Lankamuslim.org

One World One Ummah

மாணவரின் அப்பியாசக் கொப்பியை நிரப்புவதே ஆசிரியரின் கடமையென நினைப்பது தவறு

leave a comment »

 எம்.எல். முஹம்மத் லாபிர்
5நவீன உலகியல் தேவைகளை நிறைவேற்றுவதில் கல்வி பிரதான கருவளமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. உலகமயமாக்கலின் விரைவான தாக்கம், பல்லினச் சமூகச் சூழல், திறந்த பொருளாதாரக் கொள்கை என்பவற்றுக்கிடையே ஒவ்வொரு சமூகமும் தமது அபிவிருத்தியை கல்வியினூடாக அடைந்துகொள்வ தற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

ஒரு குடும்பத்தில் ஒரு பிள்ளை கல்வியில் முன்னேறினாலே போதும், அக்குடும்பமே மீட்சி பெற்றுவிடும் என்பது வறிய மற்றும் நடுத்தர குடும்பங்களின் எதிர்பார்ப்பாகும். ஆனால் கூட்டுக் குடும்பங்கள் தனிக் குடும்பங்களாகவும் கிராமங்கள் நகரங்களாகவும் விரைவாக மாற்றம் கண்டுவரும் நிலையில் ஒவ்வொரு தனிமனிதனும் கற்றால்தான் தனது வாழ்க்கை முன்னேறும் என்ற சுயநலத்தன்மையை நவீன உலகியல் போக்குகள் நிர்ணயித்து வருகின்றன. எனவே பாடசாலை யில் சேர்க்கப்பட்ட ஒவ்வொரு பிள்ளையும் குறித்த தேர்ச்சிகள் அனைத்தையும் பெற்றுக் கொள்வ தனை ஆசிரியர் ஒவ்வொருவரும் தனித்தும் கூட்டாகவும் உறுதி செய்தல் வேண்டும்.

5கற்றல், கற்பித்தல் செய்முறை யைப் பொறுத்தவரையில் பாடசாலை, அதிபர், ஆசிரியர், மாணவர் என பல தரப்பும் இயங்கு நிலையிலேயே உள்ளனர். இதற்கும் மேலாக பெற்றோரது பங்களிப்பும் அதிகரித்த வண்ணமேயுள்ளது. இருப்பினும் அடைவு மட்டங்க ளில் சறுக்கி விழும் நிலைமையே மீண்டும் மீண்டும் எதிர்கொள்ளப் பட்டு வருகின்றது. அடைவுமட் டத்திலான ஏற்றத்தாழ்வுகளும் முரண்பாடுகளும் ஓர் சமூகப் பிரச்சினையாகவே தற்காலத்தில் நோக்கப்படல் வேண்டும். பிள்ளைக்குப் பிள்ளை, பாடசாலைக்குப் பாடசாலை, பிரதேசத்திற்குப் பிரதேசம் இவ் வேறுபாடுகளின் தடயங்களும் வேறுபட்டு பரவிக் கிடக்கின்றன.

பள்ளிக்கூடங்களின் அடர்த்தி 6.5 ச. கி. மீற்றருக்கு ஒரு பாடசாலை எனவும் மாணவர் ஆசிரியர் விகிதம் 18 : 1 எனவும் அமைந்த போதும் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகைமை பெறும் அளவிற்கு சித்திபெறுபவர்கள் 61 வீதமாகவே காணப்படுவது எமது கல்வியின் தரத்தை எடைபோடு வதற்கு தக்க சான்றாகும்.

இந்நிலைமைகளை சீர்தூக்கிப் பார்த்து மாணவர் அடைவு மட்டங்களை மேம்படுத்துவதற்கு வகுப்பறை கணிப்பீடுகள் அவசியமாகின்றன. ஏனெனில் கணிப்பீடுகள் அற்ற வகுப்பறைகள் கூரை போடப்படாத கட்டடமாக வும் அதிலுள்ள மாணவர்கள் முறையாக வழி நடாத்தப்படாத வர்களாகவும் அமைந்துவிடுவர்.

பெளதீக் மற்றும் சமூக சூழல், பிள்ளையின் உடல் உள பலம், வளக்கிடைப்பனவு, ஆசிரியர் வாண்மைத்துவம், பெற்றோர் பங்களிப்பு என எத்தனையோ நியாயங்களை கல்வி வீழ்ச்சிக்கான காரணங்களாக கூறலாம். இருப்பினும் இது தொடர்பில் வீண் விமர்சனங்களைச் சொல்வதைத் தவிர்த்து எமது பாடசாலை வளங்களை விளைதிறனாக முகாமை செய்து, கற்றலின் அடைவுமட்டத்தை மேம்படுத்துவதற்கான வழிவகைகளை பற்றிச் சிந்திப்பதே கல்விச் சமூகத்தின் உடனடித் தேவையாகும். அந்தவகையில் கணிப்பீடுகளின் அவசியம் பற்றி இங்கு நோக்கப்படுகின்றது.

கல்விப் புல ஆய்வுகளின்படி வகுப்பறைக் கணிப்பீடுகள் பிரதான ஊக்கியாகவும் அதன் தாக்கம் நேர் செயற்றிறன் கொண்டதாகவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. கற்றல் கற்பித்தலின் நோக்கம் அடையப்படுகின்றதா என்பதை மதிப்பீடு செய்வதே கணிப்பீட்டின் பிரதான நோக்கமாகும். இருப்பினும் அதற்கு அப்பாலும் வகுப்பறைக் கணிப்பீடுகளை வலுவூட்டுவதன் மூலம் மாணவர்களில் கணிசமான முன்னேற்றத்தையும் ஏற்படுத்தலாம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

வகுப்பறைக் கணிப்பீடு தெளிவான நோக்கங்களையுடையதாகவும் அவற்றை அடைவதற்காக கவனமாக வடிவமைக்கப்பட்டதாகவும் இருப்பது அவசியமாகும். மேலும் கணிப்பீட்டின் மூலம் பின்வரும் முப்பெரும் பங்களிப்புக்களும் இடம்பெறுதலையும் உறுதி செய்தல் வேண்டும்.

1. கற்றலாக கணிப்பீடு அமைதல் – Assesment as Learning

2. கற்றலுக்காக கணிப்பீடு அமைதல் – Assesment for Learning

3. கற்றலின் கணிப்பீடாக அமைதல் – Assesment of Learning

முதலாவது அம்சம் மாணவரது கற்றல் தேவைகளை இனங்காண் பதனையும் இரண்டாவது அம்சம் கற்றல் விருத்தியை மேம்படுத்து வதனையும் மூன்றாவது அம்சம் கணிப்பீட்டுக்கான உத்திகளை அமைப்பதனையும் முதன்மையாகக் கொண்டிருக்கும். இதனால் கணிப்பீட்டின் முழுமையான நோக்கங்களை நிறைவு செய்யலாம்.

நவீன 5ரி கற்றல் – கற்பித்தல் முறையில் கணிப்பீடு என்பது பாடம் ஆரம்பித்ததிலிருந்து முடிவடையும் வரை வகுப்பறையில் எந்த நேரமும் நடைபெறலாம். இது ஒரு தொடர் செயற்பாடாகும். இருப்பினும் பாடமுடிவில் வழங்கப்படும் எழுத்துப் பயிற்சியானது பொதுப் பரீட்சைக்கான வழிகாட்டியாகவும் அமைகின்றமையும் கவனிக்கத்தக்கது. எனவே அத்தகைய மதிப்பீட்டு வினாக்கள் முறையாக வழங்கப்படுவதை ஒவ்வொரு பாட ஆசிரியரும் உறுதிப்படுத்திக் கொள்வது அவசியமாகும்.

எந்தவொரு வினாவும் மாணவனது உடல், உள வயதுக்கு ஏற்றவாறு பொருத்தமான தகுதியைக் கொண்டிருக்க வேண்டும். தகுதியற்ற வினாக்கள் மாணவர்களது கற்றலை ஊக்கப்படுத்துவதற்குப் பதிலாக எதிர்விளைவுகளை ஏற்படுத்திவிடும். மேலும் மாணவர்களை வகுப்பறையிலிருந்து தூரமாக்கியும் விடும். எனவே அவர்களது கற்பனைக்கும் எதிர்பார்த்தலுக்கும் விருந்தளிப்பதாகவும் வினாக்கள் அமைக்கப்படல் வேண்டும். காலப் போக்கில் படிப்படியாக முன்னேறுவதற்கு ஏற்றவாறு சாரம் கட்டுவதாகவும் அமைதல் வேண்டும்.

எனவே மாணவர்கள் என்ன அறிந்திருக்கின்றார்கள். எதனைச் செய்யக்கூடியவர்களாக உள்ளனர் என்பது தொடர்பாக தகவல்களைச் சேகரித்து வியாக்கியானம் செய்வதற்கு குறிப்பான வினாக்களைப் பயன்படுத்த வேண்டும். இது வாய்மொழியாகவும், எழுத்து மூலமாகவும் அமையலாம். எழுத்து மூலமான வினாக்கள் தொடர்பில் மாணவரது பயிற்சிக் கொப்பிகள் ஒவ்வொன்றாகத் தனித்தனியே பார்வையிடப்பட்டு திருத்தப்படல் வேண்டும். பயிற்சிக் கொப்பிகளில் பிழை (x) அடையாளம் இடுவதைத் தவிர்த்து மாணவர்களை ஊக்குவிக்கக்கூடியதாக சரியான விடைகளை நோக்கி அவர்களை நகர்த்த வேண்டும். மாணவரது குறைகளை குறிப்பாகவும் தனித்தனியேயும் ஆலோசனை வழங்கி வழிகாட்டவும் வேண்டும்.

கற்றலில் சுயவிருப்பினை ஏற்படுத்துவதாகவும் சுயவியாக்கியானம் செய்து தனது செயலாற்றுகையின் மீது பிரதிபலிப்பதாகவும் கணிப்பீடு அமைதல் வேண்டும். குழு முறைக் கற்றலின் போது சகபாடிகளின் செயலாற்றுகையின் மீதும் பிரதிபலித்து அதனை தனது நிலையுடன் ஒப்பிடவும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதாகவும் இருத்தல் வேண்டும். இதனை வகுப்பறையில் ஆசிரியர் உறுதிப்படுத்துதல் அவசியமாகும்.

அறிவைக் கடத்துபவர் என்ற நிலையிலிருந்து தனது வகிபங்குகளை விரிவாக்கல் செய்து பல்வேறு சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பவராகவும் ஆசிரியர் மாறவேண்டும். கணிப்பீடானது நெட்டுருத்தன்மையுடைய ஒரு செயல்முறையல்ல. சாதாரண சூழலில் சுயாதீனமாக அது மேற்கொள்ளப்படல் வேண்டும். காலத்துக்குப் பொருத்தமாக எமது வீடுகளையும் வாகனங்களையும் நவீனமாக மாற்றியமைப்பது போன்று கணிப்பீட்டின் உள்ளடக்கம் மற்றும் முறைகளையும் இற்றைப்படுத்திக் கொள்வது அவசியமாகும். வகுப்பறைக் கணிப்பீடுகள் சிலபோது பத்தாம் பசலித்தனமாகவும் காலங்கடந்தவையாகவும் அமைந்திருப்பது ஆச்சரியக் குறியாகவே தோன்றுகின்றது.

எத்தனை ஆசிரிய பயிற்சிகள் வழங்கப்பட்ட போதும் மாற்றங்களை உள்வாங்காது பாரம்பரியமான விரிவுரையையும் குறிப்புக்களை (னிotலீs) வழங்கி மாணவர்களது கொப்பிகளை நிரப்புவதுமான ஆசிரியர்கள் இன்னும் சமூகத்தில் மிகையாகவே உள்ளனர். மாணவர்களைக் கொண்டு பாடப்புத்தகங்களை எழுதச் செய்யும் ஓர் செய்முறையாகவே இது நோக்கப்படல் வேண்டும். இச்செய்முறை ஆசிரியர் சமூகத்திலிருந்து விரைவாக களையப்படுவது அவசியமாகும்.

குறித்த கற்றலின் மீதான கணிப்பீட்டினை மேற்கொள்ளும் போது அதற்கான அடிப்படைகளைத் தீர்மானித்துக்கொள்ள வேண்டும். இதற்காக ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டிகளைப் பின்பற்ற வேண்டும். ஏனெனில் வகுப்பறைக் கணிப்பீடானது நோக்கத்தின் அடிப்படையிலும் கலைத்திட்டம் மற்றும் கற்பித்தலுடன் இணைந்தும் திட்டமிடப்படுகின்ற விடயமாகும். கணிப்பீடு தனித்துவமானதாயினும் கலைத்திட்டம், கற்றல், கற்பித்தல் என்பவற்றுடன் ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்புடையதாகவும் அமைகின்றது. எனவே ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டிகளை புத்தக அலுமாரிகளை அலங்கரிக்கும் அலங்காரப் பொருட்களாக வைக்கப்படுவதைத் தவிர்த்து ஆசிரியர்களின் பாவனைக்கு வழங்கப்படுவதை அதிபர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

முறையான கணிப்பீடானது பரிகாரங்களை அடையாளப்படுத் துவதாக அமையும் என்பது கல்வியியலாளர்களின் எதிர்பார்ப்பாகும். அவ்வாறே கற்றல் – கற்பித்தலின் விளைதிறன் கற்றல் இடர்களுக்கான பரிகாரங்களை காண்பதிலேயே தங்கியுள்ளது. மேலும் வகுப்பறையில் நடைபெறும் உற்பத்திச் செயன்முறையானது பெளதீகப் பொருட்களுடன் தொடர்புடைய தல்ல. மாறாக அது மானிட அறிவு, திறன், மனப்பாங்கு மற்றும் சமூகத் திறன் சார் விருத்தியுடன் தொடர்புடையது எனவே பரிகாரங்கள் உடனடியாகக் காணப்படல் வேண்டும். இதற்காக கணிப்பீடுகளை வகுப்பறைகளில் முறையாகப் பயன்படுத்துவதை ஒவ்வொரு ஆசிரியரும் உறுதிப்படுத்திக் கொள்வது அவசியமாகும்.-தினகரன்

Advertisements

Written by lankamuslim

மே 6, 2013 இல் 9:44 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: