Lankamuslim.org

One World One Ummah

அதுவேறு இது வேறு என்கிறார் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம்

leave a comment »

RAUF HAKEEMஐ.நா.சபையின் ஜெனீவா கூட்டத் தொடரில் 2012 ஆம் ஆண்டு, அரசாங்கத்தின் நீதியமைச்சராக மு.காங்கிரசின் தலைமை பங்குகொண்டமையானது, தமிழ் மக்களுக்கு எதிரான காட்டிக்கொடுப்பு என்று கூறப்படுகின்றமையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியத் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 வருடங்கள் நிறைவடைவதை நினைவுகூறும் வகையில், கொழும்பில் கடந்த வெள்ளிக்கிழமை மு.காங்கிரஸினால்; கருத்தங்கொன்று நடத்தப்பட்டது. இந் நிகழ்வில், தமிழ் தேசியக் கூட்டமையின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அதிதிகளில் ஒருவராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அதன்போது, ஜெனீவா கூட்டத்தொடரில் 2012 ஆம் ஆண்டு ரஊப் ஹக்கீம் கலந்துகொண்டமையானது, தமிழ் மக்களுக்கு எதிராகச் செய்த காட்டிக் கொடுப்பு நடவடிக்கை என்று விமர்சித்திருந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் அந்த விமர்சனம் தொடர்பில் VK வார வெளியீட்டுக்கு கருத்துக் தெரிவுக்கும் போதே, அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில், மு.கா. தலைவர் மேலும் தெரிவிக்கையில்;

“ஜெனீவா கூட்டத்தில் நான் பங்குபற்றிமையை வைத்துக்கொண்டு, மு.காங்கிரசின் தலைமையானது தமிழ் சமூகத்துக்கு எதிராக காட்டிக்கொடுப்பொன்றினை மேற்கொண்டது எனக் கூறுவதை, ஒருபோதும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். முஸ்லிம் காங்கிரசினுடைய அரசியல் தீர்மானங்கள், தமிழ் தரப்புக்களால் பல தடவை விமர்சிக்கப்படுகின்றவையாகவும், ஜீரணிக்க முடியாதவையாகவும் இருந்தமையினை நாங்கள் மிகத் தெளிவாக அறிந்து வைத்திருக்கின்றோம். ஒரு கட்சி என்கின்ற வகையில் அரசாங்கத்துடன் சேர்வதற்கோ, விலகுவதற்கோ எடுக்கின்ற தீர்மானங்கள், எங்கள் கட்சியில் எடுக்கப்படுகின்ற பல்வேறு கலந்துரையாடல்களினூடாக மேற்கொள்ளப்படுகின்றன. இந்த ஒவ்வெரு சந்தரப்பத்திலும் எங்களுடைய நியாயப்படுத்தல்களை மாற்று அரசியல் கட்சிகள் ஏற்றுக்கொள்வதென்பது இயலாததாக இருக்கக் கூடும்.

வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவுறுவதை நினைவு கொள்ளும் வகையில், எமது கட்சியினால் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்ய்பட்ட கருத்தரங்கு நிகழ்வில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் எங்களால் அதிதியாக அழைக்கப்பட்டிருந்தார்.

இதன்போது அவர் ஆற்றிய உரையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமை தன்னுடைய தவறுகளையும் ஒப்புதலாக ஏற்றுக்கொள்ள வேண்டும் எனும் பாணியில் சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். குறிப்பாக, 2012 ஆம் ஆண்டு ஐ.நா.சபையின் ஜெனீவா கூட்டத் தொடரில் நான் கலந்து கொண்டமை குறித்து சில ஆட்சேபனைகளை, சுமந்திரன் வெளியிட்டிருந்தார். இதுகுறித்து எமக்கு எதுவித ஆட்சேபனையும் கிடையாது. மு.காங்கிரசினுடைய தலைவர் – நீதியமைச்சர் என்கிற அந்தஷ்தில் இருந்து கொண்டு, நீதியமைச்சு சார்ந்த விடயங்களுக்கு பதில் கூற வேண்டியிருந்ததால்தான், அப்போது நான் ஜெனீவா செல்வது தவிர்க்க முடியாததாக இருந்தது. மேலும், ஜெனீவா கூட்டத் தொடர் கருத்தாடல்களின்போது, பூரணமானதொரு மனித உரிமை விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது குறித்த விடயத்தினை நான் வலியுறுத்தியிருந்தேன் என்பதையும் இங்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

மேலும், இறுதிக் கட்ட யுத்தத்தின்போது நடந்த விவகாரங்கள் தொடர்பிலும், நல்லிணக்கம் சம்பந்தமான விடயங்களின் போதும், அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் நான் அங்கு சுட்டிக்காட்டினேன்.

அதேவேளை, நீதியமைச்சு சார்ந்த சட்டவாக்கங்களை உருவாக்குதல் தொடர்பில் அங்கு நான் பல விடயங்களை வலியுறுத்தினேன். குறிப்பாக சாட்சிகளைப் பாதுகாத்தல் சட்ட மூலம் மற்றும் சில பாரதூரமான குற்றச் செயல்களை தண்டனைக்குரிய குற்றங்களாக தண்டனைச் சட்டக் கோவையில் சேர்ப்பது தொடர்பில் அரசாங்கம் நழுவல் போக்கினைக் கடைப்பிடிக்காமல், உறுதியான தீர்மானங்களை எடுப்பதற்கு என்னுடைய ஜெனீவா பங்குபற்றுதல் மிக லாவகமாக வழிகோலியது. இதுமட்டுமன்றி, அமைச்சரவைக் கூட்டங்களிலும் வெளியிலும் கூட, மேற்சொன்ன விடயங்களை மிகவும் பக்குவமாகவும் நளினமாகவும் கையாண்டிருக்கிறேன் என்பதையும் இங்கு குறித்துச் சொல்ல விரும்புகிறேன்.

மனித உரிமை மீறல்கள் சம்பந்தமான விடயங்களிலும், யுத்தத்துக்குப் பின்னரான நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் போன்ற விவகாரங்களிலும் இலங்கை அரசு பதில் கூறுகிற விடயத்தில் தவறிழைத்து விடக்கூடாது என்பதற்காக, இந்த விடயங்கள் தொடர்பான கையாழுதலை என்னுடைய மனச்சாட்சிக்கு அமைவாக செய்திருக்கிறேன் என்பதில் நான் திருப்தியடைகிறேன். இருந்தாலும், அரசு சார்பில் எமது பங்களிப்பு ஒட்டுமொத்தமாக இருந்திருக்கக் கூடாது என்று வாதிடுபவர்களுக்கு மேற்படி விடயங்களை ஜீரணித்துக் கொள்வது கஷ்டமாகத்தான் இருக்கும்.

ஓர் அரசின் நீதியமைச்சராக, நீதியமைச்சு சார்ந்த விடயங்கள் தொடர்பாக சர்வதேச மாநாடுகளிலும், சர்வதேச அரங்குகளிலும், ஐ.நா.சபையின் அமர்வுகளிலும் கலந்து கொண்டு பதிலளிக்க வேண்டிய, பதவி சார்ந்த கடப்பாடுகள் மறுதலிக்க முடியாததொன்றாக எனக்கிருந்தது என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் அரசியல் போராட்டங்கள் எவ்வளவு நியாயமாக இருந்தாலும், சில சந்தர்ப்பங்களில் எங்களுடைய அடிப்படைக் கோரிக்கைகளை தமிழ் தரப்புக்களின் தலைமைகள் எதிர்த்திருந்தன. தங்கள் சமூகம் சார்ந்த எதிர்ப்புக்களைச் சமாளிக்க முடியாமல்தான் தமிழ் தலைமைகள் இவ்வாறு நடந்து கொண்டன. இதன்போது, முஸ்லிம் காங்கிரசின் கோரிக்கைகள் நியாயமற்றவை என்றும், அவற்றினை வழங்க முடியாது என்றும் தமிழ் தலைமைகள் வாதிட்ட பல சந்தரப்பங்கள் இருக்கின்றன. அந்தவகையில், அரசியல் ரீதியாக எமக்கிடையில் முரண்பாடுகள் இருப்பது தவிர்க்க முடியாதது.

இருந்தாலும், சிறுபான்மை சமூகங்களின் உரிமை சார்ந்த விடயங்களில் மு.காங்கிரசின் தலைவராக மிகவும் ஆக்கபூர்வமாகவும், அச்ச உணர்வு இல்லாமலும் அமைச்சரவைக்குள்ளே இருந்து கொண்டு பேசியிருக்கிறேன். இதனால், சிறுபான்மை சமூகங்களுக்கு பலவிதமான ஆபத்துக்கள் நடப்பதைக் கட்டுப்படுத்துவதிலும், தாமதப்படுத்துவதிலும் நான் வெற்றிகண்டிருக்கிறேன். அவற்றையெல்லாம் இங்கு பட்டியல்போட்டுக் காட்ட வேண்டிய தேவை இருக்காது என்று நினைக்கிறேன்.

இவற்றையெல்லாம் விட்டு விட்டு, ஐ.நா.சபையின் கூட்டத் தொடரில் ஒரு நீதியமைச்சராக நான் கலந்துகொண்டமைய மட்டும் ஒரு பாரிய காட்டிக் கொடுப்பாக சித்தரிக்க முயற்சிப்பதானது நியாயமானதல்ல. இருந்தபோதும், மேலெழுந்த வாரியாகப் பார்க்கின்றபோது, ஜெனீவா கூட்டத் தொடரில் நான் பங்குபற்றியமையானது தமிழ் சமூகத்தின் மத்தியிலும், அதன் தலைமைகள் மத்தியிலும் உறுத்தலாக உள்ளதையும் நான் உணர்கிறேன். ஆனாலும், ஜெனீவா கூட்டத்தில் நான் பங்குபற்றியமையினூடாக, மு.காங்கிரசின் தலைமையானது தமிழ் சமூகத்துக்கு எதிராக காட்டிக்கொடுப்பொன்றினை மேற்கொண்டது என்பதை, ஒருபோதும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என்றார்.

Advertisements

Written by lankamuslim

நவம்பர் 1, 2015 இல் 10:15 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: