Lankamuslim.org

One World One Ummah

தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் உடனடியாகத் தீர்த்து வைக்கப்படவேண்டும்

with one comment

jail New_CIதமிழ் அரசியல் கைதிகளின் விடயம்  மனிதாபிமான அடிப்படையில் உடனடியாகத் தீர்த்து வைக்கப்படவேண்டும். -இலங்கை அரசாங்கத்தினால் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகள் எவ்வித கால தாமதமும் இன்றி உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து இலங்கையின் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினை தொடக்கியிருக்கின்றார்கள். இதுவிடயமாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தன்னுடய முழுமையான கவனத்தையும் கரிசணையினையும் கொண்டிருக்கின்றது. ஒரு தேசத்தில் அரசியல் நோக்கங்களுக்காக அகிம்சை ரீதியாக, அறிவு ரீதியாக, ஆயுத ரீதியாக போராட்டங்கள் இடம்பெறுகின்றபோது அங்கே குறித்த தேசத்தின் அரசினால் கைதுசெய்யப்படுகின்ற குறித்த கிளர்ச்சியாளர்கள் அரசியல் கைதிகள் என அழைக்கப்படுவார்கள்.

எமது நாட்டிலும் கடந்த 30 வருடங்களாக தமிழ் ஈழக்கோரிக்கையினை முன்வைத்து பல ஆயுதக் குழுக்கள்  ஆயுதமேந்திப் போராடியிருக்கின்றன. வன்முறையான வழிமுறைகளின் மூலம்  மக்களின் உரிமைகளை வென்றடுக்க முடியாது என்பது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் அடிப்படை நிலைப்பாடாகும். இதனடிப்படையில் கடந்த கால வன்முறைப் போராட்டங்களை நாம் முற்றுமுழுதாக நிராகரிக்கின்றோம். இருப்பினும் யுத்தம்  நிறைவுக்கு வந்த பின்னர் மக்கள் மத்தியில் சமாதானமும் சகவாழ்வும் கட்டியெழுப்பப்படவேண்டும். கடந்த மஹிந்த அரசாங்கத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 12000 போராளிகள் கைது செய்யப்பட்டு, புனர்வாழ்வளிக்கப்பட்டு இப்போது விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். இது வரவேற்கத்தக்க ஒரு விடயம்.

போரின் ஆரம்ப காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களோடு தொடர்புடைய சந்தேக நபர்கள் என ஒரு தொகுதி கைதிகள் மிக நீண்டகாலமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றார்கள் ஒரு சிலர் 20வருடங்களையும் தாண்டி இவ்வாறு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள், பலர் உரிய விசாரணைகள் எதுவுமின்றியும், இன்னும் சிலர் சாட்சியங்கள் இன்றியும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். இது எமது நாட்டின்  நீதி வழங்கும் வழிமுறைக்கு  முரணானது. எமது நாட்டில் கடந்த காலங்களில்  இவ்வாறு வன்முறைகளில் ஈடுபட்ட கிளர்ச்சியாளர்கள் என பல நூறுபேர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜனாதிபதியினால்  பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

இப்போது யுத்தம் நிறைவடைந்திருக்கின்றது, நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டிருக்கின்றது. ஜெனீவா மனித உரிமை ஆணையகத்தில் நம்பிக்கை தரக்கூடிய பிரேரணை முன்மொழியப்பட்டு அது இலங்கையின் இனமுரண்பாட்டைத் தவிர்ப்பதற்கான பொறிமுறையாக முன்வைக்கப்படவிருக்கின்றது. இவ்வாறான சூழ்நிலையில் சுமார் 270ற்கும் அதிகமானவர்கள் அரசியல் கைதிகள் என்ற போர்வையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பது மனிதாபிமானமற்ற ஒரு நடவடிக்கை என்றே எமக்குத் தோன்றுகின்றது. அண்மையில் விடுதலை செய்யப்பட்ட திருமதி சர்மா அவர்கள் 16 வருடங்கள் தடுத்துவைக்கப்பட்ட பின்னர் நீதிமன்றினால் கடந்த வாரம் நிரபராதி என்று தெரிவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார், அவர் 16 வருடங்கள் தடுத்துவைக்கப்பட்டதன் பின்னர் நிரபராதி என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது, ஆனால் அவரது 16வருட சிறைவாழ்வு அவரின்  இயல்பான வாழ்வை சின்னாபின்னபடுத்தியிருக்கின்றது, இதற்கு யார் பதில் சொல்வது. இவ்வாறு குற்றங்களோடு தொடர்பில்லாத பலரும் குறித்த அரசியல் கைதிகளுள் இருக்கின்றார்கள்.

அதே நேரம் யுத்தத்தில் நேரடியாகப் பங்கு கொண்டு யுத்தத்தை தலைமை தாங்கி நடத்திய பலர் எத்தகைய விசாசாரனைகளும் இன்றி மிகவும் சுதந்திரமாக நடமாடுவதுடன் கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்களாக, பாராளுமன்ற உறுப்பினர்களாக, மாகண சபை அங்கத்தவர்களாகக் கூட இருந்ததை நாம் அவதானித்தோம்.

மேலும் சந்தேகத்தின் பேரில் சிறைக் கைதிகளாக இருப்பவர்கள் சரியான முறையில் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கியிருந்தால் கூட இவ்வளவு காலம் அவர்கள் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.

எனவே அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் இதுவிடயத்தில் உடனடியாகத் தலையிட்டு இவ்வரசியல் கைதிகளின் மனிதாபிமானக் கோரிக்கையினை கவனத்தில் எடுத்து அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்ககைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என ந.தே.மு வேண்டுகோள் விடுக்கின்றது.-ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி

Advertisements

Written by lankamuslim

ஒக்ரோபர் 14, 2015 இல் 8:33 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

 1. தமிழ் அரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி முன்னெடுத்துள்ள போராட்டம் தொடர்கின்ற நிலையில், அவர்களை விரைவில் விடுவிப்பது பற்றி அரச தரப்பிலிருந்து இன்னும் சாதகமான பதில்கள் எதுவும் வெளியாகவில்லை.

  சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், தம்மை உடன் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், உடனடி நடவடிக்கை எடுப்பது பற்றி அரசிடமிருந்து இன்னும் எவ்வித உறுதிமொழியும் வழங்கப்படவில்லை. மாறாக, சமாளிப்புப்போக்கில் மாத்திரமே அது பதிலளித்து வருகிறது.

  உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ள கைதிகளின் விடுதலை பற்றி இதுவரையில் எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை என்று நீதி அமைச்சர் நேற்று அறிவித்துள்ளார்.

  அத்துடன், இது விடயம் பற்றி ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் கலந்துரையாடி இவ்வருடத்துக்குள் ஏதேனும் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்று சமாளிப்புப் போக்கிலும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

  இந்நிலையில், அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரத்னவும் இது விடயம் பற்றி சமாளிப்புப்போக்கிலேயே கருத்து தெரிவித்துள்ளார்.

  பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள கைதிகள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார்கள். அவர்களில் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும். மற்றையவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

  அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது தமிழ் அரசியல் கைதிகளின் உணவு தவிர்ப்புப் போராட்டம் பற்றி கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

  புலிகள் அமைப்பின் தலைவராகச் செயற்பட்ட கே.பி. போன்றோர் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், சிறுசிறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் மட்டும் ஏன் பல வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்? இது நியாயமா? என்று இதன்போது அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

  கடந்த ஆட்சியாளர்கள் தமது செல்வாக்கைப் பயன்படுத்திதான் அவ்வாறு செய்துள்ளனர். இது நீதியான விடயம் இல்லை என்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன் என்றார்.

  தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படுமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, “தமிழ் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை. பயங்கரவாத நடவடிக்கையுடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களே இருக்கின்றனர். தம்மை விடுதலை செய்யுங்கள் அல்லது வழக்குத் தாக்கல் செய்யுங்கள் என்றுதான் கைதிகளும் கூறுகின்றனர். இதைத்தான் அரசும் செய்யப்போகிறது.

  அமைச்சரவைக் கூட்டத்திலும் இதுபற்றி பேசப்பட்டது. நிலைமையை அமைச்சர் மனோ கணேசன் எடுத்துரைத்துள்ளார். ஆகவே, கைதிகள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார்கள். அதன்பின்னர் குற்றவாளி அல்லாதோர் விடுதலை செய்யப்படுவார்கள் என்றார்.

  Imran

  ஒக்ரோபர் 16, 2015 at 8:29 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: