அரசியலமைப்புச் சபையின் நம்பகத்தன்மை ராவய எழுப்பும் சந்தேகம்
அரசியலமைப்புச் சபை ஒவ்வொரு செயற்பாடுகளின் போதும் வெவ்வேறான அணுகுமுறை மேற்கொள்வதன் காரணமாக அதன் நம்பகத்தன்மையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ராவய தெரிவித்துள்ளது.
இது குறித்து இவ்வார ராவய பத்திரிகையில் செய்திக்கட்டுரையொன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது.
குறித்த கட்டுரையில் தொடர்ந்தும் தெரிவித்திருப்பதாவது, அரசியலமைப்புச் சபை உருவாக்கப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட முதலாவது நியமனம் கடந்த பத்தாம் திகதி நடைபெற்ற சட்டமா அதிபர் நியமனமாகும்.
அதன் போது ஜனாதிபதி மூன்று பேரின் பெயர்களை அரசியலமைப்புச் சபையிடம் பரிந்துரைத்திருந்தார். ஜயந்த ஜயசூரிய, சுஹத கம்லத், கபில வைத்தியரத்ன ஆகியோரே அவர்களாகும்.
எனினும் அவ்வாறு மூவரின் பெயர்கள் சிபாரிசு செய்யப்படும் போது அரசியலமைப்புச் சபையினால் ஒருமித்த தீர்மானமொன்றை எடுக்க முடியாது என்பதால் ஒருவரின் பெயரை மாத்திரம் சிபாரிசு செய்யும்படி அரசியலமைப்புச் சபையின் தலைவர் கரு ஜயசூரிய கடிதம் மூலம் ஜனாதிபதிக்கு அறிவித்திருந்தார்.
அதன் பின்னரே ஜயந்த ஜயசூரியவின் பெயரை மட்டும் ஜனாதிபதி சிபாரிசு செய்திருந்தார். அரசியலமைப்புச் சபையும் அதனை அங்கீகரித்திருந்தது.
எனினும் பொலிஸ் மா அதிபர் தெரிவின் போது மூன்று பேரின் பெயர்களை பரிந்துரைக்கும்படி அரசியலமைப்புச் சபை ஜனாதிபதியைக் கேட்டுக் கொண்டிருந்தது.
குறித்த சிபாரிசின் பிரகாரம் பொலிஸ் மா அதிபர் தொடர்பான தெரிவின் போது சிவில் சமூகப் பிரதிநிதிகளான கலாநிதி ராதிகா குமாரஸ்வாமி மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சிப்லி அசீஸ் ஆகியோர் சமூகமளித்திருக்கவில்லை.
எனினும் அரசியலமைப்புச்சபை மூலம் பூஜித் ஜயசுந்தர பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டிருந்தார்.
எனவே அரசியலமைப்புச் சபை மூலம் நியாயமான முறையில் நியமனங்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டாலும், உண்மையில் முன்கூட்டிய தீர்மானங்களே அரசியலமைப்புச் சபை மூலமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதற்கு இச்சம்பவங்கள் ஒரு எடுத்துக்காட்டாகும்.
ராஜபக்ஷ அரசாங்கத்தின் போது அவரது தனிப்பட்ட விருப்பின் பிரகாரம் அரசாங்கத்தின் உயர்பதவிக்கு தனக்கு நெருக்கமானவர்களை நியமித்துக் கொண்டதற்கும் அரசியலமைப்புச் சபையின் தற்போதைய செயற்பாடுகளுக்கும் இடையில் வித்தியாசமில்லை.
இவ்வாறான சம்பவங்கள் தொடரும் பட்சத்தில் அரசியலமைப்புச் சபையின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி விடும் என்றும் குpறத்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுமொழியொன்றை இடுங்கள்