டொனால்ட் டிரம்ப், ஹிலாரி கிளின்டன் நியூயோர்க்கில்.!!
நியூயோர்க்கில் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான முதன்மை வாக்கெடுப்பில் குடியரசு கட்சியில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதோடு ஜனநாயக கட்சியில் ஹிலாரி கிளின்டன் வெற்றியை உறுதி செய்துகொண்டார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாக்கெடுப்பில் டிரம்ப் தனது போட்டியாளர்களான டெட் கிரூஸ் மற்றும் ஜோன் கசிச்சை விடவும் அதிக வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.மறுபுறம் நியூயோர்க்கின் முன்னாள் செனட்டரான ஹிலாரி கிளின்டன் அங்கு தனது போட்டியாளர் பெர்னி சான்டர்ஸை தோற்கடித்தார்.
இந்த வெற்றிகளின் மூலம் டிரம்ப் மற்றும் கிளின்டன் தத்தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக பரிந்துரைக்கப்படும் வாய்ப்பை மிக நெருங்கியுள்ளனர். 90 வீதமான வாக்குகள் வெளியான நிலையில் குடியரசு கட்சியில் டிரம்ப் 60 வீத வாக்குகளால் முன்னிலையில் இருப்பதோடு ஜனநாயக கட்சியில் கிளின்டன் 58 வீத வாக்குகளை வென்றுள்ளார்.
நியூயோர்க் டிரம்பின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றிக்குப் பின் மான்ஹட்டன் டிரம்ப் கோபிரத்தில் உரையாற்றிய அவர், “என்னைப் பற்றி நன்றாகத் தெரிந்த நியூயோர்க் மக்கள் இவ்வாறானதோரு வெற்றியைத் தந்தது சிறப்பானது” என்றார். எவரும் நம்பாத அளவுக்கு தாம் பிரதிநிதிகளை வெல்லப்போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பெரும் வர்த்தகரான டிரம்ப் நியூயோர்க்கின் 95 குடியரசு பிரதிநிதிகளையும் வெல்லும் வாய்ப்பு குறித்து எதிர்பார்ப்பில் உள்ளார். அவ்வாறு வெல்லும் பட்சத்தில் ஜனாதிபதி வேட்பாளராவதற்கு தேவைப்படும் பிரதிநிதிகளை அவரால் எட்ட முடியுமாக இருக்கும் இல்லாவிட்டால் ஜுலையில் நடைபெறும் கட்சி மாநாட்டின் மூலமே வேட்பாளர் தேர்வாகும் நிலை ஏற்படும். ஏற்கனவே குடியரசு கட்சியின் சிரேஷ்ட தலைவர்களிடையே டிரம்ப் மீது அதிருப்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
குடியரசுக் கட்சியின் அதிகாரபுூர்வ வேட்பாளராக தகுதிபெற மொத்தம் 1237 வாக்குகள் தேவை என்ற நிலையில், இதுவரை வாக்கெடுப்பு நடத்தப்பட்ட மாநிலங்களில் அதிக ஆதரவைபெற்றுள்ள குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் 743 வாக்குகளுடன் முதலிடத்தில் உள்ளார். அவரது போட்டியாளரான டெட் குரூஸ் 543 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
ஜனநாயக கட்சியின் அதிகாரபுூர்வ வேட்பாளர் ஆவதற்கு 2,383 பிரதிநிதிகள் ஓட்டுக்களை பெற்றாக வேண்டும். இதுவரை பல மாநிலங்களில் நடந்த தேர்தலில் 1307 வாக்குகளை பெற்றுள்ள ஹிலாரி கிளின்டன் முன்னிலை வகிக்கிறார். அவரது போட்டியாளராக உருவாகி வரும் பெர்னி சான்டர்ஸ் 1094 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
மறுபுறம் ஹிலாரி கிளிடனுக்கும் நியூயோர்க் நகர் நெருக்கமானது என்பதால் அவரும் அங்கு வெற்றியை எதிர்பார்த்திருந்தார். “நியோக்கர்கள் எப்போது எனது பின்னால் இருந்தார்கள். நான் எப்போதும் உங்களுடையவராக இருக்கவே முயற்சிக்கிறேன். நாம் ஒன்றிணைந்து வெற்றி பெற்றிருக்கிறோம். நான் மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவிக்கிறேன்” என்று வெற்றிக்குப் பின்னர் கிளின்டன் தெரிவித்தார்.
இந்நிலையில் கிளின்டனுக்கு போட்டியாக இருக்கும் சான்டர்ஸ் தொடர்ந்து வேட்பாளர் அந்தஸ்த்தை பெற போட்டியிடப்போவதாக உறுதி அளித்துள்ளார். மறுபுறம் குடியரசு கட்சியில் கிரூஸ், நியூயோர்க்கின் பெறுமானங்கள் பற்றி தாக்கி பேசினார். நியூயோர்க் முடிவுகளை நிராகரித்த அவர் அது வெறுமனே “சொந்த ஊர் அரசியல் வெற்றி” என்று டிரம்பின் வெற்றியை விமர்சித்தார்.
எனினும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள குடியரசுக் கட்சியின் மாநாட்டுக்கு முன்பாக, டிரம்பின் முக்கிய எதிர்ப்பாளரான டெட் கிரூஸ், அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஆகும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துவிட்டதாக அமெரிக்க ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்நிலையில் நியூயோர்க்கில் பின்னடைவை சந்தித்த சான்டர்ஸ் மற்றும் கிரூஸ் பென்சில்வேனியாவில் அதிக கவனம் செலுத்தியுள்ளனர். இந்த மாநிலத்தின் குடியரசு மற்றும் ஜனநாயக கட்சியின் உட்கட்சி வாக்கெடுப்பு வரும் ஏப்ரல் 26 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதியாகும் எதிர்பார்ப்பில் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் தலைநகராக ஜெரூசலத்தை அங்கீகரிப்பதாகவும் அமெரிக்க தூதரகத்தை ஜெரூசலத்திற்கு மாற்றுவதாகவும் உறுதி அளித்துள்ளார்.
இஸ்ரேல் தனது தலைநகராக ஜெரூசலத்தை அறிவித்தபோதும், அமெரிக்கா உட்பட பல நாடுகளும் அதனை நிராகரித்து வருகின்றன. இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன அமைதிப் பேச்சிலும் ஜெரூசலத்தின் எதிர்காலம் இழுபறியை ஏற்படுத்தும் விடயமாக உள்ளது.
இந்நிலையில் டிரம்ப் சி.என்.என். தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “என்னை விடவும் இஸ்ரேல் ஆதரவுடையவர் எவரும் இல்லை. நாம் இஸ்ரேலை பாதுகாப்போம். இஸ்ரேல் எமக்கு மிக முக்கியமானது” என்றார்.
டிரம்ப் இஸ்ரேல் ஆதரவுக் குழுவை வொஷிங்டனில் சந்திக்கும் முன்னரே அவர் இந்த கருத்தை வெளியிட்டிருந்தார். ஏற்கனவே அவர் முஸ்லிம் விரோத கருத்துகளையும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. வெள்ளை தீவிரவாதியாகவே பார்க்கப்படுகிறார்
மறுமொழியொன்றை இடுங்கள்