Lankamuslim.org

மிகவும் கௌரவத்தோடு வாழ்ந்த முஸ்லிம்கள் இப்போது மற்றவர்களிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்

leave a comment »

hjyuewலத்தீப் பாரூக்: எந்தவிதமான உதவியும் அற்ற நிலையில் இருந்த அப்பாவி முஸ்லிம்கள் மீது நன்றாக திட்டமிடப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் சிங்கள இனவாத கூலிப்படையினரால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

அவர்கள் முஸ்லிம்களது வீடுகளை உடைத்தார்கள்;. பள்ளிவாசல்களுக்கும் வர்த்தக நிலையங்களுக்கும் தீ வைத்தார்கள் முஸ்லிம்களின் சொத்துக்களை எரித்தார்கள் புனிதக் குர்ஆன் பிரதிகளை தீயிட்டு கொழுத்தினார்கள். முடிந்தவரையில் முஸ்லிம் வர்த்தக நிலையங்களை சூறையாடி காலி செய்த பின்பே அவற்றுக்கு தீ வைத்தார்கள்.

ஜனாதிபதியும் பிரதம மந்திரியும் இவற்றைத் தடுத்து நிறுத்தி முஸ்லிம்களைக் காப்பாற்றத் தவறிவிட்டனர்.

பாதுகாப்பு வழங்க வேண்டிய பொலிஸாரும் விஷேட அதிரடி படையினரும் காடையர்களுக்கு துணை நின்று சேதங்களை அதிகமாக்கினர். காயமடைந்து ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒரு முஸ்லிமை டாக்டர் ஒருவர் கேவலமாகப் பேசி சிகிச்சை அளிக்க மறுத்துள்ளார். அது மட்டும் அன்றி இவனை சிறையில் அடையுங்கள் என்று சத்தமிட்டுள்ளார். இப்போது முஸ்லிம்கள் அரசாங்கத்தின் மீதும் பாதூப்பு படைகள் மீதும் பூரண நம்பிக்கை இழந்த நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் சமூக ஊடகங்கள் மீது விதிக்கப்பட்ட தடையானது, அரசாங்கம் கண்டியிலும் அதனை அண்மித்த ஏனைய பகுதிகளிலும் இனவாதிகளிடம் இருந்து அப்பாவி முஸ்லிம்களை பாதுகாக்கத் தவறிவிட்டது என்ற மாபெரும் குற்றச்சாட்டை மூடி மறைக்க உதவியுள்ளது.

இனவாத கூலிப்படையினரின் தாக்குதல் திட்டம் பற்றி முன் கூட்டியே புலனாய்வுத் தகவல்கள் கிடைத்த போதிலும் அதனை தடுத்து நிறுத்த அரசாங்கம் எந்த ஒரு முன்னேற்பாட்டு நடவடிக்கையையும் எடுக்க வில்லை. முஸ்லிம்களுக்கு எதிரான பல்வேறு உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளுக்காக பணிபுரியும் இந்த இனவாத கூலிப்படையினர் திகன, தெல்தெனிய, அக்குறணை மற்றும் அவற்றை அண்மிய மலையகப் பிரசேங்களில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள முஸ்லிம்களின் சொத்துக்களை நாசப்படுத்தி உள்ளனர். பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் இரவோடு இரவாக தமது வாழ்வாதாரங்களை இழந்து நடுத்தெருவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இந்த நாட்டின் பிரதான ஊடகப் பிரிவு எப்போதுமே இனவாத சிந்தனை கொண்ட ஊடகவியலாளர்களால் நிரம்பி வழியும் ஒரு பிரிவாகவே உள்ளது. அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான பல்வேறு சக்திகளுக்கு துணை போன வண்ணம் உள்ளனர். இருந்தாலும் திகன சம்பவங்கள் இடம்பெற்ற முதல்வார காலப்பகுதியில் அச்சு ஊடகங்கள் அந்தச் சம்பவங்கள் பற்றிய தகவல்களை வழங்குவதில் பிரதானபங்கு வகித்தன. முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட சொத்து இழப்புக்களை அவர்கள் விரிவாக வெளியிட்டனர்.

ஆனால் இரண்டாவது வாரம் முதல் இந்த ஊடகங்கள் தமது போக்கில் மாற்றங்களை வெளிப்படுத்த தொடங்கின. பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் தீவிரப் போக்கு உள்ளவர்கள் எனக் குற்றம் சாட்டிஇனவாதிகளின் வெறித்தனத்தை மூடி மறைக்கும் முயற்சிகளை மேற்கொண்டன.

இரண்டாம் வார இறுதியில் இலத்திரனியல் ஊடகங்கள் முஸ்லிம்களை முற்றாகப் புறந்தள்ளி அவர்களை மறந்தே போய்விட்டன. முஸ்லிம்கள் மீது இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போது அவர்கள் தங்களையோ தமது உடமைகளையோ பாதுகாத்துக் கொள்ள எவ்வித தயார் நிலையிலும் இருக்கவில்லை.

மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் அளுத்கமை, பேருவளை மற்றும் தர்கா நகர் பகுதிகளில் முஸ்லிம்கள் தாக்கப்பட்ட போது உள்ளுர் ஊடகங்கள் அது பற்றிய செய்திகளை வெளியிட முற்றாகத் தவறி இருந்தன. சர்வதேச ஊடகங்கள் இது பற்றி விரிவான தகவல்களைத் தரத் தொடங்கியதும் உள்ளுர் ஊடகங்கள் விழித்துக் கொண்டன. சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களால் நாட்டின்
நற்பெயருக்கு சர்வதேச மட்டத்தில் பெரும் களங்கம் ஏற்பட்டது.

எவ்வாறேனும் முஸ்லிம்களுக்கு எதிராக திகனயில் கலவரங்கள் இடம்பெற்ற போது உள்ளுர் ஊடகங்கள் தமது முன்னைய தவறை உணர்ந்து செயற்பட்டதை அவதானிக்க முடிந்தது. சர்வதேச ஊடகங்கள் அண்மைய கலவரங்கள் பற்றி தகவல்களை வெளியிட்ட போது பௌத்த மதத்துக்கும் பௌத்தர்களுக்கும் தீவிரவாதத்தோடு எவ்வித தொடர்பும் இல்லாத போதும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் பௌத்த தீவிரவாதிகளால் இழைக்கப்பட்ட குற்றங்கள் என்றே குறிப்பிட்டன.

என்னுடைய நண்பர் ஒருவர் வளைகுடா நாடொன்றில் இருந்து என்னோடு தொடர்பு கொண்டு இதுபற்றி பேசும் போது ‘எப்போதும் சிறுபான்மையினரைத் தாக்கிக் கொண்டிருக்கும் இந்த சிங்களவர்களுக்கு என்ன நடந்துள்ளது?’ என்று கேட்டார். இது முஸ்லிம்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையிலான பிரச்சினை அல்ல. சில இடங்களில் பல தினங்களாக முஸ்லிம் பள்ளிவாசல்களுக்குள் இருந்து அவற்றை பௌத்த மதகுருமார் காப்பாற்றி உள்ளனர் என்று நான் அவருக்கு விளக்கம் அளித்தேன்.

‘அப்படியானால் அரசாங்கம் என்ன செய்கின்றது?’ என்று அவர் அடுத்த வினாவை தொடுத்தார். அரசாங்கம் ஏன் இதை தடுத்து நிறுத்தி சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களை தண்டித்து சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்ட முடியாது? என்று அவர் கேள்விகளை நீட்டினார். ஆனால் இதற்கு நான் என்ன பதில் சொல்வது என்பது தான் இப்போது முக்கிய கேள்வி. நல்லாட்சி என்ற பெயரில் நடக்கும் இந்த வெற்கக் கேடான விடயங்கள் பற்றி நாம் எப்படி மற்றவர்களுக்கு விளக்கம் அளிப்பது?

முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த இரண்டு வருடங்களாக இடம்பெற்று வரும் தாக்குதல்கள் மற்றும் சதித் திட்டங்கள் பற்றி அரசாங்கம் தனது முன்னேற்றகரமான புலனாய்வு வலையமைப்புக்கள் ஊடாக ஏற்கனவே தகவல்களை அறிந்து வைத்துள்ளது. ஆனால் அதை தடுப்பதற்கான எந்த நடடிக்கையையும் எடுக்காமல் இனவாதிகளுக்கு பச்சைக் கொடி காட்டப்பட்டு வந்துள்ளது. அவர்கள் சட்ட ஒழுங்கை மீற தொடர்ந்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவங்கள் இடம்பெறத் தொடங்கியது முதல் ஜனாதிபதியையும் பிரதமரையும் பல தூதுக் குழுக்கள் சந்தித்து இவற்றை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு பல தடவைகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

ஆனால் இந்த வேண்டுகோள்கள் எல்லாமே செவிடன் காதில் ஊதிய சங்காகவே காணப்பட்டன. அரசாங்கம் வேண்டுமென்றே வன்முறைகளைத் தடுக்கத் தவறிவிட்டதா? கடந்த ஆண்டில் இவ்வாறான சில சம்பவங்கள் இடம்பெற்றும் கூட இன்னும் அது தொடர்பாக எவருக்கு எதிராகவும் உருப்படியான நடவடிக்கைகள் எடுக்கத் தவறியுள்ளது ஏன்? காடையர்கள் அரசாங்கத்தின் பாதகாப்பில் உள்ளனர். அப்பாவி பொது மக்கள் அவர்களுக்கு அஞ்சி வாழுகின்றனர். முன்னைய சம்பவங்களில் தொடர்பு உள்ளவர்களுக்கு எதிராக சரியான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் நிலைமைகளை கட்டுப்பாட்டில் வைத்திருந்து இருக்கலாம்.

முஸ்லிம்களுக்கு எதிரான தொடர் வன்முறைகளைத் தடுத்திருக்கலாம்.அரசாங்கம் தற்போது எதிர் கொண்டுள்ள நெருக்கடி நிலைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்கான ஒரு மூலோபாயமாகவே இவ்வாறான வன்முறைகள் தூண்டி விடப்படுவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி உள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒன்றில் அதிகாரத்தைக் கைப்பற்ற அல்லது இருக்கின்ற அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள நடத்தி வரும் தந்திரோபாயமே இதுவாகும்.

காடையர்கள் பஸ் வண்டிகளிலும், வேன்களிலும், லொறிகளிலும், முச்சக்கர வண்டிகளிலும் மோட்டார் சைக்கிள்களிலும் அழைத்து வரப்பட்டுள்ளனர். மூடியிருந்த கடைகளை அவர்கள் முதலில் சுத்தியல்கள் கொண்டும் ஏனைய கனரக உபகரணங்கள் கொண்டும் உடைத்தனர். பின்னர் அவற்றை முடியுமானவரைக்கும் காலி செய்தனர். அதன் பிறகு அவற்றை தீ வைத்து கொழுத்தினர். இந்த சம்பவங்களை முஸ்லிம் வர்த்தகர்கள் பலர் நேரில் கண்டுள்ளனர். இருந்தாலும் தடுப்பதற்கான எந்த வழியும் அவர்களுக்கு இருக்கவில்லை. கைகளைக் கட்டிக் கொண்டு மறைவாக நின்று பார்த்தவாறு கண்ணீர் விட்டு அழுவதை தவிர வேறு எதுவும் அவர்களால் செய்ய முடியவில்லை. உணவுப் பொருட்கள் விற்கப்படும் கடைகளில் இருந்து பொருற்களை சூறையாடி அந்த இடத்திலேயே காடையர்கள் பகிர்ந்து உண்டும் உள்ளனர்.

சில இடங்களில் சிங்கள அயலவர்கள் தாக்குதல் நடைபெறவுள்ளதாக ஏற்கனவே முஸ்லிம்களுக்கு தகவல்களை வழங்கி உள்ளனர். அவ்வாறான இடங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள் அண்மையில் உள்ள காடுகளுக்குள் தமது குடும்பங்களோடு தஞ்சம் புகுந்துள்ளளனர். சில தினங்களை அவர்கள் உணவோ
தண்ணிரோ இன்றி கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் காடுகளுக்குள் பதுங்கி இருந்த  போது காடையர்கள் வீடுகளை உடைத்து உள்ளே புகுந்து தளபாடங்களையும் ஏனைய இலத்திரனியல் உகபரணங்களையும் துவம்சம் செய்துள்ளனர்.

முஸ்லிம்கள் பொலிஸாருடன் தொடர்பு கொண்டு நிலைமைகளை விளக்கி உள்ளனர். உடனடியாக வருகிறோம் என்று பதில் அளித்த பொலிஸார் காடையர்கள் தமது கைங்கரியங்களை நிறைவேற்றி விட்டுச் சென்ற பிறகே அங்கு வந்துள்ளனர். மிகவும் கௌரவத்தோடு வாழ்ந்த முஸ்லிம்கள் இப்போது மற்றவர்களிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களுடைய நிலைமைகளை வெளி உலகுக்கு சொல்லும் அளவுக்கு பெறுமதியற்றதாகவே உள்ளுர் ஊடகங்கள் கருதுகின்றன. தாங்கள் பல புளனாய்வுத் தகவல்களை வழங்குவதாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் சிரச உற்பட இன்னும் பல ஊடகங்கள் கூட இந்த விடயத்தில் மௌனம் காத்து வருகின்றன.

இந்தக் கலவரங்களின் போது இடம்பெற்ற மிகவும் வெற்கக் கேடான மற்றொரு சம்பவம் முஸ்லிம்கள் மீது விஷேட அதிரடிப் படையினர் நடத்திய மூர்க்கத்தனமான தாக்குதலாகும். முஸ்லிம்கள் மீது மிக மோசமான வார்த்தைப் பிரயோகங்களைப் பிரயோகித்தவாறே இரண்டு முஸ்லிம்கள் மீது மிக மோசமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்கப்பட்டு தலையில் இரத்தம் வழிய வழிய ஆஸ்பத்திரிக்குச் சென்ற ஒரு முஸ்லிமுக்கு சிங்கள டொக்டர் ஒருவர் சிகிச்சை அளிக்க மறுத்துள்ளார். காடையர்களின் தாக்குதலுக்கு உள்ளான அந்த நபரை நாட்டை நாசமாக்கும் மோசமான ஒரு பயங்கரவாதி என அந்த டொக்டர் மோசமாகத் திட்டி உள்ளார். முஸ்லிம்களை கேவலப்படுத்த பாவிக்கும் ஒரு சொற்பிரயோகத்தை பாவித்து திட்டியுள்ள அந்த டொக்டர் அருகில் உள்ள பொலிஸ் அதிகாரியிடம் இவனைப் பிடித்து கூண்டில் அடையுங்கள் என்றும் கூச்சலிட்டுள்ளார்.

மனிதாபிமானத்தில் மேலோங்கி நிற்க வேண்டிய மருத்துவத் துறையில் கூட மனிதாபிமானம் இன்று மரணித்துப்; போயுள்ள நிலையையே இது சித்தரிக்கின்றது.

இன்னொரு முஸ்லிம் வழங்கியுள்ள சாட்சியத்தின் படி அதிரடிப்படையினர் தனது வீட்டுக்குள் புகுந்த போது தானும் தனது நண்பர்கள் சிலரும் அங்கு இருந்ததாகவும் அவர்கள் பெண்களையும் சிறுவர்களையும் அச்சுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். வீட்டு மாடியில் இருந்து தானும் தனது நண்பர்களும் அதிரடிப் படையினரால் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டதாகவும் பின்னர் மோசமான முறையில் தங்களைத் தாக்கி சிங்களக் கடைகளை சூறையாட தாங்கள் திட்டமிட்டதாக ஒப்புக் கொள்ளுமாறு தங்களை துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு அடுத்த நாள் பிணையில் விடுதலையாகி கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவரின் தலையில் இப்போது தையல் போடப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் இந்தச் சம்பவத்தில் இனவாத தாக்குதலுக்கு ஆளாகியிருந்த நிலையிலும் கூட அவர்கள் மீது தீவிரவாதிகள் என பட்டம் சூட்டி புதுவகையான குற்றச்சாட்டை ஊடகங்கள் சில முன்வைத்தன. ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர் பீமல் ரட்ணாயக்க சிங்களவர்களினதும் முஸ்லிம்களினதும் தீவிரவாத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கருத்து வெளியிட்டதைத் தொடர்ந்தே இந்தப் பிரச்சாரமும் ஆரம்பமானது.

அது முதல் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் பிரசாரங்களும் தெடங்கியுள்ளன. எந்த ஒரு முஸ்லிமாவது அப்பாவி மக்கள் மீது வன்முறைகளைக் கட்விழத்து விட்டு தீவிரவாத செயற்பாட்டில் ஈடுபட்டமைக்கான ஒரு சாட்சியையாவது அல்லது தடயத்தையாவது, ஆதாரத்தையாவது முன்வைக்க முடியுமா? அல்லது அவ்வாறான காரியத்தில் ஈடுபட்ட ஒரு நபரையாவது இவர்களால் அடையாளம் காட்ட முடியுமா? முஸ்லிம்களை தீவிரவாதிகள் எனக் குற்றம் சாட்டும் எவராவது இவ்வாறான ஆதாரங்களை முன்வைத்து அதை நிரூபிக்க முடியுமா? எந்த ஒரு முஸ்லிமும்
சிங்களவர்களுக்கு சொந்தமான எந்த ஒரு விகாரையையும் சேதப்படுத்த வில்லை. சிங்களவர்களின் கடைகளுக்கு தீ மூட்டவில்லை, சிங்களவர்களின் வியாபார மற்றும் கைத்தொழில் நிலையங்களைப் பட்டப் பகலில் பாதுகாப்பு படையினரின் துணையோடு; சூறையாடவில்லை. சிங்களவர்களின் வீடுகளையும் குடியிருப்புக்களையும் கிராமங்களையும் எந்த ஒரு முஸ்லிமும் தீயிட்டுக் கொழுத்தவில்லை. இந்த நாட்டு முஸ்லிம்கள் சமாதானமான முறையில் வாழும் விருப்பத்தோடு மாறி மாறி பதவிக்கு வரும் அரசுகள் தமது உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாக்க வேண்டும் என்றே விரும்பினார்கள்.

இலங்கையில் வாழும் மூன்று பிரதான சமூகங்கள் மத்தியில் முஸ்லிம்களே மிகவும் சமாதானமானவர்கள். இந்த இனவாத கூலிப்படையினருக்கு இந்த நாட்டு முஸ்லிம்களோடு சகஜமாக வாழ முடியாவிட்டால் அவர்களுக்கு வேறு எவரோடுமே வாழ முடியாது.

மறுபுறத்தில் இத்தகைய தாக்குதல்கள் காரணமாக இந்த நாட்டுக்கும் சிங்கள இனத்துக்கும் சர்வதேசமட்டத்தில் ஏற்பட்டுள்ள அபகீர்த்தி பற்றி கொஞ்சமாவது இவர்களுக்குத் தெரியுமா?

அண்மைய சம்பவங்கள் நாட்டுக்கு சர்வதேச மட்டத்தில் மிக மோசமான கெட்ட பெயரை ஏற்படுத்தி உள்ளன. இதை சரிசெய்ய இன்னும் பல வருடங்கள் செல்லலாம். இந்த நாட்டுக்கு வருகை தர இருந்த உல்லாசப் பயணிகள் பலர் தமது விஜயங்களை ரத்துச் செய்துள்ளனர். பல நாடுகள் இலங்கைக்கு செல்ல வேண்டாம் என தமது பிரஜைகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளன. இந்த நாட்டில் அரசியல் ரீதியான கொந்தளிப்பும் பொருளாதார சரிவும் சமகாலத்தில் இடம்பெற்று வரும் நிலையில் இவ்வாறான அநாகரிகமான செயல்கள் முதலீட்டாளர்களை இங்கு வரவிடாமல் தடுக்கும். இது நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய விளைவை ஏற்படுத்தும். அரசியல்வாதிகள் இந்த நாட்டின் மீது அக்கறை கொண்டவர்கள் அல்ல என்பதையே இது போன்ற சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. அவர்கள் தங்களது அதிகாரத்தையும் சொகுசுகளையும் தக்க வைத்துக் கொள்வதில் தான் பெரும் ஆர்வம் கொண்டுள்ளனர்.

இந்த நாட்டின் சிங்கள மற்றும் தமிழ் இனங்ளைப் போலவே முஸ்லிம்களும் ஆயிரம் அணடுகளுக்கு முன்பே இங்கு குடியேறியவர்கள். 1948 சுதந்திரத்துக்குப் பின் ஆட்சிக்கு வந்த சிங்கள ஆதிக்கம் கொண்ட அரசுகள் முஸ்லிம்களின் உரிமைகளையும் சிறப்புக்களையும் பல விடயங்களில் தொடர்ந்து பறித்து வந்துள்ளன.

அரச துறையில், அரச துணை பிரிவுகளில் மற்றும் ஆயுதப் படையில் அவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டன. முறையான கல்வி வாய்ப்புக்களும் அவர்களுக்கு மறுக்கப்பட்டன. வெளியில் தெரியும் மாயைக்கு முற்றிலும் முரணாக முஸ்லிம் சமூகம் வறுமையால் பாதிக்கப்பட்ட ஒரு சமூகமாகவே காணப்படுகின்றது. முஸ்லிம் சமூகத்தில் 60 வீதத்துக்கும் அதிகமானவர்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வதாகவே மதிப்பீடுகள் மூலம் தெரியவந்துள்ளது.

வட பகுதியில் இருந்து புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுள் பலர் இன்னமும் புத்தளத்திலும் ஏனைய இடங்களிலும் அகதி முகாம்களில் காலத்தைக் கடத்தி வருகின்றனர். 30 வருடங்களாக நீடித்த இனவாத யுத்தத்தில் அவர்களுக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத நிலையிலும் அவர்களிடம் இருந்து எல்லாமே பறிக்கப்பட்டு அவர்கள் ஒரு சில மணித்தியலங்களில் நடு வீதிக்கு கொண்டு வரப்பட்டனர். யுத்தம் முடிந்து அவர்கள் தமது சொந்த இடங்களுக்கு மீண்டும் திரும்பிச் செல்ல முற்பட்ட போதும் இதே இனவாதிகள் தான் இல்லாததையும் பொல்லாததையும் கூறி அவர்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தினர்.

இந்த ஒட்டுமொத்த நிலைமைகளின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு மிஞ்சியது வர்த்தகமும் வெளிநாட்டு வேல வாய்ப்பும் மட்டும் தான். இப்போது இனவாதிகள் அவர்களின் கடைகளைத் தாக்கி அவர்களின் பல வருட உழைப்பால் ஏற்படுத்தப்பட்ட வர்த்தக முயற்சிகளை தீக்கிரையாக்கி அவர்களின்
வாழ்வாதாரத்தைக் குறி வைத்துள்ளனர்.

வெகு விரைவில் இந்த இனவாத கும்பல் சட்டத்தின் முன் நிறுத்தப்படாவிட்டால் இலங்கை ஒரு தோற்றுப் போன தேசமாக சர்வதேச அரங்கில் சித்தரிக்கப்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும். இந்த விடயங்களைக் கடுமையாகக் கையாளும் ஆற்றல் இந்த அரசுக்கு இல்லை என்பதே பெரும்பாலான முஸ்லிம்களின் நிலைப்பாடாகும். இதற்கு காரணம் 2015 ஜனவரி எட்டாம் திகதி இந்த அரசு பதவிக்கு தெரிவு செய்யப்பட்டது முதல் இவ்வாறான இனவாத சக்திகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும், இனவாதிகளும் ஊழல் பேர்வழிகளும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று அரசு வழங்கி வந்த வாக்குறுதிகள் இதுவரை காற்றில் கரைந்து போய் உள்ளனவே தவிர எதுவுமே நிறைவேற்றப்படவில்லை.

கலவர காலத்தில் சமூக ஊடகங்கள் தடை செய்யப்பட்டது , முஸ்லிம்கள் மீதான தாக்குதலை மூடி மறைக்க உதவியது என்பது தான் உண்மை. கலவர காலத்தில் சமூக ஊடகங்கள் தடை செய்யப்பட்டது ,முஸ்லிம்கள் மீதான தாக்குதலை மூடி மறைக்க உதவியது என்பது தான் உண்மை

Advertisements

Written by lankamuslim

மார்ச் 25, 2018 இல் 8:22 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: