Lankamuslim.org

One World One Ummah

உள்ளக பொறிமுறையில் நம்பிக்கை வைக்க வேண்டும்: ஹக்கீம்

leave a comment »

Sampanthanசர்வதேச விசாரணையை மையமாக வைத்து தெற்கின் நாட்டுப்புற சிங்களவர்களை சூடேற்றி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முன்னைய ஆட்சியாளர்களின் கைக்கூலிகளாக செயற்பட்டுவரும் சில கழுகுக் கூட்டங்களின் திட்டங்களுக்கு தீனி போடும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்படக்கூடாது. புழைய புண்களை சொறிந்து சொறிந்து இனியும் வங்குரோத்து அரசியலில் ஈடுபட வேண்டாமென நகர திட்டமிடல், நீர்வளங்கள் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று முன்வைக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தின் தீர்மானங்களை நிறைவேற்றிக்கொள்ளும் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அமைச்சர் ஹக்கீம் இங்கு மேலும் உரையாற்றுகையில்,

ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்படுவதற்கு தமிழ் மக்கள் ஒத்துழைப்பு வழங்கியதாகவும், புதிய அரசாங்கம் தமது மக்களுக்கு துரோகம் இழைப்பதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சிறீதரன் எம்.பி இங்கு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார். தமிழ் மக்கள் மாத்திரமன்றி அனைத்து சிறுபான்மை மக்களும் ஆட்சி மாற்றத்திற்கு ஒத்துழைப்பினை வழங்கியிருந்தனர். சிறுபான்மை மக்கள் ஒருபுறம் இருக்க முன்னைய அரசாங்கத்தின் மீதும் முன்iனைய ஆட்சியாளர்கள்மீதும் வெறுப்புக்களை கொண்டிருந்தோரும் ஆட்சி மாற்றத்திற்காக வாக்களித்திருந்தனர்.

உள்ளக விசாரணைப் பொறிமுறையில் நம்பிக்கை இல்லையென்றும் சர்வதேச விசாரணை ஒன்று தேவையென்றும் இங்கு கூப்பாடு போடப்படுகிறது. உள்ளக பொறிமுறையில் நம்பிக்கை வைக்க வேண்டும். புதிய அரசாங்கம் இந்நாட்டின் பிரதம நீதியரசராக தமிழ் மகன் ஒருவரையே நியமித்துள்ளது. மத்திய வங்கியின் ஆளுனராகவும் தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு புதிய அரசாங்கம் நல்ல பல காரியங்களைச் செய்து வருகிறது. தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்று வருகின்றது. இப்படி இருக்கையில் கடந்த கால பிரச்சினைகளை கிளறிக்கொண்டிருப்பதன் மூலம் தீர்வு எதனையும் பெற்றுவிட முடியாது. இன்றைய இரட்டைத் தலைமை சிறுபான்மை மக்களின் நம்பிக்கையால் உருவாக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவராக சிறந்த தலைவரான சகோதரர் சம்பந்தனை அரசாங்கம் நியமித்திருக்கின்றது. தமிழ் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒருவராகவே இரா சம்பந்தன் இருக்கின்றார். அவரை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்ததன்மூலம் அரசாங்கத்தின் நம்பிக்கைத் தன்மையை வெளிப்படுத்தி இருக்கின்றோம். ஜனாதிபதி நினைத்திருந்தால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை மாற்றி அமைத்திருக்க முடியும். ஆனாலும் ஜனாதிபதி அவ்வாறு செயற்படவில்லை. இதன்மூலம் அவரது நல்லெண்ணத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு பீல்ட் மார்ஷல் பதவியை வழங்கியமை தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முரண்பட்ட கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். ஆனால் அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சகலரும் இணைந்து தமிழ் மக்களின் வாக்குகளை அவருக்குப் பெற்றுக் கொடுத்திருந்தனர். அதேபோன்று அதற்கு முன்னைய தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிப்பதற்கு தடை விதித்ததன் மூலம் ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடித்தது மட்டுமல்லாமல் மகிந்த ராஜபக்ச வெற்றிபெறுவதற்கும் வழிவகுத்தீர்கள்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்காலத்தில் போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் அதே அரசாங்கத்தின் நான் இருந்ததுடன், புலிகளுடனான பேச்சுவார்த்தைகளிலும் பங்குபற்றி இருந்தேன். ஏழு சந்தர்ப்பங்களில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின்போது அதிலிருந்த உச்சக்கட்ட வாய்ப்புகள் அனைத்தும் படுமோசமாக மீறப்பட்டு சந்தர்ப்பங்களும் கைவிடப்பட்டன. மோதல் இல்லாது அனைத்தையும் வெற்றிகொள்வோம் என்ற செயற்பாட்டினை தட்டிக்கழித்தீர்கள். இவ்வாறு செய்துவிட்டு கடந்தகால விடயங்களை இங்கு முன்வைத்து பழைய புண்களை சொறிந்து சொறிந்து அரசியல் செய்ய முற்படுகின்றீர்கள். அவ்வாறு செயற்பட முடியாது.

புனர்வாழ்வு அமைச்சராக தமிழர் ஒருவரை நியமித்துள்ளோம். இராணுவத்திடம் இருக்கின்ற தமிழ் மக்களின் காணிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு எமது அரசாங்கம் உளப்பூர்வமாக செயற்பட்டிருக்கிறது. அதேபோன்று முஸ்லீம்களுக்கும் பிரச்சினை இருக்கின்றன. பூநகரி முதல் புத்தளம் வரையில் முஸ்லீம்களின் காணிகள் பறிகொடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலைமைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் இணக்கப்பாட்டுப் பொறிமுறை ஊடாகவே அதனை அடைய முடியும்.

எமது அரசாங்கம் உணர்வுபூர்வமாக செயற்பட்டு வருகின்ற இன்றைய காலகட்டத்தில் புலம்பெயர் சமூகமும் யதார்த்தத்தைப் புரிந்து செயற்படுவது அவசியமாகும். அவசியமற்ற கருத்துக்களை வாதங்களைக் கைவிடுமாறு சிநேகபூர்வமாக வேண்டுகோள் ஒன்றை முன்வைக்கின்றேன்.

இன்று (நேற்று) காலை இந்த பாராளுமன்றத்தில் நடந்த விடயங்கள் பற்றி தாங்கள் அறிவீர்கள். கடந்த அரசாங்கத்தினதும் முன்னைய ஆட்சியாளர்களினதும் கூலிப்படையாக செயற்பட்டு வருகின்ற சிலர் சர்வதேச விசாரணையை மையமாக வைத்து மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முயற்சித்து வருகின்றனர். தென்பகுதியில் நாட்டுப்புற அப்பாவி சிங்கள மக்களை ஏமாற்றி அவர்களை சூடேற்றி ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு சில கழுகுக் கூட்டங்கள் இங்கு செயற்பட்டு வருகின்றன. இவ்வாறான கழுகுக் கூட்டங்களுக்கு தீனி போடும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்படக்கூடாது. வடுக்களைத் தடவித் தடவி பழைய புண்களை சொறிந்து சொறிந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு இனியும் வங்குரோத்து அரசியலில் ஈடுபட வேண்டாம்.

என்னைப் பொறுத்தவரையில் நான் இதற்கு முன்னர் இவ்வாறு காரமாக பேசியது கிடையாது. நேர்மையாகவும் நியாயமாகவும் கருத்துக்களை முன்வைப்பவன். நான் யாரையும் புண்படுத்துவதற்காக இந்தக் கருத்துக்களை முன்வைக்கவில்லை என்றார்.

Advertisements

Written by lankamuslim

செப்ரெம்பர் 24, 2015 இல் 6:07 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: