Lankamuslim.org

One World One Ummah

போருக்குப் பின்னரான இலங்கையில் புனர்நிர்மானம் செய்யப் பட வேண்டிய தமிழ் முஸ்லிம் உறவு.!

leave a comment »

அஷ் ஷெய்க் கலாநிதி மஸிஹுதீன் இனமுல்லாஹ் நளீமி
இனங்களுக்கிடையிலான முறுகல் இன்று நேற்றோ சுதந்திரத்திற்குப் பின்னரோ அதற்கு சற்று முன்னரோ ஆரம்பித்த ஒன்று அல்ல என்பதனை நாம் அறிந்து வைத்துள்ளோம்,  காலனித்துவ படையெடுப்புகளுக்கு முன்பிருந்தே  பண்டைய இலங்கை, வரலாறு நெடுகிலும்  ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்குமிடையிலான போராட்டங்கள் முதல் சேரர் சோழர் பாண்டியர் என பல்வேறு படை எடுப்புக்களுக்கும்  , சிங்கள தமிழ் ஆட்சியாளர்களின் தொடர் தேர்ச்சியான மோதல்களுக்கும் முகம் கொடுத்திருக்கிறது.

தற்போதைய இன முருகல்களை கிட்டிய வரலாற்றுடன் தொடர்பு படுத்துவதாயின் 19 ஆம்  நூற்றாண்டில் இலங்கை சுதந்திரமடைவதற்கு ஓரிரு தசாப்தங்களுக்கு முன்பிருந்தே ஆரம்பமாகியிருப்பதனை அவதானிக்கலாம், அமரர் ஜி ஜி பொன்னம்பலம் அவர்களுடையா 50 க்கு 50 கோரிக்கையின் பின்னணிகள், சாத்வீகப் போராட்டங்கள் , அமரர்  செல்வநாயகம் அவர்களின் வட்டுக்கோட்டைப் பிரகடனம் வரையிலான அரசியலும் தொடர்ந்து 1983 கலவரங்களுக்குப் பின்னரான வன்முறைப் போராட்டங்களும் தமிழ் சிங்கள உறவை மாத்திரமன்றி அவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலான உறவுகளைக்  கூட மிகவும் ஆழமான வடுக்களுடன் துண்டாடி வைத்துள்ளன.

முஸ்லிம் களைப் பொறுத்தவரை நமது அரபு மற்றும் தென்னிந்திய வம்சாவளி பூர்வீகமும், வர்த்தக சமூகம் எனும் அடையாளமும் நாட்டில் சிங்கள  மற்றும் தமிழ் சமூகங்களுடனான உறவுகளை வலுப்படுத்தி வாழுகின்ற ஒரு வரலாற்றையே கொண்டிருந்தன.  துரதிஷ்ட வசமாக காலனித்துவ சக்திகளின் வருகையுடன் முஸ்லிம்களது இருப்பு இந்த நாட்டில் தொடர் தேர்ச்சியாக கேள்விக்குறியாக்கப் பட்டிருந்தது, அதற்கு  மூன்று பிரதான காரணங்கள் இருந்தன:

முதலாவதாக, காலனித்துவ சக்திகள் முஸ்லிம்களின் கடல் வழி சர்வதேச வர்த்தகத்தை சூறையாடிக் கொண்டே உலகெங்கும் தமது ஆதிக்கத்தை மேலோங்கச் செய்து வந்தனர். இரண்டாவதாக, மத்திய காலப்பகுதியில் ஆசிய எங்கும் பறந்து விரிந்திருந்த இஸ்லாத்திற்கு எதிராக அவர்கள் தமது சிலுவை யுத்தத்தை உலக மயமாக்கிக் கொண்டே உலகெங்கும் சென்றமை, இந்த இரண்டு காரனங்களுக்காகவும் வெள்ளையர்கள் முஸ்லிம்களை சென்ற இடமெல்லாம் துரத்திக் கொண்டே இருந்தார்கள்.!

மூன்றாவது ஆங்கிலேயரது படையெடுப்புகளின் பொழுது இந்த நாட்டில் முஸ்லிகள் சிங்கள மன்னர்களோடு சேர்ந்து இந்த நாட்டை காப்பதற்கு போரிட்டதாலும் மலாய ஜாவா போன்ற தீவுப் பகுதிகளில் இருந்து முஸ்லிம் போராளிகளை வரவழைத்துப் போரிட்டமையும் முஸ்லிம்கள் மீது காலனித்துவ சக்திகளுக்கு பெரும் வைராக்கியத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தியிருந்தது.

இலங்கையில் கூட ஒல்லாந்தர் காலத்தில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொள்ளப் பட்டார்கள். அவ்வாறு முஸ்லிம்கள் கொள்ளப் படாதிருந்தால் இந்த நாடு ஒரு முஸ்லிம் பெரும்பான்மை நாடாகக் கூட இருந்திருக்கலாம் என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

இந்த நாட்டிற்கு  வட இந்தியாவிலிருந்து வருகை தந்த ஆரிய சிங்களவர்களும் பௌத்த மதமும், தென்னிந்திய திராவிட தமிழர்களும் இந்து மதமும்   கொண்டிருக்கின்ற பூர்வீகத்தையும் வரலாற்றையும் முஸ்லிம்களாகிய நாங்களும் எமது மார்க்கம் முகம்மதிய இஸ்லாமும் கொண்டிருக்கின்றமை இன்று அடுத்த சமூகங்களால் மறக்கப் படுவதற்கு பல நியாயங்கள் இருக்கின்றன.!

வெள்ளையர்களால் முஸ்லிம்கள் இலக்கு வைக்கப் படுகின்ற பொழுதெல்லாம் சிங்கள மன்னர்கள் முஸ்லிம்களுக்கு அபயம் அளித்ததோடு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வாழ்வதற்கும் வழியமைத்துக் கொடுத்தனர்,  துரதிஷ்ட வசமாக  19 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப கால கட்டங்களில் சிங்கள தேசிய வாத சக்திகளின் தோற்றத்துடன் வர்த்தக சமூகமான முஸ்லிம்களும், காலனித்துவ ஆட்சியின் கீழ் கல்விச் சமூகமாகவும் அதிகாரமிக்க சமூகமாகவும் இருந்த தமிழ் சமூகமும் இலக்கு வைக்கப் பட்ட பொழுது குறிப்பாக 1919 ஆம்  ஆண்டு இடம் பெற்ற சிங்கள முஸ்லிம் கலவரத்தோடு முஸ்லிம்களும் தனித்துவ அடையாளமுள்ள சமூகமாக சிந்திக்கத் தலைப்  பட்டனர். சிங்கள சமூகம் முஸ்லிம்கள் மீது  சீறிப் பாய்ந்த பொழுதெல்லாம் தமிழ்த் தலைவர்கள் முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்தனர், குறிப்பாக தந்தை செல்வாவுடையா பெடரல் கட்சியுடன் முஸ்லிம்கள் நல்ல உறவுகளைக்  கொண்டிருந்தனர், என்றாலும் காலப் போக்கில் இரண்டு சமூகங்களினதும் அபிலாஷைகள் முரண் பட்ட பொழுது முஸ்லிம்கள் தமது எதிர்காலம் கேள்விக் குறியாக இருப்பதனை உணர்ந்தனர்.

இலங்கை வாழ் முஸ்லிம்கள் தங்களை சோனகர் என்ற அடையாளத்துடன் இலங்கை சோனகர் சங்கம் என ஒரு தலைமையை தோற்றுவித்துக் கொள்ள மற்றும் சில தலைவர்கள் சோனகர்கள் என்ற பதம் வட இந்திய தென்னிந்திய மலாய பூர்வீகங்களையும்  கொண்டவர்களை உள்ளடக்க மாட்டது என்பதனால் அகில இலங்கை முஸ்லிம் லீக் என்ற அமைப்பையும் தோற்றுவித்து இனத்துவ அடையாள அரசியல் குறித்து சிந்தித்து செயற்பட ஆரம்பித்தனர்.

முஸ்லிம்கள் நாடு முழுவதும் பறந்து வாழ்ந்து வந்ததனாலும் குறிப்பாக மூன்றில் இரண்டு பகுதியினர் வடகிழக்கிற்கு வெளியே சிங்கள மக்களுடன் கலந்து வாழ்ந்த தானாலும் மத்திய தேசியக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியுடனும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடனும் இணைந்து தேசிய அரசியலில் ஈடுபடத் தொடங்கினர். வட கிழக்கில் முஸ்லிம்கள் தமிழ்க் கட்சிகளுடனும் ஓரளவு புரிந்துணர்வுடன் செயற்பட்டதோடு, சுயாட்சிக் காண போராட்டம் ஆரம்பமாகிய போது முஸ்லிம் இளைஞர்களும் தமிழ் மக்களின் நியாயமான போராட்டங்களுடன் தம்மையும் இணைத்துக் கொண்டனர். சில போது கொழும்புத் தலைமையினைக் கூட முஸ்லிம்கள் நிராகரிக்குமளவுக்கு  புதிய களநிலவரங்கள் உருவாகின.

சிங்களப் பெரினத்திற்கும் தமிழ் சமூகத்திற்கு மிடையிலான  சாத்வீக வழிப் போராட்டங்கள் உச்ச கட்டத்தை அடைந்த பொழுதும் பின்னர் வன்முறைப் போராட்டமாக வெடித்த பொழுதும் முஸ்லிம்கள் சண்டி போடுகின்ற இரண்டு யானைகளுக்கு மத்தியில் அகப்பட்டுக் கொண்ட பற்றைகளாக மாறிப் போயினர்.! குறிப்பாக தமிழ்ப் போராளிகள் முஸ்லிம்கள் பக்கம் தமது துப்பாக்கிகளைத் திருப்பிய பொழுது தமிழ் சமூகம் தெளிவாக ஒரு செய்தியை முஸ்லிம்களுக்கு சொல்வதனை முஸ்லிம்கள் புரிந்து கொண்டனர்.

“தமிழ்ப் பேசும் ” சமூகம் என்ற வரையறைக்குள் சோனி என்கின்ற முஸ்லிம் சமூகம் உள்வாங்கப் பட முடியாது என்ற செய்தியை வரலாறு நெடுகிலும் மறக்க முடியாத ஆயுத மொழியினால் முஸ்லிம்களுக்குப் புரிய வைத்தார்கள்..மாத்திரமல்லாது தமிழ்த் தாயகத்தில் முஸ்லிம்கள் வந்தேறு குடிகள் என்று கூறி அவர்களை வட கிலாகில் இனச் சுத்தி கரிப்பு செய்கின்ற நடவடிக்கைகளை மேற்கொண்டனர். வட புல முஸ்லிம்களை ஒரே இரவில் இந்து மாவட்டங்களில் இருந்தும் துரத்தி அடித்தனர், கிழக்கில் முஸ்லிம்களை சொந்த மண்ணில் அகதிகளாக்-கியுள்ள-னர்.

கடந்த காலங்களில் பேரின அரசிடம் பாதுகாப்பும் அபயமும் கேட்டு முஸ்லிம்களை மண்டியிட வைத்ததும் சரணாகதி அரசியல் செய்ய வைத்ததும் போராளிகளும் விடுதலைப் புலிகளும் அவர்களது அரசியல் வாரிசுகளும் தான் இந்த கசப்பான உணமைகளை சீரணித்து  அவற்றிற்கான இழப்பீட்டு அரசியலை தமிழ் சமூகம் செய்யத வரையில் தமிழ் முஸ்லிம் உறவு என்பது தொடர்ந்தும் கேள்விக் குறியாகவே இருக்கும்!

இஸ்ரேலிடமும் இந்திய ரோ விடமும் பயிற்சி பெற்ற தமிழ்ப் போராளிகள்  அந்தந்த தேசங்களின் நலன்களுக்காகவே முட்டாள் தனமாக முஸ்லிகள் மீது தமது துப்பாக்கிகளை திருப்பினார்கள் என்பதனை அவர்கள் உணர்ந்து கொள்ள சுமார் மூன்று தசாப்தங்கள் எடுத்திருக்கின்றன. தமிழினத்தின் நியாயமான சுயாட்சிக்கான போராட்டம் கோர யுத்தத்தினால் நசுக்கப் பட்டு நாசமைப்  போனமைக்கான முதன்மையான காரணம் முஸ்லிம்களின் தனித்துவத்தையும் நியாயமான அபிலாஷைகளையும் புரிந்து கொள்ளாமையும் முச்ளிக்கள் மீது இனவாதத்தை துப்பாக்கி முணையில் திணித்தது மாத்திரமன்றி இன்று வரை முஸ்லிம்களது தேசியத்தை அங்கீகரிக்க மறுப்பதுமாகும்.!

இன்று தமிழ் முஸ்லிம் உறவு மீளக் கட்டி எழுப்பப்  பட வேண்டியதன் அவசியத்தை தமிழ்த் தரப்புக்கள் மாத்திரமல்ல முஸ்லிம் தரப்புக்களும் உணர்ந்திருக்கின்றன, முஸ்லிம்களது மனதிலுள்ள ஆழமான வடுக்களை அகற்றுவதற்கான முயற்சிகளை தமிழ்த் தலைமைகள் எடுக்க வேண்டும். கடந்த கால கசப்புணர்வுகளை மறந்து விடுங்கள் என்ற வெற்று உபதேசங்களுக்கு அப்பால் தமிழ் சமூகம் குறிப்பாக விடுதலை புலிகளின் இன்றையா வாரிசுகள் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் தமிழர் தேசியக் கூட்டணி, மற்றும் கடல் கடந்த தமிழீழ அரசு முஸ்லிம்களது நம்பிக்கையை கட்டி எழுப்புவதற்கான இதய சுத்தியுடனான சில நகர்வுகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்!

 முதலாவதாக முஸ்லிம்களும் இந்த நாட்டின் தேசிய அடையாளமுள்ள தனித்துவ சமூகம் என்பதனையும், இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளில் பேச்சு வார்த்தைகளில் தனியான ஒரு தரப்பினர் என்பதனையும்  உத்தியோக பூர்வமாக ஏற்றுக் கொண்டு  தேசிய சர்வதேச அரங்குகளில் அதற்குரிய அங்கீகாரத்தை உத்தியோக பூர்வமாக வழங்க வேண்டும்!

இரண்டாவதாக வடக்கிலிருந்து விடுதலைப் புலிகளால் விரட்டியடிக்கப் பட்ட முஸ்லிம்கள் மீண்டும் தமது  தமது வாழ்விடங்களுக்குச் சென்று வாழ்வதனை அதற்கு அவர்களுக்கு உள்ள உரிமையினை தேசிய சர்வதேச அரங்குகளில் பேசுவதும் இந்திய மற்றும் சர்வதேச சமூகங்கள் வழங்கும்  மீள் குடியேற்ற ஒத்துளைப்புகளில் உதவிகளில் -தமது முன்னால் தலைவர்கள் செய்த தவறுகளை ஓரளவாவது ஈடு செய்யும் வகையில்- முஸ்லிம்களுக்கு முன்னுரிமை வழங்கப் பட வேண்டும் என்பதனை அவர்கள் வலியுறுத்த வேண்டும்!

விரட்டியடிக்கப் பட்ட முஸ்லிம்களின் வீடுகளில் காணிகளில் குடியேறியுள்ள மாவீரர்களது குடும்பங்களையும், அத்து மீறிக் குடியேறி உள்ளவர்களையும் அங்கிருந்து அவர்களது சொந்த இடங்களுக்கு அல்லது மாற்று இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்,அல்லது அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்!

வட கிழக்கில் புலிகளால் ஆக்கிரமிக்கப் பட்டு இன்று வரை முஸ்லிம்களுக்கு வழங்கப் படாத பல்லாயிரக் கணக்கான  மேய்ச்சல், பாய்ச்சல் மற்றும் விளைச்சல்  நிலங்களை திருப்பி முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும், அல்லது அரசுடன் இணைந்து அவற்றை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!

இறுதியாக அனால் உறுதியாக அதிகாரப் பகிர்வு அல்லது பரவலாக்க யோசனைகளில் முஸ்லிம்கள் குறித்த உங்களது நிலைப்பாடுகளை நீங்கள் சர்வதேச சமூகத்தின் முன் வைக்க வேண்டும், அல்லது அது குறித்து எங்களுடன் நீங்கள் பேச ஆரம்பிக்க வேண்டும்!

பழையன கழிதலும் புதியன புகுதலும் தமிழ் முஸ்லிம் உறவில் இந்த அடிப்படைகளில் தான் நடைபெற வேண்டும்! இன்றேல் இன்னும் பல தசாப்தங்களுக்கும் முஸ்லிம்களது நலன்களுக்கு எதிராக தமிழர்களும் தமிலர்கல்து நலன்களுக்கு முரணாக முஸ்லிம்களும் அரசியல் செய்கின்ற அநாகரீகம் தொடரும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. அதனால் குதூகலித்து நன்மை அடையப் போவது  பேரினவாத சக்திகளே.!


Advertisements

Written by lankamuslim

மே 28, 2012 இல் 12:56 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: