Lankamuslim.org

One World One Ummah

மனிதனின் சிறப்பம்சம் ஆறாம் அறிவே!

leave a comment »

முஹம்மத் ஜான்ஸின்
வலிமையுடையவனாகவும் மற்ற படைப்பினங்களிலிருந்து வேறுபட்டவனாகவும் மனிதனை ஆக்குவது அவனிடம் உள்ள அறிவே ஆகும். செய்யும் செயல்களைப் பற்றிய பொறுப்புணர்வு மிக்கவனாக அவனை மாற்றுவதும் அறிவே! ஒரு பாறையோ பெருங்கல்லோ மேலிருந்து விழுந்து வழியில் போகின்ற ஒருவனின் உயிரைப் பறித்து விட்டால் அக்கல்லை யாரும் குற்றஞ்சாட்ட இயலாது. வேகமாகப் போகும் பேருந்தின் வழியை மாடோ எருமையோ வழியை மறித்தால் நின்று ஹார்ன் அடித்து மாட்டை விலக்கப் பார்ப்பாரே ஒழிய மாட்டை டிரைவர் திட்டிக் கொண்டிருக்க மாட்டார்.

அதேசமயம் ஏதேனும் ஒரு மனிதன் குறுக்கிட்டால் சாவையாடா போகிறாய்? என்று ஆரம்பித்து அவருக்குத் தெரிந்த எல்லாவகையான வசைகளையும் முழங்கிவிட்டுத் தான் வண்டியையே எடுப்பார். மாடு முட்டி செத்ததற்காக மாட்டை யாரும் குற்றம் பிடிப்பதில்லை. அதே கொலையை ஒரு மனிதன் செய்துவிட்டால் அவன் தன்னுடைய வாழ்நாளில் சில ஆண்டுகளை சிறைச்சாலையில் கழிக்கவேண்டி இருக்கும். ஆடுமாடுகளுக்கு அறிவிருந்தாலும் உணர்வு இருப்பதில்லை. அதே சமயம் மனிதனுக்கு அறிவும் இருக்கின்றது. தான் என்ன செய்கிறோம் என்ன செய்யப் போகிறோம் என்ற உணர்வும் இருக்கின்றது. அதாவது, எது ஸ்ரீ எது தவறு என்று பாகுபடுத்திப் பார்க்கக்கூடிய அறிவு இருக்கின்றது. இதை பகுத்தறிவு என்று சொல்வார்கள். தாவரங்கள், கால்நடைகளுக்கு இந்த அறிவு இருப்பதில்லை. ஆக. பொறுப்புள்ளவனாகவும் தான் செய்யும் செயல்களுக்கு ஜவாப்தாரியாகவும் செய்யும் செயல்களுக்குரிய பின்விளைவுகளை அனுபவிக்க வேண்டியவனாகவும் மனிதனை ஆக்குவது அவனிடம் உள்ள அறிவுதான்!

அறிவைப் பயன்படுத்தாத மனிதன்

அறிவுள்ள ஒரு ஜீவன் என்பதால் மனிதனுடைய செயல்கள் யாவும் அறிவார்த்தமாக இருக்கும் என்று எண்ணிவிடக் கூடாது. தான் செய்கின்ற ஒவ்வொரு செயலையும் மனிதன் சிந்தித்து சீர்தூக்கிப் பார்த்தே செய்கிறான் என்றெல்லாம் எண்ணிவிடக் கூடாது. ஒரு மாணவன் வீண்விளையாட்டுகளிலும் வேடிக்கைக் கேளிக்கைகளிலும் நேரத்தை போக்குகிறான், அதே சமயம் இன்னொரு மாணவன் தன்னுடைய பொறுப்புணர்ந்து படிப்பதில் ஈடுபடுகிறான். மனிதன் எனும் நிலையில் பார்க்கும்போது இருவரும் அறிவுடையவர்கள் தாம்! அறிவை நன்றாகப் பயன்படுத்தத் தெரிந்தந்தவர்கள் தாம்! ஆனாலும், இவர்கள் இருவருமே அறிவைச் சரியாக பயன் படுத்துகிறார்கள் என்று மறந்தும்கூட யாரும் சொல்லிவிடமாட்டார்கள். இத்தகைய இருவேறுபட்ட முரண்பாடான உதாரணங்களை நாம் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆக, தன்னிடம் உள்ள இந்த அறிவு எனும் சிறப்பம்சத்தைப் பயன்படுத்தி மனிதன் வெற்றியைத் தேடிக்கொள்ளும் அதேநேரத்தில் தோல்வியையும் அவன் அடையவே செய்கிறான். பட்டியலில் உற்றுப் பார்த்தால் வெற்றிகளைவிட தோல்விகளே அதிகம் காணப்படுகின்றன.அறிவைப் பயன்படுத்தி அவன் தோற்றுப்போகும் சமயங்களைவிட அறிவை அறவே பயன்படுத்தாததால் தோற்றுப் போகும் சர்ந்தர்ப்பகளே அதிகம்!

அதுபோன்றே அறிவைப் பயன்படுத்தி அறிவின் ஆலோசனையை பெற்ற பின்பும் அதைக் கேட்டும் கேட்காததைப் போல கண்டுகொள்ளமல் இருந்துவிட்ட காரணத்தால் வீணாகிப் போனதும் அதிகம்! எத்தனை எத்தனையோ குடிகாரர்கள், சூதாடிகள், வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள், வக்கிரம் பிடித்த காரியங்களைச் செய்பவர்களுக்கு தாம் செய்வது தீமையான காரியம்தான் என்று நன்றாகவே தெரியவே செய்கின்றது. ஆனாலும்கூட, அவர்களில் ஒருவரும் தனது அறிவின் பேச்சைக் கேட்டு அத்தீய காரியத்தை விடுவதாகக் காணோம்!

தன்னுடைய அறிவைப் பயன்படுத்தி சிந்தித்துச் சீர்தூக்கிப் பார்த்து மனிதன் ஒவ்வொரு காரியத்தையும் செய்வதில்லை. அப்படியே அவன் அறிவோடு கலந்தாலோசித்தாலும் அவனுடைய அறிவு அளிக்கும் ஆலோசனை சரியானதாகத்தான் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. ஒருவேளை அது சரியானதாக இருந்தாலும் அதன்படியே செயல்படுவான் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

அன்றாட வாழ்வில் எதிர்ப்படுகின்ற சாதாரண காரியங்களிலேயே மனிதன் இந்த அளவுக்குத்தான் அறிவைப் பயன்படுத்துகிறான், அறிவு சொன்னபடி கேட்கிறான் எனும்போது இறைவன், சமயம் போன்ற புலன்களுக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் என்ன ஆகும் என்பதை அளவிடவே முடியாது. ஐந்து ரூபாய் பத்து ரூபாய் விஷயத்திலேயே நாணயத்தோடு நடந்துகொள்ளாதவனை இலட்சக் கணக்கான பணம் புழங்கும் விஷயத்தில் நம்ப முடியுமா? மனம்போனபடி இஷ்டத்துக்கு வாழமுடிகின்ற உலக வாழ்க்கையிலேயே அறிவை ஒழுங்காக பயன்படுத்தாதவன், ஒருவேளை அறிவு ஒழுங்காக வழிகாட்டினாலும் அதன்படி செயல்படாதவன் இறைவன் விஷயத்திலும் சமயம் சார்ந்த விஷயத்திலும் குறைந்தபட்சம் பத்து சதவிகிதமாவது முறைப்படி அறிவைப் பயன்படுத்துவான் என்று எதிர்பார்க்கவெல்லாம் முடியாது. இந்தப் பத்து சதவிகிதத்தையாவது அறிவு சொன்னபடி செயல்படுத்துவானா என்றால் அதுவும் கிடையாது. ஆகையால்தான், வரலாறு நெடுக சமய வேறுபாடுகளும், இறைவனைப் பற்றிய கருத்து மோதல்களும் நிரம்பி வழிவதைக் காணமுடிகின்றது. அறிவைத் தவறாக பயன்படுத்தியதற்கும் அல்லது அறிவைப் பயன்படுத்தாமலேயே விட்டதற்கும் பற்பல காரியங்களில் அறிவு சொன்னபடி செயல்படாமல் போனதற்கும் உதாரணங்கள்தாம் இவை!

மறைக்கும் திரைகள்

இத்தகைய பிரம்மாண்டமான இமாலயத் தவறு ஏன் ஏற்படுகின்றது? தன்னுடைய அறிவோடும் இயற்கையோடும் மனிதன் ஏன் இவ்வாறு முறைகேடாக நடந்துகொள்கிறான்? கண்டிப்பாக இந்தக் கேள்விக்கு நாம் விடை கண்டே ஆக வேண்டும்!

இந்தத் தவறு நிகழ்வதற்கு பல்வேறு விஷயங்கள் காரணமாக அமைகின்றன என்றபோதிலும் மனிதனுடைய அறிவையும் நன்மையான காரியங்களையே நாடுகின்ற அவனுடைய இயற்கையையும் பல்வேறு விஷயங்கள் திரைகளாக மாறித் தடுக்கின்றன என்ற போதிலும் முக்கியமாக ஒருசில விஷயங்களை மட்டும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது!

(1) மனிதனுடைய உடற்சார்ந்த தேவைகளும் மனம் சார்ந்த இச்சைகளும் முதல் திரையாக அமைகின்றன. இந்த இச்சைகள் மிகவும் வலிமை வாய்ந்தவையாகவும் பலம் பொருந்தியவையாகவும் அமைகின்றன. இவற்றை மனிதன் கட்டுப்படுத்தாவிட்டால் தன் விருப்பத்துக்கு வளர்ந்து எக்கச்சக்கமாக எழுந்து நிற்கின்றன. அதன்பின் தமக்குப்பிடிக்காத எந்தக் காரியத்தையும் செய்தவதற்கோ ஏன் நினைப்பதற்குக்கூட மனிதனை இவை அனுமதிப்பதில்லை. ஒரு காரியத்தை செய்யவேண்டும் என்ற நினைப்பே மனிதனுக்கு எழாதபோது அவனுடைய அறிவு என்னதான் எச்சரித்தாலும் அவன் அதைப் பற்றியெல்லாம் கவலையே படுவதில்லை. மதுக்கிண்ணத்தில் மூழ்கிக் கிடப்பவனுக்கு அது மிகவும் பாவமான பொல்லாத காரியம் என்று நன்றாகவே தெரியத்தான் செய்கின்றது! பாவங்களுக்கெல்லாம் ஆணிவேர் அடிவேர் இதுதான் என்று புரியத்தான் செய்கின்றது. சிந்தையோடு செயலும் செயலோடு ஒழுக்கமும் இதனால் சீர்கெட்டுப் போகின்றன என்று விளங்கத்தான் செய்கின்றது. இவற்றையெல்லாம் தொpந்தும்கூட அவன் தன்னுடைய மனதின் பேச்சைத் தட்ட இயலாமல் மதுக்கிண்ணத்தைக் கையில் எடுத்துக் குடிக்கத்தான் செய்கிறான்.உலகமே எதிh;த்து நின்றாலும் அப்பாவத்தை அவன் செய்து முடிக்கின்றான்.இங்கு அவன் அறிவின் எச்சரிக்கையை வெகு எளிதாக அலட்சியப்படுத்திவிடுகிறான்.

(2) இனப்பற்று, ஜாதிவெறி, முன்னோர்கள் மீதான பாசம், மரபு, தொன்றுதொட்டு நிலவிவரும் பழக்கவழக்கங்கள் போன்றவற்றை இரண்டாவது திரையாக குறிப்பிடலாம்!. வெளியிலிருந்து வந்திருக்கின்றது; தன்னுடைய இனத்தைச் சேர்ந்தவர்களால் அது சொல்லப்படவில்லை என்ற ஒரே காரணத்திற்காக எத்தனை எத்தனையோ நல்ல விஷயங்களை மனிதன் புறந்தள்ளி விடுகிறான். தன்னிடத்தில் உள்ள விஷயம் தன்னுடைய மூதாதையர்களால் வழிவழியாகச்சொல்லப்பட்டுவரும் விஷயம் மட்டும்தான் சரியானது பின்பற்றத் தகுதியானது என்ற இனவெறி மாயையில் ஏறக்குறைய எல்லா மனிதர்களும் அகப்பட்டுத் தவிக்கிறார்கள். தங்களுடைய மரபும் பழக்கவழக்கங்களும் தவறாகவும் இருக்கக்கூடும் என்கிற சிந்தனையே பலபேருக்கு வேம்பாய் கசக்கின்றது.

(3) முறையற்ற சிந்தனையும் தாறுமாறான கருத்தோட்டமும் மூன்றாவது திரையாக அமைகின்றன. சமயம் போன்ற அதிமுக்கியமான விஷயங்கள் குறித்து இத்தகையவர்கள் சிந்தித்தாலும் சரியான திசையில் பயணிக்காமல் பிரண்டு போகிறார்கள். ஆழமாக இல்லாது மேலோட்ட மாகவும் சராசரியான அளவிலுமே அவர்களுடைய சிந்தனைப் போக்கு அமைந்து விடுகின்றது. வெகுசாதாரணமான ஆதாரங்களை எடுத்துக்காட்டி தங்களுடைய வாதத்திற்கு வலு சேர்க்க அவர்கள் முயற்சிக்கிறார்கள். பாதையில் ஒருசில காலடிகளை வைத்தவுடனேயே திசை தடுமாறி வழிதவறிப் போய்விடுகிறார்கள். உதாரணமாக, இத்தகையவர்களில் சிலர் இறைவனை ஏற்றுக்கொள்ளவும் செய்வார்கள்; மறுமை வாழ்வொன்று உள்ளது என்று நம்பவும் செய்வார்கள். ஆனால், அவர்களுடைய இறைநம்பிக்கையும் மறுமை நம்பிக்கையும் ஆழமானதாக இருக்கவே இருக்காது. இவற்றை அவர்கள் நம்புவதும் நம்பாமல் இருப்பதும் சமமாகவே இருக்கும்.

இவர்களைப் பொருத்தவரை நம்புவது நம்பாமல் இருப்பது இரண்டுமே ஒன்றுதான்! உண்மையிலேயே நம்புபவர்கள் எத்தகைய விசாலமான, ஆழமான நம்பிக்கையைப் பெற்றிருக்க வேண்டுமோ அவற்றையெல்லாம் இவர்களிடத்தில் பார்க்கவே முடியாது! இவ்வுலகைப் படைத்தவன் ஒரே அல்லாஹ்தான் என்று நம்புவார்கள்; அகிலங்களுக்கெல்லாம் அவன்தான் அரசன் என்றும் நம்புவார்கள்; இப்பிரபஞ்சத்தையும் அதிலுள்ள பொருட் களையும் படைத்தவன் அல்லாஹ் ஒருவன்தான் என்றும் நம்புவார்கள்; இவ்வுலகைக் கட்டிக் காப்பதும் நிர்வகித்து வருவதும் அவனே என்றும் நம்பு வார்கள். இயற்கை, படைப்பு போன்றவற்றில் இறைவனின் வல்லமையை ஒப்புக் கொள்ளும் அதே சமயம், நாட்டுநிர்வாகம், சட்டநெறிமுறை போன்ற வற்றில் இறைவனை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். உண்மையில் சாதாரண அறிவைக் கொண்டு சிந்தித்துப் பார்த்தாலே இவையெல்லாம் பெரும் முட்டாள்தனம் என்பது தெரிந்துபோகும்!

மறுமை நம்பிக்கை விஷயத்திலும் இதே போன்றதொரு நிலைதான் காணப்படும். மரணத்திற்குப் பிறகு மீண்டும் எழுப்பப்படுவோம்; கேள்வி, கணக்கு விசாரணை நடைபெறும் என்றெல்லாம் நம்புவார்கள். அதே சமயம், அங்கே தமக்காக சிபாரிசு செய்வார்கள் என்ற நம்பிக்கையில் மண்ணறை களின் முன்னால் தலையைக் குனிந்துகொண்டு நின்றுகொண்டிருப்பார்கள். சிபாரிசு எல்லாம் அங்கே எடுபடும் என்றால் அப்புறம் கேள்வி,கணக்கு விசாரணைக்கெல்லாம் என்னதான் தேவை என்றெல்லாம் யோசித்தே பார்க்க மாட்டார்கள்.

இந்தியாவில் வாழ்ந்த ஷாஹ் வலியுல்லாஹ் (1702-1763) என்ற இஸ்லாமியப் பேரறிஞர் (1) மனத்திரை (2) சடங்குத் திரை (3) அஞ்ஞானத் திரை என்று வெகு அழகாக இத்திரைகளை வரிசைப்படுத்தி விளக்கிக் கூறியுள்ளார்.

இத்திரைகளுக்குப் பின்னால் சிக்கிச் சீரழிந்து போனவர்களுக்கு எல்லையே கிடையாது. திரைகள் கண்ணை மறைப்பதால் தட்டுத் தடுமாறி சத்திய வழியை விட்டும் விலகி காரிருளில் மூழ்கிப் போனவர்கள் ஏராளம்! சமயம் சாராத விஷயங்களை இத்திரைகள் மூடுவதோ மறைப்பதோ கிடையாது. இறைவன், சமயம் போன்ற விஷயங்களில் மட்டும்தான் இவை மனிதனின் கண்களை இறுக்கமாக கட்டிக்கொண்டு விடுகின்றன. இத்திரைகளை அகற்றி உண்மை வெளிச்சத்தை ஊடுருவிப் பார்ப்பது பெரும்பாலோருக்கு எளிதான காரியமாகவே இல்லை!

Advertisements

Written by lankamuslim

ஏப்ரல் 19, 2012 இல் 12:05 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: