Lankamuslim.org

One World One Ummah

அறியாமையுடன் வாழ்வது இஸ்லாத்தில் மிகப் பெரிய குற்றம்

with one comment

எம்.ஏ.ஹபீழ் ஸலபி
1இஸ்லாம், கல்விக்கு மிகுந்த முக்கியத்துவத்தை வழங்கியுள்ளது. ஏனெனில், அது அறிவினதும் இறைத் தூதினதும் அடிப்படையில் உறுதியாக கட்டி எழுபப்பட்ட ஓர் இறை மார்க்கமாகும். அதன் வரலாறே “இக்ரஃ” என்னும் அறிவிற்கான அழைப்பை விடுக்கும் வார்த்தைகளோடு ஆரம்பமாகி, அதன் பண்பாடும், கலாசாரமும், நாகரிகமும் தெளிவான இஸ்லாமிய அறிவுக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே தோன்றி வளர்ந்தன.

 உலகில் காணப்படும் எந்த மதமும், சித்தாந்தமும் வழங்கிட முடியாத அளவு அறிவைத் தேடுமாறு வலியுறுத்துவதுடன், விவேகத்தையும் ஞானத்தையும் வரவேற்பதன் மூலம், அறிவு ஜீவிகளுக்கும் கல்விமான்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் உயர்ந்த அந்தஸ்தை வழங்கிச் சிறப்பிக்கின்றது. அறிவு இல்லாமல் இஸ்லாமியக் கடமைகளை நிறைவேற்றவே முடியாது! அதனால்தான், “ஓதுவீராக! யாவற்றையும் படைத்த உமது இரட்சகனின் திரு நாமத்தால்…” என்று நபி (ஸல்) அவர்களை நோக்கிச் சொல்லப்பட்டது. எனினும், இது மனித குல முழுமைக்கும் இடப்பட்ட கட்டளை என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

இக்கட்டளைக்கு என்ன காரணம்? கற்று, உணர்ந்து, தெளிவு பெற்றால்தான் சத்தியம் எது? அசத்தியம் எது? இறைவனின் விருப்பம் என்ன? அவன் எதை வெறுக்கின்றான்? என்று பகுத்துணர்ந்து, நேரிய வழியில் நடைபோட முடியும். யாரும் எந்த சந்தர்ப்பத்திலும் வழிகெடுத்துவிட முடியாது. அறிவு வழியில், கொள்கைத் தெளிவுடன் நடைபோடும்போது மட்டுமே நமது இலட்சிய நோக்கத்தை தவறான தலைவர்களாலும் வழிகெட்ட இயக்கங்களாலும் திசைமாற்றி விடமுடியாது.

இன்னும் அழுத்தமாக குறிப்பிட வேண்டுமானால்;,மறுமையில் – இறை சன்னிதானத்தில் நற்கூலி கிடைப்பதும் நாம் இங்கு பெறுகின்ற தெளிவான சத்திய அறிவி(கல்வியி)ன் செயல்வினையின் பாற்பட்டதே ஆகும்.அதனால்தான், இஸ்லாத்திலே கல்வி பெறுவது ஆண்-பெண் இருபாலாருக்கும் கட்டாயக் கடமை ஆக்கப்பட்டுள்ளது. கடமை மட்டுமல்ல அறிவைப் பெறுவது இஸ்லாத்தில் ஓர் இபாதாவா (வணக்கமா)கும். சிந்திப்பது, அறிவைத் தேடுவது, சிந்திக்கத் தூண்டுவது. பெற்ற அறிவை மற்றவர்களுக்கு வழங்குவது, போதிப்பது அனைத்துமே இறைவணக்கமாகக் கொள்ளப்படுவது இஸ்லாத்தில் மாத்திரமே.

“வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன.அவர்கள் நின்றும், அமர்ந்தும், படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைப்பார்கள். வானங்கள் மற்றும் பூமி படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள்.

“எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை; நீ தூயவன்; எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!” (என்று அவர்கள் கூறுவார்கள்) “எங்கள் இறைவா! நீ நரகத்திற்கு அனுப்புபவனை இழிவு படுத்தி விட்டாய். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை.”

“உங்கள் இறைவனை நம்புங்கள்!” என்ற நம்பிக்கையை நோக்கி அழைத்தவரின் அழைப்பைச் செவியுற்றோம். எங்கள் இறைவா! உடனே நம்பிக்கை கொண்டோம். எங்கள் இறைவா! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டு அழிப்பாயாக! நல்லோருடன் எங்களைக் கைப்பற்றுவாயாக!”

“எங்கள் இறைவா! உன் தூதர்கள் வழியாக நீ எங்களுக்கு வாக்களித்ததை எங்களுக்கு வழங்குவாயாக! கியாமத் நாளில் எங்களை இழிவு படுத்தாதே! நீ வாக்கு மீற மாட்டாய்” (எனவும் அவர்கள் கூறுவார்கள்.) (அல்குர்அன் – 03:190-194)

திருமறையில் இறைவன் என்ன சொல்லியிருக்கின்றான்? ஹலால் எது? ஹராம் எது? இஸ்லாத்தில் கருத்தோட்டம் என்ன? நபி (ஸல்) அவர்கள் எதற்காக வந்தார்கள்? எதைப் போதித்தார்கள்? தெரியாது! தெரியாது! என்று சொல்பவன் முஸ்லிமாக இருக்கமுடியுமா? என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது. அறியாமையுடன் வாழ்வது இஸ்லாத்தில் மிகப் பெரிய குற்றம் என்றே எண்ணத் தோன்றுகிறது. இஸ்லாம் கண்மூடித்தனமாக எதையும் செய்யச் சொல்லவில்லை. சிந்தித்துச் செயல்படு என்பதே இஸ்லாத்தின் முழக்கம்.

தனிமனிதன் ஒழுக்க வளர்ச்சிபெற்று, இறையச்சத்துடன், நேரிய வழியில் நடைபோட்டு, சத்தியக் கூட்டு வாழ்வுக்கு பயனளிக்கும் விதமாக மலர வேண்டுமென்பதே இஸ்லாத்தின் தேட்டம்.

“அவனே எழுதுகோலின் மூலம் கற்றுக் கொடுத்தான். மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக்கொடுத்தான்” (அல்குர்ஆன் 96:4-5)

ஓர் அற்பத்துளியிலிருந்து மனிதவாழ்வைத் துவக்கிய பின்னர், அவனுக்கு கல்வியறிவு அளித்து மிகவும் மேன்மையான படைப்பாக ஆக்கினான். எழுதுகோலைப் பயன்படுத்தி எழுதும் கலையையும் கற்றுக் கொடுத்தான். இது மிகப் பெரிய அளவில் கல்வியை பரப்புவதற்கும் வளர்ப்பதற்கும் பல பரம்பரைகளுக்கான பாதுகாப்பு அரணாகவும் அமைந்தது.அவன் எழுகோலும் புத்தகமும் வழங்காமல் இருந்திருந்தால், மனிதனது சிந்தனையாற்றல் முடங்கிப் போய்விட்டிருக்கும். இந்தளவுக்கு வளர்வதற்கும் வாய்ப்பில்லாமல் போயிருக்கும்.

அறிவு என்பது இஸ்லாமிய நோக்கில் இரண்டு வகையாக உள்ளது.
1.             மனித ஆன்மாவுக்கு உணவாகவும் உயிர்ச் சக்தியாகவும் அமைகிறது.
2.             மனித வாழ்வின் உலகியல் தேவைகளைப் பூர்த்தி செய்யத் துணை புரிகின்றது.

முதலாவது வகையான அறிவு இறைவனால் “வஹி” என்னும் இறைத்தூது மூலம் வழங்கப்படுகின்றது. அல்குர்ஆனும் ஸுன்னாவும் இந்த அறிவின் மூலாதாரங்களாக உள்ளன. இரண்டாவது வகையான அறிவானது, பகுத்தறிவோடு சார்ந்த தொழிற்பாடுகளான அவதானம், பரிசீலனை, ஆராய்ச்சி ஆகியவற்றின் மூலம் பெறப்படுகின்றது.

ஆனால், மனித வாழ்வின் இலட்சியம், குறிக்கோள், ஒழுக்கமதிப்பீடுகள் பற்றிய அறிவை இறை கட்டளையின் அமைப்பில் “வஹி” என்னும் இறைத்தூதே மனிதனுக்கு வழங்குகின்றது. “அக்ல்” எனும் பகுத்தறிவினதும் “வஹி” எனும் இறைத்தூதினதும் இணைப்பின் அடிப்படையில் ஓர் அறிவுக்கோட்பாட்டை இஸ்லாம் வழங்கியதே கல்வித்துறைக்கு இஸ்லாம் ஆற்றிய மகத்தான பங்களிப்பாகும். ஆகவே, மேற்கத்திய வரலாற்றில் கிறிஸ்தவ மதத்திற்கும் அறிவியலாளர்களுக்குமிடையில் நிகழ்ந்தது போன்ற பகுத்தறிவிற்கும்  நம்பிக்கைக்குமிடையிலான போராட்டத்தை நாம் இஸ்லாமிய வரலாற்றில் காண முடியாது.

“மறைவானவற்றின் திறப்புகள் அவனிடம்தான் இருக்கின்றன. அவற்றை அவனையன்றி வேறெவரும் அறியார், தரையிலும் கடலிலும் உள்ளவைகளையும் அவன் நன்கு அறிவான். அவன் அறியாமல் யாதோர் இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில்) அடர்ந்த இருளில் (புதைந்து) கிடக்கும் (சிறிய) வித்தும், பசுமையானதும் உலர்ந்ததும் (அவனுடைய) தெளிவான (பதிவுப்) புத்தகத்தில் இல்லாமல் இல்லை.” (அல்குர்ஆன் 6:59)
அறிவைப் பற்றிய இஸ்லாமிய நோக்கையும் கருத்தையும் கண்ணோட்டத்தையும் அல்குர்ஆனின் இந்தத் திருவசனம் மிகத் தெளிவாக விளக்குகின்றது.

இஸ்லாமிய நோக்கில் அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்; அனைத்தையும் இயக்குவிப்பவன்; எல்லா நிகழ்வுகளையும் தொடக்கி வைப்பவன். இவ்வாறு கூறுவதன் மூலம் இயற்கையைப் பற்றியும் பிரபஞ்சத்தைப் பற்றியும் ஆராய்வதை இஸ்லாம் வரவேற்கவில்லை என்பது கருத்தல்ல. மாறாக, குர்ஆனும், ஹதீஸும் அல்லாஹ்வின் படைப்பினங்களைப் பற்றி அவதானித்து சிந்திக்கும்படியும், ஆராயும்படியும் கட்டளை பிறப்பிக்கின்றன.

“அவற்றின் கனிகளை நோக்குவீர்களாக, அவை, (பூத்துக்) காய்ப்பதையும், பின்னர் கனிந்து பழமாகும் விதத்தையும் உற்றுநோக்குவீர்களாக. விசுவாசம் கொள்ளும் மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.” (அல்குர்ஆன் 6:99)

கல்வியைத் தேடிப் பயணிக்குமாறு தூண்டும் 50க்கும் மேற்பட்ட வசனங்களை அல்குர்ஆனில் காணமுடிகிறது. இதற்கு உதாரணமாக பின்வரும் வசனத்தைக் குறிப்பிடலாம்.

 (நபியே!) நீர் கூறும் “பூமியில் சுற்றித் திரிந்து (ஆரம்பத்தில்) சிருஷ்டிகளை எவ்வாறு படைத்தான் என்பதைப் பாருங்கள்.” (அல்குர்ஆன் 29:9)

இயற்கையைப் பற்றியும் அதில் பொதிந்துள்ள விதிகளைப் பற்றியும் ஒருவன் மேற்கொள்ளும் இந்த ஆய்வானது, அந்த விதிகளைக் கண்டறிந்து, விசுவாசித்து, அவனுக்கு அஞ்சி நடக்க வேண்டும் என்பதையே வலியுறுத்தி நிற்கிறது. இஸ்லாம் குறிப்பிடுகின்ற இந்த நோக்கம், மேற்கத்தியர்களின் அறிவுமுயற்சிகள், ஆய்வுகளிலிருந்து முற்றிலும் வித்தியாசப்படுகிறது. அவர்கள் பிணைத்துள்ள இயற்கை விதிகளை இயக்குவிக்கும் காரண-காரியத் தொடர்பை  கண்டவறிவதை மட்டுமே நோக்காகக் கொள்கின்றனர்.

“நவீன உலகில் “அறிவு”, “கல்வி” என்ற பெயரில் பரபல்யப்படுத்துவதெல்லாம் உண்மையிலே மேற்கத்திய சிந்தனையின் அடிப்படையில் அமைந்த அறிவும், கல்வியுமாகும். இந்த அறிவையும் கல்வியையும் அதன் பிரசாரசாதனங்களின் சக்தியினால் உலகெங்கும் பரப்பி, அதனை எல்லோருக்கும் பொதுவான, பொருத்தமான, உண்மையான அறிவு, கல்வி என்ற பிரமையை மக்களின் உள்ளங்களில் தோற்றுவிப்பதில் மேற்கத்திய நாகரிகம் வெற்றி கண்டு விட்டது. எதிலும் சந்தேகம் கொள்வதுதான் அறிவுதேடுவதற்கான அடிப்படை விதி என்ற கோட்பாட்டை அறிமுகப்படுத்தியதன் மூலம் மனித சிந்தனையில் ஒரு குழப்ப நிலையையும் இக்கோட்பாடு தோற்றுவித்து விட்டது. இந்த அறிவுக்கோட்பாடானது, இறைவனையும் மறுமை வாழ்வையும் நம்பிக்கையையும் நிராகரித்து, மனிதனுக்கும் அவனது உலகிற்கும் சிறப்பிடமளித்து, மனிதன் தெய்வீக நிலைக்கு உயர்த்தப்பட்டு, இந்த உலக வாழ்வே அவனது ஒரே இலட்சியமாக மாறிவிட்டது.

சந்தேகத்தின் அடிப்படையில் அறிவு தேடுதலை ஆரம்பித்த நவீன மனிதனின் தேடுதல் முயற்சி, தாகந்தீர்ப்பதற்கு கடலிலுள்ள உப்பு நீரைக் குடித்த மனிதனின் கதையாக முடிந்து விட்டது. எதுவுமே நிச்சியமில்லாமல், எதிலும் சந்தேகத்தின் அடிப்படையில் தனது அறிவுப் பயணத்தை ஆரம்பித்த நவீன மனிதன், எப்பொழுதும் மாற்றத்தையும் வளர்ச்சியையும் நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றான்.” (கலாநிதி ஆ.யு.ஆ. சுக்ரி 1999)

ஆனால் இஸ்லாம் காரண காரியத் தொடர்பைக் கண்டறிவதை மட்டும் நோக்கமாகக் கொள்ளாது, அதன் பின்னால் உள்ள இறைவனின் ஞானம், திட்டத்தை கண்டறியும் ஆற்றலை இறை ஞானத்தின் ஈமானின் அடிப்படையில் நடைபெறும் அறிவு முயற்சியும் தேடுதலும் ஆய்வுமே ஒருவனுக்கு அளிக்க முடியும் என்கிறது. இத்தகையவர்களையே குர்ஆன் “உலுல் அல்பாப்” என அழைக்கின்றது. இச்சொற்றொடர் அல்குர்ஆனில் 16 இடங்களில் கையாளப்பட்டுள்ளது.

அல்குர்ஆன் வழங்கும் இந்த விரிவும் ஆழமும் கொண்ட கண்ணோட்டத்தின் அடிப்படையிலேயே முஸ்லிம்கள் அறிவு முயற்சிகளை அணுகினர். இதனடியாகவே அறிவு, அதன் தன்மை, அதன் மூலாதாரங்கள் பற்றிய பல கோட்பாடுகளை முஸ்லிம்கள் தோற்றுவித்தனர். இஸ்லாத்தின் நோக்கில் மனிதனுடைய வரலாறே அறிவுடன் தொடர்புற்ற நிலையிலேயே ஆரம்பமாகின்றது.

அல்லாஹ் பூமியில் மனிதனைப் (கலீபா) படைக்க விரும்பினான். முனிதன் சுமக்கவுள்ள இந்த மகத்தான பொறுப்பை நிறைவேற்ற அவனுக்கு அடிப்படையாகத் தேவைப்படுவது அறிவாகும். அறிவின் அடிப்படையிலேயே மனிதன் ஒவ்வொரு பொருளையும் இனங்கண்டு, அதனில் பொதிந்துள்ள பல்வேறு விதிகளையும் உய்த்துணர்ந்து, அந்த அறிவை உலகையும் தனது வாழ்வையும் வளப்படுத்தும் வகையில் பயன்படுத்தும் ஆற்றலைப் பெறுகின்றான். எனவேதான், அல்குர்ஆன் ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் அவனது கலீபாவாகச் சிருஷ்டித்த பின்னர், மேற்கொண்ட ஆரம்பப் பணியில் ஆதமுக்கு அறிவு புகட்டியதைக் குர்ஆன் குறிப்பிடுகின்றது.

“பின்னர் ஆதமுக்கு (பூமியிலுள்ள) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் அவற்றின் தன்மைகளையும் கற்றுக் கொடுத்தான்.” (அல்குர்ஆன் 02:31)

இங்கு “பெயர்” என்ற கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள “அஸ்மா” என்ற பதம் எல்லாப் பொருட்களையும் பற்றிய அறிவையே பொதுவாகக் குறிக்கின்றது. இந்த அறிவு ஏற்கனவே குறிப்பிட்டவாறு, மனிதனுக்கு அவனது “கிலாபத்” பணியை நிறைவேற்றத் துணை புரிகிறது. ஆனால், அதே நேரத்தில் அவனது “ரப்”பாகிய இரட்சகனின் ஆணைக்கு முற்றிலும் சிரஞ்சாய்த்து, அவனுக்கு அடிபணிந்து வாழும் வாழ்வு பற்றிய தன்மைகளை உணர்த்தும் அறிவும் இறைவழிகாட்டல் மூலமாக மனிதனுக்கு வழங்கப்படுகின்றது.

Advertisements

Written by lankamuslim

மே 6, 2013 இல் 9:20 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

 1. குர்ஆன் முழு மனித குலத்துக்கும் இறக்கியருளப்பட்டது. அதனை ஏற்று, அறிந்து, அதன்படி நடந்து உய்வடையாது, அதனை எவ்வுருவிலாவது மறுப்போர் நிராகரிப்பாளரே!

  அறிவீனர்களைப் புறக்கணித்துவிடுவீர்களாக 7:99 என்பதும் கூட, அறிவீனர்களில் நான் ஆவதை விட்டும் பா‌துகாப்புத் தேடுகிறேன் எனக் கூறியதை நினைவு கூருமாறு 2:67இல் பணிப்பதும் கூட அல்லாஹ்வின் அருள் வாக்கே!

  ஈமான் கொள்வதற்கும் அறிதலே அவசியமாகின்றது. அல்லாஹ்வை, வானவர்களை, வேதங்களை, ரசூல்மார்களை, மறுமையை, களா, கத்றை அறியாமல்? ”ஈமான் கொண்டோம்” என்பது கூட அல்லாஹ்மேல் பொய“கூறிய குற்றத்தை வருவிக்குமேயல்லாது, விடிவை ஏற்படுத்தப்ப போவதில்லை.

  கலிமாவில் கூறப்பட்டதை அறியாமல், எப்படி சாட்சியம் கூறுவது? அப்படிக் கூறும் சாட்சியம் ஏற்கப்படக் கூடியதா? அது பொய் சாட்சி சொன்னதாக அமையாதா? இம்மையிலும், மறுமையிலும் தண்டனையைப் பரிசாகப் பெற்றுக் கொள்ளதா?

  நீதியை நிலைநாட்டக் கூடியவனாக உள்ள நிலையில், தன்னைத் தவிர எதுவுமில்லை என்று அல்லாஹ் சாட்சியம் கூறுகிறான். அவ்வாறே வானவர்களும், அறிஞர்களும் சான்று பகர்கின்றனர் என்ற 3:18 வசனத்தின் மூலம் வெளிப்படுத்தி யதில் இருந்து , அல்லாஹ்வை அறிந்து சாட்சியம் கூறுபவன் அறிஞனாகவே இருக்க முடியும் என்பதும், அல்லாஹ்வை யும், மற்றுமுண்டானதையும் அறிதலின் அவசியமும் புலப்படும்.

  தொழுகையில் கடமையாக்கிய நினைவுகூர்தலை நிறைவேற்றுவதற்கும், நினைவுகூர்வீராக என அடிக்கடி நமக்கு விடுக்கப்படும் அழைப்பை நடைமுறைப்படுத்துவதற்கும் அறிந்திருக்க வேண்டியதன் அவசியம் பெறப்படுகின்றது.

  அறியாத ஒன்றை நினைவு கூர முடியா‌தென்பதால், அவ்வழைப்பின் மூலம், நாம் அறிந்து வைத்திருக்கிறோம் என்பதையும், மறந்திருக்கிறோம் என்பதையு்ம் தெளிவாகவே அல்லாஹ் வெளிப்படுத்துகின்றான். அதனால்தான் மனிதர்களை அவன் மறதியாளர் என்றும் அழைக்கின்றான். அதனை ஞாபகத்துக்குக் கொண்டு வருவதற்காகவே, நபிமார், ரசூல்மார், வேதங்கள், வேதக்கட்டளைகள் என்றெல்லாம் அனுப்பி நாம் அறிந்திருந்ததை மீண்டும் நினைவிற்குக் கொண்டுவருமாறு தூணடியுள்ளான். இவற்றால், அறிதலின் அடிப்படையிலேயே இஸ்லாம் கட்டி எழுப்பப்ப்ட்டுள்ளதை அறியலாம்.

  21: 10 – திட்டமாக உங்கள்பால் ஒரு வேதத்தை இறக்கி வைத்தோம். அதில் உங்களுடைய நினைவுகூர்தல் இருக்கிறது. நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டாமா? இதுவும் அறிதலை அடிப்படையாகக் கொண“டதே!

  அறிவின்றி அல்லாஹ்வின் விடயத்தில் வீண் தர்க்கம் 22:3,8 , அறியாமை காரணமாக மற்றவர்களையும் வழிகெடுத்தல் 6:119 போன்றவை அறிதலை வேண்டி நிற்பதை அவதானிக்கலாம்.

  அறிதலின்றேல் இஸ்லாமே இல்லை என்பது மிகை கூற்றல்ல. இதனை வலுப்டுத்த, நபிகளாருக்கே கூறப்பட்டதை அல்லாஹ்வின் வாயால் கேட்போம். 17: 36 – நபியே! எதனைக் குறித்து உமக்குத் தீர்க்கமான ஞானமில்லையோ அதனை நீர் பின்பற்றாதீர்.

  மேலாக, அல்லாஹ் தன்னைப் பற்றிக் கூறும் போது பல இடங்களில் யாவும் அறிந்தவன் எனக் கூறியிருப்பது நமக்கு அறிதல் பற்றிய உண்மையை வெளிப்படுத்தவல்லது.

  nizamhm1944

  மே 6, 2013 at 2:14 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: