Lankamuslim.org

One World One Ummah

சிரிய யுத்தம் “பல வகைகளிலும் கட்டுப்பாட்டை இழந்து விட்டது: ஜோன் கெர்ரி

leave a comment »

USAசிரிய யுத்தம் “பல வகைகளிலும் கட்டுப்பாட்டை இழந்து விட்டது” என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெர்ரி குறிப்பிட்டுள்ளார். சிரியாவில் அமுலில் இருக்கும் பலவீனமான யுத்த நிறுத்தத்தை மீட்டெடுக்கும் முற்சியில் கெர்ரி ஈடுபட்டுள்ளார்.

ஜெனீவாவில் ஐ.நா. பிரதிநிதிகள் மற்றும் அரபு இராஜதந்திரிகளை நேற்று முன்தினம் சந்தித்த பின்னர் கருத்து வெளியிட்ட கெர்ரி, சிரியாவின் இரண்டாவது நகரான அலெப்போவில் தொடரும் வன்முறையை நிறுத்தும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.

எனினும் இந்த முயற்சிகள் வெற்றி அளிப்பது தொடர்ந்து உறுதி இல்லாமல் இருப்பதாக குறிப்பிட்ட அவர் மேலும் முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டி இருப்பதாக தெரிவித்தார்.

சிரியாவில் அமுலுக்கு வந்த பகுதி அளவான யுத்த நிறுத்தத்தால் அங்கு ஐந்து ஆண்டுகள் நீடிக்கும் உள்நாட்டு யுத்தத்தில் சற்று தணிவு ஏற்பட்டது. எனினும் அண்மைய தினங்களில் மோதல் மீண்டும் உச்சம் பெற்றுள்ளது.

கடந்த ஒன்பது தினங்களில் அலெப்போ நகரில் இடம்பெற்ற தாக்குதல்களில் சுமார் 250 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். கடந்த திங்களன்று அலெப்போ புறநகர் பகுதியில் கிளர்ச்சியாளர்கள் இலக்குகள் மீது அரச படை நடத்திய வான் தாக்குதல்களில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜெனீவாவில் திங்கட்கிழமை காலை இடம்பெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் சிரியாவுக்கான ஐ.நா. விசேட பிரதிநிதி ஸ்டபன் டி மிஸ்டுராவுடன் இணைந்து ஊடகங்களை சந்தித்த கெர்ரி, சிரிய யுத்தம் பல வகைகளிலும் கட்டுப்பாட்டை இழிந்திருப்பதாகவும் பெரும் கவலை அளிப்பதாகவும் தெரிவித்தார்.

எனினும் கடந்த ஒன்பது வாரங்களாக நீடிக்கும் யுத்த நிறுத்தம் சாதக சூழலை ஏற்படுத்தி இருப்பதாகவும் பல உயிர்களை காத்திருப்பதாகவும் குறிப்பிட்ட அவர், அண்மைய வாரங்களில் அது சோதனைக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவித்தார்.

ஒரு பரந்த அளவிலான யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்துவதே இலக்கு என குறிப்பிட்ட கெர்ரி, அது மேலும் சோதனைகளை தாக்குப்பிடிக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதன்போதும் 24 மணி நேரத்திலும் யுத்த நிறுத்தத்தை கண்காணிக்கும் வகையில் மேலும் கண்காணிப்பு நடவடிக்கையை விரிவுபடுத்த கெர்ரி வாக்குறுதி அளித்தார்.

“இதனை முடியுமான விரையில் நடைமுறைப்படுத்த நாம் முயற்சிக்கிறோம். நடைமுறைப்படுத்த முடியாத எதைப்பற்றியும் வாக்குறுதி வழங்க நான் விரும்பவில்லை” என்று கெர்ரி மேலும் தெரிவித்தார்.

ஜோன் கெர்ரி ஜெனீவாவை விட்டு புறப்படும் முன்னர் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லவ்ரோவ்வுடன் தொலைபேசியில் உரையாடினார். சிரியாவில் அனைத்து தரப்பும் மோதலை நிறுத்தி யுத்த நிறுத்தத்தை கடைப்பிடிக்குமாறு இருவரும் அழைப்பு விடுத்ததாக ரஷ்ய வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் டி மிஸ்டுரா நேற்று ரஷ்யா புறப்பட்டு சென்றார். கடந்த பெப்ரவரியில் அமுலுக்கு வந்த சிரிய யுத்த நிறுத்தம் முறிவடையும் அபாயம் அதிகரித்ததை அடுத்து அதனை மீட்டெடுக்கும் முற்சியாகவே கெர்ரி ஜெனீவா சென்்றார். சிரிய யுத்தத்தில் எதிர் எதிர் தரப்புகளுக்கு ஆதரவளித்து வரும் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் மத்தியஸ்தத்திலேயே அங்கு யுத்த நிறுத்தம் அமுலுக்கு வந்தது.

ஜெனீவாவில் திங்கட்கிழமை இடம்பெற்ற சவூதி வெளியுறவு அமைச்சர் அப்தல் அல் ஜுபைரை சந்தித்த கெர்ரி, அலெப்போ நகரில் பலம்மிக்க அல் நுஸ்ரா ஜிஹாதிக்களில் இருந்து கிளர்ச்சியாளர்களை விலகி இருக்க கோரினார்.

அலெப்போவில் அல் கொய்தா கிளையான அல் நுஸ்ரா முன்னணி மீதே வான் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக சிரிய அரசு மற்றும் ரஷ்யா கூறி வருகின்றன. சிரிய யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் அல் நுஸ்ரா முன்னணி மற்றும் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) என்று அழைத்துக் கொள்ளும் குழு உள்ளடக்கப்படவில்லை.

எனினும் இந்த கூற்றை அரச எதிர்ப்பாளர்கள் மற்றும் அமெரிக்கா ஏற்க மறுத்து விருகின்றனர். அங்கு பொதுமக்கள் மற்றும் யுத்த நிறுத்தத்தை கடைபிடிக்கும் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

“அலெப்போவில் நடப்பது ஆத்திரமூட்டக் கூடியதாகும். அங்கு அனைத்து மனிதாபிமான சட்டங்களும் மீறப்படுகின்றன. இது ஒரு குற்றச்செயலாகும்” என்று அரச எதிர்ப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் இதற்கு பொறுப்புகூற வேண்டும் என்றும் அவர் அரசியல் செயல்முறை ஒன்றின் மூலமோ அல்லது படைகளைக் கொண்டோ அதிகாரத்தில் இருந்து அகற்றப்படுவார என்றும் அவர்கள் உறுதி அளித்துள்ளனர்.

அலெப்போவில் அரச பகுதியில் மீது கிளர்ச்சியாளர்கள் நடத்தும் பீரங்கி தாக்குதல்களில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் அலெப்போ மருத்துவமனை மீது அரச படை நடத்திய வான் தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர். அலேப்போவின் சிலை மனிதாபிமான நெருக்கடியை மோசமடையச் செய்வதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் எச்சரித்துள்ளது.

சிரியாவின் மிகப்பெரிய நகரான அலெப்போ ஐந்து ஆண்டு உள்நாட்டு யுத்தத்தில் பெரும் சேதத்திற்கு உள்ளாகி இருப்பதோடு பல மாதங்கள் குடிநீர் மற்றும் மின்சார வசதி இல்லாத நிலையில் பலரும் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

அலெப்போ நகரின் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு பகுதியில் 350,000 தொடக்கம் 400,000 பேர் வரை இருப்பதாக நம்பப்படுகிறது. முன்னர் இந்த நகரில் இரண்டு மில்லியன் மக்கள் வாழ்ந்தனர்.-TK

Written by lankamuslim

மே 4, 2016 இல் 7:13 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: