வேனுக்குள் கருகிய நிலையில் ஐந்து சடலங்கள் பாதாள உலக மோதலா ?
சிலாபம் பொலிஸ் பிரிவிலுள்ள தங்கொட்டுவயில் வானுடன் எரிந்து கருகிய நிலையில் ஐந்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். நேற்று அதிகாலையில் பொலிஸார் இந்தச் சடலங்களை மீட்டுள்ளனர்.
தங்கொட்டுவ, இரபடகம என்ற இடத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத குறுக்கு வீதியொன்றிலேயே பொலிஸார் இந்தச் சடலங்களை கண்டுபிடித்தனர்.
வானும் முற்றாக எரிந்து இருந்ததோடு சடலங்கள் அடையாளங்காண முடியாத நிலையில் உருக்குலைந்து கருகி இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட வான், களுத்தொட்ட பினான்ஸ் கம்பனிக்குச் சொந்தமானதென தெரிய வந்துள்ளதோடு இந்த வான் சாரதி பன்னல பிரதேசத்தைச் சேர்ந்தவரெனவும் அறியவந்துள்ளது.
சடலங்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து தங்கொட்டுவ பிரதேசத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வானுக்கு அருகில் நீளமான கத்தியொன்றும் சில செருப்புகளும், வானின் இலக்கத்தகடும் காணப்பட்டதுடன் இரத்தக் கறை படிந்திருந்த காட்சியையும் காணமுடிந்தது.
இது படுகொலையா? அல்லது தற்செயலாக வானில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக வான் தீப்பிடித்துக் கொண்டதா? என்ற சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் இது இரு பாதாள கும்பல்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் விளைவாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
இச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் இரகசிய பொலிசாருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நேற்று பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
வான் சாரதியின் மனைவி சம்பந்தப்பட்ட வானை இனங்கண்டுள்ளதுடன் உருக்குலைந்த சடலங்களில் தமது கணவரின் உடல் உள்ளதா என தன்னால் அடையாளம் காண முடியவில்லை என தெரிவித்துள்ளார்.
வான் சாரதி கபில என்ற பெயரைக்கொண்டவர். கடந்த 10 ஆம் திகதி இரவு 11.00 மணியளவில் அவர் கையடக்கத்தொலைபேசி மூலம் தமது மகளுடன் கதைத்துள்ளார்.
அச்சமயம் தாம் தமது நண்பர்கள் சிலருடன் பயணமொன்றை மேற்கொண்டுள்ளதாக அவர் தமது மகளிடம் தெரிவித்துள்ளதை அவரது மனைவி பொலிசாரிடம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அவருக்கு எதிராக பொலிசில் பல வழக்குகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பக் கோளாறினால் மேற்படி வான் தீப்பிடித்துள்ளதாக சிந்திப்பதற்கு போதிய காரணங்கள் இல்லையென்றும் இது இரு பாதாள கும்பல்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் முடிவாக இருக்கலாம் என்றும் பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சடலங்கள் யாருடையது என இதுவரை இனங்காணப்படாத நிலையில், நேற்று நீர்கொழும்பு நீதிமன்ற மருத்துவ அதிகாரிகளிடம் சடலம் சமர்ப்பிக்கப்பட்டு மரண பரிசோதனை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பான ஆரம்ப விசாரணை நேற்று மதியம் மாரவில மேலதிக மாவட்ட நீதிபதி பசன் அமரசிங்கவினால் அதே இடத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் இடம்பெற்றுள்ள குறுக்கு வீதி அப்பகுதியிலுள்ள பாரிய தோட்டங்களுக்கு செல்லும் பாதை என்பதுடன் மாலை 6.00 மணிக்குப் பிறகு அப்பாதையில் ஆள் நடமாட்டம் எதுவுமே இருக்காது என தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் முச்சக்கர வண்டியொன்று கடத்தப்பட்டு அதன் சாரதி இந்த வீதியில் கொலைசெய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
11 ஆம் திகதி காலை இந்த வீதியூடாக சென்ற ஒருவர் எரிந்த நிலையிலிருந்த வான் தொடர்பில் 119 இலக்கத்துடன் தொடர்புகொண்டு பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
புத்தளம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ தலைமையிலான உயர் மட்ட பொலிஸ் குழு ஸ்தலத்துக்குச் சென்று நேற்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. (ஸ)-தினகரன்
மறுமொழியொன்றை இடுங்கள்