Lankamuslim.org

One World One Ummah

கிழக்கு மாகாண சபையின் கண்டனப் பிரேரணை நிறைவேற்றம்

leave a comment »

eastern-provinceஅஸ்லம் எஸ்.மௌலானா: இணைப்பு-3நாட்டில் குழப்ப நிலையை ஏற்படுத்தும் நோக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் பொது பல சேனா இயக்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் கிழக்கு மாகாண சபையில் இன்று சமர்பிக்கபட்ட கண்டனத் தீர்மானம் திருத்தங்களுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

கிழக்கு மாகாண சபையின் மாதாந்த சபை அமர்வு இன்று  செவ்வாய்க்கிழமை திருமலையிலுள்ள மாகாண சபையின் சபா மண்டபத்தில் தவிசாளர் ஆரியவதி கலப்பதி தலைமையில் நடைபெற்றது.இதன்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் மதிய இடைவேளைக்குப் பின்னர் இக்கண்டனப் பிரேரணையை சமர்ப்பித்திருந்தார்.

இதன்போது ஹலால் தொடர்பில் ஆளும் தரப்பு சிங்கள- முஸ்லிம் உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. அதவேளை மாகாணக் கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்க முன்மொழிந்த திருத்தத்துடன் குறித்த கண்டனப் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

நாட்டில் பாரிய யுத்தத்தில் ஈடுபட்ட பெரும் ஆயுத சக்தியான புலிகள் இயக்கத்தை அழித்தொழித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசுக்கு சிறியளவிலான இனவாதக் கும்பல் ஒன்றை அடக்குவது ஒன்றும் பெரிய காரியமாக இருக்காது என்பதால் அது தொடர்பில் அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் கோரிக்கை விடுத்தார்.

நாட்டில் குழப்ப நிலையை ஏற்படுத்தும் நோக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் பொது பல சேனா இயக்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் கிழக்கு மாகாண சபையில் கண்டனப் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் மாதாந்த சபை அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை திருமலையிலுள்ள மாகாண சபையின் சபா மண்டபத்தில் தவிசாளர் ஆரியவதி கலப்பதி தலைமையில் நடைபெற்றது.

இதன்போது மதிய இடைவேளைக்குப் பின்னர் குறித்த கண்டனப் பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றுகையில் அவர் மேலும் கூறியதாவது;

“சில வருடங்களுக்கு முன்னர் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு இன்று நாட்டில் அமைதியும் சமாதானமும் இனங்களுக்கிடையில் ஐக்கியமும் நிலவி வருகின்ற நிலையில் பொதுபல சேனா அமைப்பு, ஹலால் விவகாரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் முஸ்லிம்கள் மீது பல்வேறு வகையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் போராட்டங்களை நடாத்தி வருகின்றது.

பொது பல சேனா எனும் பௌத்த கடும்போக்குவாத அமைப்பு மேற்கொண்டு வருகின்ற தேவையற்ற நடவடிக்கைகளினால் நாட்டில் இன ஐக்கியத்திற்கு குந்தகம் ஏற்படுவதோடு வீண் குழப்பங்களுக்கும் வழி வகுக்கின்றன. இதனால் முஸ்லிம்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.

பொது பல சேனாவின் இனவாத செயற்பாடுகளை சாதாரண சிங்கள மக்கள் விரும்பவில்லை. அதற்கு அவர்கள் ஆதரவு தெரிவிக்கவுமில்லை.

சிங்கள மக்களையும் ஹலால் உணவு உண்ணுமாறு முஸ்லிம்கள் நிர்ப்பந்திப்பது போன்று அந்த அமைப்பினர் பொய்ப்பிரசாரம செய்து இரு மதத்தினரையும் மோதவிட முயற்சிக்கின்றனர்.

ஹலால் என்பது இஸ்லாமியர்களின் மார்க்க ரீதியிலான அடிப்படை உரிமையாகும் அதனை தடுக்க முற்படுவதானது அடிப்படை உரிமை மீறலாகும்.

இந்த ஹலால் உணவு விடயமானது மத ரீதியானது மாத்திரமல்ல சுத்தம், சுகாதாரத்தையும் உத்தரவாதப் படுத்துகிறது. அதனால்தான் மாற்று மதத்தினர் கூட ஹலால் உணவுகளை தேடி வாங்குகின்றனர்.

அதனால் உற்பத்தியாளர்களும் ஏற்றுமதியாளர்களும் ஹலாலை விரும்பி ஏற்று நடைமுறைப்படுத்தி வருகின்றனர். ஹலால் எந்தவொரு மதத்தினருக்கும் நிறுவனத்திற்கும் முஸ்லிம்களால் நிர்ப்பந்திக்கப்படவில்லை.

ஹலாலின் தாற்பரியத்தை புரிந்து கொண்டு உலக நாடுகள் அனைத்தும் அதனை நடைமுறையில் பேணி வருகின்றன. தாய்லாந்தில் அந்நாட்டின் பிரதமரின் நிர்வாகத்தின் கீழ் ஹலால் திணைக்களம் செயற்பட்டு வருகின்றது.

ஆனால் உலக வரலாற்றில் எந்த நாட்டிலும் இடம்பெறாத ஹலால் எதிர்ப்புப் போராட்டம் இலங்கையில் மாத்திரம் முதன்முறையாக விஸ்வரூபம் பெற்றிருக்கிறது. இதன் பெயரால் முஸ்லிம்களுக்கு பல்வேறு வகையிலும் நெருக்கடிகளும் அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் மூலம் நாட்டில் வீண் குழப்பங்களையும் கலவரங்களையும் ஏற்படுத்துவதற்கு பொதுபல சேனா அமைப்பினர் எத்தனிக்கின்றனர். இதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது.

நாட்டில் பாரிய யுத்தத்தில் ஈடுபட்ட பெரும் ஆயுத சக்தியான புலிகள் இயக்கத்தை அழித்தொழித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசுக்கு சிறியளவிலான இனவாதக் கும்பல் ஒன்றை அடக்குவது ஒன்றும் பெரிய காரியமாக இருக்க மாட்டாது. ஆகையினால் அரசு இது தொடர்பில் உடனடியாக ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

இல்லையேல் நாட்டில் இனக்கலவரம் ஒன்று வெடிப்பது தவிர்க்க முடியாமல் போய்விடும் அஞ்சுகின்றோம்.

ஆகையினால் பொதுபல சேனாவின் இனவாத செயற்பாடுகளை கிழக்கு மாகாண சபை ஏகமனதாக வன்மையாக கண்டிக்க வேண்டும் என்பதுடன் அதன் இனவாத செயற்பாடுகளை உடனடியாகத் தடுத்து நிறுத்துவதற்கும் அவர்களின் நெருக்குவாரங்களில் இருந்து முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்கும் அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இச்சபை வலியுறுத்த வேண்டும் என்ற பிரேரனையை ஒற்றுமைக்கு முன்மாதிரியான கிழக்கு மாகாணத்தின் இந்த உயர் சபையில் முன்மொழிகிறேன்” என்று குறிப்பிட்டார்.

இப்பிரேரணை தொடர்பில் ஆளும் தரப்பு சிங்கள- முஸ்லிம் உறுப்பினர்களிடையே காரசாரமான விவாதம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இணைப்பு-2

uthuகிழக்கு செய்தியாளர் : நமது நாட்டில் பௌத்த மக்கள் பெறும்பான்மையாக வாழ்வதை நாம் ஏற்றுக்கொள்ளும் அதேவேளை நமது நாடு பல்லின மக்களுக்கும் சொந்தமான நாடு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

நமது நாட்டின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும், பல அரசியல் தலைவர்களும், பெறும்பான்மையான பௌத்த மதகுருமார்களும், பௌத்தமக்களும் நமது நாடு பல்லின மக்களுக்கு சொந்தமான நாடு என்றும் கூறி வரும் போதும் இனவாத சிந்தனை உள்ள சிலர் பௌத்த மக்களையும் சிறுபான்மையினரையும் பிரித்து இனக்கலவரத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த நாடு பௌத்தர்களுக்கு மாத்திரம் சொந்தம் எனக் கூறி வருவது வேதனைக்குரிய விடயமாகும் என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை குறிப்பிட்டார்.

முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒன்றினைந்து சமர்ப்பித்த கண்டனப்பிரேரணை விவாதத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இனவாதத்தை வளர்ப்பவர்கள் அதே இன வாதத்தால் அழிந்து போவார்கள் என்ற பொதுவான நம்பிக்கை எம்மிடம் இருக்கின்றது. நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் இனவாதம் பேசி இனவாதத்தை உருவாக்கியவர்கள் எல்லாம் அழிந்து இருக்கின்றார்கள். இனவாதத்தை முஸ்லிம்களோ, தமிழர்களோ, பௌத்தர்களோ பேசினாலும் நாம் எப்போதும் இதை எதிர்த்து வருகின்றோம்.

பல்லின மக்கள் வாழுகின்ற நமது நாட்டில் தத்தமது மதத்தைப் பின்பற்றி தத்தமது கலாச்சாரத்துடன் தங்களின் மார்க்க வழிபாட்டில் உணவுகளை உண்ணுவதற்குரிய உரிமைகள் எல்லோருக்கும் உள்ளது. நாம் நமது மார்க்க வழி முறைகளை பின்பற்றி வாழ வேண்டும். அதேவேளை சகோதர இனங்களுடன் சினேக பூர்வமான உறவுகளுடன் வாழ வேண்டும் இன வாதத்தை உருவாக்கியதனால் நமது நாடு பல அழிவுகளை சந்தித்த வரலாறு நமக்கு முன் உள்ளது என்பதினை நாம் மறந்துவிடக்கூடாது.

முஸ்லிம்களின் ஹாலால் உணவு தொடர்பாக அண்மைக்கலமாக இனவாத உணர்வுகளை சிலர் ஏற்படுத்தி வருகின்றனர். முஸ்லிம்களின் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட உணவை சாப்பிடுவதை ஹலால் உணவு என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹலால் உணவை ஏனையவர்கள் விரும்பினால் சாப்பிடலாம். ஏனையவர்கள் ஹலால் உணவை சாப்பிடுங்கள் என்று முஸ்லிம்கள் கூறவில்லை, முஸ்லிம்கள் கட்டாயமாக ஹலால் உணவை உண்டே ஆக வேண்டும். இது எங்களுடைய உரிமையாகும்.

எங்களின் இஸ்லாம் மதம் யுத்தம் செய்கின்ற போதும் அன்னிய மதத்தலைவர்களையும், மதத்தலங்களையும் கண்டால் மரியாதை செலுத்துங்கள் என்று சொல்கின்றது. மதத்தலைவர்கள் ஒரு போதும் அன்னிய மதங்களை இழிவுபடுத்துகின்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது கவலைக்குரிய விடயமாகும். நமது நாட்டில் எல்லா மதத்தலைவர்களையும் சகல இன மக்களும் மதிக்கின்ற நிலைமை உருவாக வேண்டும். நமக்கிடையிலே பிரச்சினைகள் வருகின்ற போது மதத்தலைவர்கள் அப்பிரச்சினைகளை தீர்க்ககூடியவாறு இருத்தல் வேண்டும்.

அண்மையில் கிண்ணியாவில் நடைபெற்ற தேசிய மீழாத்விழா வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, பௌத்த மதத்திற்கான ஆலோசகர் இலங்கையில் இனவாதத்தை இல்லாமல் செய்ய வேண்டும் எல்லா இனங்களும் சமாதானத்துடன் வாழவேண்டும் என்று கூறினார்.

முஸ்லிம்களின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை நினைவுகூறும் முகமாக அக்குறஸ்சையில் தேசிய மீழாத்விழா நடைபெற்ற போது குண்டுவைக்கப்பட்டு பலர் இறந்ததுடன் பலர் காயமடைந்தனர். அதுதான் இலங்கையில் இடம்பெற்ற இறுதி குண்டுத்தாக்குதல் ஆகும். முஸ்லிங்களுடைய பிராத்தனைகளும் இந்த நாட்டில் சமாதான ஏற்படுவதற்கு உதவியுள்ளது என குறிப்பிட்டார்.

இதேவேளை அண்மையில் குருநாகல் மாவட்டத்தில் பௌத்த மததேரர் குழுவினர் சிலர் ஒன்றிணைந்து முஸ்லிங்களுடைய மனங்களை புன்படுத்தும் வகையில் சில ஆர்ப்பாட்டங்களை நடாத்தி முஸ்லிங்களுடைய மத உணர்வை தூண்டுகின்ற அளவிற்கு செயற்பட்டிருப்பது கண்டிக்க வேண்டிய விடயமாகும். மதத்தலைவர்கள் எல்லா மதமக்களும் மதிக்கக்கூடிய வகையிலே செயற்பட வேண்டும். முஸ்லிங்களுக்கு எதிரான ஊர்வலங்களில் பௌத்த பிக்குகள் கலந்து கொள்வது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். முஸ்லிங்களையும் சிங்களவர்களையும் இனவாதத்தை உருவாக்கி இந்த நாட்டில் ஒரு சிங்கள முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்துவதற்கு சர்வதேசத்தில் பல தீய சக்திகள் செயற்பட்டு கொண்டிருக்கின்றது. இந்த சந்தர்ப்பத்தில் நாம் எல்லோரும் ஒன்றிணைந்து இன வாதத்ததை இல்லாமல் செய்வதற்கு குரல் கொடுக்க வேண்டியுள்ளது.

கிழக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினரான பிரியந்த பத்திரண இலங்கை முஸ்லிம்கள் தொடர்பான தவறான கருத்துக்களை வெளியிட்டார். இலங்கை நாட்டின் சுதந்திரத்திற்காகவும், சமாதானத்திற்காகவும், சில வகை பொம்மைகள் நீண்டகாலம் உழைத்து வருகின்றனர். முஸ்லிம்களுக்கு எதிராக அவர் கூறிய கருத்துக்களை அவர் வாபஸ் வாங்க வேண்டும்.

இலங்கை ஜம்யத்துல் உலமா சபையை கலைத்துவிட வேண்டும் என சிலர் அறிக்கை விடுகின்றனர். முஸ்லிங்களின் ஜம்யத்துல் உலமா சபையை கலைத்துவிடுவதற்கு இங்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. பௌத்த மக்களுக்கான மகா சங்கம் ஏனைய மதங்களுக்கான அமைப்புகளும் நமது நாட்டில் இயங்கி வருகின்றன. ஜம்யத்துல் உலமா சபை பற்றி தெளிவான விளக்கம் இல்லாததனால் இவ்வாறு தவறான செய்திகளை வெளியிடுகின்றனர். முஸ்லிம் மக்கள் ஷரியா சட்டத்தின் படி நடப்பதற்கு வழிகாட்டிச் செயற்படும் ஜம்யத்துல் உலமா சபை எந்த சந்தர்ப்பத்திலும், அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. நமது நாட்டில் முக்கியமான பிரச்சினைகள் வரும் போது சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு பெரும் பங்கினை ஆற்றி வருகின்றது என்பதனை நான் தெளிவுபடுத்துகின்றேன்.

முஸ்லிம்களின் ஹலால் உணவு பற்றி தவறான விமர்சனம் செய்து ஏதோ முஸ்லிம்கள் ஹலால் உணவை உண்பதன் ஊடாக இலங்கையை கைப்பற்ற போகின்றார்கள் என்ற போர்வையில் சிங்கள மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது.அண்மையில் மஹரகமையில் நடைபெற்ற பொதுபலசேன அமைப்பின் மாநாட்டில் ஆயிரக் கணக்கான சிங்கள மக்களை அழைத்து வந்து முஸ்லிம் மக்கள் தொடர்பான இனவாதக் கருத்துக்களை பரப்பி உள்ளனர். அது மாத்திரம் இல்லாமல் ஒரு மாத காலத்திற்குள் ஹலால் உணவு தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என காலக்கேடும் வழங்கி உள்ளனர். முஸ்லிம்களின் ஹலால் உணவு தொடர்பான விளக்கம் புரியாமல் இவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

கடந்த 30 வருட காலமாக நமது நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக பெறுமதிமிக்க பல ஆயிரக்கணக்கான உயிர்களையும். உடமைகளையும் மூன்று இன மக்களையும் இழந்து உள்ளோம். இனவாதம் உருவாக்கப்பட்டதால் நமது நாட்டில் வாழும் சகல இன மக்களும் நிம்மதியை இழந்தோம். இப்போது தான் அமைதி சமாதானம் சக வாழ்வு ஏற்பட்டு வருகின்றது. இந்த நல்ல சூழ்நிலை இல்லாமல் செய்வதற்கு சிலர் முயற்சி செய்கின்றனர்.

கிழக்கு மாகாண சபையில் மாத்திரம் தான் எல்லோரும் இணைந்து நல்ல தீர்மானங்கள் எடுக்கக் கூடியதாக உள்ளது. முன்னாள் முதலமைச்சர் எஸ்.சந்திரகாந்தனின் தலைமையிலான மாகாண அரசு காலத்தில் பல பிரச்சினைகளுக்கு ஆளும் கட்சியில் அமைச்சர்களாக உறுப்பினர்களாக இருந்து முகம் கொடுக்க வேண்டிய தேவை இருந்தது. நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக செயல்பட்டு வரலாற்று தீர்மானங்களை எடுத்துள்ளோம். என்பதை இச் சபைக்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.

திடீர் என பிரதேச சபைத் திருத்தச் சட்டம் கிழக்கு மாகாண சபைக்கு கொண்டு வரப்பட்டது நமது நாட்டில் வாழும் முழு சிறுபான்மை மக்களுக்கான குரலான கிழக்கு மாகாண சபை தீர்மானம் எடுக்க வேண்டிய நிலைமை அன்று எங்களுக்கு எற்பட்டது. ஆளும் கட்சியில் அமைச்சர்களாக இருந்து கொண்டு நெஞ்சை நிமிர்த்தி சிறுபான்மை மக்களுக்கு புதிய பிரதேச சபை திருத்தச் சட்டத்தில் ஏற்படப்போகும் அநியாயத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து திருத்தம் செய்தோம். இது ஒரு வரலாற்று நிகழ்வாகும். கிழக்கு மாகாண சபையில் வரலாற்று துரோகம் செய்தவர்கள் என்ற பெயரை நாங்கள் பெறமாட்டோம் அதில் கவனமாக இருப்போம்.

இதே போல நாடு நகர சட்ட மூலம் கிழக்கு மாகாண சபையின் அங்கீகாரத்திற்காக அரசினால் சமர்ப்பிக்கபட்டது. நாடு நகர சட்ட மூலம் கிழக்கு மாகாண சபையால் அங்கீகரிக்கபட்டிருந்தால் கிழக்கு மாகாணம் முழுவதும் வாழும் சிறுபான்மை மக்களுக்கும், கிழக்கு மாகாணத்திற்கு வெளியில் ஏனைய மாகாணங்களிலும் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கும் பெரும் அநீதி ஏற்பட்டிருக்கும் இந்த வேளையிலும் கூட தைரியமாக அரசிடம் உண்மை நிலமையை புரிய வைத்தோம் எங்களை வரலாற்று துரோகம் செய்தவர்களாக மாற்றி விடாதீர்கள் என்று கூறினோம். கிழக்கு மாகாண சபையில் நாடு நகர சட்ட மூலத்தை நிராகரித்தோம். இதுவும் கிழக்கு மாகாண சபையில் வரலாற்று நிகழ்வாகும் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றேன்.

புதிதாக உருவாக்கப்பட்ட கிழக்கு மாகாண சபைக்கு வயது 4 ½ ஆகும். இப்போதுதான் அதிகாரங்கள் தொடர்பான முன்னேற்றத்தை கண்டு வருகின்றோம். கிழக்கு மாகாண சபைக்கு கூடுதலான அதிகாரங்களை வழக்க வேண்டும் என நாம் வற்புறுத்தி வருகின்;றோம் அதே வேளை நமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை நாம் பயன்படுத்த வேண்டிய நிலையில் உள்ளோம்.

இன்று கிழக்கு மாகாண சபையில் முக்கியமான நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கிழக்கு மாகாண சபையில் கட்சிகள் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற ஆசனங்களில் அமர்ந்துள்ளோம். கிழக்கு மாகாண சபையின் நடவடிக்கைகளில் ஆளும்கட்சி, எதிர்கட்சி என்ற பேதமின்றி ஒற்றுமையாக செயல்படுவதன் மூலமே நமது மாகணத்தின் அதிகாரத்தை பெற வாய்ப்பு ஏற்படும்.

இன்று சபையில் உரையாற்றிய உறுப்பினர்கள் சில உடனடியாக கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள் ஐந்து பேரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறினார். இன்னும் ஒரு மாகாண சபை உறுப்பினர் மாகாண சபையின் கதவை பூட்டி விட்டு போக வேண்டும் என்று கூறினார். ஆளும் கட்சியில் இருக்கும் நாங்கள் ஒரு போதும் அரசியல் அதிகாரங்கள் நிரந்தரமானவை என்ற நம்பிக்கையுடன் இருக்கவில்லை. எங்களுக்கு முன்னால் உள்ள எதிர்கட்சி உறுப்பினர்களின் கதிரைகளை பார்த்தவர்களாகவே உள்ளோம்.

ஐக்கிய தேசியக் கட்சி 17 வருட காலமாக ஆட்சியில் இருந்தது. 1994ல் இன்று வரை பொதுசன ஐக்கிய முன்னனி ஆட்சியில் உள்ளது. இன்னும் எத்தனை வருடங்கள் இந்த ஆட்சி தொடரும் என்பது யாருக்கும் தெரியாது 17 வருடங்கள் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் இருந்த போது அன்று பாராளுமன்றத்தில் 7 ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எம்.பீக்கள் மாத்திரம் எதிர் கட்சியில் இருந்தனர்.

பொறுமையாக இருந்து தான் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 1994ல் இருந்து அரசாங்கம் அமைத்தது. அதே போன்று தான் இன்று ஐக்கிய தேசிய கட்சி பலவீனம் அடைந்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி; அமைப்பதற்கு நீண்ட காலம் பொறுமையாக இருக்க வேண்டியுள்ளது.

சபையில் உரையாற்றிய உறுப்பினர் இம்றான் மஃறூப் முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் உடைத்ததற்கும், முஸ்லிம்களுக்கு எதிரான செயல்களுக்கும் பாராளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் திரு.ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரேரணை கொண்டு வந்த போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கிம் அறிக்கையினை சிபார்சு செய்தார் எனக் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அவர்கள் முஸ்லிம்களின் ஹலால் உணவு தொடர்பாக விசேட அமைச்சரவை கூட்டி ஆராய்ந்து உள்ளார். இந்த விடயத்தில் முஸ்லிம் அமைச்சர் எல்லோரும் கட்சி பேதமின்றி ஒற்றுமையாக செயற்பட்டு வருகின்றனர். கிழக்க மாகாண சபையில் கட்சி ரீதியாக முஸ்லிம் உறுப்பினர்கள் செயற்பட்டாலும் சமூகத்தின் பிரச்சினைகள் வரும் போது ஓற்றுமைப்பட்டு செயற்பட்டார் எனக் குறிப்பிட்டார்.

இணைப்பு-2

Hafees nazeer SLMCகிழக்கு செய்தியாளர் :நாட்டிலே மூவின மக்களும், ஒற்றுமையோடும் சகோதரத்துவத்துடனும் வாழ வழிவகுக்க வேண்டும். இனங்களுக்கிடையே இனக்குரோதங்களை வளர்க்கும் இன விரோதிகளை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் கூறினார்.

நாட்டில் குழப்ப நிலையை ஏற்படுத்தும் நோக்கில் முஸ்லிம்களுக்கெதிராக செயற்படும் பொதுபலசேனா இயக்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் கிழக்கு மாகாண சபையில் கண்டனத் தீர்மானம் ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை (19.02.2013) திருகோணமலையிலுள்ள மாகாணசபை மண்டபத்தில் நடைபெற்ற மாதாந்த அமர்வின் போது கொண்டு வரப்பட்டது.

இதில் மாகாண சபைத் தவிசாளர் ஆரியவதி கலப்பதி தலைமையில் நடைபெற்ற இந்த அமர்வின் போது கிழக்கு மாகாண சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரும், கட்சியின் குழுத்தலைவருமான ஏ.எம்.ஜெமீல் இந்த கண்டனப் பிரேரணையை சமர்ப்பித்திருந்தார். இந்தப் பிரேரணையின் போதே உறுப்பினர் நஸீர் இவ்வாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்து உரையாற்றும் போது

கௌரவ உறுப்பினர் ஏ.எம்.ஜெமில் அவர்கள் பொதுபலசேனா அமைப்பு பாராளுமன்றத்தில் ஹலால் ஹறாம் விடயம் பற்றி பேசியதாக குறிப்பிட்டார். இன்று இந்த இலங்கையிலே நாங்கள் எங்களுடைய நாடு என்று பேசக் கூடியவர்களாக இருக்கின்ற போது பொதுபலசேனா போன்ற இனவாதி அமைப்புகளை வளர விடுவது பெரும் ஆபத்தாகும்.

எமக்கெல்லோருக்கும் எடுத்துக்காட்டாக எங்களுடைய நாட்டின் ஜனாதிபதி அதிமேதகு மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பல ஆண்டுகளாக இந்த நாட்டிலே இடம்பெற்ற பயங்கரவாதத்தை அழித்தொழித்து நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும் போது ஏன் இந்த பொதுபலசேன என்ற இனவாத அமைப்பை ஒழித்தழிக்க முடியாதா எனக் கேட்கிறேன்.

முடியம் இங்கே சில உறுப்பினர்கள் கூறினார்கள். இப்படியான விடயத்தை இந்த சபையிலே பேசக்கூடாது என்று, ஏன் பேசக் கூடாது இந்த சபையில், இந்த இலங்கையில் சகல இனமக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது பிரச்சனைகளை ஏற்படுத்தி குழப்பங்களை உருவாக்க முயன்று கொண்டிருக்கும்போது, பாராளுமன்றத்திலே இனவாதப் போக்காக நடந்து கொள்ளும் போது எமது முஸ்லிம் சமூகத்துக்கு ஒரு தாக்கமாக ஒரு மனக்கவலையாக இருக்கின்றது.

இன்று நாங்கள் முஸ்லிம்கள், தமிழர்கள், சிங்களவர்கள் என்ற வேற்றுமையில்லாமல் நடந்து கொண்டிருக்கிறோம். நாட்டிலே நடந்த பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க ஒரு பொலிஸ் அதிகாரியாக நான் கடமையாற்றியிருக்கின்றேன். அது போன்று அரபு நாட்டிலும் பணியாற்றியுள்ளேன். அங்குள்ள முஸ்லிம் மக்கள், அங்கு கடமை புரியும் சிங்களவர்கள் தமிழர்களை வேற்று மதத்தவர் என்று எண்ணவில்லை.இன்றும் கூட அந்த அரபு நாட்டு மன்னர்களும், மக்களும் இலங்கைக்கு வருகின்ற போது ஒருமித்த மனதோடு வருகின்றார்கள். ஹலால் ஹராம் என்பது ஒரு உணவு சார்ந்த விடயமல்ல.

தனது மனைவியை திருமணம் செய்யும் போது கூட ஹலாலாகத் திருமணம் செய்கின்றனர். அதே போன்று தான் மனைவியோடு இருந்து ஒரு பிள்ளையைப் பெறுவதென்றாலும் அது ஹலாலாகத்தான் பிறக்கின்றது. தான் உழைக்கின்ற உழைப்பும் கூட ஹலாலாக உழைக்க வேண்டும். உணவை மட்டும் தான் ஹலால் என்று கூறுகின்றார்கள். அது மட்டுமல்ல, இந்த விடயம் நாங்கள் கடந்த ஹிஜ்ரி 1431 ஆண்டுகளாக பின்பற்றி வருகிறோம். நாங்கள் அல்லாஹ்வையும் ரஸூலையும் நேசிக்கின்றவர்கள். அதே போன்று தான் தமிழர்களும், சிங்களவர்களும் அவர்களுடைய மதத்தை பின்பற்றி நடக்கக் கூடியவர்களாக இருக்கின்றனர்.

நாங்கள் இந்த சபையிலேயிருந்து இனவாதத்தை எழுப்பக் கூடாது. அதிமேதகு ஜனாதிபதி இந்த நாட்டிலே ஏற்பட்ட பல பிரச்சனைகளுக்கு தீர்வுகளைக் கண்டுள்ளார். இந்த ஹலால் ஹராம் என்பது எங்களது உடம்போடு ஒட்டியுள்ள ஒரு விடயம், இது எமது மார்க்கம் சம்பந்தப்பட்ட விடயம், இதைப் பற்றி பாராளுமன்றத்திலோ, அல்லது மாகாண சபையிலோ அல்லது மற்ற சபைகளிலோ பேசி இனவாதத்தை தூண்ட வேண்டாம். நாங்கள் இதைப் பேசும் போது படிக்காத மக்கள், பாமர மக்கள் இதை ஒரு முறையற்ற விடயமாக கருதுவார்கள் ஆகவே இந்த விடயங்களை இன்று எங்களுடைய நாட்டின் ஜனாதிபதி அவர்களும், பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அவர்களும் இதற்கு ஒரு தீர்வைக் காண முயற்சித்து வருகிறார்கள். இவர்களது நடவடிக்கையை நாம் வரவேற்கிறோம்.

இந்த ஹலால் விடயம் சம்பந்தமாக இலங்கையிலுள்ள முஸ்லிம் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று கூடி ஒரு குழுவை அமைத்து இக்குழுவினர் பல தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர். ஆகவே இந்த ஹலால், ஹராம் என்பது எமது உடலோடு சேர்ந்த ஒரு விடயம்,எமது இரத்தத்தோடு சேர்ந்த ஒரு விடயம், இது எமது மார்க்கம், எங்களுடைய மார்க்கத்தை புறக்கணிக்க வேண்டாம். இந்த நாட்டிலே மூன்று இனங்களும் ஒன்று சேர்ந்து இந்த நாட்டிலே வாழ வேண்டும். ஒற்றுமையாக இருக்க வேண்டும். இவைகளையே எமது மார்க்கம் கூறுகிறது. எங்களுடைய மார்க்கத்தை புறக்கணிக்க வேண்டாம். இதைப்பற்றிப் பேசும் போது எமது மனம் புண்படுகிறது. ஆகவே இந்த விடயத்திற்கு ஒரு நல்ல தீர்வை எமது நாட்டின் ஜனாதிபதி தருவார்கள் என்று நம்புகின்றேன்.

இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத் உட்பட சகல முஸ்லிம் அங்கத்தவர்களும் உரையாற்றியதுடன் பொது ஜன ஐக்கிய முன்னணியின் உறுப்பினரும் கல்வியமைச்சருமான விமலவீரதிஸாநாயக்கவும் ஆதரவாக உரையாற்றினார். தமிழ் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இதில் கலந்து கொள்ளாது சபையில் அமர்ந்திருந்தனர்.

Advertisements

Written by lankamuslim

பிப்ரவரி 19, 2013 இல் 11:18 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: