Lankamuslim.org

One World One Ummah

மாவனல்லை கறுப்பு மே…

leave a comment »

ffஇலங்கை வரலாற்றில் சிறுபான்மை மக்களான தமிழ், முஸ்லிம் மக்களை இலக்காக வைத்து பெரும்பான்மையினரால் மேற்கொள்ளப்பட்ட பல அடாவடித்தனங்கள் மறக்க முடியாத கறையாக படிந்த வரலாற்றைக் கொண்டவை.

முஸ்லிம் மக்களை இலக்காக வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் அளுத்கமை, பேருவளை சம்வங்களே அனேகமானோரின் மனதில் இன்னும் ஊசாலாடுகின்றன.

எனினும், வரலாற்றில் பல இடங்கலில் இவ்வாறான சம்பவங்கள் நிறையவே இடம்பெற்றுள்ளன என்பது சிலருக்கு தெரிந்தும் மறந்து போன உண்மைகளாகும்.

அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் செறிந்து வாழும் மாவனல்லை நகரில் 2001 மே மாதம் முதலாம், 2ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்டிருந்த அடாவடிகள் ஓட்டுமொத்த இலங்கை வாழ் முஸ்லிம்களினதும் “கறுப்பு மே’ தினமாக அடையாளப்படுத்தப்படுகின்றன.

நேற்றுடன் 15 வருடங்களைப் பூர்தியடைந்துள்ள மாவனல்லை இனக்கலவரம் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை ஓடுக்குவதற்காக சிங்கள பேரினவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சதியாகும்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரின் அடாவடி வார்த்தைகளின் விளைவாக அளுத்கம – பேருவளை நகரம் எவ்வாறு தீக்கரையானதே. அதேபோன்று 15 வருடங்களுக்கு முன்பு சோம தேரர் என்பரின் இனவாதக் கருத்துக்கள் மாவனல்லைக் கலவரத்துக்கு வித்திட்டது என பலரும் அப்போது சுட்டிக்காட்டியிருந்தனர்.

திட்டமிட்ட கலவரம்

பலவருடகால முயற்சியினால் பேருவளையில் பொதுபல சேனாவினால் அரங்கேற்றப்பட்ட கலவரம் போன்று, 1998ஆம் ஆண்டு முதல் மாவனல்லையிலும் சிங்கள தேசிய வாத அமைப்புகள்  எவ்வாறாயினும் கலவரம் ஒன்றை ஏற்படுத்தி முஸ்லிம்களை அடக்கி ஒடுக்க வேண்டும் என்ற முயற்சிகள் அவ்வப்போது இடம்பெற்று வந்தன.

இதன் விளைவுகளினால் 2001 மே மாதம்  மாவனல்லையிலும் தீ பற்றியது.
இன்றைக்கு கலகொட அத்தே ஞானசார தேரரைப் போன்று அன்று கங்கொடவில சோம தேரர் என்பவர் பிரபல சிங்கள தேசியவாதக் கொள்கையுடையவராக முஸ்லிம்களினால் இனங்காணப்பட்டார்.

அவர் 1999. 09.27ஆம் திகதி இரவு டி.என்.எல். நிகழ்ச்சி யயான்றில் கலந்து கொண்டி முஸ்லிம்களுக்கு எதிரான பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்திருந்தார். “மாவனல்லை, பேருவளை மற்றும் கிழக்கின் பெரும் பகுதிகளில் ஜிஹாத்  அமைப்புகள் இருக்கின்றன. அது தவிர புத்தளத்தில் பள்ளிவாயல் ஒன்றில் ஆயுதக் கிடங்கொன்று இருக்கின்றது” என அதிர்ச்சிகரமான தகவல்களைத் தெரிவித்து சாதாரண சிங்கள மக்களை குழுப்பத்துக்குள்ளாக்கியிருந்தார்.

இதனால் மாவனல்லையில் சிங்கள தேசியவாதம் சற்று தலைதூக்க ஆரம்பித்ததுடன் பலர் இதன் வழியில் வழிநடத்தப்பட்டனர். அப்போது மாவனல்லை நகரில் ஆணி வேராக ஊண்றியிருந்த முஸ்லிம் மக்களின் அதிகாரத்தை துடைத்தெறிய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பலர் இயங்கத் தொடங்கினர்.

இதன் காரணமாக மாவனல்லையில் அடிக்கடி திட்டமிட்ட சதித் திட்டங்கள் அரங்கேற்றப்பட்டு வந்துடன் முஸ்லிம்களை வலிச்சண்டைக்கு இழுக்கும் பல சம்பவங்கள் பதிவாகியிருந்தன.

அதில் சில வருமாறு,

1998.10.18- ஹிங்குலோயா ஜும்மா பள்ளி கதீப் மெளலவி சாலிஹ் ஓவத்தையிலிருந்து வரும் போது நாதெனிய பாலம் அருகில் 3 சிங்களவர்களினால் தாடியைப் பிடித்து இழுத்து தாக்கப்பட்டதுடன் அவரின் ஆடையும் கிழிக்கப்பட்டது.

2000.01.06 – இ.போ. ச.வில் மோற்பார்வையாளராக கடமையாற்றி வந்த ராஸிக் என்ற சகோதரர் சக ஊழியர்களினால் கடுமையாக தாக்கப்பட்டார்.

2000.04.24 – ஹபீழ் என்பவருக்கு சொந்தமான சிட்டி கொம் கொமியுனிகே­ன் அடித்து நொறுக்கப்பட்டது.

2000.08.12 – கடலை வியாபாரி அத்தாப் என்பவருக்கு நகரில் வியாபாரம் செய்யாது தடுக்க மிரட்டல் விடுக்கப்பட்டதுடன், அவரின் கடலை வண்டியும் உடைக்கப்பட்டது.

2000 ஆண்டு ஹஜ் பெருநாள் தின இரவு பழவியாபாரி ராஸிக் என்பவரை தம்மிடம் பழம் கொள்வனவு செய்வதில்லை எனக் கூறி தாக்கியதுடன் அவரின் கடைக்கும் சேதம் விளைவித்திருந்தனர்.

2000.11.29 – “சிட்டி பொயின்ட்” ஜவுளிக் கடை உரிமையாளர் முபாரக் ஹாஜியார் இந்தியா சென்றிருந்தபோது, கடைக்குள் புகுந்த காடையர்கள் வஸீர் என்பவரை தாக்கியதுடன் கடையையும் அடித்து நொறுக்கியிருந்தனர்.

2000.12.20 (நோன்பு 24) –  பஸ் தரிப்பிட நிலையத்தில் வைத்து கபூர் என்ற சகோதரரை தாக்கி, தொப்பியை சேற்றில் வீசி ஏறிந்து காலால் மித்தனர். இதனைத் தட்டிக் கேட்ட முன்னாள் பொலிஸ் அதிகாரி ஹாமீம் என்பவரின் கழுத்தை காடையர்கள் வெட்டினர். பின்னர் அவர் உயிர்பிழைத்தார்.

“”முஹம்மதியா நைட் ஹோட்டலில்” கடனுக்கு சிகரட் கேட்டு கொடுக்காத உரிமையாளர் தாக்கப்பட்டதுடன் கடையும் உடைக்கப்பட்டது. அன்று முதல் அக்கடை மூடப்பட்டது.

மற்றுமொரு நைட் ஹோட்டலில் கொழும்பிலிருந்து வந்த முஸ்லிம் பிரயாணிகள் சிலர் உணவருந்தும் போது கேலி செய்து வம்புக்கு இழுத்த காடையர்கள் அவர்களின் வானின் முன் கண்ணாடியை அடித்து நொறுக்கி துரத்தியடித்தனர்.

முஸ்லிம் வியாபார நிலையங்கள்,  முச்சக்கர வண்டி சாரதிகளிடமும் கப்பம் பெறப்பட்டு வந்தது. அத்துடன் பொது இடங்களில் முஸ்லிம் பெண்களை அவமானப்படுத்தும் முயற்சிகளும் பர்தா இழுத்த சம்பவம்களும் நிறையவே பதிவாகியிருந்தன.

இவ்வாறான அனைத்து சந்தர்ப்பங்களின் போதும் முஸ்லிம் தரப்பினர் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என அஞ்சி அடங்கிப் போனார்கள். இந்தச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்தது தவிர அவர்கள் வேறு வழிகளை நாடவில்லை.

எனினும், சிங்கள தேசியவாதப்பிடியில் சிக்கியிருந்த சில உள்ளூர் அரசியல்வாதிகளின் அனுசரனையினலேயே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றமையினால் பொலிஸார் இதற்கெதிராக நடவடிக்கை எடுக்காது சற்றுப் பின்வாங்கியிருந்தனர்.

சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்ட வேண்டிய பொலிஸாரே இவ்விடயத்தில் பின்வாங்குகின்றமையினால் அவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையை முஸ்லிம்கள் இழந்திருந்தனர்.

இந்நிலையில், 2001 ஏப்ரல் 30 ஆம் திகதி இடம்பெற்ற ஓர் சம்பவத்தினால் முஸ்லிம் மக்கள் பொறுமை இழந்து நியாயம் கோரி பாதை இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட இனவாதிகள் இணங்கி வாழ்ந்த மக்களிடையே பிணக்கை தூண்டி விட்டு வேடிக்கைப் பார்த்தனர்.

பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்பார்கள். காடையர்களின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும்! பொலிஸாரின் அசமந்தப் போக்கை இல்லாது செய்ய வேண்டும்! பாதிக்கப்பட்ட முஸ்லிம் தரப்பினருக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும்! என்ற நிலைப்பாட்டில் முஸ்லிம் மக்கள் உறுதியாக இருந்தனர்.

நடந்தது என்ன?

முஸ்லிம்களின் பொருளாதாரம் தலைதூக்கக் கூடாது, மாவனல்லை நகரில் அம்மக்களுக்குள்ள அதிகாரத்தை இல்லாது செய்ய வேண்டும் என்ற இலக்கை அடைவதற்காக அடியாட்களாக பயன்படுத்தப்பட்ட காட்டு மிராண்டிகள் சிலர்  2001 ஏப்ரல் 30 திகதி இடம்பெற்ற சம்பவத்தைப் போன்ற ஒரு தருணத்துக்காகவே காத்திருந்தனர்.

அதாவது திங்கட் கிழமை வழமைக்கு மாறாக மாவனல்லை நகரில் ஜன நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது.  நளைய தினம் (மே 1) விடுமுறை தினம் என்பதால் இந்நிலை காணப்பட்டதுடன் வியாபாரமும் சற்று மந்த கதியிலேயே இடம்பெற்றது.

இருப்பினும், ஒருவாரகால மதுபானசாலை மூட வேண்டியிருந்தமையினால் அங்கு மாத்திரம் கூட்டம் களைக்கட்டியது. இதில் மூக்கமுட்ட குடிபோதையில் வந்த சில காடையர்கள் வழமைப் போன்று  முஸ்லிம் கடைகளில் கப்பம் பெற்று வந்தனர். இவ்வாறு, பஸ் தரிப்பிடத்துக்கு முன்பிருக்கும் 24ஆம் இலக்க ஹோட்டலுக்குள்ளும் புகுந்தனர்.

வியாபார மந்தகதியில் இருந்தமையினால் இரவு 8.45 மணியளவில் ஹோட்டலை மூடும் நோக்கில் அவசரமாக ஊழியர்கள் உட்டபட உரிமையாளர்கள் விருவிருப்பாக இருந்தனர். இந்நிலையில், காடயர்கள் 100 ரூபா கப்பம் தருமாறு  உரிமையாளரிடம் பயமுறுத்தினார். இதற்கு  அவர் “” இன்று வியாபாரம் இல்லை தர முடியாது…” என்று கூற வந்த காடயனில் ஒருவன் “”தம்பிலா… ஹிடபங்கோ…’ என்று முனுமுனுத்தவாறு 20 ரூபாவை ஹோட்டல் உரிமையாளரின் முகத்தில் எறிந்து கோல்ட் லிப் சிகரட் ஒன்றைக் கேட்டுள்ளார்.

இதற்கு “”கோல்ட் லிப் இல்லை பிரிஸ்டல் தான் உள்ளது” என ஹோட்டல் உரிமையாளர் கூறவே “”அதைத்தா…” என்று கேட்டுள்ளனர். பின் சிகரட்டை கொடுத்து விட்டு மீதிப்பணத்தை கொடுக்கும் போது ஹோட்டல் உரிமையாளருக்கு தூ­ன வார்த்தைகளால் மீண்டும் ஏசத்தொடங்கிய காடையர்களைப் பார்த்து ஹோட்டல் உரிமையாளர் “”ஏன் எதற்காக ஏசுகிறீர்கள்…” என்று கேட்டுள்ளார்.

இதற்கு அவர்கள் ஹோட்டல் உரிமையாளரைத் தாக்கத் தொடங்கியதுடன் அவரைபாதுகாக்க வந்த சக ஊழியர்கள் இருவரையும் கடுமையாகத் தாக்கத் தொடங்கியதுடன் ஹோட்டலையும்  அடித்து நொறுக்கியுள்ளனர்.

அத்தோடு நிறுத்தி விடாது உரிமையாளரை  மாவனல்லை நகர மத்தியில் அமைந்துள்ள மணிக்கூண்டு கோபுரத்துக்கு முன் இழுத்துச் சென்று அங்கு அவரை கம்பியயான்றில் கட்டி வைத்து பெரும் திரளான மக்கள் மத்தியில் அடித்து சித்திரவதை செய்தனர். வீறாப்பான தொனியில் “”முடியுமாயின் எந்த முஸ்லிமாவது இவனை காப்பாற்றி அழைத்துச் செல்லு..” என்று சவால்விட்டதுடன் அவரின் முகத்தில் கத்தியால் வெட்டியிமுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துடன் இந்தச் சம்பவம் தொடர்பில் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

இவ்வளவு காலமும் அடக்குமுறைகளுக்கு உட்படுத்தப்பட்ட எம்மை இனியும் ஒடுக்க முடியாது. இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் நியாயமான விசாரணையை மேற்கொள்ள வேண்டும்!

2001 மே முதலாம் திகதி மாலை ஆகியும் பொலிஸார் குற்றவாளிகளை கைது செய்யாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பஸ் தரிப்பிடத்துக்கு முன்னாள் முஸ்லிம்கள் ஒன்று திரண்டனர்.

இந்தவிடயத்தை திரிவு படுத்தி “முஸ்லிம்கள் சிங்களவர்களை தாக்க ஆயத்தமாவதாகவும், தாய் நாட்டை பாதுகாக்க சிங்களவர்கள் ஒன்றிணையுமாறும்’ சிங்கள தேசியவாதிகள் சாதாரண மக்களிடையே செய்திகளைப் பரப்பியிருந்தனர். இதில் சிலர் முஸ்லிம்கள் கூடியிருந்த தினத்தன்று அவர்களும் நகரில் கூடியிருந்தனர்.
எனினும், அவ்விடத்துக்கு வந்த பொலிஸார் நாளைய தினம் (மே 2) காலையாவதற்கு முன்னர் சந்தேகநபர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று முஸ்லிம்களிடம் வாக்குறுதி வழங்க இரு தரப்பினரும் கலைந்து சென்றிருந்தனர்.

எனினும், குற்றவாளிகளே தலைமறைவாகியிருந்தமையினால் இந்தச் சம்வத்துடன் தொடர்புடைய எவரையும் பொலிஸார் கொடுத்த வாக்குறுதிக்கமைய கைது செய்ய முடியாது போனது.

இந்நிலையில், 2001 மே 2 ஆம் திகதி பொலிஸார் கூறிய படி நடப்பதாகத் தென்படவில்லை. எனவே பொலிஸார் நியாயமாக நடக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அமைதியான போராட்டம் ஒன்றை முன்னெடுக்க முஸ்லிம்கள் பஸ்தரிப்பிடத்தில் ஆயத்தமாகியிருந்தனர்.

இந்நிலைமையயை சரியாக பயன்படுத்திய சிங்கள தேசியவாதிகள் மயூரபாத பாடசாலைக்கு (நகரில் அமைந்துள்ள சிங்களப் பாடசாலை) பின்புறமான ஒதுக்குப்புற பகுதியில் ஆயுதங்களுடன் சிலரை தயார்படுத்தி வைத்திருந்துள்ளதுடன் பல இடங்களிலும் சிங்களவர்கள் தாக்குதலுக்கு தயாராகுமாறு தகவல்களை பரிமாற்றிக் கொண்டுள்ளனர்.

இதற்கிடையில் நகர மத்தியில் முஸ்லிம்கள் கூடியிருந்த இடத்திலிருந்த பெளத்த சிலையை பேரினவாதி ஒருவர் தாக்கி விட்டு ஓட இதனை முஸ்லிம்கள் தான் செய்தார்கள் என்று சிங்களவர்கள் மத்தியில் பரப்பி அவர்களை குழப்பி கலவரத்தை தூண்டி விட்டனர்.

எதுவுமறியாது நகரில் கூடியிருந்த முஸ்லிம்கள் மீது திடீர் என பொலிஸார் தூப்பாக்கிச் சூடு நடத்த அவர்களுடன் இணைந்து பெரும்பான்மை மக்களும் தாக்க ஆரம்பித்தனர்.
இதற்கிடையில் முஸ்லிம்களின் கடைகளை அடித்து நெறுக்கும் வேட்டையில் இறங்கிய இனவாதிகள், தீ வைத்தும், கொள்ளையடித்தும் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை சூறையாடும் படலத்தை பொலிஸாரின் எதிரிலேயே அரங்கேற்றினர்.

தங்களுடைய உடமைகளைப் பாதுகாத்துக்கொள்வதற்காக முஸ்லிம்களும் தற்பாதுகாப்பில் இறங்கினர். மாவனல்லை நகரில் ஏற்பட்ட தாக்கம் வேகமாக அரநாயக்க, திப்பிட்டிய, யஹம்மாத்துகம, கனேத்தன்ன, பத்தாம்பிட்டிய போன்ற பகுதிகளுக்கும் பரவத் தொடங்கியது.

இதனால் முஸ்லிம் மக்களின் இருப்பு தடுமாறியது மாத்திரமல்லாது பொருளாதாரமும் கேள்விக்குறியாகியது.

எனினும், கிருங்கதெனிய, கல்லான்வத்த இளைஞர்கள் “”தாலிப் டைரைவ்” கட்டிடத் தொகுதியிலிருந்து சிங்களவர்கள் நகருக்குள் முன்னேறாமல் தடுக்கும் வகையில் கல், போத்தல் பிரயோகங்களை மேற்கொண்டதுடன், நகரில் ஏனைய பகுதிகளில் பல இளைஞர் குழுக்கள் கூடியிருந்தனர்.

ஆட்டம் கண்ட அரசு

ஒரு சில மணித்தியாலங்களுக்குள் இச்சம்பவம் இலங்கை மாத்திரமல்லாது உலகம் நாடுகளினதும் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனால் அப்போதைய சந்திரிகா அரசு இதனை தடுப்பதற்கான அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியது. விசேட பொலிஸ் குழு கொழும்பிலிருந்து அனுப்பப்பட்டதுடன். முழு நேர ஊரடங்குச் சட்டம் அமுலாக்கப்பட்டு இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் மாவனல்லை நகரம் கொண்டு வரப்பட்டு சுமுகமான நிலை ஏற்படுத்தப்பட்டது.

அது மட்டுமல்லாது உடனடியாக நாடாளுமன்றம் கூட்டப்பட்டதுடன் விசேட கலந்துரையாடல்களும் இடம்பெற்றன. ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு நேரடி விசேட உரையயான்றை நிகழ்த்தி அமைதியையும், நல்லிணக்கத்தையும் வலியுறுத்தியிருந்தார்.

இதேவேளை, ரவூப் ஹக்கீம், பெளசி உள்ளிட்ட முஸ்லிம் அரசியல் தலைமைகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து மக்களுக்கு பக்கபலமாக இருந்ததுடன், ஆறுதல் வார்த்தைகளையும் கூறியிருந்தனர்.

அத்தோடு பாதிக்கப்பட்ட மாவனல்லை மக்களுக்காக கிழக்கு மாகாணத்தில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டதுடன் பிற பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் செய்யவும் முனைந்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல பகுதிகளில் விசேட துஆ பிரார்த்தனைகள், நோன்புகள் என்பன நிறைவேற்றப்பட்டன. இதனை இன்றும் மாவனல்லை மக்கள் நன்றியுடன் நினைவு கூருகின்றனர்.

உள்நாட்டு பத்திரிகைக்கு நிகராக வெளிநாட்டு பத்திரிகைளிலும் இச்சம்பவம் திரைப்போட்டுக்காட்டப்பட்டன. இதனால் இங்கிலாந்து , ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்துடன்,  இதற்காக பல நாடுகளும் குரல் கொடுத்திருந்தன.

இதனால் அரசு இந்தச் சம்பவம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி நியாயமான விசாரணையொன்றை முன்னெடுக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்கவும், இழப்பீடுகளை வழங்கவும் முன்வந்தது.

ஈடுசெய்ய முடியா இழப்புக்கள்

முஸ்லிம்களின் பொருளாதாரத்தை ஓடுக்க வேண்டும். நகரில் அவர்களிடமுள்ள அதிகாரத்தை இல்லாது செய்ய வேண்டும் என்ற காரணங்களினால் பல வருடங்களாக பின்னப்பட்ட சதி வலையினால் சிக்குண்ட மாவனல்லை மக்கள் இதனால் அடைந்த இழப்புக்களே ஏராளம்.

துப்பாக்கிச் சூட்டினால் 20 மேற்பட்ட முஸ்லிம்கள் காயங்களுக்குள்ளானதுடன் ஒருவர் மரணமடைந்திருந்தார். அது தவிர பல முஸ்லிம்கள் பொய்க் குற்றச்சாட்டில் சிறைப்பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

மாவனல்லை நகர் இனவாதிகளின் அட்டூழியத்தினால் சூறையாடப்பட்டதுடன் தீக்கரையாக்கபட்டிருந்தது. அதில் நவீன பெற்றோல் செட், இரு வரவேற்பு மண்டபம், அரிசி ஆலை இரண்டு, இறப்பர் தொழிற்சாலை ஒன்று, இரு ஆடைத்தொழிற்சாலைகள் என 150க்கு மேற்பட்ட வியாபார நிலையங்கள் எரித்து நாசமாக்கப்பட்டன. அதில் 120க்கு மேற்பட்டன முஸ்லிம்களுடையதாகும்.

இதனால் கோடிக்கணக்கான இழப்புகள் ஏற்பட்டன.  அப்போது வெளிவந்த சஞ்சிகையயான்றில் சுமார் 30 கோடிக்கு மேல் சொத்துக்கள் அழிக்கப்பட்டிருந்தன என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், கனேதன்ன ஜும்ஆப் பள்ளி உட்பட இரு பள்ளிகள் பலத்த சேதங்களுக்கு உள்ளாக்கப்ட்டதுடன் அங்கிருந்த குர்ஆன் பிரதிகள் எரித்து சாம்பலாக்கப்பட்டதுன், பள்ளி தண்ணீர் (ஹவ்ஸு) தாங்கியில் சிறுநீர் கழிக்கப்பட்டு இழிவு படுத்தப்பட்டன. அது தவிர அப்பள்ளிவாசல்களில் இருந்த வரலாற்று சிறப்புமிக்க ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

இது தவிர சிங்கள கிராம எல்லைகளில் அமைந்துள்ள பள்ளிவாசல்கள் பல தாக்குதல்களுக்கு உள்ளாகியிருந்தன.

இறுதியில் இந்த கலவரத்தினால் முஸ்லிம்கள் பல விதத்திலும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எதிர்காலம் கேள்விக்குறியுடன் நோக்கப்பட்டது. எனினும் சந்திரிக அரசு அழிக்கப்பட்ட சொத்துக்களுக்கு நியாயமான இழப்பீட்டை வழங்கி ஆறுதல் படுத்தியிருந்தது.

தீயிலிருந்து மீண்டெலுந்த மாவனல்லை

கலவரம் ஓய்வுக்கு வந்த பின்னர் சுடுகாடாக காட்சியழித்த மாவனல்லை நகர் மீண்டும் தலை தூக்காது என்ற எண்ணத்தில் சிங்கள பேரிணவாதிகள் பெருமூச்சு விட்டனர்.

எனினும், அம்மக்களின் நம்பிக்கை விடாமுயற்சியினால் 15 வருடங்கள் கடந்துள்ள நிலையில் அந்நகர் இரட்டிப்பி அபிவிருத்தியடைந்துள்ளதுடன் அன்று முகவரியற்றதாக்கப்பட்ட நிறுவனங்கள் இன்று கொடிகட்டிப்பறக்கின்ற நிலை உருவாகியுள்ளது.

அது தவர அனைத்து வசதிகளையும் கொண்ட நவீன அபிவிருத்தியடைந்த நகராக அது தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

அன்று பல கசப்பான உணர்வுகளை அனுபவித்த அம்மக்கள் இன்று அதன் மூலம் படிப்பினைகளைப் பெற்றுள்ளனர்.பொருளாதாரத்துக்கு வழங்கப்பட்ட முன்னுரிமையை விடவும் கல்விக்கு முன்னுரிமைக் கொடுக்கக் கூடியவர்களாக அவர்கள் தற்போது காணப்படுகின்றனர். அதனை பறைசாட்டும் வகையில் கடந்த காலங்களில் மாவனல்லையில் பிரதான மூன்று பாடசாலைகள் கல்வியிலும் ஏனைய துறைகளிலும் அடைந்துள்ள முன்னேற்றம் காட்டுகின்றது.

கலவரத்துக்குப் பின்னர் மாவனல்லை முன்னர் இருந்த ஊர்வாதம் நீங்கப்பட்டுள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்திருந்தார். அது மாத்திரமல்லாது இலங்கையில் பிரபல அறபு கலாசாலையான ஆயிஷா சிந்தீக்கா இந்தக் கலவரத்தின் பின்பே ஆரம்பிக்கப்பட்டது. அது மட்டுமல்லாது முஸ்லிம்கள் ஊடகத்துறையில்  அதிக நாட்டம் கொண்டதுடன், அவர்களுக்கென “எங்கள் தேசம்’ என்ற பத்திரிகையையும் ஆரம்பித்தனர்.

பிளவுபட்ட சிங்கள –  முஸ்லிம் உறவை மீண்டும் கட்டியயழுப்ப பல அமைப்புக்கள் தோற்றம் பெற்றதுடன், முஸ்லிம்களுக்குள்ளும் சமூக புரட்சி ஒன்று ஏற்பட்டது எனலாம்.
அன்று போல் இன்றும் மீண்டும் இனவாதிகளின் இலக்காக மாறியுள்ள மாவனல்லை நகரில் பல திட்டங்களை அமுல்படுத்த முற்பட்ட போதிலும் சிங்கள புத்திஜீவிகளின் முயற்சியினால் அவை தோற்கடிக்கப்பட்டு வருகின்றமை மீண்டும் இவ்விரு இனங்களுக்குமிடையில் புரிந்துணர்வு ரீதியிலான உறவு கட்டியயழுப்பப்பட்டுள்ளதை எடுத்துக்காட்டுகின்றது.

இவர்கள் இப்படிச் சொன்னார்கள்!

“”அண்மையில் இடம்பெற்ற மாவனல்லை வன்முறைச் சம்பவம்கள் தீடீரென ஏற்பட்ட சம்பவம்கள் எனக்கூற முடியாது. இவை சில சக்திகலாள் திட்டமிட்டு செய்யப்பட்டதாகவே எண்ணத் தோன்றுகிறது”
அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா (வீ/ரி 6.5.2001)

“”……. சம்பவம்கள் திட்டமிட்ட அடிப்படையிலேயே நடந்திருக்கின்றன. எனவே, இதில் சம்மந்தப்பட்ட யாராக இருந்தாலும், அமைச்சராக இருந்தாலும், அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய கடப்பாடு அரசுக்கு உண்டு”
அமைச்சர் ரவூப் ஹக்கீம்(வீ/ரி 7.5.2001)

பொலிஸார் தங்களுடைய கடமைகளை பொறுப்புடன் செய்யத் தவறியதாலேயே மாவனல்லையில் கலவரங்கள் மோசமடைந்தன”
அமைச்சர் அலவி மெளலானா (தி/ன் 03.5.2001)

-ராயிஸ் ஹஸன்-mawanellanews

Advertisements

Written by lankamuslim

மே 2, 2016 இல் 11:42 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: