நாட்டில் முஸ்லிம்களுக்கு நிம்மதி இல்லை – மங்கள
கடும்போக்காளர்கள் கடந்த இரு வருடங்களாக நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதால் முஸ்லிம்களுக்கு நிம்மதி இல்லாது செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ சபை உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர தெரிவித்தார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துமாறும் பொதுநலவாய நாடுகளின் பிரகடனத்திற்கு மதிப்பளிக்குமாறும் வலியுறுத்தி ஐக்கியத்திற்கான மக்கள் அமைப்பு (சமகி)நேற்று புதன் கிழமை ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் மனித உரிமை போராட்டமொன்றை நடத்தியது. இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக பல கோஷங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்தோடு அவர்களின் சமய உரிமை பறிக்கப்பட்டுள்ளது. அத்தோடு முஸ்லிம் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ளன. கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நாட்டில் பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டை நடத்தும் அரசு சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமையை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.- விடிவெள்ளி
நிம்மதியி்ல்லாத சூழலை, வேண்டுமாயின் முகங் கொடுக்கலாம். ஆனால், அரச உயர்மட்டங்களின் மறைமுக ஆதரவுகளுடன் முன்னெடுக்கப்படுவதாக நம்பப்படும், மதவிரோதச் செயற்பாடுகளைத்தான் நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை.
இது பயங்கரவாதத்தைத் தாண்டிய பாதக நிலை. இவ்வகை அச்சுறுத்தலுடன் வாழ்வதென்பதுவே முஸ்லிம்களைத் தமது இருப்பு சம்பந்தமாக மீளாய்வு செயதுகொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் தள்ளியுள்ளது.
முஸ்லிம்கள் பொறுமை காப்பது என்பதை அவர்களின் இயலாமையாக அரசு கருதுமானால், அது அரசு செய்யும் மிகப் பெரிய முடடாள்தனம் மட்டுமல்ல, சும்மா கிடக்கும் சங்கை ஊதிக்கெடுக்கும் நிலையை ஒத்ததாகிவிடும். அத்தோடு தேசிய நலனைப் புறந்தள்ளியதுமாகும்.
முஸ்லிம்களது பொறுமை, பெரும்பான்மை புத்த சிங்கள மக்கள் இவற்றுக்கு உடந்தையல்ல, அதனால் தமது எதிர்ப்புகள் எந்த வகையிலும் பௌத்த சிங்கள மக்களை மனம் வருந்தச் செய்திடக் கூடாது என்ற காரணத்திற்காகவும், தேசிய நலனைக் கொண்டதுமான உயர்வான நோக்கத்தை அடியொற்றியதாகவும், தமது மார்க்க நெறிமுறைகளைத் தழுவியதாகவுமே இருக்கின்றது என்ற உண்மையை அரசும் புரிந்து கொள்ள வேண்டும்.
nizamhm1944
நவம்பர் 15, 2013 at 10:34 முப