Lankamuslim.org

சம்பந்தனுக்கும் ஹபாயா வேண்டாமாம் !!!

with one comment

sampanஸ்ரீ சண்முகா கல்லூரியில் இதுவரை காலமும் பின்பற்றப்பட்டு வந்த உடை மரபுகளுக்கு மதிப்பளித்து, எந்தச் சமூகமாயினும் புதிய உடை கலாசாரத்தை அறிமுகம் செய்யாமல், இதுவரை காலமும் இருந்து வந்தது போல தொடர்வதே பொருத்தமாக அமையும் என தெரிவித்துள்ள இரா.சம்பந்தன், அதற்காக தங்களின் ஒத்துழைப்பையும் தங்களது சமூகத்தினது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கின்றேன் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அனுப்பிவைத்த கடிதத்துக்கு பதிலளித்து எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அக்கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

மேற்படி விடயம் தொடர்பாக தாங்கள் எனக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளதான செய்தி இன்றைய (28.04.2018) சில தமிழ் பத்திரிகைகளில் அதன் முழுமையான உள்ளடக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பிட்ட கடிதம் இதுவரை எனது பார்வைக்குக் கிடைக்கவில்லையாயினும், பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளில் முழு விபரமும் குறிப்பிடப்பட்டுள்ளமையால் அது தொடர்பான எனது நிலைப்பாட்டினைத் தங்களுக்குத் தெரிவிப்பது பொருத்தமென நினைக்கின்றேன்.

எனது தலைமைத்துவம் பற்றியும் மக்கள் மத்தியிலும் தங்களுக்கும் என்மீது உள்ள மதிப்புப் பற்றியும் தாங்கள் சிறப்பாகக் குறிப்பிட்டமைக்காக எனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டு குறிப்பிட்ட விடயம் தொடர்பாக எனது நிலைப்பாட்டை அறியத் தருகின்றேன்.

தமிழ் மற்றும் முஸ்லிம் இனங்களைச் சேர்ந்த தமிழ்பேசும் மக்கள் தொடர்பாக எமது தலைவர் தந்தை செல்வநாயகம் அவர்கள் பின்பற்றியதும், அவரைத் தொடர்ந்து தலைவர் அ.அமிர்தலிங்கம் அவர்கள் பின்பற்றியதுமான, “நாம் தமிழ்பேசும் மக்கள்” என்ற கொள்கையை நானும் தொடர்ந்து பின்பற்றி வருகின்றேன் என்பதை மக்களும் நீங்களும் நன்கு அறிவீர்கள்.

வடக்குக் கிழக்குப் பிராந்தியங்களில் தமிழ்பேசும் மக்களுடைய நிலங்கள் அவர்களுடைய கலாசார, பாரம்பரியங்கள் பாதுகாத்துப் பேணப்பட வேண்டும் என்ற அடிப்படையில் பண்டாரநாயக்கா – செல்வநாயகம் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திலும் பின்பு டட்லி சேனநாயக்கா – செல்வநாயகம் ஆகியோருக்கிடையில் செய்யப்பட்ட ஒப்பந்தத்திலும் குறிப்பிடப்பட்ட அதே கொள்கையின்படியே எனது அரசியற் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

அந்த வகையில் தமிழ் – முஸ்லிம் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக குறிப்பாக எனது தொகுதியான திருகோணமலையிலும் பொதுவாக இந்நாட்டிலும் நானும் நான் சார்ந்த அரசியல் கட்சிகளும் எம்மால் முடிந்தளவு பங்களிப்பைச் செய்து வருகின்றோம்.

திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி 95 ஆண்டுகளுக்கு முன்னர் இந்து மகளிர் கல்வி கற்பதற்காக இந்து சமயப் பெண்மணியான தங்கம்மா சண்முகம்பிள்ளை என்ற கொடையாளியினால் தனது சொந்தப் பணத்திலும், சொந்த நிலத்திலும் இந்து மகளிரின் கல்வி மேம்பாட்டுக்காக ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த ஒரு பாடசாலையாகும்.

1960களுக்குப் பின்னர் இந்தப் பாடசாலையை அரசாங்கம் பொறுப்பேற்பதற்கு முன்னர் இங்கு இந்து மகளிர் மாத்திரம் உயர்கல்வி கற்று வந்ததோடு, இந்து கலாசார பாரம்பரியங்களும் பின்பற்றப்பட்டு வந்த வரலாறு உண்டு. தனியார் பாடசாலைகளைப் பொறுப்பேற்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் கிறிஸ்தவ பாதிரிமார்கள் நடாத்திய பிரபல பாடசாலைகளும் அதேபோன்று இந்து மற்றும் ஏனைய சமூக நிறுவனங்களால் பராமரிக்கப்பட்டு வந்த பாடசாலைகளும் பொறுப்பேற்கப்பட்டபோதும்,

அவற்றின் பெயர், கலாசாரம், கல்விமுறை என்பன மாற்றங்களுக்கு உட்படாமல் தொடர்ந்து பேணப்படும் என்ற அடிப்படையிலேயே அவை பொறுப்பேற்கப்பட்டன. இந்த நிலைமையே தொடர்ந்தும் அவ்வாறான அநேக பாடசாலைகளில் பேணப்பட்டு வருவதைத் தாங்களும் அறிவீர்கள்.

இதன் அடிப்படையிலேயே திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரியிலும் அதன் ஆரம்பகால மரபுகள் பேணப்பட்டு வருவதோடு, இன்று தேசியப் பாடசாலையாக அங்கீகரிக்கப்பட்டு சிறந்த உயர் பெறுபேறுகளைப் பெறும் பாடசாலையாகச் செயற்பட்டு வருகின்றது. அவ்வாறு செயற்படுவதற்கு பெற்றோர்கள், நலன்விரும்பிகள், பழைய மாணவிகள் மற்றும் சமய, சமூக நிறுவனங்கள் உதவியாகவும் அனுசரணையாகவும் இருந்து வருகின்றன.

அண்மையில் இந்தக் கல்லூரியில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக எனது கவனத்துக்குத் தெரிவிக்கப்பட்டதன்படி, கடந்த நான்கு ஆண்டுகளாக முஸ்லிம் ஆசிரியைகள் மூன்று பேர் இக் கல்லூரியில் சேவைக்காக இணைக்கப்பட்டுத் தமது கடமைகளைச் செய்து வந்தபோது அவர்கள் இக்கல்லூரியின் உடை நியதிகளுக்கு அமைவாக சேலை அணிந்தே கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தனர்.

அவர்கள் முழுமையாக இக் கல்லூரியின் மரபு, கல்லூரி ஒழுக்க விதிமுறைகள் மற்றும் கல்வி விழுமியங்களுக்கு அமைவாக கடந்த நான்கு ஆண்டுகளாக எவ்வித வேறுபாடும் இன்றிச் செயற்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்பாக இந்தக் கல்லூரி சமூகம் எத்தகைய எதிர்ப்பையும் வெளிக்காட்டவில்லை. ஆயினும், இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஒரு முஸ்லிம் ஆசிரியை இடமாற்றம் பெற்று வந்தபோது முஸ்லிம் பெண்கள் அணியும் ‘அபாயா’ உடையில் கல்லூரிக்கு வந்துள்ளார்.

அவ்வேளையில் கல்லூரி அதிபர் அந்த ஆசிரியைக்கு அந்தக் கல்லூரி ஆசிரியைகளின் உடை தொடர்பான மரபுகளையும், அப்பாடசாலை ஒழுக்க விதிகளையும் எடுத்துக்கூறி ஏனைய ஆசிரியைகளைப் போன்று சேலை அணிந்து வருமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

குறித்த ஆசிரியையும் தனது உடையில் மாற்றம் செய்து சேலை அணிந்து வருவதற்கு சிறிது கால அவகாசம் கோரியிருந்ததால் அதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு இருந்த வேளையில், இந்த மாதம் 22ந் திகதி, ஏற்கெனவே சேலை அணிந்து கல்லூரிக்கு வந்துகொண்டிருந்த மூன்று முஸ்லிம் ஆசிரியைகளும் கணவர்மாருடன் கல்லூரிக்கு வந்து தாமும் இனிமேல் ‘அபாயா’ அணிந்து வரப்போவதாகவும், அது தமது உரிமை என்ற ரீதியிலும் அச்சுறுத்தும் பாணியில் அதிபருக்குத் தெரிவித்துவிட்டு அடுத்த நாள் ‘அபாயா’ உடை அணிந்து வந்துள்ளனர்.

இதனைக் கண்ணுற்ற மாணவிகளும் பெற்றோர்களும் பழைய மாணவிகளும் மற்றும் பாடசாலையின் நலன்விரும்பிகளும் முஸ்லிம் ஆசிரியைகளின் இந்தத் திடீரென ஏற்பட்ட உடை மாற்றம் தொடர்பாக தமது ஆட்சேபனையைத் தெரிவித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர். இதனால் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து மேலதிகக் கல்விப் பணிப்பாளர் தலைமையில் அதிபர் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் பேசி ஒரு தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிகின்றேன்.

2400 மாணவிகள் கல்வி பயிலும் இக்கல்லூரியில் கிட்டத்தட்ட 120 க்கு மேற்பட்ட முஸ்லிம் மாணவிகளும் 110 கத்தோலிக்க, கிறிஸ்தவ மாணவிகளும் இப்போது கல்வி பயில்கின்றனர்.

இது ஒரு தேசிய பாடசாலையாக உள்ளமையால் இங்கு எந்த இனத்தை அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களும் கல்வி கற்கவும் கல்வி போதிக்கவும் எத்தகைய தடையும் இல்லை. ஆயினும், கல்லூரியில் பேணப்பட்டு வந்த ஒழுக்கக் கட்டுப்பாடுகள், கலாசார மரபுகள், மாணவிகள், ஆசிரியைகள் அணிகின்ற உடை தொடர்பான ஒழுங்குமுறைகள் அவ்வாறே பேணப்பட வேண்டு என்பது இந்தக் கல்லூரி சமூகத்தின் விருப்பமாகும்.

முஸ்லிம் ஆசிரியைகள் ஏற்கெனவே இந்தக் கல்லூரிக்குச் சேலை அணிந்து, தங்களது பாரம்பரியமான முக்காடு (பர்தா) அணிந்து வந்து சேவையாற்றியது போல மேலும் தொடர்வதை இக்கல்லூரி சமூகம் எவ்விதத்திலும் ஆட்சேபிக்க மாட்டாது. அதுபோல இக்கல்லூரியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியைகள் கல்லூரிக்கு வெளியே தாம் விரும்பியவாறு உடை அணிந்து கொள்வதும் அவர்களது விருப்பமாகும்.

ஆயினும், அவர்கள் கல்லூரிக்கு வருகின்றபோது மட்டும் ஆசிரியைகளுக்கான உடை பற்றிய தேசியக் கொள்கைகளின் அடிப்படையிலும் இக்கல்லூரி ஆசிரியைகளுக்கான உடை ஒழுங்குவிதிகள் அடிப்படையிலும் செயற்படுவதே இந்தப் பிரச்சினைக்கான தீர்வாக அமையும் என நான் நினைக்கின்றேன். இவ்விடயத்தில் எதிர் எதிரான இன, மத ரீதியான ஆர்ப்பாட்டங்களைச் சமய சார்பு அமைப்புக்கள் செய்வது விரும்பத்தக்கதல்ல என்பதே எனது நிலைப்பாடு.

இனங்களுக்குரிய கலாசார உடைகளில் அண்மைக் காலங்களில் மாற்றங்கள் ஏற்பட்டு வருவது தவிர்க்க முடியாதது. இலங்கையில் முஸ்லிம் பெண்கள் ‘அபாயா’ அணிவதும் அவ்வாறான அண்மைக்கால ஒரு மாற்றமாகும். இத்தகைய மாற்றங்கள் எல்லாச் சமூகங்களுக்கும் எல்லா இனங்களுக்கும் பொதுவானதும் அவர்களுக்குரிய உரிமையுமாகும்.

இவ்வாறு ஆடைக் கலாசாரத்தில் அதிக மாற்றங்கள் ஏற்பட்டாலும் இன்னமும் ஆசிரிய பயிற்சிக் கல்லூரிகள் மற்றும் ஏனைய மதப் பாடசாலைகளில் போதிக்கும் முஸ்லிம் ஆசிரியைகளும் சேலை அணிவதே தற்போதும் நடைமுறையில் உள்ளது. அதுபோல விசேட சந்தர்ப்பங்களில் அல்லது இடங்களில், உதாரணமாக பாடசாலைகள், புனிதத்தலங்கள், மதவழிபாட்டிடங்கள் மற்றும் சில அலுவலகங்களில் உடை தொடர்பான கட்டுப்பாடுகள் பேணப்படுவது அந்தந்த நிறுவனங்களுக்குரிய தனித்துவமாகும்.

அதில் மாற்றங்களைச் செய்ய முனைந்தால் சமூகத்தில் பிரச்சினைகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது போகும். நீங்கள் குறிப்பிட்டது போல கடந்த காலங்களில் எமது இரு சமூகங்களுக்கு இடையிலான சிற்சில பிரச்சினைகளைப் பூதாகரமாக்கி பிளவுகளை ஏற்படுத்தி அவற்றில் குளிர்காய பல்வேறு தீய சக்திகள் செயற்பட்டு வந்துள்ளனஎன்பதை நானும் ஏற்றுக் கொள்ளுகின்றேன்.

அத்தகைய தீய செயற்பாடுகளுக்கு நீங்களோ, நானோ முக்கியத்துவம் அளிக்கக் கூடாதென்பதே எனது விரும்பம்.

எனவே, இந்தச் சிறு பிரச்சினையைப் பெரிதுபடுத்தி மேலும் வளர விடக்கூடாது என்பதே எனது நிலைப்பாடு. ஆகவே, இந்தப் பிரச்சினையை சம்பந்தப்பட்ட அமைச்சும், கல்வித் திணைக்களமும் குறித்த கல்லூரிச் சமூகமும் அக்கல்லூரியின் பெற்றோரும் பழைய மாணவிகளும் சேர்ந்து கட்டுப்பாடான ஒழுங்குமுறையில் பேசி, கல்லூரியில் பின்பற்றப்பட்டு வந்த உடை மரபுகளுக்கு மதிப்பளித்து, எந்தச் சமூகமாயினும் புதிய உடை கலாசாரத்தை அறிமுகம் செய்யாமல், இதுவரை காலமும் இருந்து வந்தது போல தொடர்வதே பொருத்தமாக அமையும் என்பது எனது அபிப்பிராயமாகும். அதற்காக தங்களின் ஒத்துழைப்பையும் தங்களது சமூகத்தினது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கின்றேன்.

இரா.சம்பந்தன், பா.உ.,
எதிர்க்கட்சித் தலைவர் -TK

 

Advertisements

Written by lankamuslim

ஏப்ரல் 29, 2018 இல் 8:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

 1. எம்.ரீ. ஹைதர் அலி
  077 3681209

  இனவாத செயற்பாடுகளை மேற்கொண்ட சண்முகா வித்தியாலய அதிபர் மற்றும் ஆசிரியர்கள் ஒருவருட கால பணி நிறுத்தம் செய்யப்பட வேண்டும் – பொறியியலாளர் ஷிப்லி பாறுக்

  திருகோணமலை சண்முகா வித்தியாலயத்தில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியர்களின் ஆடை தொடர்பில் விடுக்கப்பட்ட தடையானது இந்நாட்டு முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமையினை கேள்விக்குறியாக்கியுள்ளது என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், காத்தான்குடி நகரசபையின் உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

  நேற்று (28.04.2018) விஷேட ஊடகவியலாளர்கள் மாநாடு ஒன்றினூடாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்

  அவரவர் கலாச்சாரத்திற்கு அமைவாக தமது உடைகளை அமைத்துக்கொள்வதற்கு இந்நாட்டில் பூரண அதிகாரமுள்ள போதிலும் மிகவும் ஒழுக்கமான முறையில் முஸ்லிம் ஆசிரியைகள் அணிந்துவரும் அபாயா போன்ற ஆடைகளுக்கு திருகோணமலை சண்முகா வித்தியாலயத்தில் தடை விதிக்கப்பட்டமையானது முற்றிலும் ஜனநாயகத்திற்கு எதிரானதாகும். நாட்டிலுள்ள அரச பாடசாலையொன்றில் ஆசிரியர்களின் உடை தொடர்பாக தேவையற்ற இன ரீதியான கட்டுப்பாடுகளை திணிப்பதற்கு எவருக்கும் எத்தகைய அதிகாரங்களும் கிடையாது.

  இந்நிலையில் இவ்வாறான இன ரீதியான செயற்பாடுகளை மேற்கொள்பவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுப்பதற்கு மாற்றமாக அப்பாடசாலையில் கடமையாற்றக்கூடிய பாதிக்கப்பட்ட குறித்த முஸ்லிம் ஆசிரியைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை இந்நாட்டின் சிறுபான்மை மக்களின் அடிப்படை உரிமையினை கேள்விக்குறியாக்கியுள்ளது.

  ஆகவே இவ்வாறான இன ரீதியான செயற்பாடுகளும், அதற்கு ஆதரவளிக்கும் நிர்வாக நடவடிக்கைகளும் வன்மையாக கண்டிக்கத்தக்கவையாகும். இந்நாட்டின் சிறுபான்மை மக்களாகிய தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து தமது அபிலாசைகளை வென்றெடுப்பதற்காக ஒருமித்து பயணிக்கவேண்டியதொரு தருணத்தில் ஒரு சில இனவாதிகளினால் முன்னெடுக்கப்படும் இத்தகைய செயற்பாடுகள் மிகவும் வருந்தத்தக்கதாகும்.

  எனவே ஒழுக்கத்தினையும், சமூக ஒற்றுமையினையும் போதிக்கக்கூடிய அரச பாடசாலையொன்றில் மிகவும் மோசமான முறையில் இவ்வாறான இனவாத செயற்பாடுகளை மேற்கொண்ட நபர்களை கண்டறிந்து அத்தகைய ஆசிரியர்கள், பாடசாலை அதிபர் மற்றும் சம்மந்தப்பட்ட பாடசாலை நிருவாகிகள் ஆகியோர்களுக்கு குறைந்த பட்சம் ஒருவருட கால பணி நிறுத்தம் செய்யப்படுவதோடு, குறித்த ஒவ்வொரு நபர்களுக்கும் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் வழங்கும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

  மேலும் இப்பிரச்சனையின் போது சம்மந்தப்பட்ட இனவாதிகளுக்கெதிராக நடவடிக்கை மேற்கொள்வதற்கு மாறாக பாதிக்கப்பட்ட முஸ்லிம் ஆசிரியர்களை இடமாற்றம் செய்த அதிகாரிகளுக்கெதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு, குறித்த பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் ஆசிரியைகளை மீண்டும் அப்பாடசாலைக்கு இடமாற்றம் செய்வதற்குரிய உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

  இதுவிடயம் தொடர்பில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் கௌரவ இரா. சம்மந்தன் மற்றும் தேசிய சகவாழ்வு அமைச்சர் கௌரவ மனோ கணேசன் போன்ற பொறுப்புவாய்ந்த தலைவர்கள் உடனடியாக தலையிட்டு இப்பிரச்சனைக்கான நிரந்தர தீர்வு ஒன்றினை பெற்றுக்கொடுப்பனூடாக நாட்டின் ஜனநாயக சுதந்திரத்தினை உறுதிப்படுத்துவதோடு இவ்வாறான செயற்பாடுகள் இனி எங்கும் நடைபெறாமல் தடுப்பதற்குரிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும்.

  மேலும் இத்தகைய சந்தர்ப்பங்களில் சமூக வலைத்தளங்கள், மற்றும் ஏனைய ஊடகங்களினூடாக இனவாத கருத்துக்களை வெளியிடுவதனையும், ஏனையவர்களின் மத நம்பிக்கை ரீதியான விடயங்களை தேவையற்ற முறையில் விமர்சிப்பதனையும் தமிழ், முஸ்லிம் ஆகிய இரு தரப்பினரும் தவிர்ந்து இந்நாட்டின் சிறுபான்மை மக்கள் மத்தியில் சிறந்ததொரு இன ஒற்றுமை மேலோங்குவதற்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

  Riyas

  ஏப்ரல் 29, 2018 at 8:09 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: