Lankamuslim.org

இலங்கையில் முஸ்லிம்களின் தனியார் சட்டங்களுக்கு ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது

with 2 comments

Puttalam-Hakeem1இலங்கையில் முஸ்லிம்களின் தனியார் சட்டங்களுக்கு ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது. ஆரம்பத்தில் முஸ்லிம்களுக்கான தனியார் சட்டம் முஹம்மதியன் லோ (முஹம்மதியர் சட்டம்) என்றழைக்கப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகள் இந் நாட்டில் சட்டசபையில் ஓர் கட்டளைச் சட்டமாக கொண்டுவரப்பட்டது. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் ஒரு காலனித்துவ நாடாக இருந்த இலங்கையில் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அவ்வாறான சட்டங்கள் இங்கு அமுல்படுத்தப்பட்டது.

ஏறத்தாழ 130க்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் தனியார் சட்டம் அவற்றை அமுல்படுத்துவதற்கான ஒரு நீதிமன்ற வலையமைப்பு என்பது நாடு சுதந்திரம் பெற்ற பின்னணியில் பொது நிருவாக உள்நாட்டமைச்சின் ஓர் அங்கமாக இருந்த காரணத்தினால் காதிமாருடைய அந்தஸ்த்து சம்பந்தமான பிரச்சினை, அவர்களுக்கான வசதிவாய்ப்புகள் சம்பந்தமான பிரச்சினைகள் இருந்து வந்தன.

இவற்றையெல்லாம் 2003 ஆம் ஆண்டளவில் முன்னாள் நீதியரசர் சரத் என் டி சில்வாவின் கவனத்திற்கு கொண்டு சென்றதை தொடர்ந்து, அவருடைய முயற்சியால் காதிமார் நியமனங்கள் நேரடியாக நீதிச்சேவை ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படுவதாக முடிவு செய்யப்பட்டது. இதற்காக காதிமார் அமைப்பின் தலைவராக நீண்டகாலம் பணியாற்றிய இரத்தினபுரியைச் சேர;ந்த யெஹியா ஹாஜியாரின் முயற்சியை இந்தச் சந்தர்ப்பத்தில் நான் நன்றியறிதலோடு நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளேன்.

காதி நீதிபதிகளின் பௌதீக வள ஏற்பாடுகளையும் ஏனைய வசதி வாய்ப்புகளையும் செய்து கொடுக்கும் உறுப்பு நீதியமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது. அதற்கு அவருக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம்.

இது, ஓய்வு பெற்ற பிறகு நீதியரசர்கள் விமர்சிக்கப்படும் காலம். இந்த நாட்டில் அரசியல்வாதிகள் மட்டும் தான் விமர்சனத்திற்கு உள்ளாகுபவர்கள் என்று நினைத்தால் அது தவறானது. இப்பொழுது ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவர் முக்கியமான தேர்தல் ஒன்றில் போட்டியிடுகிறார். ஓய்வுபெற்ற பிறகு அவர;கள் எதனையும் செய்யலாம். அதற்கு தடையில்லை.

இருந்தாலும், இந்த நாட்டின் நீதி நிருவாகம் குறித்த பிரச்சினைகளில் முஸ்லிம் விவாகம், விவாகரத்து சட்டத்தை அமுல்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன. அவற்றைத் தீர்ப்பதற்கு ஓர் ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அக்குழுவுக்கு தலைமை வகிக்கும் நீதியரசர் சலீம் மர்சூப் இந்த காதி நீதிமன்ற திறப்பு விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்தது.

அவருடைய தலைமையிலான அந்த ஆணைக்குழுவின் ஊடாக முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை ஆராய்ந்து, அச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வரப்பட வேண்டும் என்பது பல தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட விடயமாகும்.

அவ்வப்போது சில மாற்றங்கள் செய்யப்பட்டாலும் இச் சட்டத்தில் முழுமையான மாற்றங்கள் செய்யப்பட வேண்டியிருந்தது. அதில் ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் செயலாளர் உட்பட, ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, முன்னாள் சட்டமா அதிபர் ஷிப்லி அஸீஸ் மற்றும் சில பெண்கள் தரப்பினர் உட்பட உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

அடிக்கடி பெண்கள் மத்தியில் இருந்து காதி நீதிமன்ற அலுவல்கள் சம்பந்தமான விடயங்களில் பெண்கள் எதிர்நோக்குகின்ற உள ரீதியான பாதிப்புகள் பற்றி முறைப்பாடுகள் எனது அமைச்சுக்கும், நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கும் வந்த வண்ணமுள்ளன. அந்த நிலையில் இவ்வாறன பிரச்சினைகளை கவனத்தில் எடுத்து சீர்தூக்கிப் பார்த்து, தேவையான சட்டதிருத்தங்களை செய்வதற்கான இந்த ஆணைக்குழு அதன் அறிக்கையை சென்ற வருடம் இறுதி கட்டத்தில் டிசம்பர் மாதத்திலாவது என்னிடத்தில் கையளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இரண்டு தடவைகள் நான் உயர் நீதிமன்ற நீதியரசர் மர்சூப்புடன் தொடர்பு கொண்டு அதனை விரைவில் நிறைவு செய்து தருமாறு வேண்டுகோள் விடுத்தேன்.

ஏனென்றால் அமைச்சர் ஒருவரின் பதவி எவ்வளவு காலம் நீடிக்கும் என்று எதிர்வு கூற முடியாது. ஆகையால், நான் நீதித்துறைக்குப் பொறுப்பான அமைச்சராக இருக்கும் காலத்தில் இந்த சட்டத்திருத்தத்தை கொண்டு வந்துவிட வேண்டும் என்ற அங்கலாய்ப்பில் நான் இருக்கிறேன்.

ஏனென்றால் அதனை சட்ட வரைஞர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். பின்னர; அதனை அமைச்சரவையில் சமர்ப்பிக்க வேண்டும். அதை சட்டமா அதிபர் திணைக்களம் பரிசீலித்த பின்னர் தான் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். எனவே எவ்வளவு தான் அவசரப்படுத்தினாலும் குறைந்தது அதற்கு ஆறு மாதங்களாவது தேவை.

ஒரு சட்டத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றுவது என்பது மிகவும் சிக்கலான விஷயம். ஏனென்றால் இடை நடுவில் உயர் நீதிமன்றத்திற்குச் சென்று அந்தச் சட்டத்தை சவாலுக்கு உட்படுத்தலாம்.

இன்று தலைதூக்கியுள்ள சில தீவிரவாத இனவாத சக்திகளினால் இவ்வாறான திருத்தங்களும் சிலவேளை தேவையில்லாத சர;ச்சைகளை தோற்றுவித்துவிடக் கூடுமென நான் உணர்கின்றேன். எனவே சில விடயங்களை தவிர்த்தாவது சரி அதனை நிறைவு செய்தாக வேண்டும்.

குறிப்பாக திருணம் புரிய வேண்டிய வயதெல்லை சம்பந்தமாக சாதாரண (பொது) திருமண கட்டளைச் சட்டம் மற்றும் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் என்பவற்றுக்கிடையே முரண்பாடுகள் உள்ளன. பெண்கள் பூப்பெய்திய அதாவது பருவ வயதை அடைந்த உடனேயே அவர்கள் திருணம் செய்து கொள்ளலாம் என்ற ஒர் அங்கீகாரம் இஸ்லாத்தில் இருந்தாலும், 18 வயதிற்கு குறைவானவர்கள் திருமணம் செய்து கொள்வது உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் சரியானதல்ல என்று உளவியல் மற்றும் மருத்து நிபுணர;கள் முன்வைக்கும் கருத்துகளும், பெண்ணியல்வாதிகள் கூறும் கருத்துகளும் இந்த விடயத்தை பூதாகரமாக்கி விடலாம் என்ற ஓர் எண்ணப்பாடு உள்ளது.

குறைந்தது 16 வயது எல்லையைக் கூட குறிப்பிடலாம் என்றதோர் அபிப்பிராயம் நிலவும் போதிலும் கூட, இது சம்பந்தமான திருத்தங்களை இந்தச் சந்தர்ப்பத்தில் நாங்கள் கொண்டு வருகின்ற பொழுது, அது ஷரிஅத் சட்டம் சம்பந்தமான தேவையில்லாத விமர்சனங்களைச் செய்யும் இக்கால கட்டத்தில் முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து வேண்டும் என்றே குழப்பங்களை ஏற்படுத்துகின்ற சில தீவிரவாத கும்பல்களுக்கு மிகவும் வாய்ப்பாக அமைந்து விடுமோ என்ற ஓர் அச்சம் இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர் சிலரிடம் இருப்பதாகவும் என்னால் உணர முடிகிறது.

ஏனென்றால் இப்பொழுதெல்லாம் எல்லாவற்றையுமே வித்தியாசமாக பார்க்கிறார்கள். பொதுபல சேனா அமைப்பின் தேரர் கலபொட அத்தே ஞானசார தேரர் என்னையும், இந்த நூற்றாண்டின் சமகால தலைசிறந்த இஸ்லாமிய சிந்தனையாளரும், பேரறிஞருமான அஷ்ஷேய்க் யூசுப் அல் கர்ளாவி (ரஹ்) அவர்களையும் சம்பந்தப்படுத்தி புரளியொன்றை கிளப்பிவிட்டிருக்கிறார். அதில் முஸ்லிம் ஊடகவியலாளர் அமைப்பின் தலைவர் நண்பர் என்.எம். அமீனையும் அவர் தொடர்புபடுத்தியிருக்கிறார். இது இவ்வாறான அபத்தமான காலமாகும்.

அவரும் நானும் சேர்ந்து அஷ்ஷேய்க் யூசுப் அல் கர்ளாவி (ரஹ்) அவர்களை சந்தித்ததாக அந்தத் தேரர் கூறுகிறார். பேரறிஞர் யூசுப் அல் கர்ளாவி இல்முல் அகல்லியாத் எனப்படும் பிக்ஹ் துறையில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் நாடுகளில், அடிப்படை உசூல்களுக்கு மாற்றமில்லாமல், முரண்பாடுகள் ஏற்படாமல் உச்சகட்ட விட்டுக்கொடுப்போடு புதிய இஜ்தியாத் சம்பந்தமான அவரது கருத்துக்கள் இன்று பலராலும் மெச்சப்படுகின்றது.

முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளில் ஏனைய சமூகத்தவருடன் சுமூகமான சௌஜன்ய சகவாழ்வு தொடர்பான அவரது சிந்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

அத்தகைய மேதையொருவர் மீது பயங்கரவாதத்திற்கு துணைபோகின்றார் என்ற அபத்தமான குற்றச்சாட்டை சுமத்தும் ஒரு இனவாத கும்பல் தலைதூக்கியுள்ள நிலையில் மிகவும் ஆழமாக சிந்தித்து தான் இவ்வாறான விடயங்களை கையாள வேண்டியுள்ளது.

ஆனால், நிச்சயமாக அதுபற்றி பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. இந்த நாட்டில் வாழும் அதிகப் பெரும்பான்மையானோர் இவ்வாறான இனவாதத்திற்கு அப்பாற்பட்டவர்கள். வேண்டுமென்றே இவ்வாறான விஷமக் கருத்துகளை நாட்டு மக்கள் மத்தியில் விதைத்து, ஆவேஷத்தையும் ஆத்திரத்தையும் கிளர்ந்தெழச் செய்துள்ள மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் இவ்வாறான விடயங்களை கையாள்கின்ற பொழுது மிகவும் சாணக்கியமாகவும், மதிநுட்பத்துடனும் நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் மதாஹ் பற்றி இல்லாத நிலையில் காதிமார் சிலர் சுயமாகவே அதனை செய்கிறார்கள். சில வேளைகளில் அது சவாலுக்குட்படுத்தப்பட்டு, மேன்முறையீடு செய்யப்படுகின்ற பொழுது, அதனை ஒரு நிரந்தரமான ஒரு ஏற்பாடாக இந்த விவாக விவாகரத்துச் சட்டத்தில் உள்வாங்குவது சம்பந்தமாக நாங்கள் சீர்தூக்கிப் பார்க்க இருக்கிறோம்.

குறிப்பாக பெண்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் அதுவும் பராமரிப்பு செலவை பெற்றுக்கொள்வதில் அவர்கள் படுகின்ற அவஸ்தையை உற்று நோக்கினால், மிகவும் வேதனையாக இருக்கிறது. அவர்கள் தமது கணவர்மார் வசிக்கின்ற பிரதேசத்தில் உள்ள காதி நீதிமன்றத்திற்குச் செல்ல நேரும் பொழுது ஏற்படும் அச்சுறுத்தல் பற்றியும் அடிக்கடி கேள்விப்படுகிறோம்.

காதி நீதிபதிகளின் அந்தஸ்த்து சம்பந்தமாகவும் சில ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஜூரிமார் தொடர்பான விடயங்கள், அத்துடன் பெண்களை ஜூரிமாராக அல்லது நீதிபதிகளாக நியமிக்கலாமா போன்ற விடயங்கள் சர்ச்சையாக உருவாகியுள்ளன. இதனை ஜம்இய்யதுல் உலமா மிகவும் வன்மையாக எதிர்த்துக்கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. உலமாக்களுக்குரிய இவ்வாறான விடயங்களில் நான் தலையிட விரும்பவில்லை. அவர்களுக்குரிய கண்ணியத்தை அளிக்கின்றேன்.

பொறுப்பு வாய்ந்த அமைச்சரொருவர் என்ற அடிப்படையில் எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்த்து, சாதக பாதகங்களை மற்றும் பிக்ஹ் சட்டத்தின் அடிப்படையில் சிறப்பான திருத்தங்கள் மிகவும் விரைவில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் அதனை நான் அமைச்சராக பதவி வகிக்கும் இந்தக் காலத்தில் செய்யக் கிடைத்தால் அதனை பெரும் பேறாக கருதுவேன்.

பொதுவாக எங்களது குற்றவியல் சட்டத்தில் இருக்கும் ஏற்பாடுகள் குறிப்பாக, பலதார மணம் சம்பந்தமான விவகாரம் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும். இஸ்லாமியர் அல்லாதவர் முஸ்லிம்களை திருமணம் செய்வது தொடர்பான சர்ச்சை பிரிவி கவுன்சிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அபயசுந்தர எதிர் அபயசுந்தர என்ற சட்டத்தீர்ப்பு சர்ச்சைக்குட்பட்டது. ஒருவரது சமய விசுவாசம் என்ற விடயமென்பது சுதந்திரமானது. அது இந்த அபயசுந்தர எதிர் அபயசுந்தர வழக்குத் தீர்ப்பு வந்தபொழுது ஒரு கவனயீர்ப்பை பெற்றது. இவ்வாறான விடயங்கள் தொடர்பில் நீதியரசர் சலீம் மர்சூப் நீண்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அபயசுந்தர எதிர் அபயசுந்தர விவகாரம் ஒரு குழப்ப நிலையை – மயக்க நிலையை உருவாக்கியிருக்கிறது.

அது சம்பந்தமாகவும், பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றுவதன் மூலம் அந்த மயக்க நிலையை நீக்க வேண்டுமென்பது நீதியரசர் சலீம் மர்சூப் உடைய நிலைப்பாடாகும்.

இன்றுள்ள சூழலில் அதை முன்னெடுக்க நாங்கள் எத்தனித்தால் அது சிலவேளை பூகம்பமாக வெடிக்க ஆரம்பித்து விடலாம். சட்டத்தரணிகள் இதுபற்றி ஆழமாக தெரிந்தவர்கள், என்னைப்பொறுத்தவரை காதி நீதவான்களைப் போல முஸ்லிம்களின் தனியார் சட்டத்தில் ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையை வரையறுத்துக்கொள்வதற்காக ஏற்படுத்தித் தரப்பட்டுள்ள இந்த வசதி வாய்ப்புகள், சிறுபான்மை சமூகமாக முஸ்லிம்கள் வாழும் நாட்டில் நாங்கள் பாராட்ட வேண்டிய விடயமாகும்.

இது சம்பந்தமாக எங்கள் மத்தியில் கருத்தொருமைப்பாட்டை ஏற்படுத்தி, சிக்கல் இன்றி வெளியில் இருந்து வரும் விமர்சனங்களுக்கு உரிய முறையில் சரியாக முகம் கொடுத்து செயல்படும் விடயத்தில் காதிமார;களின் ஈடுபாடு இன்றியமையாதது. இதனூடாகத்தான் முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தின் மகிமையை நாங்கள் பறைசாற்றலாம்.

அல்லாஹ்வுடைய பார்வையில் விவாகரத்து என்பது வெறுக்கத்தக்க ஒரு விடயமாகும். காதி நீதிமார்கள் முன்னிலையில் தோன்றுபவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஏராளமுள்ளன. இவற்றை கையாள்கின்ற விடயத்திலும், எமது சமூகத்தின் இருப்பு சம்பந்தமான விடயத்திலும் காதி நீதவான்களுக்கு ஒரு மகத்தான பொறுப்பு உண்டு.

அவர்களுக்கான பயிற்சிப் பாசறைகளை நாம் அடிக்கடி நடாத்திக்கொண்டிருக்கிறோம். மாறி மாறி வரும் புதிய சட்டமாற்றங்கள், உலக நாடுகளில், இஸ்லாமிய நாடுகளில் வழங்கப்படும் இவை தொடர்பான தீர்ப்புகள் மற்றும் இந்தியா, தென்னாபிரிக்கா போன்ற பல இனங்கள் வசிக்கும் நாடுகளில் இவ்வாறான விடயங்கள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்ற விடயங்கள் சம்பந்தமாக எமது காதிநீதவான்களை அறிவுறுத்தும் பணி முன்னெடுக்கப்பட வேண்டும்.

அண்மையில் நான் கட்டார், குவைத், ஐக்கிய அரபு இராச்சியம் போன்ற நாடுகளுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயங்களின் போது, அந்நாடுகளின் நீதித்துறை அமைச்சர்களை சந்தித்து எமது நாட்டு காதி நீதவான்களுக்கு அந்நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் மத்ஹப்கள் வேறு வேறாக இருந்தாலும் அவ்வாறான விடயங்கள் அடிப்படை உசூல்களுக்கு உடன்பாடான விதத்தில் காதிமார்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளேன்.

இவ்வாறான நிகழ்வுகளுக்கு பிரதம நீதியரசரையும் அழைத்து வருவதையே நான் விரும்புகிறேன். அதனால் காதி நீதிமன்றங்களுக்கான வாய்ப்புகள் மேலும் அதிகரிக்கும் என்பது எனது அபிப்பிராமாகும். இங்கு கூட நீதியரசர் சலீம் மர்சூபை அழைத்து வருவதில் நான் ஆர்வமாக இருந்தேன். புத்தளத்தோடு தொடர்பு உள்ளவர் என்ற காரணத்தினால் அவரும் அதில் அக்கறையாக இருந்தார். அது சாத்தியமாகாத நிலையில் இன்று இந்த காதி நீதிமன்றத்தை திறந்து வைக்கக் கூடிய நிலைமை ஏற்பட்டது.

பிரதம நீதியரசரின் வருகையை நான் ஏன் விரும்புகிறேன் என்றால் அவர் தான் நீதிச்சேவை ஆணைக்குழுவின் தலைவர். அந்த ஆணைக்குழுதான் நேர்முகப் பரீட்சைகளை நடத்தி, காதி நீதவான்களை நியமிக்கின்றது. இவ்வாறான விடயங்களுக்கு அவரது ஈடுபாடு அவசியம் என்று நான் கருதுவதால், சில காதி நீதிமன்றங்களின் திறப்பு விழாக்களை நான் காலதாமதப்படுத்தியிருந்தேன்.

புதிய நீதிமன்ற நியாயாதிக்க எல்லைகளை வரையறை செய்வதற்காகவும் ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. நீதவான் நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள் போன்றே காதி நீதிமன்றங்களின் எல்லைகளையும் வரையறுப்பதும், அதனூடாக மேலும் காதி நீதிமன்றங்களை நிறுவுவதும் அவசியமாகும். எடுத்துக்காட்டாக 150 முஸ்லிம் கிராமங்களுக்கு மேலுள்ள அனுராதபுர மாவட்டத்தில் ஒரேயொரு காதி நீதிமன்றம் தான் உள்ளது. இந்த நிலைமை ஏனைய மாவட்டங்களிலும் காணப்படுகிறது.

காதி நீதிமன்றங்களை நிர்மாணிப்பதற்கான காணியைப் பெற்றுக்கொள்வதில் சிரமம் உள்ளது. இதற்காக காணிகளை பணம் செலுத்தி வாங்குவதில்லை. அரச காணிகள் தான் அதற்காக சுவீகரிக்கப்படுகின்றது. அவ்வாறு இல்லாத பட்சத்தில் இந்த நற்பணிக்காக காணிகளை மனமுவந்து வழங்குவதற்கு யாராவது முன்வர வேண்டும் என்றார்.

Puttalam-Hakeem1

Puttalam-Hakeem3 Puttalam-Hakeem2 Puttalam-Hakeem4

Advertisements

Written by lankamuslim

செப்ரெம்பர் 20, 2013 இல் 3:22 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

2 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. ippe enne peshiyum welai ilai congress ithodu mouthu

    hilmee

    செப்ரெம்பர் 21, 2013 at 12:16 பிப

  2. மிகவும் தெளிவான உரை

    A.R.Abdul Hameed

    திசெம்பர் 28, 2016 at 9:24 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: