Lankamuslim.org

One World One Ummah

பிரமிட் மற்றும் வலையமைப்பு (Network Marketing) வியாபார முறைமைகள் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்

leave a comment »

அஷ்ஷெய்க் ஜெம்ஸித் அஸீஸ் (நளீமி)
இன்று தொழில் நுட்பம் அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகிறது. பூகோளமயமாக்கல் (Globalization) முழு உலகையும் குக்கிராமமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது. 21ஆம் நூற்றாண்டு தொழில் நுட்பத்தின் உச்ச கட்டத்துக்குச் சென்று உயிரியல் தொழில்நுட்பம், மரபணு இயந்திரவியல் தொழில்நுட்பம், (Genetic Engineering) ) இயந்திர மனித தொழில்நுட்பவியல் (Robo Technology) என வியாபிக்கலாம் என எதிர்வுகூறப்படுகிறது.

மறுபக்கம் முதலாளித்துவ ஏகாதிபத்தியம் மனிதனை பேராசைக்காரனாகவும் பொருளாதாரத்தை மட்டுமே இலக்காகக் கொண்ட சுயநலமியாகவும் மாற்றி அழிவை நோக்கி வேகமாக அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது.

மனிதப் பேராசை ஒரு மாதத்தில், ஒரு வாரத்தில், ஒரு மணித்தியாலத்தில், ஒரு நிமிடத்தில், ஒரு வினாடியில் கோடி கோடியாய்ப் பணம் சம்பாதிப்பதற்கான திட்டங்களை வகுக்கக் காரணமாகி விட்டது. விளைவாக, மக்கள் விதம் விதமாய் ஏமாற்றப்படுகின்றார்கள். வெளிக் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு நஷ்டமடைந்து ஒட்டாண்டியாகி நடுத் தெருவிற்கு வருகின்றார்கள். பொருளீட்டலில் இஸ்லாம் வகுத்துத் தந்துள்ள அத்தனை கோட்பாடுகளையும் ஒருபுறம் ஒதுக்கி வைத்திவிட்டு பொக்கட் நிறைந்தால் போதும் என்ற மனப்பான்மையில் வாழும் மனிதன், அழிவின் விளிம்பில் நின்று கொண்டு நிறையவே சம்பாதிக்கின்றான் ஆனால் சாதிக்க மாட்டான்.

இன்று இலகுவான வழிகளில் அதிகமதிகம் சம்பாதித்துக் கொள்வதற்கான புதிய வர்த்தக, வியாபார, பொருளீட்டல் முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. வீட்டிலிருந்து கொண்டே உழைத்து தனக்கும் தன் பரம்பரைக்கும் சொத்துச் சேர்க்க முடியும் என்று போலிப் பிரசாரம் மேற்கொண்டு மக்களை ஏமாற்றிப் பிழைப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவற்றிலுள்ள முறைகேடுகள், இஸ்லாமிய வரையறைக்கு அப்பாற்பட்ட விடயங்கள் பற்றி அலட்டிக் கொள்ளாமல் முஸ்லிம்களும் கச்சை கட்டிக் கொண்டு களமிறங்கியுள்ளனர்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைவாய்ப்புகளுக்கு அனுப்புவது, மாணவர் விஸாவில் ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்புதல் என்ற பெயரில் அப்பாவிகளின் காசு பணத்தைப் பிடுங்கி ஏமாற்றி கொள்ளை இலாபமீட்டும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் தெருவுக்குத் தெருவாய் முளைத்திருக்கின்றன.

கொள்ளையர்கள் எந்தத் தோற்றத்திலும் வருவார்கள். இயந்திரமயமான வாழ்வில் அவர்கள் ஒரு கணினி அறைக்குள் இருந்து கொண்டே மிகக் குறுகிய காலப் பகுதிக்குள் தொகைதொகையாய்ப் பணம் தேடுவதற்கான முதலீட்டு முறைகளை கவர்ச்சிகரமாக அறிமுகப்படுத்துவார்கள். இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட வட்டியை, கொள்ளை இலாபத்தை வருமானமாகக் காண்பிப்பார்கள். சாதாரண உழைப்புக்கு பன்மடங்கு கூலி தருவதாக வாக்குறுதியளிப்பார்கள். இறுதியில் கண்களைக் கொத்திக் கொண்டு போன பிறகுதான் எம்மவர்கள் விழித்துக் கொள்வது வழமையாகி விட்டது.

ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருந்து கொண்டே இருப்பார்கள். இதனைத்தான் நாம் எமது கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றரோம் . மறுபக்கம் இப்படிப்பட்ட கொள்ளைக்காரர்களுக்கும் மோசடிக்காரர்களுக்கும் நம் நாட்டு ஊடகங்கள் கொடுக்கும் முக்கியத்துவமும் விளம்பரமும் மக்கள் மத்தியில் ஒரு வகையான நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கின்றன.

எனவே, இது விடயத்தில் ஊடகங்கள் பிரக்ஞையுடன் நடந்து கொள்ள வேண்டும். பணத்துக்காக எந்தக் குப்பையையும் விளம்பரப்படுத்தும் நிலை மாற வேண்டும். அதனையும் விட ஒரு முஸ்லிம் எதனைச் செய்கின்றபோதும் அதனைத் தீர விசாரித்து, இஸ்லாமிய வரையறைகளை அவதானித்து, ஆலிம்களின், அறிஞர்களின் ஆலோசனைகளைப் பெற்றே நடவடிக்கையில் இறங்க வேண்டும். அவசரப்பட்டு காரியத்தில் இறங்கி கைசேதப்படுவதை விடுத்து நிதானமாக செயற்படுவதுதான் ஒரு முஃமினின் பண்பாக இருக்க முடியும்.

பிரமிட் கட்டமைப்பு மற்றும் வலையமைப்பு வியாபார முறை பிரமிட் கட்டமைப்பு வியாபார முறை குறித்து இலங்கை மத்திய வங்கி பின்வருமாறு குறிப்பிடுகின்றது:

‘‘இத்திட்டத்தில் இணைந்து கொள்ளும் அங்கத்தவர்கள் ஆரம்பமாக அங்குள்ள ஊக்குவிப்பாளர்களுக்கு குறிப்பிட்ட தொகைப் பணத்தைச் செலுத்த வேண்டும். பின்னர் புதிய அங்கத்தவர்கள் மேலதிக அங்கத்தவர்களை சேர்த்துக் கொள்வர். பின்னர் அம்மேலதிக அங்கத்தவர்கள் மேலும் புதிய மேலதிக அங்கத்தவர்களை இணைத்துக் கொள்வர். இதன் மூலம் கிடைக்கும் இலாபத்தை பணமாகவோ அல்லது வேறு வகையான சலுகைகளாகவோ அங்கத்தவர்களுக்குப் பெற்றுக் கொடுப்பதாக வாக்குறுதி அளிக்கப்படும். இத்தகைய திட்டங்கள் பொருட்கள் மற்றும் சேவைகளை விற்பனை செய்யும் திட்டங்களாகவே தம்மை அறிமுகப்படுத்திக் கொள்கின்றன.’’

இப்பிரசாரத்தின்போது அவர்கள் அடிப்படைக் கோட்பாடாக, முன்வைப்பது உழைப்பின்றிகஷ்டப்படாமல் தாராளமாக பணம் ஈட்ட முடியும் ஒரு சில மாதங்களில் இலட்சாதிபதியாகி விடலாம் என்பதாகும்.

யாராவது ஒரு நபரை இவ்வியாபாரத்திற்குள் உள்வாங்கியதன் பின்னர், அவரிடம் நூற்றுக் கணக்கானோருக்கு மத்தியிலேயே உங்களைத் தெரிவு செய்துள்ளோம் எனக் கூறி ஊக்குவித்து இந்நாசகார வியாபாரத்தில் மக்களை சிக்கவைப்பதற்காக வீடு தேடிச் சென்று மூளைச் சலவை செய்கின்றனர். மட்டுமன்றி, பேஸ் புக் ஊடாகவும் தங்களது பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர்.

தொழிலின்றி வீடுகளில் இருக்கின்ற இளைஞர், யுவதிகளே இவர்களது பிரதான இலக்காகும். ‘‘பணம் இல்லை என்று கவலைப்படாதீர்கள் அதனை ஒரு பிரச்சினையாகவே எடுத்துக் கொள்ளத் தேவையில்லை’’ என்று பசப்பு வார்த்தைகளைக் கூறி இத்தகைய தொழில் வாய்ப்பற்ற இளைஞர், யுவதிகளை ஊக்குவிக்கின்றனர். வீடு, காணி, வாகனம் அல்லது வேறு ஏதாவது சொத்துக்களை அடகு வைத்தாவது இவ்வியாபாரத்திற்கு பணத்தை முதலீடு செய்யுமாறும் அதன் மூலம் தாராளமாக சம்பாதிக்க முடியும் என்றும் கூறுகின்றனர்.

பிரமிட் கட்டமைப்பு மற்றும் வலையமைப்பு வியாபார முறையின் இயல்புகள்:

 • இத்திட்டத்தில் இணைந்து கொள்வதற்கு திட்டத்தின் ஊக்குவிப்பாளர்கள் புதிய பங்குபற்றுபவர்களை பொருட்கள் அல்லது சேவைகளை கொள்வனவு செய்வதன் மூலம் பணத்தை முதலீடு செய்யுமாறு வேண்டப்படுவதுடன் அப்பொருட்கள் அல்லது சேவைகளை விற்பனை செய்வதன் மூலம் இத்திட்டத்திற்கு மேலதிக பங்குபற்றுபவர்களைக் கொண்டுவருமாறும் வேண்டப்படுகின்றனர்.
 • சந்தையில் இப்பொருட்கள் அல்லது சேவைகளுக்கு பலமான கேள்வி இல்லாதிருப்பதுடன் ஊக்குவிப்பாளர்களினூடாக மட்டுமே இவை கிடைக்கக் கூடியதாகவும் இருக்கின்றன.
 • இத்திட்டத்தில் சேர்வதற்கான நுழைவுக் கட்டணம் பெரும்பாலும் உயர்வாகவே இருக்கின்றது. இது ஊக்குவிப்பாளர்களினால் வழங்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளுக்கான விலையினூடாக கட்டணமாக விதிக்கப்படலாம்.
 • இப்பொருட்களுக்கு இரண்டாந்தரச் சந்தை இல்லாதிருப்பதுடன், விற்கப்பட்ட பொருட்கள் அல்லது சேவைகளுக்கான விற்பனைகளுக்குப் பிந்திய சேவைகளுக்கான உத்தரவாதம் ஊக்குவிப்பாளர்களினால் ஒருபோதும் வழங்கப்படுவதில்லை.
 • பங்குபற்றுபவர்களால் விற்கப்பட்ட பொருட்கள் அல்லது சேவைகளுக்கான தரகு அவர்களுக்கு வழமையாக வழங்கப்படுவதில்லை. ஆனால் அதிகூடிய வருமானங்களைப் பெற வேண்டுமெனில் புதிய பங்குபற்றுனர்களை அதிகமாக சேர்த்துக் கொள்ளல் வேண்டும். அறிவுரை ஒரு பங்குபற்றுபவரின் இலாபம் அவரினால் கொண்டுவரப்படும் புதிய ஆட்சேர்ப்புக்களின் எண்ணிக்கையிலேயே தங்கியிருக்கின்றது.
 • இறுதி நுகர்வோருக்கு பொருட்கள் அல்லது சேவைகளை சில்லறையாக விற்பனை செய்யும் நோக்கம் இத்திட்டத்தில் சிறிதளவாகவே காணப்படுகின்றது.எ செயற்பாட்டுப் பிரதேசங்கள், பிரிவு அல்லது செயற்களம் தொடர்பான நியாயமான ஒரு திட்டம் இல்லாதிருப்பதுடன், ஊக்குவிப்பாளர்கள் பொதுவாக எந்தவொரு நியாயமான அல்லது பகுத்தறிவுக்குட்பட்ட வரையறைகள் இல்லாமல் அதிகரித்த ஆட்சேர்ப்புகளுக்கு ஊக்கமளிக்கின்றார்கள்.
 • நம்ப முடியாத வருமானங்கள் பற்றிய தவறான உறுதிகள்: ஊக்குவிப்புப் பிரசுரங்கள் அல்லது ஊக்குவிப்பாளர் நம்ப முடியாத வருமானங்கள் (உம் ‘‘சட்ட ரீதியாக மாதாந்தம் ரூ. 100,000 இனைப் பெறுதல்’’) அல்லது ‘‘வளமானதும் சந்தோசமானதுமான வாழ்க்கை ’’, ‘‘இலகுவாக புதிய நபர்களை சேர்த்துக் கொள்ள முடியும்’’ போன்ற நன்மைகளைப் பெற முடியும் என உறுதிகளை அளிக்கின்றனர்.
 • திட்டத்தின் எதிர்காலம்: திட்டத்தின் அடிமட்டத்திலிருக்கும் புதிய பங்குபற்றுபவர்கள் புதிய ஆட்சேர்ப்புக்களைச் செய்ய முடியாத நிலை எழும்போது அவர்கள் தமது முதலீட்டை இழக்க வேண்டி ஏற்படுவதுடன் அத்திட்டம் முறிவடையும் நிலையும் ஏற்படும்.

குற்றவாளிகளுக்கு சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் தண்டனை

இலங்கையின் எல்லாப் பாகங்களிலும் அமுலிலிருக்கின்ற இந்நாசகார பிரமிட் திட்டத்திற்கு சமூகம் மிக வேகமாக இரையாகிக் கொண்டிருக்கின்றது. ஏனெனில், குறித்த தரப்பினர் மேற்கொண்டு வரும் கவர்ச்சிகரமான பிரசாரமும் தூண்டுதலுமே இதற்குக் காரணம்.

மத்திய வங்கியின் அறிக்கைப்படி, தடைசெய்யப்பட்ட திட்டங்களில் பங்குபற்றி குற்றவாளியாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒருவர் பின்வரும் தண்டனைகளுக்கு உட்படுவார்.

 • மூன்று வருடங்களுக்குக் குறையாத சிறைத் தண்டனை அல்லது
 • ஒரு மில்லியன் ரூபாவுக்குக் குறையாத அபராதம் அல்லது
 • சிறைத் தண்டனை மற்றும் அபராதம்

மற்றைய ஒரு நபருக்கு இழப்பு அல்லது தீமையை உண்டுபண்ணும் விதத்தில் குற்றங்களானது சுய விருப்பத்துடன் அல்லது தெரிந்து கொண்டு புரியப்பட்டிருந்தால் அதற்கான தண்டனைகள்:

 • மூன்று வருடங்களுக்கு குறையாத மற்றும் ஐந்து வருடங்களுக்கு மேற்படாத கடூழியச் சிறைத் தண்டனை மற்றும்
 • இரண்டு மில்லியன் ரூபா அபராதம் அல்லது திட்டத்தில் பங்குபற்றுபவர்களிடமிருந்து பெறப்பட்ட முழுப் பணத் தொகையின் இரு மடங்கு என்பவற்றில் ஆகக் கூடிய தொகையைக் கொண்ட அபராதம்.

எனவே, பிரமிட் கட்டமைப்பைக் கொண்ட திட்டத்தில் பங்குபற்றுதல் சட்ட விரோதமானதாகும். பிரமிட் கட்டமைப்பைக் கொண்ட திட்டங்கள் வங்கித் தொழில் சட்டத்தின் 83உ பிரிவின் கீழ் சட்ட விரோதமானதாகும். மேலும் சில கொடுப்பனவுகள் மற்றும் கொடுக்கல் வாங்கல் என்பன வெளினாட்டுச் செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டம் மேலும் பணத்தை தூய தாக்கல் தடைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படலாம். இவ்வாறான திட்டங்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆரம்பித்தல், வழங்குதல், ஏற்பாடுசெய்தல், விளம்பரப்படுத்துதல், கொண்டு நடத்துதல், நிதியிடுதல், நிர்வகித்தல் அல்லது நெறிப்படுத்தல் ஆகியனவும் சட்ட விரோதச் செயல்களாகும்.

பிரமிட் மற்றும் வலையமைப்பு வியாபார முறை (நேவறழசம ஆயசமநiபெ) தொடர்பான ஷாரீஆவின் கண்ணோட்டம்

பிரமிட் மற்றும் வலைமைப்பு (நேவறழசம ஆயசமநவiபெ ஃ ஆரடவi டுநஎநட )வியாபார முறைமை குறித்து கருத்து வேறுபாடுகள் நிலவிய போதிலும் சமகால இஸ்லாமிய அறிஞர்களில் பெரும்பாலானோர் இதனை ஹராம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர். இஸ்லாமிய பொருளியல் துறை அறிஞர்களும் இவ்வியாபார முறைமை ஆகுமானதல்ல என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஹராம் என்பதில் உடன்படும் பெரும்பான்மை அறிஞர்கள் முன்வைக்கும் நியாயம்

1. இவ்வியாபாரம் சூது, மோசடி, மயக்கம் (ஊழகெரளந) போன்றவற்றை ஒத்திருக்கின்றமை.

சூதாட்டமும் மோசடியும் இஸ்லாம் வன்மையாகக் கண்டித்துத் தடுத்துள்ள பாவகாரியங்களாகும்.

‘‘விசுவாசம் கொண்டோரே! நிச்சயமாக மதுவும் சூதாட்டமும் விக்கிரக ஆராதனையும் அம்பெறிந்து குறிகேட்பதும் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும். ஆகவே, நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.’’ (அல்மாஇதா: 90)

சூதாட்டம் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களில் ஒன்றாக இருப்பதால் முஃமின்கள் இவ்வாறான அனைத்து இழிவான செயல்களிலிருந்தும் முற்றாகத் தவிர்ந்து நடந்து கொள்ள வேண்டுமென அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.
சிரமப்படாது பணம் சம்பாதிப்பதற்கு சூதாட்டம் வழிவகுக்கின்றது. மதுவைப் போலவே சூதாட்டமும் மனித புத்தியை நிலைகுலையச் செய்கிறது. சூதாட்டத்தின் பால் கவரப்படும் மனிதன் மதிமயங்கி அதிலிருந்து விடுபட முடியாத நிலைக்கு ஆளாகின்றான். சூதாட்டத்தில் ஈடுபடுவோரின் நோக்கம் பிறரின் பணத்தைச் சுரண்டுவதைத் தவிர வேறில்லை.

சூதாட்டத்தின் பாதிப்புக்கள் தனி மனிதனில் மாத்திரமின்றி முழு சமூகத்திலும் பாரிய தாக்கம் செலுத்தும். எனவே, வியாபாரம் என்ற பெயரில் சூதாட்டத்தை மக்கள் மயப்படுத்துவது முழு சமூகத்துக்கும் செய்யும் பெரும் துரோகமாகும்.

‘‘நிச்சமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம் மது மற்றும் சூதாட்டத்தின் மூலம் உங்களிடையே பகைமையையும் வெறுப்பையும் உண்டுபண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும் தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான். எனவே, அவற்றை விட்டு நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?’’ (அல்மாஇதா: 91)

2. வட்டியின் இயல்புகளைக் கொண்டிருக்கின்றமை

‘‘விசுவாசம் கொண்டேரே! அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள் மேலும் நீங்கள் (உண்மையாகவே) விசுவாசம் கொண்டவர்களாக இருப்பின் வட்டியில் (எடுத்ததுபோக) எஞ்சியிருப்பதை (எடுக்காமல்) விட்டு விடுங்கள். அவ்வாறு செய்யாவிடின் அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் போர் இடுவதாகப் பிரகடனம் செய்து விடுங்கள். மேலும் நீங்கள் தவ்பாச் செய்யது மீண்டு மிட்டால் உங்கள் செல்வங்களின் அசல் தொகை உங்களுக்குண்டு. நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள். (அவ்வாறே) நீங்களும் (மூலத் தொகையைப்) பெற்றுக் கொள்வதிலிருந்து அநியாயம் செய்யப்டமாட்டீர்கள்.’’ (அல்பகரா: 278,279)

3.பொது மக்களின் சொத்து, செல்வங்களை அநியாயமான முறையில் சுரண்டும் வகையில் வியாபார முறை அமைந்திருகின்றமை.

இப்போதெல்லாம் மக்களை ஏமாற்றிப் பிழைப்பதற்கென்றே திட்டமிடப்படுகிறது. வெளிக் கவர்ச்சிகளைக் காண்பித்து திட்டமிட்ட அடிப்படையில் ஏமாற்றிப் பிழைப்பவர்கள் ஏராளம். ஏமாற்றும் நோக்கில் எந்த ஒரு செயலைச் செய்தாலும் அதனை இஸ்லாம் வன்மையாகவே எதிர்க்கிறது. வியாபார நடவடிக்கைகளின்போதே ஏமாற்றுதல் அதிகம் இடம்பெறுகின்றது.

‘‘விசுவாசங் கொண்டோரே, உங்களிடையே இரு சாராரின் சம்மதத்தின் பேரில் நடைபெறும் வர்த்தக மூலமாகவன்றி (உங்களுடைய) பொருட்களைக் தவறான முறையில் நீங்கள் உண்ணாதீர்கள் அன்றியும் (இதற்காக) உங்களையே நீங்கள் கொலை செய்து கொள்ளாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிகக் கிருபையுடையோனாக இருக்கின்றான்.’’ (அந்நிஸா: 29)

இவ்வியாபார ஒழுங்கில் ஆரம்பத்தில் இணைந்து கொள்கின்றவர்கள் அவர்களுக்குக் கீழால் இத்திட்டத்தில் இணைந்து கொள்பவர்களின் உழைப்பின் மூலம் கூலியையும் பெற்றுக் கொண்டு அதிகளவில் இலாபமடைவர். கம்பனி கொள்ளை இலாபம் பெறும். இத்திட்டத்தில் கடைசியாக இணைந்து கொள்கின்றவர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படுவர்.

4. வியாபார முறையின் அடிப்படையிலும் உற்பத்தியிப் பொருட்களின் நிர்ணய விலையிலும் ஒருவகை மோசடி மற்றும் குளறுபடிகள் காணப்படுதல். அதாவது, இத்திட்டத்தில் வியாபாரப் பொருட்கள் பெரியளவில் ஜனரஞ்சகப் படுத்தப்படுவதில்லை. வியாபார ஒழுங்கும் அதில் இணைந்து கொள்வதன் மூலம் கிடைக்கும் சலுகைகளுமே பொதுவாக வர்ணிக்கப்படுகிறது. அதன் மூலமே மக்கள் இவ் வியாபாரத்தில் இணைத்துக் கொள்ளப்படுகின்றார்கள்.

எனவே, இவ்வியாபார முறையில் வலையமைப்பை அதிகரித்துக் கொள்வதற்காக எப்படிப்பட்ட பொய்யையும் சொல்லி ஏமாற்றுவதற்கான வாய்ப்புகள் நிறையவே காணப்படுகின்றன.

சிலர் இதனை இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட ‘தரகு’ வியாபார முறையுடன் ஒப்பிடுகின்றனர். ஆனால் தரகு வியாபார முறையுடன் இது முரண்படுகிறது. ஏனெனில், தரகு வியாபார முறையில் தரகர் பொருளை கட்டாயமாக கொள்வனவு செய்ய வேண்டுமென நிர்ப்பந்திக்கப்படுவதில்லை. ஆனால், வலையமைப்பு மற்றும் பிரமிட் முறைகளில் தரகர் கட்டாயமாக பொருளைக் கொள்வனவு செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறார்.

மற்றும் சிலர் இவ்வியாபார முறையும் சாதாரணமாக நடைபெறும் வியாபாரத்தை ஒத்தது என்றும் இங்கு பொருளுக்குப் பகரமாக பணம் பெறப்படுகின்றது என்றும் அதேநேரம் சந்தைப்படுத்தலைச் செய்ததற்காக தரகுப் பணத்தையும் (….) பெறுகிறார் என்று நியாயம் கற்பிக்கின்றான்.

எனினும், பொதுவான வியாபாரத்தைப் போன்று இவ்வியாபாரத்தில் வியாபாரப் பொருள் கருத்திற் கொள்ளப்படுவதில்லை.
இதன் முழு நோக்கமுமே தரகுப் பணத்தைப் பெறுவதும் புதிய புதிய பங்குபற்றுனர்களை பல்வேறு வடிவில் உள்வாங்குவதும்தான். இவ்வியாபாரத்தை ஆகுமாக்கிக் கொள்ளும் நோக்கிலேயே பொருள் ஓர் உபாயமாகப் பயன்படுத்தப்படுகின்றது.

எனவே, இங்கு தந்திரமாக, மக்களை ஏமாற்றும் நோக்குடன் பொருள் சந்தைப்படுத்தப்படுவது புலனாகின்றது. மட்டுமன்றி, இஸ்லாமிய சட்ட அடிப்படைகளுள் ஒன்றான ‘‘ஹராமான விடயங்களுக்குப் பயன்படுத்தப்படும் உபாயமும் ஹராமாகும்’’ என்ற சட்ட அடிப்படையில் நோக்கும்போதும் இவ்வியாபார முறை அனுமதிக்கப்பட்டதல்ல. மற்றும் சிலர் இதனை இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட ‘ஜிஆலா’ எனும் வியாபார முறையோடு ஒப்பிடுகின்றார்.

என்றாலும் ஜிஆலா வியாபார முறையில், இவ்வியாபார முறையைப் போன்று பொருள் கொள்வனவு செய்யப்படுவது நிபந்தனையாக இடப்படுவதில்லை.
இன்னும் சிலர் ‘வகாலா’ எனும் வியாபார முறையுடன் ஒப்பிட்டு இதனைக் கூடும் என்கின்றனர். ஆனாலும், வகாலா வியாபார முறையில் வகீலாக செயற்படுபவர் குறித்த நபரிடமோ அல்லது கம்பனியிடமோ வகீலாக செயற்படுவதற்கு பணம் செலுத்துவதில்லை. எனினும், பிரமிட் மற்றும் வலையமைப்பு வியாபார முறைகளில் தரகராக இருப்பதற்கு பொருளைக் கொள்வனவு செய்தல் என்ற பெயரில் பங்குபற்றுனர் பணம் செலுத்த நிர்ப்பந்திக்கப்படுகின்றார்.

ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்ப்பு

இஸ்லாம் ஹலாலையும் ஹராத்தையும் தெளிவாக பிரித்துக் காட்டியிருக்கிறது.

‘‘நிச்சயமாக ஹலாலும் தெளிவானது ஹராமும் தெளிவானது ஆனால் அவ்விரண்டிலும் பெரும்பாலானவர்கள் அறிந்து கொள்ளாத சந்தேகத்துக்கிடமான அம்சங்கள் நிறையவே காணப்படுகின்றன. யார் சந்தேகத்துக்கிடமான விடயங்களில் அல்லாஹ்வுக்கு அஞ்சி பயபக்தியுடன் நடந்து கொள்கின்றாரோ அவர் மார்க்கத்தையும் மானத்தையும் காப்பாற்றிக் கொண்டார். யார் சந்தேகமான விடயங்களில் ஈடுபடுகின்றாரோ அவர் ஹராமான விடயத்தில் ஈடுபடுகின்றார்.’’ (அல்புகாரி, முஸ்லிம்)

எனவே, இவ்வியாபார முறைமையில் சந்தேகத்துக்கிடமான, மயக்கமாக பல விடயங்கள் இருக்கின்ற அதேவேளை, இது ஒரு வகையான சூதாட்டம், மோசடி போன்றிருப்பதனாலும் வியாபார ஒழுங்குகள் பேணப்படாதிருப்பதனாலும் இது விடயத்தில் ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்வுக்கு அஞ்சி பேணுதலாக நடந்து கொள்ள வேண்டும். அல்லாதபோது ஹராத்தில் வீழ்ந்து எம்மையே நாம் அழித்துக் கொள்ளும் நிலை உருவாகும்.

வலைமைப்பு (நேவறழசம ஆயசமநவiபெ) மற்றும் பிரமிட் வியாபார முறைமைகள் ஹராமென தீர்ப்பு வழங்கிய பத்வா நிறுவனங்கள், இஸ்லாமிய அறிஞர்கள்

1. ஸஊதி அரேபியாவின் அறிவாராய்ச்சிக்கும் பத்வாக்களுக்குமான ஒன்றியம்

2. சூடானிலுள்ள பிக்ஹ் ஒன்றியம்

3. எகிப்திலுல்ல ஜமாஅதுஸ் ஸுன்னதில் முஹம்மதிய்யா பத்வா கமிட்டி (கலாநிதி அலி அஸ்ஸாலூஸ், கலாநிதி ஜமால் முராகிபா, கலாநிதி அப்துல்லாஹ் ஷாகிர், கலாநிதிஅப்துல் அழீம் பதவி, அஷ்ஷெய்க் ஸகரிய்யா ஹுஸைனி, அஷ்ஷெய்க் முஆவியா முஹம்மத் ஹைகல், அஷ்ஷெய்க் கமால் அப்துர் ரஹ்மான்)

4. ஹலப் நாட்டின் பத்வாவுக்கான மையம்

5. இமாம் அல்பானி கல்வி நிலையத்தின் பத்வா கமிட்டி

6. கட்டார் இஸ்லாமிய பத்வா நிலையம்

7. கலாநிதி ஸாமி அஸ்ஸுவைலிம்

8. கலாநிதி இப்றாஹீம் அழ்ழாPர்

9. கலாநிதி ரபீக் யூனுஸ் மிஸ்ரி

10. கலாநிதி ஹஸன் ஷஹ்ஹாதா

11. கலாநிதி அலி முஹ்யுத்தீன் அல்கர்ஹ் தாகீ

12. கலாநிதி யூஸுப் இப்னு அப்துல்லாஹ் அஷ்ஷபீலி

13. கலாநிதி அப்துல்லாஹ் அர்ரக்பான்

14. கலாநிதி முஹம்மத் அல்அஸீமி

15. கலாநிதி உமர் அல்முக்பில்

16. கலாநிதி ஹுஸைன் அஷ்ஷஹ்ரானி

17. கலாநிதி புன்துர் அத்தையாபி

18. கலாநிதி ஸல்மான் அல்அவ்தா

19. கலாநிதி அப்துல் முஹ்ஸின் அல்அபீகான்

20. கலாநிதி அப்துல் முஹ்ஸின் அஸ்ஸாமில்

21. கலாநிதி அப்துல் ஹை யூஸுப்

22. கலாநிதி அஹ்மத் அஸ்ஸஹ்லி

23. கலாநிதி அப்துர் ரஹ்மான் அல்அத்ரம்

24. கலாநிதி அப்துல் முஹ்ஸின் அவ்தா

25. கலாநிதி ஸஅத் அல்ஹுஸ்லான்

26. கலாநிதி அப்துல்லாஹ் அஸ்ஸமக்

27. கலாநிதி அல்ஹமத் அல்ஹஜ் அல்குர்தி

28. கலாநிதி றியாழ் முஹம்மத் அல்முஸைமிரி

29. கலாநிதி ரஜப் அபூ மலீஹ்

30. கலாநிதி ஹாலித் மிஷைகஹ்

31. கலாநிதி ஸப்வத் ஹிஜாஸி

32. கலாநிதி அப்துல் ஹை அல்பர்மாவி

33. அஷ்ஷெய்க் அப்துல் அஸீஸ் பின் ஸாலிஹ் ஹுதா

34. அஷ்ஷெய்க் முஹம்மத் ஹமூத் அந்நஜ்தி

35. அஷ்ஷெய்க் அலி ஹஸன்

36. அஷ்ஷெய்க் முஹம்மத் அல்முன்ஜித்

ஹராம் எனக் குறிப்பிடும் இஸ்லாமிய பொருளியல் அறிஞர்கள்

01. கலாநிதி ஸாமி அஸ்ஸுவைலிம்

02. கலாநிதி இப்ராஹீம் ழாPர்

துணைநின்றவை:

 • Central Bank Report Series- 04, Danger Posed By Pyramid Schemes & Network Marketing Programes, May, 2006
 • http://www.balfaqeh@windowslive.com  எனும் இணையதளத்தில் இஸ்லாமிய சட்ட அறிஞர் ஸாஹித் ஸாலிம் அவர்களால் தொகுக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை
Advertisements

Written by lankamuslim

ஜூலை 12, 2012 இல் 9:00 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: