Lankamuslim.org

One World One Ummah

இஸ்லாம் பாட நூல் விவகாரமும் தேரரின் புரளியும்!

leave a comment »

islamகல்வி அமைச்சினால் 2008ஆம் ஆண்டு அச்சிடப்பட்டுள்ள 11ஆம் தரத்திற்கான இஸ்லாம் பாடநூலில் இலங்கை வரலாறும் பங்களிப்பும் என்ற ஒரு பகுதி உள்ளது. அந்தப் பகுதியில் வரலாறு திரிபுபடுத்தப் பட்டதற்கான பதிவுகள் இருந்தன. இதனை கடந்த ஆண்டு நாம் திருத்தினோம். அதன்படி இந்த ஆண்டு விநியோகிக்கப்பட்டுள்ள இஸ்லாம் பாடப் புத்தகங்களில் அந்தப் பகுதி நீக்கப்பட்டுள்ளதாக சர்ச்சைக்குரிய தேரர் ஒருவர் தெரிவித்த கருத்தை மையப்படுத்தி எமது ஊடகங்கள் பல்வேறு வழிமுறைகளில் எழுதியும் பகிர்ந்தும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

இது இஸ்லாம் பாடநூல் தொடர்பான நம்பகத் தன்மையில் மாணவ, ஆசிரிய சமூகங்கள் மத்தியிலும் பொதுவாக முஸ்லிம் பொதுமக்களிடையேயும்  சந்தேகத்தை ஏற்படுத்தும் ஒன்றாக அமைகின்றது.

செய்திகளை உறுதிப்படுத்தாமல் அதன் நம்பகத் தன்மையை ஆய்ந்து அறியாமலும் பொறுப்பற்ற முறையில் முஸ்லிம் ஊடகங்கள் செய்திகளைப் பரப்பி வருவது ஊடக தர்மங்களுக்கு முற்றிலும் முரணானதாக அமைகிறது.

கல்வி வெளியீட்டுத் திணைக்களம் வருடாந்தம் ஒவ்வொரு பாடநூல் பற்றியும் மீளாய்வு ஒன்றை மேற்கொண்டு தேவையான திருத்தங்களை மேற்கொண்டதன் பின்னர் அடுத்த வருடத்திற்கான பாடநூல்களை அச்சிடுவது வழமையான ஒரு நடைமுறையாகும்.

இதனடிப்படையில் ஏனைய பாட நூல்களைப் போன்று இஸ்லாம் பாடநூலும் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டது. குறித்த மீளாய்வில் “இலங்கையில் முஸ்லிம்களின் வரலாறும் பங்களிப்பும்” என்ற தலைப்பிலான பாடத்தின் உள்ளடக்கம் கொண்டுள்ள தகவல்கள் கவனத்திற் கொள்ளப்பட்டது.

கல்வி வெளியீட்டுத் திணைக்களம் உரிய அதிகாரிகளுக்கு குறித்த மீளாய்வு தொடர்பான விபரங்களையும் மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆலோசனையையும் வழிகாட்டலையும் பெற்றுக் கொள்வதற்காக வரலாற்றுத் துறைப் பேராசிரியர் ராஜ்சோம தேவ தலைமையிலான குழுவினரை நியமித்தது.

கல்வி வெளியீட்டுத் திணைக்கள மற்றும் தேசிய கல்வி நிறுவக அதிகாரிகள் இக்குழுவினரை சந்தித்து கலந்துரையாடினர். இதன்போது இலங்கையில் முஸ்லிம்களின் வரலாற்றை தற்போது பாடநூலில் எழுதப்பட்டுள்ளதை விட மிகவும் வலிமையான ஆதாரங்களுடனும் தரவுகளுடனும் எழுதுவது என தீர்மானிக்கப்பட்டது.

இத்தீர்மானத்திற்கு அமைய புதிய ஆதாரங்கள், தரவுகள் மற்றும் வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுக்கள் பல்வேறு தரப்பினரால் சேகரிக்கப்பட்டு போராசிரியர் ராஜசோம தேவ தலைமையிலான குழுவினருடன் அவை கலந்துரையாடப்பட்டு இலங்கை “முஸ்லிம்களின் வரலாறும் பங்களிப்பும்” என்ற தலைப்பின் கீழ் உள்ள முஸ்லிம்களின் ஆரம்பகால வரலாறு என்ற உப தலைப்பு எழுதப்பட்டது.

மீளமைக்கப்பட்ட பாட உள்ளடக்கத்துடன் திருத்திய பதிப்பு 2014-2015 ஆம் ஆண்டுகளில்  பாடசாலைகளில் விநியோகிக்கப்பட்டன. திருத்திய பதிப்பு பின்வரும் சிறப்பம்சங்களைக்  கொண்டுள்ளது.

01. கி.மு 27 இல் ஆட்சிக்கு வந்த ரோம பேரரசர் ஒகஸ்தஸின் காலத்தோடு அரபு வணிகர்களின் இலங்கையுடனான தொடர்பு விபரிக்கப்பட்டுள்ளது.

02. இஸ்லாத்தின் தோற்றத்திற்கு முன்னர் இலங்கைக்கு வருகை தந்த அரேபியர் ஜஸீரதுல் யாகூத் (சிவப்பு மாணிக்கத் தீவு) என்று இலங்கையை அழைத்தனர் என்பதன் ஊடாக அரபு வியாபாரிகளிடையே இலங்கையில் மாணிக்கக் கற்களுக்கு சிறந்த செல்வாக்கு காணப்பட்டது என விபரிக்கப்படுகிறது.

03. கி.பி 300 ஆம் ஆண்டளவில் இறக்குமதி செய்யப்பட்ட பார்த்தே- காசேனீயன் நீல, பச்சை நிற முலாமிடப்பட்ட மற்பாண்டங்களின் சிதைவுகள் அநுராதபுர சேதவனாராம விகாரையில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் அகழ்வின்போது கண்டெடுக்கப்பட்டமையை முன்னிறுத்தி அறபு வணிகர்களின் இலங்கையுடனான தொடர்பு விளக்கப்பட்டுள்ளது.

04. கி.பி. 700களில் அரபு முஸ்லிம் வணிகர்கள் இலங்கையில் குடியேற்றங்களை அமைத்தனர் என்பதன் ஊடாக இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகக் குடியிருப்புக்கள் உறுதிப்படுத்தப்படுகின்றது.

05. அரபு முஸ்லிம்களின் திறமைகள், அவர்களின் பண்பாடுகளின் மூலம் சுதேசிகளினுடனான உறவு பலமடைந்து முஸ்லிம் குடியேற்றங்கள் பெருகியமை பற்றியும் ஏற்றுமதி- இறக்குமதி வர்த்தகத்திற்கு முஸ்லிம்கள் ஆற்றிய பங்களிப்புக்கள் பற்றியும் விரிவாக விளக்கப்படுகின்றது.

06. முஸ்லிம்களின் பண்பாடுகளின் ஊடாக மன்னர்களின் நெருக்கத்தைப் பெற்று கௌரவிக்கப்பட்டு சிங்கள மன்னர்களின் ஆட்சியில் மந்திரி போன்ற உயர் பதவிகளில் முஸ்லிம்கள் அமர்த்தப்பட்டனர் என்று சிங்கள மன்னர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான உறவு சிலாகித்துக் கூறப்பட்டுள்ளது.

புதிய பதிப்பில் பல்வேறு வலிமையான, கனதியான வரலாற்று ஆதாரங்களுடனும் முன்னைய பதிப்பில் காணப்பட்ட பொருத்தமான தகவல்களுடனும் விளக்கமாக இலங்கை முஸ்லிம்களின் ஆரம்ப கால வரலாறு எழுதப்பட்டுள்ளது.

மீள் பதிப்பில் ஆரோக்கியமான, வலிமையான வரலாற்றுச் சான்றாதாரங்களுடன் பாடம் செழுமைப்படுத்தப்பட்டுள்ளது.  இது முஸ்லிம் என்ற வகையில் நாம் பெருமைப்படக் கூடிய ஓர் அம்சமாகும். அவ்வாறே எதிர்கால சந்ததியினர்களுக்கு மிகச் சரியானதும் சிங்கள வரலாற்றாசிரியர்களினால் உறுதிப்படுத்தப்பட்டதுமான வரலாற்றுச் சான்றாதாரங்களை முன்வைப்பதற்கும் வழிகோலியுள்ளது.

இது இவ்வாறிருக்க, சிங்கள மக்களால் நிராகரிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய ஒரு தேரரின் கூற்றை வைத்துக் கொண்டு எமது சமூகத்தின் அங்கத்தவர்கள், ஊடகங்கள் இஸ்லாம் பாடநூலின் மீதும் அதற்குப் பங்களிப்புச் செய்த அதிகாரிகள் மீதும் கணைகளை எறிவது எந்த வகையில் நியாயம் எனப் புரியவில்லை.

குறித்த தேரர் இஸ்லாம் பாட நூலின் ஒரு பாடம் தொடர்பாகவே கருத்துத் தெரிவித்திருக்க, முழு பாடப் புத்தகமும் தேரரின் நெறிப்படுத்தலைக்கமைய திருத்தியமைக்கப்பட்டது போன்று ஊடகங்கள் செய்தி அறிக்கையிடுவதன் மர்மம் என்ன என்ற கேள்வியும் எழுகிறது.

இஸ்லாம் பாடநூல் தொடர்பாக தேசிய சிங்களப் பத்திரிகைகளில் (2013.02.27) தலைப்புச் செய்திகளாகவும் விமர்சனங்களாகவும் உண்மைக்குப் புறம்பான தரவுகளை உள்ளடக்கி கட்டுரைகள் வெளிவந்தபோது எமது ஊடகங்கள் அவற்றை ஏன் கண்டுகொள்ளவில்லை என்றும் ஊகிக்க முடியவில்லை. அவ்வாறே உண்மையை அறிய முற்படாமல் குறித்த தேரரின் புரளியை இவ்வளவு முக்கியத்துவம் மிக்க பேசுபொருளாக ஏன் மாற்றியுள்ளனர் என்றும் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

அபூ அயானி

இந்த கட்டுரை கொண்டுள்ள கருத்துக்கள் குறித்த கட்டுரையாளரின் தகவல் மற்றும் கருதுக்கலாம்

Advertisements

Written by lankamuslim

ஓகஸ்ட் 30, 2015 இல் 2:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: