாது – அறிஞர் முஹம்மத் முக்தார் அல் ஷன்கீதி

ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் தலைநகராக ஜெரூசலத்தை அங்கீகரித்திருந்த அமெரிக்கா அங்கு தனது தூதரகத்தை நிறுவியுள்ளதன் மூலமாக ஜெருசலம் தான் இஸ்ரேலின் மறுக்கப்படமுடியாத தலைநகரம் என உலகிற்கு பிரகடனப்படுத்தியுள்ளது. நேற்று மே மாதம் 14 ஆம் திகதி கிழக்கு ஜெரூசலத்தில் அமெரிக்காவின் தூதரகம் துறக்கப்பட்டுள்ளது . கடந்த டிசம்பர் மாதம் ஜெரூசலம் இஸ்ரேலின் தலைநகரம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்ததை தொடர்ந்து டெல் அவியில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஜெரூசலத்துக்கு மாற்றுவதத்திற்கான ஏட்பாடுகள் அமெரிக்க முன்னெடுத்து வந்தது,

அமெரிக்காவின் இந்த முடிவை எதிர்த்து பலஸ்தீன் முழுவதும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன , ஆனால் அமெரிக்கா அவை எதையும் கண்டுகொள்ள வில்லை ,அல் குத்ஸ் அமைந்திருக்கும் ஜெரூசலத்தை பலஸ்தீனின் தலைநகராக்க வேண்டும் என பலஸ்தீனர்கள் கோரிவரும் வேளையில் ஆக்கிரமிக்கப்பட்ட ஜெருசலம் ஒரு போதும் பிரிக்கப்படமாட்டாது , அது இஸ்ரேலின் பிரிக்கமுடியாத ஒரு பகுதி என ஆக்கிரமிப்பு இஸ்ரேல் கூறுகிறது, இஸ்ரேலின் நிலைப்பாட்டை சர்வதேச நாடுகள் அங்கீகரிக்காத போதும் அமெரிக்காவின் பூரண உதவியுடன் கிழக்கு ஜெருசலம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இயந்திரத்தினால் விழுங்கப்பட்டு வருவதை உலகம் மௌனமாக பார்த்துவருகிறது . நேற்று கிழக்கு ஜெருசலத்தில் அமெரிக்க தூதரகத்தை திறக்கும் விழாவுக்கு தனது செய்தியை வீடியோ பதிவாக அனுப்பிவைத்துள்ள டொனால்ட் டிரம்ப் ”சரியாக 70 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேலை உலகில் முதன்முதலில் அங்கீகரித்தது ஜனாதிபதி ஹாரி ட்ரூமேன் தலைமையிலான அமெரிக்க அரசுதான். இன்று நாம் ஜெருசலம் நகரில் அமெரிக்க தூதரகத்தை திறந்துள்ளோம். இது ஒரு நீண்டகால காத்திருப்பு” என்று தெரிவித்திருந்தார் .

ஆனால் பலஸ்தீனர்கள் அமெரிக்க -இஸ்ரேல் நடவடிக்கைக்கு கடுமையான எதிர்ப்பை காட்டிவருகின்றார்கள், கடந்த மார்ச் 30 ஆம் திகதி தொடக்கம் தமது சொந்த பூமிக்கு திரும்பிச் செல்வதற்கான பேரணியை மேற்கொண்டு வரும் பலஸ்தீனர்கள் மீது ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய படை நேற்று தாக்குதல் நடத்தி 61 பலஸ்தீனர்களை சுட்டுக்கொன்றுள்ளது இந்த தாக்குதல்களில் 2500 பேர்வரை காயமடைந்துள்ளார்கள் அமெரிக்காவின் இஸ்ரேலுக்கான தூதரகம் நேற்று கிழக்கு ஜெருசலத்துக்கு இடமாற்றப்பட்ட நிலையில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. அதேவேளை இஸ்ரேல் என்ற சட்டவிரோத நாடு ஸ்தாபிக்கப்பட்ட தினமான மே 15 ஆம் திகதி பலஸ்தீனர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களை குறிக்கும் ”பேரழிவு தினம் ” அனுஷ்டிக்கப்பட்டுவரும் நிலையில் இந்த மிருகத்தனமான தாக்குதல்களை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை நடாத்தியுள்ளது .

இதேவேளை அமெரிக்கா எதை வழங்குகிறதோ அதை பாலஸ்தீனர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது வாயை மூடிக்கொண்டு இருக்கவேண்டும் என சவூதியின் முடிக்குரிய இளவரசர் முஹமட் பின் சல்மான் அண்மையில் தெரிவித்திருந்தார் . அமெரிக்க யூத அமைப்புகளின் தலைவர்களுடன் மூடிய மண்டபத்தில் இடப்பெற்ற சந்திப்பின்போதே முஹமட் பின் சல்மான் இதனை தெரிவித்துள்ளார் . இது பற்றி மேலும் அவர் தெரிவித்துள்ள தகவலில் பலஸ்தீனர்கள் ஒன்றன் பின் ஒன்றாக முன்வைக்கப்படும் சமாதானத்துக்கான சந்தர்ப்பங்களை நழுவவிட்டுள்ளார்கள். இனி அமெரிக்கா முன்வைக்கும் சமாதானத்துக்கான தீர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது வாயை மூடிக்கொண்டு இருக்கவேண்டும் என தெரிவித்துள்ளார். இஸ்ரேல் -அமெரிக்கா சயோனிச கூட்டு புராஜெக்டின் வெற்றி சவூதியின் முடிக்குரிய இளவரசர் முஹமட் பின் சல்மானின் வார்த்தைகளில் வெளிப்படுத்துவதாக உள்ளது –

வேகமாக நகர்த்தப்பட்டுவரும் டிரம்ப் – இஸ்ரேல் வேலைத்திட்டத்தில் சவூதியில் பின் ஸல்மானையும் , எகிப்தில் சிஷியையும் லாபகமாக பயன்படுத்துவதில் டிரம்ப் மற்றும் யூத சயோனிஸம் வெற்றிபெற்றுள்ளது, இந்த இரு ஆட்சியாளர்களுக்கு அவர்களின் அதிகாரத்தை அந்நாடுகளில் பாதுகாக்கும் உத்தரவாதத்தை வழங்கி அவர்களை புதிய மத்திய கிழக்கு திட்டத்தின் சக்தி வாய்ந்த ,நம்பிக்கைக்குரிய முகவர்களாக உருவாக்குவதில் டிரம்ப் – இஸ்ரேல் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது என்பதையே நடைபெறும் சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றது.

முஸ்லிம் உம்மாவின் முதல் கிப்லாவான அல் குத்ஸ்யின் இன்றைய நிலைபற்றி குறிப்பிடும் அறிஞர் முக்தார் அல் ஷன்கீதி றியாத் , கெய்ரோ, டமஸ்கஸ் மற்றும் இஸ்லாமிய , அரேபிய நகரங்கள் மக்களை அடிமைப்படுத்தும் , எதிரிகளுக்கு விசுவாசம் காட்டும் , அப்பாவிகளையும் சுதந்திர சிந்தனையாளர்களையும் படுகொலை செய்யும், சிறையில் அடைக்கும் மிலேச்சத்தனமான சர்வாதிகாரிகள் மற்றும் அடிமை முகவர்களிடம் இருந்து மீட்கப்படாத வரை அல்-குத்ஸை இழிவான சயோனிஸ சக்திகளிடம் இருந்து மீட்கமுடியாது -என குறிப்பிடுகிறார் இதுதான் இன்றைய யதார்த்த நிலை . அமெரிக்காவின் காலடியில் கிடக்கும் இந்த ஆட்சியாளர்கள் பலஸ்தீனின் ஒவ்வொரு அங்குலத்தையும் சயோனிச சக்திகளுக்கு கொடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்கள் .

சவூதியில் பின் ஸல்மான் அதிகாரத்தை கைப்பற்றியது தொடர்பில் The Associated Press யின் வெள்ளைமாளிகைக்கான செய்தியாளர் Jonathan Lemire வெளியிட்டுள்ள தகவல் பின் ஸல்மான் யார் என்பதை அடையாளம் காண உதவுவதாக உள்ளது . அமெரிக்க ஜனாதிபதி டிரம் தனது இஸ்ரேலிய மருமகனான Jared Kouchner, உடன் இணைந்து சவூதியில் புரட்சியை திட்டமிட்டதாகவும், தமது ஆள்தான் தற்போது சவூதி அதிகார பீடத்தில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும், சவூதி முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மானை குறிப்பிட்டு வெள்ளைமாளிகை நண்பர்களுக்கு டிரம்ப் சொன்னதாக அந்த வெள்ளைமாளிகைக்கான செய்தியாளர் தகவல்களை வெளியிட்டிருந்தார் என்பது சுட்டிக்காட்டதக்கது இதேபோன்று எகிப்து சர்வாதிகாரி ஷிசி இஸ்ரேலிய மற்றும் டிரம்பின் திட்டத்துக்கு முழு விசுவாசமாக செயல்பட்டு வருவதைக் காட்டும் ஆதாரங்கள் வெளியாகி இருந்தமையும் கட்டுரையாளர் இது பற்றி ஏற்கனவே விரிவான இரு கட்டுரை எழுதியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றபின்னர் மத்திய கிழக்கை அமெரிக்க -சயோனிஸ சகதிகளின் முழு அடிமையாக மாற்றும் வேலைத்திட்டம் வேகம் கண்டுள்ளது இதன் ஒரு கட்டமாக கிழக்கு ஜெருசலமும் மிக வேகமாக பலஸ்தீன முஸ்லிம்களின் கையில் இருந்து பறிக்கப்பட்டு வருகின்றது. ஆக்கிரமிப்பு இஸ்ரேல் The Greater Jerusalem என்ற சூழ்ச்சிகரமான திட்டத்தின் கீழ் பல சட்டவிரோத குடியிருப்பு தொகுதிகளை நிர்மாணித்து வருகின்றது . ஜெருசலத்தில் புதிதாக நூற்றுக்கணக்கான குடியிருப்பு தொகுதிகளை நிர்மாணிப்பதத்திற்கான அங்கீகாரத்தை ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் அமைச்சரவை வழங்கியுள்ளதுடன் , கிழக்கு ஜெருசலத்தில் குடியிருப்பு தொகுதிகளை நிர்மாணித்து இஸ்ரேலியர்களை குடியேற்றுவதற்கு இருந்த சில நிபந்தனைகளையும் இஸ்ரேலிய அமைச்சரவை நீக்கியுள்ளது , டொனால்ட் டிரம்ப் அதிகாரத்துக்கு வந்ததன் பின்னர் இஸ்ரேல் வீட்டுவசதி மற்றும் கட்டுமான அமைச்சர் யோவ் கால்ன்ட் புதிதாக கிழக்கு ஜெருசலத்தில் மூன்று லட்சம் வீட்டுத் தொகுதிகளை நிர்மாணிப்பதை ஊக்குவிக்கும் செயல்முறையை ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிகின்றன ,இது தவிர கிழக்கு ஜெருசலத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகள் அகழ்வு ஆராச்சி , புராதான வரலாற்று இடங்கள் , நகர நிர்மாணம் என சுவீகரிக்கப்படுவதுடன் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகள் தேசிய பூங்காவாகவும் , தேசிய சுற்றுலா தளங்களாகவும் அறிவிக்கப்பட்டு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இயந்திரத்தால் விழுங்கப்படுகின்றது , இது பற்றி குறிப்பிடும் ஜெருசலத்தில் உள்ள ஐ.நா அதிகாரிகள் சிலர் மேற்படி ,நிர்மாணங்கள் மூலமாக இஸ்ரேல் தனது சட்டவிரோத குடியேற்றங்களை சட்டதன்மை கொண்டதாக மாற்ற முயன்றுவருவதாக குற்றம்சாட்டுகின்றனர் .

மேலும் அதி நவீன பாதை அமைப்பு , மற்றும் cable-car project முதலான திட்டங்களின் ஊடாக ஜெருசலத்தையும் இஸ்ரேலின் மற்ற பகுதிகளையும் இணைக்கும் வேலைத்திட்டங்களை இஸ்ரேல் இப்போது வேகமாக செய்துவருகிறது .மேற்கு ஜெருசலத்தையும் இஸ்ரேலின் மற்ற பகுதிகளையும் இணைக்கும் cable-car project திட்டத்தின் மூலமாக ஒரு மணித்தியாலத்தில் சுமார் 3000 ஆயிரம் சுற்றுலா மற்றும் ஏனைய பயணிகளை ஜெருசலத்துக்கு கொண்டுவர முடியும் இதன் ஊடாக உள்ளூர் அரபு முஸ்லிம்கள் முடக்கப்படுவார்கள் அவர்களின் சொந்த இடத்திலேயே அவர்கள் அந்நியபப்டுத்தப்படுவார்கள் என அவதானிகள் இது பற்றி எச்சரித்து வருகின்றனர்

பலஸ்தீன பூமியில் இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்காவும் , சர்வதேச நாடுகளும் பலஸ்தீன பூமியில் இஸ்ரேல் என்ற ஒரு நாட்டையும் , பலஸ்தீன் என்ற ஒரு நாட்டையும் ஏற்றுக்கொள்ளும் இரு நாட்டு தீர்வுக்கு ஆதரவும் அழுத்தமும் கொடுத்து வந்துள்ளன , ஆனால் தற்போதைய அமெரிக்க நிர்வாகம் சயோனிச இஸ்ரேலிய இலக்கான இஸ்ரேல் என்ற ஒரு தேசம் அதில் பலஸ்தீனர்கள் அதிகாரம் அற்ற நிர்வாக அலகு ஒன்றின் கீழ் இஸ்ரேலிய பாதுகாப்பு துறையின் நேரடி அதிகாரத்தின் கீழ் அடிமைப்படுத்தப்படும் திட்டத்துக்கு முழு ஆதரவையும் தெரிவித்துவருவதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பலஸ்தீன் -இஸ்ரேல் – பிரச்சினைக்கு தீர்வுகாணும் முயற்சி என்ற பெயரில் சர்வதேசநாடுகளின் பெரியளவிலான ஒத்துழைப்புடனும் ,அரபு லீக் , இஸ்லாமிய நாடுகளின் ஒன்றியம் ஆகியவற்றின் பங்கு பற்றுதலுடன் பிரான்ஸ் தலைநகர் பரீசில் 70 நாடுகளின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி சர்வதேச சமாதான உச்சிமாநாடு ஒன்றை நடாத்தினர் . இந்த மாநாட்டின் இறுதி அறிக்கை -இஸ்ரேல்- பலஸ்தீன் என்ற ”இரு நாடுகள்’ என்ற தீர்வு யோசனையை மீண்டும் வலியறுத்துவதாக அமைந்திருந்தது இந்த தீர்வது யோசனையை உதவாக்கரை ,குப்பை என்ற வர்ணித்த நெதன்யாஹு , ” இந்த – பரீஸ் -மாநாடு நேற்றைய உலகின் கடைசி துடிப்புக்களில் ஒன்று, நாளை உலகம் வித்தியாசமாக இருக்கப் போகிறது , அது அண்மித்தும் விட்டது” என்கிறார் ,இப்போது பலஸ்தீனர்களுக்கு ‘state minus’ பற்றி பேசுகிறார் அதாவது அதிகாரம் குறைக்கப்பட்ட மாநிலம் என்ற தீர்வு பற்றி பேசிவருகிறார் ,இவற்றைத்தான் சவூதியின் முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மானும் , எகிப்தின் அப்துல் பதாஹ் அல் சிஷியும் பலஸ்தீனர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறார்கள் , எது எப்படியிருந்தாலும் பலஸ்தீனர்கள் இதை பார்க்கும் விதம் முற்றிலும் வித்தியாசமானதாகவுள்ளது .

”இஸ்ரேலும் -அமெரிக்காவும் இணைத்து எந்த தீர்வை முன்வைத்தாலும் அது எமது (பாலஸ்தீனர்கள்) நலனை பேணுவதாக ஒருபோதும் இருக்கப்போவதில்லை அது இரு நாட்டு தீர்வு யோசனையாக ,அல்லது ஒரு நாட்டு தீர்வு யோசனையாக இருந்தபோதிலும் சரியே, எனது பூமி முழுவதும் மீட்கப்படும்போதே உண்மையான தீர்வை நாம் கண்டுகொள்வோம்” என்பது அவர்களின் உறுதியான நிலைப்பாடாக உள்ளதுடன் அந்த நிலைப்பாட்டை களத்திலும் நிரூபித்து வருகின்றார்கள் . .

தற்போது பலஸ்தீனில் ஏற்றப்பட்டுள்ள மோசமான சூழ்நிலைக்கு அமெரிக்க டிரம்ப் நிர்வாகம் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஹமாஸ் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது ஆனால் டிரம்ப் நிர்வாகம் இந்த மோசமான சூழ்நிலைக்கு முழுக் காரணமும் ஹமாஸ் அமைப்புதான் என குற்றம் சாட்டுகின்றது . மறுபுறத்தில் சவூதியின் வெளிநாட்டு அமைச்சர் ஹமாஸ் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக குறிப்பிடுகிறார் .இதேவேளை எகிப்து ஷிசி நிர்வாகம் ஹமாஸ் அமைப்பை மிக மோசமான அரசியல் மற்றும் இராணுவ பொறியில் சிக்கவைக்க முயன்றுவருகின்றது . இதேவேளை யூஸுப் அல் கர்ளாவி தலைமையிலான இஸ்லாமிய அறிஞர்களுக்கான சர்வதேச ஒன்றியம் பலஸ்தீன பிரச்சினையில், சியோனிஸம் செய்யும் குற்றத்தில் அமெரிக்காவுக்கு பங்குண்டு என குற்றம் சாட்டியுள்ளதுடன் பலஸ்தீனர்களின் திரும்பிச் செல்வதற்கான உரிமை ஒரு ஷரீயா மற்றும் சட்ட ரீதியான உரிமையாகும், அதை கைவிட முடியாது , அது மறுக்கப்படுவது ஒரு பெரிய காட்டிக் கொடுப்பு ஆகும் என தெரிவித்துள்ளது நிச்சயமாக இந்த சர்வாதிகாரிகளிடமிருந்து இஸ்லாமிய நாடுகள் விடுதலை அடையாத வரை பலஸ்தீன் , அல் குத்ஸ் மீட்பு என்பது அசாத்தியமான ஒன்றாகத்தான் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ..

இதேவேளை கடந்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை நடாத்திய தாக்குதல்களில்  108 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 12000 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று இஸ்ரேல் நடாத்திய பல்வேறு தாக்குதல்களில் 61 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர் . இதை வன்மையாக கண்டித்துள்ள துருக்கி ஜனாதிபதி அர்துவான் ‘இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு’ என தெரிவித்துள்ளதுடன் துருக்கியில் பலஸ்தீர்களுக்கு ஆதரவாக மூன்று நாட்களை துக்கத்தினமாக பிரகடனப்படுத்தியுள்ளார் ,அதேவேளை அங்காராவில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை எதிரிப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை பலஸ்தீனர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு நாடுகளில் மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணிகள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எஸ்.எம்.மஸாஹிம்(இஸ்லாஹி)-BA.Hons (special in political science)

zaqazaqqwsx

Advertisements

Written by lankamuslim

மே 15, 2018 இல் 10:43 பிப

கட்டுரைகள், பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: