சிறுபான்மையினரின் வாழ் விடங்களை இலக்கு வைத்து ஒரு லாவக விளையாட்டு
நல்லாட்சியின் ஒரு பகுதியினருக்கு, பௌத்த சிங்கள உணர்வூட்டலை அரசியல் ஆயுதமாகக் கையில் எடுக்க வேண்டிய அவசியமும், அவசரமும் ஏற்பட்டுள்ளது என்று, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இருந்ததைப் போல், மதம் சார்ந்ததாக இவ்வுணர்வூட்டல் அமையக்கூடாது என்று நல்லாட்சியினர் விரும்புவதாகவும், வடக்கு கிழக்கில் வாழும் சிங்களவர்களின் நில, மத மற்றும் இன அடிப்படையிலான உரித்துகள் தொடர்பானதாக இந்த உணர்வூட்டலை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தவிசாளர் பசீர் கூறியுள்ளார்.
இதனை நிறைவேற்றுவதற்காக, சிறுபான்மையினரின் வாழ்விடங்களை இலக்கு வைத்து, அங்கு பௌத்த புராதன சின்னங்களை கண்டுபிடிக்கும், ஒரு லாவக விளையாட்டினை மேற்கொண்டு வருதாகவும் தவிசாளர் பசீர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பிரிட்டிசார் கையிலிருந்து 1948 இல் இலங்கையின் ஆட்சியதிகாரம் பெரும்பான்மை சிங்கள நிலப் பிரபுக்களின் கைக்கு மாறியது. 1950 களின் ஆரம்பத்திலேயே சிறுபான்மை முஸ்லிம்களும், தமிழர்களும் செறிந்து வாழ்ந்து வந்த கிழக்குப் பகுதிகளில் அபரிமிதமாகக் காணப்பட்ட நில வளமும், நீர் வளமும் சிங்கள ஆட்சியாளர்களின் கண்களுக்குள் அகப்பட்டுக் கொண்டது.
குளங்களைக் கட்டி வளப்படுத்தி விவசாயத்தை நவீனமாக்குவதன் மூலம், இப்பகுதிகளில் வாழ்ந்து வந்த சிறுபான்மையினரின் வாழ்வை மேம்படுத்துவது போல் பாசாங்கு செய்து அரச அனுசரணையுடன் சிங்களக் குடியேற்றத்துக்கு வழிகோலினர். அம்பாறையிலும், திருமலையிலும் நீர்ப்பாய்ச்சல் உள்ள இடங்கள் கேந்திர முக்கியத்துவமுடைய பகுதிகளாயின.
குளங்களின் பாய்ச்சல் கதவுகளை அண்டியும், சுற்றியும் பரந்துபட்ட பெரும் நிலப்பரப்பில் – தெற்கில் இருந்து ஏற்றிவரப்பட்ட சிங்களவர்கள் குடியேற்றப்பட்டனர். வளமான நிலப்பரப்பில் பெரும் பகுதியும், பாய்ச்சல் வசதியுள்ள குளங்களின் நீரை திறக்கவும், பூட்டவுமான கட்டுப்பாடும் இவர்கள் வசமாயின. இதனால் சிறுபான்மையினரின் தொழிலிடங்கள் துவம்சம் செய்யப்பட்டன.
பின்னர் அக்கம் பக்கத்திலுள்ள சிங்கள கிராமங்களை அம்பாறை மாவட்டத்துடன் நிர்வாக ரீதியாக இணைத்து விட்டனர். இவ்வாறுதான் அம்பாறையில் முஸ்லிம்களின் பெரும்பான்மையும், திருகோணமலையில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் உறுதியான இருப்பும் சிதைக்கப்பட்டன.
புரளி
மேலும் சிறிது காலம் சென்றதும் பௌத்த புராதன சின்னங்கள் என்ற புரளியைக் கிளப்பினர். இப்புரளி சிறுபான்மையினரின் வாழ்விடங்களை இலக்கு வைத்தது.
சிறுபான்மையினரின் கட்டுப்பாட்டில் இருந்த இடங்களில் மண்ணைத் தோண்டிப் புராதன சின்னம் புதைத்து – பௌத்த சிங்கள உரிமை கோரப்பட்டது. இது ஒரு பாரிய வேலைத்திட்டமாக முன்னெடுக்கப்பட்டு வந்த வேளை, இனப்பிரச்சினை ஆயுதப்போராக விஸ்வரூபம் எடுத்தமையால் இம்முயற்சி இடை நிறுத்தப்பட்டது.
தற்போது, நீண்ட காலத்தின் பின்னர் பௌத்த தீவிரவாத அமைப்பினரும், சில பொறுப்பளிக்கப்பட்ட அமைச்சர்களும் பௌத்த வரலாற்று எச்சங்களைத் தேடி கிழக்கைக் கிண்ட ஆயத்தமாகி வருகின்றனர். ஊடகங்களை உன்னிப்பாக அவதானிப்பவர்களால் இதை விளங்கிக் கொள்ள முடியும்.
நல்லாட்சியின் ஒரு பகுதிக்கு, பௌத்த சிங்கள உணர்வூட்டலை அரசியல் ஆயுதமாகக் கையில் எடுக்க வேண்டிய அவசியமும், அவசரமும் ஏற்பட்டுள்ளது. கடந்த அரசின் காலத்தில் இருந்ததைப் போல் – மதம் சார்ந்ததாக இவ்வுணர்வூட்டல் அமையக்கூடாது என்றும், மாறாக வடக்கு கிழக்கில் வாழும் சிங்களவர்களின் நில, மத, இன அடிப்படையிலான உரித்துகள் தொடர்பானதாக இது இருக்க வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஆய்ந்தறியலாம். சிறுபான்மையினரின் ஒட்டுமொத்த ஆதரவையும் மஹிந்த இழந்ததைப்போல் இழக்கவும் கூடாது, மஹிந்தவிடம் கட்டுண்டு கிடக்கும் சிங்கள தீவிரவாத உணர்வாளர்களை வென்றெடுக்கவும் வேண்டும் என்பதுதான் நல்லாட்சியின் விருப்பமாகும்.
நிகழ்ச்சி நிரல்
ஆகவே, வடக்கு கிழக்கு மண்ணைத் தோண்டி புராதன சின்னங்களை கண்டுபிடிப்பதை ஒரு வழியாக்கியுள்ளனர். மேலும், வடக்கிலும் கிழக்கிலும் வாழும் சிங்களவர்களை பிராந்திய ரீதியான சிறுபான்மையினர் என்ற அரசியல் அடையாளத்துக்குள் கொண்டுவந்து – அவர்களின் அரசியல், சமூக, பொருளாதார உரிமைகளுக்காகவும், உடமைகளின் உரித்துக்காகவும் போராடுவது இதற்குரிய மற்றுமொரு சிறந்த வழி எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த பௌத்த அரசியல் நிகழ்ச்சி நிரலை வெற்றிகரமாகச் செயல்படுத்த மத அமைப்புகளும், அமைச்சர்களும், நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இல்லாத அரசியல்வாதிகளும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இச்செயற்பாடுகளால் கிளர்ந்தெழும் சிறுபான்மையினரை சாந்தப்படுத்தும் வகையில் குரல் கொடுக்க ஏற்கனவே சிறுபான்மை மக்கள் மீது அனுதாபம் கொண்டு பேசிவரும் சில சிங்கள அமைச்சர்களும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.முஸ்லிம் அமைச்சர்களுக்கு பேசா மடந்தைகளாக இருக்கும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர – சர்வதேசத்தை திருப்திப்படுத்தவும், நீதி – புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, பௌத்த தீவிரவாத சக்திகளுக்கு தீனி போடவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர்கள் டிலான் பெரேரா, ராஜித சேனாரட்ன போன்றோர் சிறுபான்மையினரை சாந்தப்படுத்தும் பொறுப்பை ஏற்றுள்ளனர். பௌத்த தீவிரவாத அமைப்புகள் எவை என்றும், பேசாதிருக்கும் முஸ்லிம் தலைவர்கள் யார் என்பதும் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
கிழக்கு முஸ்லிம்கள்
வடக்கு கிழக்கில் பௌத்த சிங்கள தீவிரவாத அரசியலானது, நேரடியாக தமிழ் மற்றும் முஸ்லிம் இனத்துவ அரசியலை இலக்கு வைத்துள்ளது. இதனை எதிர்கொள்ள வடமாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் பேரவையும் தயார் நிலையில் இருப்பது போல் தெரிகிறது. தமிழ் மக்கள் பேரவை கிழக்கில் அதன் வேலைத்திட்டத்தை முன் வைத்திருப்பது இதற்கு சான்றாகும்.
ஆனால் கிழக்கு முஸ்லிம்கள் தங்களின் தெற்குத் தலைமைகளால் இது விடயத்தில் நட்டாற்றில் விடப்பட்டுள்ளனர்.
புத்தளம் பள்ளிவாசலில் 70 களின் ஆரம்பத்தில் முஸ்லிம்கள் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோது – முஸ்லிம் பிரதிநிதிகள் கல் போலக் கிடக்க, தந்தை செல்வா அதற்கெதிராகப் பேசினார். அம்பாறை முஸ்லிம்களின் காணிப் பறிப்பின் போது சிவகுமாரன் செயல்பட்டார். இவற்றினைப் போன்று, கிழக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகளை வேறு யாராவது பார்த்துக் கொள்ளட்டும் என்று, தெற்கு முஸ்லிம் தலைமைகள் வாழாது இருக்கின்றனவா என்ன ? பாவம் கட்சி, அது மட்டும்தானே கிழக்கினுடையது.
66 ஆண்டுகளாக இருந்து வந்த முன்னைய அரசுகள் அனைத்தும் பெரும்பான்மையைப் பிரதிநிதித்துவம் செய்தன. ஆனால் இன்று அரசாங்கமே சிங்களத் தீவிரவாதத்தைக் கையில் எடுத்துள்ளது. இது பெரும் ஆபத்தானதாகும்.
இனி, ஞான சார தேரர் போன்றோர் மதங்களுக்கு எதிரான கருத்துக்களைக் குறைத்து, சிறுபான்மையினருக்கு எதிரான அரசியல் கருத்துக்களையே மொழிவர். அவர் போன்றோரின் செயற்பாட்டுத் தளம் – தெற்கில் இருந்து வடக்கு கிழக்குக்கு மாறியுள்ளமை தெளிவாகத் தெரிகிறது.
தந்திரம்
மத்தியில் குவிந்திருக்கும் அதிகாரம் பரவலாக்கம் செய்யப்படக் கூடாது என்பது, இப்போது, இப்படிப்பட்டவர்களின் இலக்காகும். நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படக் கூடாது என்பது இவர்களின் கோசமாக உள்ளது.
இதனூடாக மாகாணங்களுக்கு தற்போது இருக்கும் குறைந்த பட்ச அதிகாரம்கூட வடக்கிலும், கிழக்கிலும் இருக்கும் ஜனாதிபதியின் நேரடிப் பிரதிநிதிகளான சிங்கள ஆளுநர்களுக்கே இருக்க வேண்டும் என்று இவர்கள் விரும்புகின்றனர். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படக் கூடாது என்பதன் சூட்சுமத்தின் பின்னணி இதுதான். கடந்த 28 வருடங்களில் ஒரு வாரத்துக்காவது தமிழர் ஒருவரோ அல்லது ஒரு முஸ்லிமோ வடக்கு கிழக்கில் ஆளுநராக நியமிக்கப்படவில்லை. இந்த நடைமுறை சிங்களப் பெரும்பான்மைக் கட்சிகள் அனைத்தினதும் ஏகோபித்த தந்திரமாகும்.
இந்தச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டுதான் அண்மையில் ஞானசாரர் மாகாண ஆளுநர்களின் அதிகாரம் குறைக்கப்படக் கூடாது என்ற கருத்தை வெளியிட்டுள்ளார். முதலமைச்சர் எந்தக் கொம்பனாக இருந்தாலும், நிறைவேற்று அதிகாரமுள்ள பிராந்திய ஜனாதிபதியாக செயல்படும் ஆளுநர்களிடமே மாகாண நிர்வாகம் உள்ளது.
“அந்தந்த மாகாணங்களில் வாழும் மக்களினால், மாகாண ஆளுநர்கள் தேர்தல் ஒன்றின் மூலம் தெரிவு செய்யப்பட வேண்டும்” என்று, நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் நல்லாட்சி அரசாங்கமானது, அரசியலமைப்பை மாற்றுவதற்கு முன்னர் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரட்டும் பார்க்கலாம்.
இத்திருத்தத்தை சிறுபான்மைக் கட்சிகள் இதுவரை ஏன் முன் வைக்கவில்லை என்று தெரியவில்லை. கட்டங்கட்டமாக அதிகாரத்தைப் பெற முயற்சித்திருக்கலாமே.
தமிழர்களும், முஸ்லிம்களும் வாங்கிக் கட்டிக் கொண்டு போகப் போகிறோமா இல்லை புரிந்து கொண்டு போராடப் போகிறோமா?
சிறுபான்மை அரசியலை நிலப்பிரபுக்கள், முதலாளிகள் மற்றும் மெத்தப் படித்தோர் ஆகிய முத்தரப்பும் கைப்பற்றி தன்னகத்தே வைத்துள்ளது. மக்கள் பிரக்ஞையுள்ள சிவில் சமூகத் தலைமைகளுக்கு அங்கு இடமில்லை.”தலை இருப்பவர்களுக்கு இடம் இல்லை, இடம் இருப்பவர்களுக்கு தலை இல்லை”.-இறக்காமம் நிருபர் vidivelli.
Please enter published date in every articles headings if not we decide that older news are the fresh one
CAREEM
ஜனவரி 2, 2017 at 8:54 பிப
All of our news post included date and time please see the bottom of each news items
lankamuslim
ஜனவரி 2, 2017 at 9:00 பிப