Lankamuslim.org

One World One Ummah

ஓரங்கட்டி ஒதுக்கப்படும் முஸ்லிம்கள்

with one comment

modiஅ.மார்க்ஸ் : சிறுபான்மை மக்கள் மீதான நெருக்கடிகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. தினசரி என்ன அதிர்ச்சி காத்திருக்கிறதோ என்கிற அச்சத்தோடுதான் அவர்கள் பத்திரிகைகளை விரிக்க வேண்டி இருக்கிறது.இந்த ஆண்டு முஸ்லிம்களின் ‘பக்ரீத்’ பண்டிகைக்கு விடுமுறை இல்லை என ராஜஸ்தான் மாநில அரசு இன்று அறிவித்துள்ளது. முஸ்லிம்களுக்கு ‘ரமலான்‘, ‘பக்ரித்’ இரண்டும் முக்கிய திருநாட்கள். ராஜஸ்தான் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 8.5 சதம் பேர் (சுமார் 4.8 மில்லியன்) முஸ்லிம்கள். இவர்களுக்கு இன்று இந்த முக்கிய திருநாளைக் கொண்டாடுவதற்கான விடுமுறை மறுக்கப்பட்டுள்ளது.

விடுமுறை மறுக்கப்பட்டது மட்டும் அல்லாமல் அன்றைய தினம் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.கவின் அறிவு வழிகாட்டியாகக் கருதப்படும் தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்த நாள் விழா அரசௌ அலுவலகங்களில் கொண்டாடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தங்களின் கருத்தியல் வழிகாட்டியாகக் கருதப்படுபவரின் பிறந்த நாளை அவர்கள் கொண்டாடிக் கொள்ளட்டும். ஆனால் சிறுபான்மை மக்களின் முக்கிய புனித நாள் ஒன்றை வேலை நாளாக அறிவிப்பது ஒரு ஜனநாயக அரசுக்குப் பொருத்தமானதல்ல.

ஏற்கனவே பள்ளிகளில் சூரிய நமஸ்காரத்தைக் கட்டாயமாக்கியது, முஸ்லிம் மறும் அடித்தள மக்களின் உணவுகளில் ஒன்றான மாட்டுக் கறிக்குத் தடை விதித்தது என்கிற வகைகளில் சிறுபான்மை மக்களின் மத்தியில் கவலையை விதைத்ததுதான் இந்த ராஜஸ்தான் அரசு.இப்படித்தான் கிறிஸ்தவ மக்களின் ஆகப் புனித நாளான கிறிஸ்துமஸ் தினத்தில் பள்ளிகளில் போட்டிகள் நடத்தப்படும் என மத்திய கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியது. கிறிஸ்தவர்களின் இன்னொரு புனித நாளான நல்ல வெள்ளி அன்று தலைமை நீதிபதிகளின் மாநாட்டை நடத்தினார் நரேந்திர மோடி.

சிறுபான்மை மக்களின் உணர்வுகளையும் பண்பாட்டையும் மதிப்பது, அவர்களுக்கு அந்த வகையில் சில சிறப்பு உரிமைகளை அளிப்பது என்பதெல்லாம் உலகெங்கிலும் நிலவும் ஒரு ஜனநாயகப் பண்பாடு. சிறுபான்மை மக்களின் பண்டிகைகள், திருவிழாக்களில் கலந்து கொள்வது, அவ்ர்களுக்கு விருந்தளிப்பது, நிகழ்ச்சிகளின் போது அவர்களின் உடை, தொப்பி முதலான கலாச்சாரச் சின்னங்களைத் தலைவர்கள் அணிந்து கொள்வது என்பதெல்லாம் எல்லா நாடுகளிலும், கலாச்சாரங்களிலும் நடப்பதுதான். ஆனால் இந்த முறை பா.ஜ.க ஆட்சிக்கு வந்தபின் ரமலான் பண்டிகையின்போது பிரதமர் பெருநாள் விருந்தில் கலந்துகொள்ளவில்லை. குடியரசுத் தலைவர் அளித்த விருந்தயும் அவர் புறக்கணித்தார்.

போதாக் குறைக்கு சிறுபான்மை நலத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட நஜ்மா ஹெப்துல்லா இந்த நாட்டில் முஸ்லிம்கள் சிறுபான்மையினர் அல்ல என்றார். பார்சிகள், சீக்கியர்கள் முதலானோர் மட்டுமே சிறுபான்மையினர் எனக் கூறி அதிர்ச்சி அளித்தார். பாகிஸ்தான், வங்க தேசம், இந்தியா எல்லாம் ஒன்றாக இருந்த காலத்திலேயே முஸ்லிம்களைச் சிறுபான்மையாக ஏற்று அவர்களுக்குத் தனி வாக்காளர் தொகுதி, இட ஒதுக்கீடு எல்லாவற்றையும் பிரிட்டிஷ் அரசு வழங்கி இருந்தது. பிரிவினைக்குப் பின் இன்று இந்திய அளவில் சிறுபான்மையினரின் எண்ணிக்கை வெறும்13.5 சதம்தான். அப்படி இருக்கையில் முஸ்லிம்களைச் சிறுபான்மையே இல்லை என்பதன் பொருள் என்ன?

வேறொன்றும் இல்லை. சிறுபான்மை மக்கள் என்கிற அடிப்படையில் வழங்கப்ப்டும் சிறப்பு உரிமைகள் உங்களுக்கு மறுக்கப்படும் என்கிற எச்சரிக்கைதான் அது. அப்படி ஒன்றும் பெரிய அளவில் அவர்களுக்குச் சிறப்பு உரிமைகள் அளிக்கப்பட்டு விடவும் இல்லை. கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு எல்லாவற்றிலும் இந்தியாவில் உள்ள தலித்களை விட முஸ்லிம்களின் நிலை மோசம் என்பதை சச்சார் குழு அறிக்கை விரிவான தரவுகளுடன் நிறுவியுள்ளது. முஸ்லிம்களுக்கு பொருளாதாரம், வேலை வாய்ப்பு எல்லாவற்றிலும் 10 சதம் வரை ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக வழங்கப்பட்டுள்ள ரங்கநாத் மிஸ்ரா அறிக்கை இன்று குப்பைக் கூடையில்., மதக் கலவரத் தடுப்புச் சட்ட வரைவு பல ஆண்டுகளாக முடக்கப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில் சிறுபான்மை நலத் துறை அமைச்சர் இப்படி முஸ்லிம்கள் சிறுபான்மையினரே இல்லை என ஒரு குண்டைத் தூக்கிப் போடுவது எத்தனை கொடுமை?

இன்னொரு பக்கம் ஆர்.எஸ்.எஸ்சின் ஏராளமான துணை அமைப்புகள் நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் ஏதாவது ஒரு அதிரடித் தாக்குதலை முஸ்லிம்கள் மீது நடத்திக் கொண்டு இருக்கின்றன. இரு வாரங்களுக்கு முன் விசுவ இந்து பரிஷத் தலைவர் பிரவீண் டொகாடியா, ”முஸ்லிம்கள் இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெற்றுக் கொள்வது குற்றமாக்கப்பட வேண்டும்” என்றார். அதாவது ஒரு முஸ்லிம் மூன்றாவது குழந்தையைப் பெற்றுக் கொண்டால் அந்தக் குழந்தைக்கு, ரேஷன், இட ஒதுக்கீடு, இலவச மருத்துவம், உதவித் தொகை முதலான எல்லா உரிமைகளையும் நிறுத்த வேண்டும் என்றார். இதை பிரதமரோ இல்லை அரசில் பொறுப்பாக உள்ள வேறு யாருமோ கண்டிக்கவில்லை. கண்டிக்காதது மட்டுமல்ல, ஏதோ முஸ்லிம் மக்கள்தொகை பெருகிக் கொண்டே போவது போல, முதல் முறையாக விளக்கங்கள் இல்லாமல் மக்கள் தொகை விவரங்களை மோடி அரசு அறிவித்ததன் பின்னணியில்தான் டொகாடியா இப்படிக் கூறினார் என்பது குறிப்பிடத் தக்கது. மேலோட்டமாக அந்தப் புள்ளி விவரங்களைப் பார்க்கும்போது முஸ்லிம் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே போவது போலத் தோன்றும். ஆனால் உண்மையில் முஸ்லிம் மக்கள் தொகை அதிகரிப்பு வீதம் நாளுக்கு நாள் குறைகிறது என்பதை இது குறித்த நிபுணர்கள் விளக்கினர்.

முஸ்லிம்கள் இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெறுவதைக் குற்றமாக்க வேண்டும் எனச் சொன்னது குறித்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பேச்சாளரான தாத்தரேய ஹொஸபல்லேயிடம் கேட்டபோது, ”இது குறித்து விவாதித்துத்தான் கருத்துச் சொல்ல வேண்டும்” என்றாரே ஒழிய இது தவறு எனச் சொல்லவில்லை.அடுத்த சில நாட்களில் பிரதமர் மோடி ஆர்.எஸ்.எஸ் மாநாட்டில் கலந்து கொண்டார். வெளிப்படையாக இந்திய அரசியல் சட்டத்தை மறுக்கக் கூடிய இந்த அமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்டதோடு அன்றி, தான் ஒரு ஆர்.எஸ்,எஸ் தொண்டன் (சுயம் சேவக்) எனப் பெருமையோடு அறிவித்தார். தனது அரசுக்கு ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து வழி காட்ட வேண்டும் என்றார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் தன் பங்கிற்கு மோடி அரசு ‘சரியாகவே’ செயல்படுவதாக அந்த மாநாட்டில் சான்றளித்தது. இந்த நாட்டில் சுமார்15 கோடி முஸ்லிம்கள் உள்ளனர். இது ஒரு மிகப் பெரிய சிறுபான்மை. இந்தமக்கள் இப்படி அச்சத்திற்கு உள்ளாக்கப்படுவதும், அரசியல் சட்டம், நீதி வழங்கு முறை ஆகியவற்றில் அவர்களை நம்பிக்கை இழக்க வைப்பதும் ஒரு ஜனநாயக நாட்டிற்கு நல்லதல்ல.

Written by lankamuslim

செப்ரெம்பர் 28, 2015 இல் 5:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. இலங்கை முஸ்லிம்கள் மகிந்தவின் அராஜகத்துக்கும், முஸ்லிம்களின் மீதான இன,மதவெறித்தாக்குதல்களுக்கும் எதிராக அல்லாஹ்விடம் கையேந்தி, மன்றாடி அதன்மூலம் எவ்வாறு அல்லாஹ் மஹிந்த கூட்டத்தை கேவலப்படுத்தி அழித்தானோ, அவ்வாறே… அந்த இந்திய முஸ்லிம்களும் ஷிர்க்குகளை கைவிட்டு, அல்லாஹ்விடம் உதவி தேடினால்…மஹிந்த கூட்டத்துக்கு நடந்ததைவிடவும் இந்த மதவெறியன், மோடிக்கும் அவனது கூட்டத்துக்கும் அல்லாஹ்வின் சாபமும், தண்டனையும் இழிவும் உண்டாகும். யா அல்லாஹ் இந்த மடமையில் மிஞ்சி முஸ்லிம்களுக்கெதிராக இனவெறி, மதவெறியாடும் இந்த ஓநாய் மோடியையும், அவனது கூட்டத்தையும் அழிவுக்கும், இழிவுக்கும் உண்டாக்குவாயாக… ஆமீன்…யாரப்பல் ஆலமீன்!

    Risniy

    ஒக்ரோபர் 1, 2015 at 5:00 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: