Lankamuslim.org

தேர்தல் வெற்றியும் முஸ்லிம் மக்களும்

with one comment

Muslimsமூதூர் முறாசில்: முஸ்லிம் மக்களின் முக்கிய பங்களிப்பு:முன்பொருபோதும் இல்லாதவாறு இம்முறை முஸ்லிம்கள் தமது இருப்பையும் விருப்பையும் நிலைநாட்டிக் கொள்ளும் வகையில் ஜனாதிபதித் தேர்தலில் ஆர்வம் செலுத்தினர்.  முக்கியமான ஒரு கால கட்டத்தில் இடம்பெறும் ஒரு முக்கியமான தேர்தலென இத்தேர்தலுக்கு அதிக முக்கியத்துவமும் கொடுத்தனர்.

இதுகாலவரை இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்களில் தாம் சார்ந்த அரசியல் கட்சியின் அபிலாசைகளுக்கு ஒத்திசைந்து   தேர்தலில் வாக்களிக்கும் ஒரு பாரம்பரியம் இருந்து வந்தது.

ஆனால், இம்முறை அப்பாரம்பரியத்தை நிராகரித்த முஸ்லிம்கள் அண்மைக்காலமாக முஸ்லிம் என்ற வகையில் பௌத்த கடும் போக்குவாதிகளிடமிருந்து   கற்றுக்கொண்ட பாடங்களை வைத்தே ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தீர்மானித்தனர். இதனால் எந்தக்கட்சி எந்தப்பக்கம் இருந்தபோதும்  முஸ்லிம்கள் எத்தரப்பினருக்கு வாக்களிக்க வேண்டும்  என்பதை ஏலவே தீர்மானித்து இருந்தனர்.

முஸ்லிம்களில் சுயநல போக்குடைய அல்லது குறுகிய சிந்தனையுடைய அல்லது மஹிந்த அபிமானியென தம்மைத் திருநிலைப்படுத்திக் கொண்ட சிறுதொகையினரைத் தவிர ஏனைய எல்லோருமே இத்தகைய தீர்மானத்தை எட்டியிருந்தனர்.

முஸ்லிம்கள் இத்தகைய வரலாற்று முக்கியத்துவமுடைய தீர்மானத்தை எட்டுவதற்கு முதன்மையான காரணமாக அமைந்திருந்தது மஹிந்த  ராஜபக்ஷ காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்றுவந்த வெறுப்பூட்டும் அல்லது தாக்குதல் செயல்களேயாகும்.

இத்தகைய வெறுப்பூட்டும் அல்லது தாக்குதல் வேலைத்திட்டத்தை  பொதுபலசேனா உள்ளிட்ட பௌத்த தீவரவாத அமைப்புக்கள் 2011 செப்டம்பர் மாதம் முதல்   தொடர்ந்து முன்னெடுத்து வந்த போதும்   அவற்றின்  போஷகராக பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோதாபாய ராஜபக்ஷா செயற்பட்டு வந்ததாகவே உறுதியாக நம்பினர்.

அத்தோடு முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில்; 2011 ஆண்டு யூன் மாதம் ஆரம்பித்து ஆகஸ்ட் மாதம் பெரும் பீதியை ஏற்படுத்தியிருந்த ‘கிறீஸ் மேன்’ விவகாரத்தின் இயக்குநராகவும்  அவரே செயற்பட்டதாக நிச்சயப்படுத்திக் கொண்டனர்.

முஸ்லிம்களின் பள்ளிவாசல்,உணவு, உடை என தொடங்கி கல்வி, தொழில், பொருளாதாரம்,  முஸ்லிம் தனியார் சட்டம்  என அனைத்தையும் இலக்கு வைத்து    இடம்பெற்ற பெரும்பாலான தாக்குதல் சம்பவங்கள் இலங்கை பொலிஸாரின் முன்னிலையில் அல்லது ஒத்துழைப்பில் இடம்பெற்றதானது  அத்தகைய செயல்களை அரசாங்மே திட்டமிட்டு செய்வதாக ஏற்றுக் கொள்ளச் செய்தது.

கருமலையூற்றுக் கிராமத்தில் வரலாற்று தொன்மையான பள்ளிவாசலை உடைத்தளித்துவிட்டு  குறித்த இடத்தில் பள்ளிவாசல் எதுவும் இருக்கவில்லையென   பொய்யைக் கூறியதும்   பௌத்த மதகுருவை தாக்கியதாக பொய்கூறி தாம் ஏலவே திட்டமிட்ட வன்முறையை அளுத்கம, பேருவளை  உள்ளிட்ட பிரதேசங்களில்  கட்டவிழ்த்து விட்டதும் இலங்கையில் முஸ்லிம் ஆயுத தாரிகள் செயற்பாடு பௌத்தர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில்  பொய்ப் பிரச்சாரம் செய்ததும் இது போன்ற பல நூறு செயல்களோடு அரசாங்கம் குறிப்பாக    கோதாபாய ராஜபக்ஷா  நேரடியாக சம்பந்தப்பட்டிருந்ததும்  முஸ்லிம்கள் அரசாங்கத்தில் அதிருப்தி அடைவதற்கு முக்கியமான காரணியாக இருந்து வந்தது. இதனால் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே எத்தரப்பினருக்கு வாக்களிக்க வேண்டும் என்று மக்கள் முடிவு செய்திருந்தனர்.

எனவேதான் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் தொகுதிகளில் பெரும்பாலும் மஹிந்தவை படுதோல்வி அடையச் செய்து எதிரணிகளின் பொது வேட்பாளர் மைத்ரிக்கு   வாக்குகளை அள்ளி வழங்கினர்.

கல்முனை தேர்தல்  தொகுதியில் 89.81 வீதமான (45,411) வாக்குகளும் மூதூர் தேர்தல் தொகுதியில் 87.64 வீதமான(57,532) வாக்குகளும் சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 84.63 வீதமான (46,827) வாக்குகளும் பொது வேட்பாளருக்கு உயர் வீதத்தில் அளிக்கப்பட்டுள்ளன.

தான் ஜனாதிபதியாகுவதற்கு முஸ்லிம் மக்களின் வாக்குகள் அவசியமில்லை என்று இருந்த மஹிந்தவுக்கு பாரிய   தோல்வியை  கொடுத்து மைத்ரிபால சிறிசேன இலங்கையின் ஆறாவது
ஜனாதிபதியாகுவதற்கு  அவர்களது வாக்குகள் தேவையான  பங்களிப்பைச்; செய்துள்ளன.

நல்ல தலைவராக வெளியேறிச் சென்ற ஜனாதிபதி:

மஹிந்த ராஜபக்~ தனது பதவிக்காலம் முடிவதற்கு இன்னும் இரண்டு வருடங்கள் இருந்தபோதும் ‘ஏதோ ஆசை’ அவரை ஆட்கொண்டிருந்ததனால் மூன்றாவது முறையும் பதவியை தக்கவைத்துக் கொள்வதற்கான  தேர்தல் சம்பந்தமாக சிந்தித்தார். தனக்கு எதிராக இப்போதைக்கு களத்தில் நிற்பதற்கு உருப்படியான ஒருவரும் எதிர்கட்சியில் இல்லையென்று  அவர் போட்ட கணக்கும் விரைவாக தேர்தலை நடத்தவேண்டும் என்ற அவரது எண்ணத்திற்கு உற்சாகமூட்ட உடனடியாக செயலில் இறங்கினார் அவர்.

ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடும் பிரகடனத்தில் நவம்பர் 20ஆம் திகதியன்று ஜனாதிபதி கையெழுத்திட்டார்.அதைத் தொடாந்து தேர்தல் ஆணையாளர் அவரமாக  தேர்தலுக்கு திகதியிட்டார். மூன்றாவது முறையாகவும் ஆளும் தரப்பிலிருந்து தன்னை ஜனாதிபதி வேட்பாளராக்கிக் கொண்ட அவர் தனது வெற்றிக்கு வேண்டியதைச் செய்யத் தொடங்கினார்.

மூன்றாவது முறையும் தானே வெற்றிபெறுவேன் என்று மனப்பால் குடித்த நேரத்தில் தனது தரப்பிலிருந்து தனக்கு எதிராக களத்தில் குதிப்பதற்கு ஒருவர் முன்வருவார் என்பதை ஒருபோதும்
அவர் நினைத்திருக்கவில்லை.அப்போது அவர் நினைக்காதது ஆனால் மக்கள் நினைத்தது  நடந்தது. தன்னணியிலிருந்தவர் எதிரணியில் பொது வேட்பாளரானார்.

இதேவேளை,  மக்களின் நாடித்துடிப்புக்களில் கைவைத்து அவர்களின்   அபிலாசைகளை அறிந்து கொண்ட புலனாய்வுத்துறையினர் மஹிந்த ராஜ பக்ஷவிற்கு சந்தோமான தகவல்களை வழங்கவில்லை.

எது எவ்வாறிருந்த போதும் எதிரணியின் பொதுவேட்பாளரை எதிர்த்து களம் இறங்குவதைத் தவிர அப்போதைக்கு வேறு வழி அவருக்கு இருக்கவில்லை.

இதனால் மூன்றாவது முறையும் தானே ஜனாதிபதி என்பதை ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளும் வகையில் பிரசார யுத்தத்தை ஆரம்பித்தார். பொய்யை   மெய்யாக்க அரச ஊடகங்களையும் வளங்களையும் முழுமையாகவே பயன்படுத்தினார்.

என்ற போதும் தேர்தல் இடம்பெற்ற போது  தனக்கு சாதகமான களநிலைமை இல்லாததனால் அவர் கற்றுக் கொண்ட திருவிளையாடல்களை பயன்படுத்துவதற்கான வாய்ப்போ வசதியோ பெரும்பாலும் அவருக்கு  கிடைக்கவில்லை.

எனவே,  வாக்குச்சீட்டு எண்ணப்படும் போது கடந்த கால அனுபவத்திற்கிணங்க     ஏதாவது செய்தாக வேண்டும் என்ற நிலை மட்டுமே அவருக்கு இருந்தது. தேர்தல் முடிவுகள் வெளிவர ஆரம்பித்ததும் அது அவருக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.

எனவே,தானே மூன்றாவது முறையும்  ஜனாதிபதி என்பதை எப்படியாவது  உறுதிப்படுத்துவதற்கு   இறுதி முயற்சியில் ஈடுபட்டார் அவர். ஆனால் பொலிஸ்மா அதிபர், தேர்தல் ஆணையாளர்,  படைத்தளபதிகள் உள்ளிட்ட  பொறுப்பு வாய்ந்த அரசாங்க அதிகாரிகளின் ஒத்துழைப்பின்மையால் நள்ளிரவு தாண்டி எடுத்த   அவரது இறுதிக் கட்ட முயற்சி முளையிலேயே கருகியது. என தெரிவிக்கப்படுகிறது

அதனால் மேலும் இங்கிருந்து வேலையில்லை என்பதை உணர்ந்த அவர்   தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவருவதற்கு முன்பே மாளிகையை விட்டு நல்ல தலைவராக’ வெளியேறினார்.

இருந்தபோதும் ஜனாதிபதி மாளிகையைச் சுற்றி பொலிஸார் குவிக்கப்பட்டமையும் நள்ளிரவு தாண்டியபோது  மாளிகைக்குள்   இடம்பெற்ற ‘நல்ல’ சந்திப்புக்களும் தேர்தல் முடிவிற்கு முந்திய அவரது  முடிவுகளும் எல்லோருக்கும் அதிர்ச்சி வைத்தியம் செய்ததோடு  எதிர்பார்த்ததைவிட     அவர்  ‘எவ்வளவு நல்லவர்’ என்பதை நாட்டு மக்களுக்கு அப்பட்டமாக  காட்டிக் கொடுத்தும் விட்டது.

முஸ்லிம்களின் வெற்றிக் கொண்டாட்டமும்  எதிர்காலமும்:

முஸ்லிம் மக்கள்  என்றுமில்லாதவாறு இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் நேரகாலத்தோடு சென்று வாக்களித்த பின்பு  தேர்தல் முடிவுகளை ஆர்வத்தோடு எதிர்பார்த்திருந்தனர்.

அப்போது தாம் எதிர்பார்த்த முடிவுகள் நள்ளிரவு தாண்டி வெளிவந்ததிலிருந்து இக்கட்டுரை எழுதப்படும்வரை    முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகள் அனைத்தும்  ஒரு பெருநாளை விடவும் களைகட்டியிருந்தது. தமது  விருப்புக்குரியவரை வெற்றிபெறச் செய்தோம் என்பதைக் காட்டிலும் தாம் விரும்பாதவரை தோல்வியுறச் செய்தோம் என்னும் மனவெழுச்சியே  முஸ்லிம்கள் மத்தியில் வரலாறு காணாத கொண்டாட்டத்திற்கு உசுப்பேற்றி விட்டது.

வீதிகள் தோறும் பட்டாசு வெடிகளும் ஊர்வலங்களும் ஆரவாரங்களும் பாற்சோறுப் பந்தல்களும்  முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகள் தோறும் இடம்பெற்றது.

சில இடங்களில் இடம்பெற்ற வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வுகள் தோல்வியுற்ற தரப்பினரை சண்டைக்கு வலிந்து  இழுப்பதாகவும் இருந்தது. கொண்டாட்டம் என்ற பெயரில் இடம்பெற்ற  இக்களியாட்டங்கள்  பிழையான முன்மாதிரியை வெளிக்காட்டுவதாக அமைந்திருந்தது கவனதிற் கொள்ளவேண்டிய விடயமாகும்.

முஸ்லிம்கள் அனைத்து விடயங்களிலும் முன்மாதிரியாக நடந்துகொள்ள வேண்டியவர்களாகும். இந்தத் தேர்தல் வெற்றியைப் பொறுத்தமட்டில் அதன் சொந்தக்காரன் ‘தான் விரும்பியோருக்கு ஆட்சியைக் கொடுப்பவனும் பறிப்பவனுமாகிய’ அல்லாஹ் ஒருவனேயாகும். எனவே, அந்த அல்லாஹ்வை மறந்து நாம் எந்தவொரு செயலிலும் ஈடுபடமுடியாது.

ஆனால்  நடைமுறையில் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்களில் அனேகர்  பள்ளிவாசல்களில்    தொழுகை இடம்பெற்ற போதுகூட தொழுவதற்குப் பதிலாக வீதிகளில் வெடிகளை வெடிக்கச் செய்து  ஆரவாரமிட்டு கேளிக்கைகளில் ஈடுபட்டு   தொழுகையில் ஈடுபடுவோருக்கும்  பயணிகளுக்கும் இடையூறு செய்ததையும் அனேக இடங்களில் அவதானிக்க முடிந்தது. இத்தகைய சன்மார்க்கத்திற்கு விரோதமான   செயற்பாடுகளானது  மீண்டும் நாம் துன்பத்தை சுமப்பதற்கான வாய்ப்பாகவே அமையும்.

தேர்தலில் வெற்றிபெற்றதும் தோல்வியைத் தழுவியதும் பெரும்பான்மை இனத்தவர்தான் என்பதையும் தோல்வியைத் தழுவியவருக்கும் வெற்றிபெற்றவருக்கும் பெரும்பான்மை இனத்தவர்கள் ஏறத்தாழ ஓரேயளவான வாக்குகளை அளித்துள்ளார்கள் என்பதையும் மறந்து  விட்டவர் போலவே
கொண்டாட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்கள் செயற்பட்டனர்.

இம்முறை பல்வேறு கட்சிக@டாக பிரிந்து கிடந்த முஸ்லிம்கள் ஒன்றிணைந்து ஒரு வேட்பாளரை ஆதரித்ததானது பௌத்த தீவிரவாதிகளின் நெஞ்சில் நெருப்பைக் கொட்டியுள்ளது. முஸ்லிம் காங்கிரஸின் வருகைக்குப் பின்பு பெரும்பாலும் ஓரணியில் இருந்த முஸ்லிம்களை வௌ;வேறு கட்சியாகப்  பிரிப்பதில் சூட்சி செய்தவர் மஹிந்தவேயாகும். அவ்வாறு வௌ;வேறு கட்சிகளில் பிரிந்திருந்த முஸ்லிம்களை அந்த மஹிந்தவை வைத்தே அல்லாஹ் இப்போது  மீண்டும் ஒன்றிணைத்துள்ளான்.

தேர்தல் காலத்திலும் அதற்கு முன்பும் பொதுபலசேனா உள்ளிட்ட சில பௌத்த தீவரவாத அமைப்புக்கள் இனம் மத உணர்வுகளை தூண்டும் செயற்பாடுகளில் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றன. இப்போது முஸ்லிம்கள் ஒற்றுமைபட்டிருப்பதானது அவர்களுக்கெதிரான சவாலாகக் கொண்டு புதிய வியூகம் வகுத்து செயற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருக்கின்றன.

பொதுபலசேனாவைக் கொண்டு நடாத்திய கோதாபாய, மஹிந்த உள்ளிட்ட  எதிர்த்தரப்பினர் தமது தோல்விக்கு வழிவகுத்த குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக ஒருபோதும் முன்வரமாட்டார்கள்  என்று நம்பிக்கைவைத்தலாகாது.

இப்பொழுது சொந்த ஊரில் இருக்கும் மஹிந்த அவரை சந்திக்கும் அனைவரிடமும்  நான்; தோல்வியுற்றதாக கருதவில்லை… தமிழ் முஸ்லிம் மலையக மக்களே தனக்கெதிராக வாக்களித்துள்ளதாகதனது வேதனையை  வெளிப்படுத்தி வருகின்றார். அத்தோடு தற்காலிகத் தோல்வியிலிருந்து விரைவில்  மீண்டும் வருவேண் என்றும் தனது எதிர்பார்பை எத்தி வைக்கின்றார்.

இதேவேளை அவர் பின்னாலிருக்கும் பௌத்த தீவிரவாதிகள் “இது மஹிந்தவின் தோல்வி அல்ல, பௌத்தர்களின் தோல்வி” என்ற பரப்புரையுடன் மஹிந்தவையும் கோட்டாபாயவையும் பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவதன் மூலம் தமது (நீண்ட கால) இலக்கை அடைந்து கொள்வதற்கு  திட்டமிட்டு வருகின்றனர்.

எனவே, நாம் எமது ஒவ்வொரு செயலையும் மிகவும் கவத்துடன் செய்தல் அவசியமாகும். இத்தேர்தல் வெற்றிக்கூடாக முஸ்லிம்களுக்கு  உடனடியாக நன்மை கிடைத்த போதும் அதன் பின்னால் ஆபத்தொன்றும் காத்திருக்கின்றது என்பது அவதானத்திற்குரிய விடயமாகும்.

Advertisements

Written by lankamuslim

ஜனவரி 13, 2015 இல் 8:18 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. Jazakallah… murasil

    kather

    ஜனவரி 13, 2015 at 8:46 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: