Lankamuslim.org

One World One Ummah

தமிழ் வாக்காளர்களைக் குழப்பும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் !! ?

leave a comment »

vicவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை வாக்காளர்களைக் குழப்பும் வகையில் அமைந்துள்ளதாக, கொழும்பில் இருந்து வெளியாகும் தினக்குரல் நாளிதழின் ஆசிரியர் வீ.தனபாலசிங்கம் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண முதல்வர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக, இந்தியன் எக்ஸ்பிரசுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் வெற்றி பெற்ற விக்னேஸ்வரனுக்கு, அதனை ஆதரிக்க வேண்டிய தார்மீக கடப்பாடு உள்ளது.

அவர் நடுநிலை வகிப்பதாக கூறுகிறார். ஆனால், அவர் குறிப்பிட்ட கட்சி ஒன்றுக்குப் பின்னால் இருப்பதாக தெளிவாக இருக்கிறது.

அவரது நிலைப்பாடு வாக்காளர்களைக் குழப்பும் வகையில் அமைந்துள்ளது. என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவின் ஆதரவு அவசியம் எனக் கருதுவதாகவும், ஆனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதனை எதிர்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ், விக்னேஸ்வரனின் அறிக்கை மேற்குலக ஆதரவு தேவை என்பதை மட்டும் சுட்டிக்காட்டியுள்ளதாகவும், ஆனால் இந்தியாவைப் புறக்கணித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தமிழ் பேசும் மக்களின் நலனுக்காக அணிதிரண்டு வாக்களியுங்கள்! வடமாகாண முதலமைச்சர்

எனது அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, இளைஞர்களே, யுவதிகளே! தேர்தலுக்கு இன்னமும் சில நாட்களே உள்ள நிலையில் யாருக்கு வாக்களிப்பது, யாரை தெரிவு செய்தால் உங்களையும் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் அவர்கள் வாழவைப்பார்கள் என்பது குறித்து நீங்கள் ஓர் தீர்மானத்திற்கு வந்திருப்பீர்க்ள் என நம்புகின்றேன்.

உங்களது தீர்மானத்தில் நான் எந்தவொரு செல்வாக்கினையோ அல்லது தலையிட்டினையோ செய்யப்போவதில்லை.

இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பக்கச் சார்பற்ற நடுநிலைத் தன்மை என்ற எனது நிலைப்பாட்டில் தொடர்ந்தும் உறுதியாகவுள்ளேன்.

ஆரோக்கியமான அகமுரண்பாடுகள் அவசியமானவையாயினும்கூட, ஒரே கட்சிக்குள் இருந்து கொண்டு ஒரே கொள்கைக்காகத் தேர்தலில் போட்டியிடுபவர்கள் ஒருவரை ஒருவர் தூற்றிக் கொண்டும், வசைபாடிக் கொண்டும், அரசியல் நாகரீகம் அற்ற முறையில் ஒருவர் மற்றவருக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் நிலைமையினைக் காணும் போது பக்கச் சார்பற்ற நடுநிலைத் தன்மை என்ற எனது முடிவு சரியானது என்றே நான் கருதுகின்றேன்.

வடமாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு செப்டெம்பர் மாதம் 2013ல் வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட வாக்குறுதிகளை பலத்த சவால்களுக்கு மத்தியிலும் நிறைவேற்றுவதற்காக நான் இதயசுத்தியுடன் செயற்பட்டேன், செயற்பட்டு வருகிறேன்.

இதனைத் தொடர்ந்தும் வெற்றிகரமாக முன்னெடுக்க எதிர்காலத்தில் எனது மக்களின் பாரிய ஒத்துழைப்பும் பங்களிப்பும் மென்மேலும் அவசியம். மக்கள் நலனை முதன்மைப்படுத்திய எனது வேலைத்திட்டங்களையும், அது சார்ந்த உள்நாட்டு வெளிநாட்டுச் சந்திப்புக்களையும் வட மாகாண சபைத் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அமைவாகவே முன்னெடுக்கின்றேன்.

தமிழ் மக்களின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கும் மக்கள் நலன்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பது எனது பொறுப்பென உணர்கின்றேன். அந்தப் பொறுப்பைப் பற்றுறுதியுடன் பற்றிக் கொள்ளவே நான் விரும்புகின்றேன். இதற்காக நான் எத்தகைய அர்ப்பணிப்பையுஞ் செய்யத் தயாராக இருக்கின்றேன்.

போரின் போது மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்பு எமது இனத்தின் சமூக, பொருளாதார, பண்பாட்டு கட்டமைப்புகளை சிதைத்துள்ளது. இவற்றை நாங்கள் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். இதற்கு அமைவாக ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களைப் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுடன் நேரடியாக மேற்கொள்ளும் வாய்ப்பு நான் முதலமைச்சராக பதவியேற்ற பின் கிடைத்தது. அதனை, மிக ஆழமாக ஆராய்ந்து பார்த்த பின்பே எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நடுநிலை வகிப்பதென்ற முடிவையெடுத்தேன்.

இது சம்பந்தமாக அண்மையில் நான் வெளியிட்டசெய்தி பலவிதமான மாறுபட்ட கருத்துக்களை முன் கொண்டு வந்துள்ளதாக அவதானிக்கின்றேன்;. எனினும் அது பலரைச் சிந்திக்க வைத்துள்ளமை புலப்படுகிறது.

என்னைப் பொறுத்த வரையில் நான் தற்போது அரசியலில் இருக்கும் அதேநேரம், அரசியலுக்கு வர முன்பிருந்தே சமூக சேவையிலும் சமூக மறுமலர்ச்சியிலுந் தொடர்ந்து ஆர்வம் காட்டி வந்துள்ளேன் என்பதை அறியத்தர வேண்டியுள்ளது. எம் மக்களின் சேவையிலும் மறுமலர்ச்சியிலுந் தொடர்ந்து ஈடுபட அரசியல் எனக்கு ஒரு கருவியேயொழிய எனது முழு நேரத் தொழில் அல்ல.

சென்ற 22 மாதங்களில் நான் என் மக்களிடம் இருந்து தெரிந்து கொண்ட பாடங்கள் சில உண்டு.

ஒன்று – அரசியல்வாதிகள் தேர்தல் காலத்தில் பேசுபவற்றை தேர்தல் முடிந்ததும் காற்றில் பறக்க விட்டு விடுகின்றார்கள் என்பது. எனவே இதனால் மக்கள் மனக் கிளர்ச்சியுந் தளர்ச்சியும் அடைகின்றார்கள்.

இரண்டு- தேர்தல் முடிந்ததும் மக்களிடம் இருந்து அரசியல்வாதிகள் விலகிச் செல்கின்றார்கள். அவர்களின் பிரச்சனைகளை, ஏக்கங்களை, தேவைகளைப் புறக்கணிக்கின்றார்கள். தமக்கும் தமக்கு அண்மித்தவர்களுக்கும் மட்டும் சலுகைகள் செய்கின்றார்கள், கரிசனை காட்டுகின்றார்கள், உதவிகள் புரிகின்றார்கள், என்பது.

மூன்று- கொடுத்த தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகளுக்கு மாறாக சுயநலத்துடன் நடக்க எத்தனிக்கின்றார்கள்.

முக்கியமாகத் தெற்கத்தைய அரசியல்வாதிகளுடன் சேர்ந்து நடக்க வேண்டும் இல்லையேல் விமோசனம் இல்லை என்ற எண்ணத்தில், உணர்ச்சியுடன் தமிழ் மக்களிடையே தேர்தல் மேடைகளில் பேசிய வசனங்களை மறந்து, தெற்கத்தையவர்களின் மனங் கோணாமல் நடந்து கொள்ள எத்தனிக்கின்றார்கள்.

அவ்வாறு செய்வதானால் அதை முன்கூட்டியே தேர்தல் விஞ்ஞாபனங்களில் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்பதை மக்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

இவ்வாறு பலதையும் மக்கள் கூறுவதை நான் கேட்டுள்ளேன். இதுபற்றி அரசியல்வாதிகளிடங் கேட்டால் தமது கட்சியின் பெயரைக்கூறிஅதில் குளிர்காயப் பார்க்கின்றார்கள்.

இதனால்த் தான் நான் கட்சிக்கு அப்பால், கொள்கை நிலை கொண்ட நேர்மையான, பற்றுறுதி கொண்ட, விலைபோகாத, தூரநோக்குப் பார்வை கொண்ட, கரிசனையுடைய பிரதிநிதிகளை அடையாளங் காணுங்கள் என்றேன்.

எனினும் நான் என் முன்னைய செய்தியில் இன்னொன்றைக் கூறியதையும் எம் மக்கள் மறக்கக் கூடாது. நாம் தேர்ந்தெடுப்பவர்கள் தமிழ் மக்களின் தனித்துவத்தையும் அவர்களின் சுயநிர்ணய உரிமையையும் உறுதிப்படுத்தி, எம்மக்களின் உரிமைகளையும் அவர்களுக்கான நீதியையும் பெற்றுக்கொள்ளக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்றுங் கூறியிருந்தேன்.

போட்டியிடும் பல கட்சிகள் எமது மக்களின் தனித்துவத்தையுஞ் சுயநிர்ணய உரிமைகளையும் மதியாத வகையில்த்தான் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களைத் தயாரித்துள்ளார்கள். அக் கட்சிகளுள் தரம் மிக்கவர்கள் இருந்தால்க் கூட (நான் இருக்கின்றார்கள் என்று கூறவில்லை) அவர்களின் தாற்பரியம் வேறு என்பதை நாங்கள் மனதில் நிலைநிறுத்த வேண்டும்.

அவர்களால் எமது வடக்கு கிழக்கு வாழ் மக்கள் நிரந்தரமான நன்மைகளைப் பெற முடியாது என்பதை நான் கூறி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.

மேலும் தாயகம், தனித்துவம், தமிழர் சுயநிர்ணயம் போன்ற கருத்துக்களை 2009ம் ஆண்டு மே மாதந் தொடங்கியாவது இக்கட்சிகள் உலகிற்குப் பறைசாற்றி வந்திருக்க வேண்டும். காளான்கள் காரியவாதிகள் ஆக முடியும் ஆனால் காவலர்கள் ஆக முடியாது.

ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின் வடகிழக்கு மாகாணங்களில் ஒரு சிறந்த அப்பளுக்கற்ற அரசியல் கலாசாரத்தைக் கட்டி எழுப்ப வேண்டிய கடப்பாடு எம் எல்லோருக்கும் எழுந்துள்ளது.

தெற்கில் பூதவடிவம் பெறப்பார்க்கும் இனவெறுப்புடனான அரசியல் சிந்தனைகளை நாம் தடுத்து நிறுத்த முன்வரவேண்டும். எம்முடன் கைகோர்த்து வரச் சம்மதித்திருக்கும் மேற்கத்தைய நாடுகளுடனான உறவை நாம் பலப்படுத்தவேண்டும்.

இவ்வாறு செய்வதால் எமக்கொரு நிரந்தர அரசியல் தீர்வை நாங்கள் பெற வழி அமைக்கலாம். இதை மனதில் வைத்துத் தான் நாம்தேரந்தெடுக்கும் பிரதிநிதிகளின் தரம், தகைமை, தகுதி எவ்வாறு அமைய வேண்டும் என்று மக்களை நோக்கிய எனது முன்னைய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

அதை விட மத்தியில் உள்ளோர், நல்லாட்சிக்கானதும், நீதி, சமத்துவம் போன்ற கொள்கையின் அடிப்படையிலானதுமான ஒரு ஆட்சியை அமைக்க முன்வர வேண்டும் என்று கேட்டிருந்தேன். அத்துடன் எமது சர்வதேச பரிமாற்றங்கள் எமக்கு நன்மை அளிப்பனவாக அமைய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.

தேர்தல் நெருங்கி விட்டிருக்கும் இந்த நேரத்தில் எனது இனிய சகோதர சகோதரிகளுக்கும் இளைஞர்கள் யுவதிகளுக்கும் நான் ஒன்று கூறக் கடமைப்பட்டுள்ளேன். தேர்தல் விரைவில் முடிந்து விடும். பழைய வாழ்க்கை மீண்டும் திரும்பி விடும்.

ஆனால் உங்கள் இனிவரும் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட வேண்டுமானால் உங்களுக்கான கட்சியை நீங்கள் தேர்ந்தெடுத்தால் போதாது. அக்கட்சியில் போட்டியிடும் திறமான வேட்பாளர்களை அடையாளம் கண்டால் போதாது. நீங்கள் அனைவரும் திரண்டெழுந்து சென்று ஆகஸ்ட் மாதம் 17ந் திகதி காலையில் வாக்களிப்பது மிக முக்கியம்.

வீட்டில் முடங்கிக் கிடக்காதீர்கள்! உங்கள் பொன்னான வாக்குகளை அன்று காலையே வாக்குச்சாவடிகளுக்கு சென்று அளியுங்கள். அது மட்டுமே உங்களுக்குள்ள ஒரேயொரு திடமான ஜனநாயக உரித்து.

நீங்கள் வாக்களிக்காது விட்டால் முன்னர் 25 வாக்குகளுடன் பாராளுமன்றம் சென்றவர்களைப் போல் குறைந்த வாக்குகளுடன் குறையுள்ள வேட்பாளர்கள் உங்கள் குறை கேட்கும் பாராளுமன்ற அங்கத்தவர்கள் ஆகி விடுவார்கள்.

நீங்கள் வாக்குகளை இடாவிடில் வேறு வழிகளில் உங்கள் வாக்குகளைப் பாவிக்க சில கூட்டங்கள் தயார் நிலையில் இருக்கக்கூடும். அவ்வாறானவர்களின் தவறான நடவடிக்கைகளுக்கு இடம் அளிக்காதீர்கள்.

“செய்தக்க செய்யாமையானுங் கெடும்” என்று வள்ளுவன் கூறியது போல நீங்கள் செய்யவேண்டிய உங்களது கடமையை செய்யாது போனால் அது உங்களுக்கு மாத்திரமல்ல ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் கேடுதருவதாய் அமைந்து விடும் என நான் அஞ்சுகின்றேன்.

எனவே எனது வடக்குக் கிழக்கு மாகாண அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! இளைஞர்கள், யுவதிகளே! தேர்தலில் வாக்களிப்பதென்ற உங்களது ஜனநாயகக் கடமையினை நிறைவேற்ற முன்வருவதோடு தமிழ் பேசும் மக்களின் நலனுக்காய் அணிதிரண்டு சென்று வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இம் மாதம் 17ந் திகதி; காலையில் எந்தக் கட்சிக்கு நீங்கள் வாக்களிக்கப் போகின்றீர்கள் என்பதை முதலில் மனதில் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அக்கட்சி எமது தனித்துவத்தையும் சுயநிர்ணயத்தையும் உறுதிப்படுத்தும் கட்சியாக இருக்க வேண்டும்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னுந் தாயகம்,தனித்துவம்,தமிழர் சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாட்டில் உறுதியாக இருந்து வருகின்ற கட்சியாக இருக்க வேண்டும். தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனஅழிப்புக்கு நீதி தேடுவதற்குப் பின்னிற்காத கட்சியாக, சுதந்திரமான சர்வதேச விசாரணை என்ற விடயத்தில் உறுதியுடன் உள்ள கட்சியாகத் திகழவேண்டும்.

தமிழ் மக்களின் கௌரவம், சமத்துவம், பாதுகாப்பு போன்ற விடயங்களில் சமரசம் செய்யாத கட்சியாக இருக்க வேண்டும். போருக்குப் பின்னரான இந்தச் சூழலில், செயற்த்திறன் மிக்க புனருத்தாரண பணிகளை முன்னெடுக்கின்ற கட்சியாக இருக்க வேண்டும். காணமல் போகச் செய்யப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிவதற்காகவும், அரசியல் கைதிகள் விடுதலைக்காகவும் இதயசுத்தியுடன் செயற்படுகின்ற கட்சியாக இருக்க வேண்டும்.

சரணாகதியடையாமல், எமது தனித்துவத்தையுஞ் சுயநிர்ணய உரிமையையும் வலியுறுத்தி வரும் கட்சியை அடையாளங் காணுவது உங்களுக்குச் சிரமம் அளிக்காது என்று எண்ணுகின்றேன். அடிப்படைக் கோட்பாடுகளில் உறுதியாக இருக்கும் கட்சியில் இருக்கும் நேர்மையான, கொள்கையில் உறுதியுடைய, மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றக்கூடிய,  தூரநோக்குப் பார்வைகொண்ட, எத்தருணத்திலும் விலைபோகாத மனோதிடம் கொண்ட வேட்பாளர்களை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

அதாவது அவர்களின் இலக்கங்களை மனதில் பதிந்து வைத்திருங்கள். அன்றைய தினம் காலை ஏழு மணிக்கேதேர்தல்களம்செல்லுங்கள்.தவறாதுவாக்களியுங்கள்.வடகிழக்கு மாகாணங்களில்த்தான் மிகச்சிறந்த வாக்காளர் பங்குபற்றல் நடைபெற்றதென்ற நற் செய்திக்கு வலுவூட்டுங்கள்.

வடகிழக்கு மாகாணங்களில் தேர்ந்தெடுக்கப்படும் அனைத்து வேட்பாளர்களும் மக்கள் நலனே முதன்மையானது என்ற இலக்கினால் ஒன்று சேர்ந்து, ஒரு குடைக்குக் கீழ் ஒற்றுமையாய் வடகிழக்கு மக்களின் நலன் கருதி செயலாற்ற முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டு உங்கள் ஒவ்வொருவருக்கும் இறைவனின் இடைவிடாத ஆசிகள் கிடைக்க வேண்டும் என்று இறைவனை இறைஞ்சி விடைபெறுகின்றேன்.

நன்றி.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

Advertisements

Written by lankamuslim

ஓகஸ்ட் 13, 2015 இல் 6:33 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: