Lankamuslim.org

One World One Ummah

முல்லைத்தீவு, முறிப்பு விவசாயக் கிராம காணி விவகாரம் தொடர்பாக NFGG

leave a comment »

mullaithivu2ஊடகப்பிரிவு,நல்லாட்சிக்கான தேசிய முன்னணி:முல்லைத்தீவு முறிப்பு கிராமத்தில் முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக எழுந்துள்ள காணிப் பிரச்சினை குறித்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணி த.தே.கூட்டமைப்பின்  தலைவர் கௌரவ பா.உ திரு இரா.சம்பந்தன் அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. மேற்படி காணி விவகாரத்துடன் தொடர்புடைய தரப்புகளின் கருத்துக்களை உள்வாங்கி, மீள்குடியேறும் மக்கள் அநீதி இழைக்கப்படாமல் சுமுகமான முறையில் இப்பிரச்சினையை கையாள்வதற்கு ஆவண செய்யுமாறு இக்கடிதத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  கடிதத்தின் விபரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

 25.10.2015

கௌரவ.இரா. சம்பந்தன் (பா.உ)

தலைவர்

தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பு

யாழ்ப்பாணம்.

கௌரவ  சம்பந்தன் ஐயா அவர்கட்கு,

முல்லைத்தீவு- கரைத்துறைப்பற்று பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட முறிப்பு கிராமத்தில் ஏற்பட்டுள்ள காணிதொடர்பிலான சர்ச்சைகள் குறித்து.

முல்லைத்தீவு மாவட்டம் கரைத்துறைப்பற்று பிரதேச செயலக பிரிவில் அமைந்திருக்கும் முறிப்பு எனப்படுகின்ற விவசாயக் கிராமத்தில் முஸ்லிம்கள் சட்டவிரோதமாகக் குடியேறுகின்றார்கள் என்ற கோஷத்துடன் அண்மைய நாட்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு சிலரையும், வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ. து.ரவிகரன் அவர்களையும் மேற்கோள்காட்டி ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. அதேபோன்று முல்லைத்தீவு வன இலாகாவினரிடமும் இது குறித்து முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அறியக் கிடைத்துள்ளது. எனவே மேற்படி விடயம் குறித்து தகவலறியும்பொருட்டு, அப்பிரதேச வாசிகளையும், இது தொடர்பிலான உயர் அதிகாரிகளையும் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை அங்கத்தவருமான கௌரவ அஸ்மின் அய்யூப் அவர்கள் தொடர்புகொண்டு கேட்ட போது பின்வரும் விடயங்கள்  எமது கவனத்தை  ஈர்ப்பதாக அமைந்திருக்கின்றது.

பிரதேச வாசிகளின் கருத்தின் பிரகாரம்: 1978ம் ஆண்டு நடத்தாப்பட்ட காணிக்கச்சேரியின் அடிப்படையில் 1981ம் ஆண்டு 77 முஸ்லிம் குடும்பங்களுக்கு குடியிருப்புக்காணியாக 0.5 ஏக்கரும், விவசாயத்திற்கென 2.5 ஏக்கரும் வழங்கப்பட்டுள்ளன. குறித்த 77 குடும்பங்களுள் 4 குடும்பங்கள் குறித்த நிலத்தில் குடியேறாமையினால் அவர்களுடைய குடியிருப்புக்காணியாகிய 2 ஏக்கர் காணியானது குறித்த மக்களின் பொதுதேவைகளுக்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு முதல் குறித்த 77 குடும்பங்களுள் ஒரு சில குடும்பங்கள் மீண்டும் குறித்த காணியில் மீளக்குடியேறி வாழ்ந்து வந்துள்ளனர், இந்நிலையில் மிகுதியாகவிருந்த சுமார் 40 குடும்பங்கள் தற்போது தமது காணிகளை சுத்தம் செய்து தாமும் மீளக்குடியேறுவதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சந்தர்ப்பத்திலேயே உள்ளூர் அரசியல்வாதிகள் அதிகாரிகளைப் பயன்படுத்தி எமது மீள்குடியேற்றத்தை தடுக்கின்றனர். என்பதாக இருக்கின்றது.

மாகாண காணி ஆணையாளர் அவர்களது கருத்தின் பிரகாரம்: 1978ம் ஆண்டு 77 முஸ்லிம் குடும்பங்களுக்காக காணி ஒதுக்கீடு தொடர்பில் முன்மொழிவுகளை காணித் திணைக்களம் மேற்கொண்டிருப்பது உண்மையே, ஆனால் குறித்த காணிகள் 1981ம் ஆண்டு உரிய குடும்பங்களுக்கு கையளிக்கப்பட்டனவா என்பது எமக்குத் தெரியாது, அதற்கான ஆவணங்கள் எம்மிடம் இருக்கவில்லை 1981 மாகாண காணித்திணைக்களம் நிறுவப்படாத காரணத்தினால் அது தொடர்பிலான ஆவணங்கள் எம்மிடம் இல்லை. எனவே அதுகுறித்த ஆவணங்களை மத்திய காணித்திணைக்களமே எமக்கு வழங்கவேண்டும். இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திடம் தொடர்புகொண்டபோதும் அங்கும் காணிதொடர்பான ஆவணங்களைப் பெறுவதில் சிக்கல்கள் இருக்கின்றன என்பது புலனாகின்றது. வவுனியாவில் இருக்கின்ற காணிக்கந்தோரில் சில சந்தர்ப்பங்களில் இந்த ஆவணங்கள் இருக்க வாய்ப்பிருக்கின்றது. அவற்றைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மீள்குடியேறுகின்ற மக்களுக்கு குறித்த காணிகளை வழங்குவதில் எவ்வித சிக்கல்களும் கிடையாது. இப்போது இவர்கள் மீளக்குடியேறியிருக்கின்றார்கள். மீள்குடியேறிய மக்கள் மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக விடயங்களை கையாண்டிருந்தால் பிரச்சினைகள் எழுந்திருக்காது. பிரதேச செயலாளருக்கோ, மாவட்ட அரசாங்க அதிபருக்கோ தெரியமாலே மீள்குடியேற்றம் இடம்பெற்றிருப்பதாக சொல்லப்படுகின்றது, இங்கு முஸ்லிம் மக்கள் மீளக்குடியேறுவதில் சிக்கல்கள் கிடையாது, ஆனால் உரிய அரச நடைமுறைகள் பின்பற்றப்படாமையே பிரச்சினைக்கான காரணமாகும் எனத் தெரிவித்தார்.

வன இலாகாவின் கருத்தின் அடிப்படையில் 2006ம் ஆண்டினுடைய வனப்பாதுகாப்பு சுற்று நிருபத்தின் பிரகாரம் அரியவகை மரங்கள் 10 ற்கும் அதிகமாக குறித்த பிரதேசமொன்றில் காணப்படுமாயின் அதனை வனப்பகுதியாக அடையாளம் செய்வதற்கு வன இலாகாவிற்கு அதிகாரம் இருக்கின்றது. இதற்கமைய குறித்த முறிப்பு பிரதேசத்தில் இத்தகைய மரங்கள் காணப்படுவதாகவும் அது வன இலாகாவினால் 2006களில் வன இலாகாவிற்கு உரித்துடையதாக அடையாளப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

மேற்படி விடயங்களை நோக்குகின்ற போது முறிப்பு பிரதேசத்தில் 1980களில் முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட காணியில் உரிய அரச நடைமுறைகளைப் பின்பற்றுவதில் ஏற்பட்ட கவனக்குறைவுகளே இத்தகைய சர்ச்சைக்கான காரணியாகப் புலப்படுகின்றது.  இதனடிப்படையில் இவ்விடயத்தில் பின்வரும் முக்கிய விடயங்கள் குறித்து நாம் கவனம் செலுத்தவேண்டியிருக்கின்றது.

  • 1978களில் காணிக்கச்சேரியின் மூலம் 1981களில் காணிகளைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆவணங்களை சேகரித்து காணி வழங்கப்பட்டதை உறுதிசெய்தல், அல்லது 1978ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தெரிவின் அடிப்படையில் காணிகளுக்கான அனுமதிப் பத்திரங்களை உரிய 77 குடும்பங்களுக்கோ அல்லது அவர்களின் வாரிசுகளுக்கோ மீண்டும் வழங்குதல்.

  • 2006ம் ஆண்டு வன இலாவின் சுற்று நிருபத்திற்கு அமைவாக குறித்த பிரதேசத்தில் காணப்படுகின்ற அரியவகை மரங்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்தல் அல்லது அதற்கான மாற்று ஏற்பாடுகளை முன்மொழிதல்

  • முல்லைத்தீவில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டு, மீள்குடியேறுகின்ற முஸ்லிம்களுக்கு இனரீதியான பாகுபாடுகளின் காரணமாக அநீதமிழைக்கப்படுவதைத் தவிர்த்து நீதமானதும் சட்டரீதியானதுமான தீர்விற்கு ஆவணசெய்தல்.

  • இன ஐக்கியத்திற்கும் நல்லிணக்கத்திற்கும் பாதகமான செயற்பாடுகளை வரவேற்காமலிருத்தல்.

எனவே மேற்படி விடயங்களை கவனத்திற் கொண்டு த தே கூட்டமைப்பின் தலைவர் என்ற வகையில்  வன்னி  மாவட்டத்தைச் சேர்ந்த த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற மற்றும் மாகாண சபை  உறுப்பினர்களோடு தொடர்புகொண்டு இவ்விடயத்தை சுமுகமான முறையில் கையாள்வதற்கு ஆவன செய்யுமாறு நல்லட்சிக்கான தேசிய முன்னணி  உங்களை வினயமாக கேட்டுக்கொள்கிறது. இவ்விடயத்தில் எமது பூரண ஒத்துழைப்பை வழங்கவும் நாம் தயாராய் உள்ளோம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றி

இவ்வண்ணம்

நஜா மொஹமத்

 பொதுச் செயலாளர்

Written by lankamuslim

ஒக்ரோபர் 26, 2015 இல் 7:14 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: