Lankamuslim.org

One World One Ummah

‘புதை பொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் அஷ்ரப்நகர் பகுதியில் காணிகள் அபகரிப்பு’

leave a comment »

இன்று வீரகேசரி பத்திரிக்கை அதன் முன்பக்க தலைப்பு செய்தியில் ”புதை பொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் அஷ்ரப்நகர் பகுதியில் காணிகள் அபகரிப்பு” என்ற தலைப்பில் அஷ்ரப்நகர் தொடர்பான செய்தியை பதிவு செய்துள்ளது அந்த செய்தியை அப்படியே எமது வாசகர்களுக்கு தருகிறோம் :

அஷ்ரப்நகர் ஒலுவில் முதலாம் பிரிவு காயான்குளம் கிராமத்தில் புதைபொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் மக்கள் கட்டுப்படுத்தப்படுவதாகவும் மக்களது பாதுகாப்பிற்கான யானைவேலி என்ற பெயரில் இராணுவ மயமாக்கல் இடம்பெறுவதாகவும் குற்றச்சாட்டப்படுகின்றது. இவ்வாறு குற்றம் சுமத்தும் தகவல் குறிப்பொன்றை பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு வெளியிட்டுள்ளது.

பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு வெளியிட்டுள்ள தகவல் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவது,

அம்பாறை மாவட்டத்தில் அஷ்ரப் நகர் என அழைக்கப்படும் கிராமமானது 1952 காலப் பகுதியில் ஆலிம் நகர், விளாங்காடு, காயான் கேணி, முதியடிவட்டை, பள்ளக்காடு, சின்னப் பள்ளக்காடு, காட்டுவட்டை, ஆலி முக்காடு, ஆலிம் சேனை ஆகிய சிறு சிறு பிரதேசங்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டது. தற்போது இப்பகுதியில் வசிக்கின்ற மக்களது முன்னோர்களால் இது உருவாக்கப்பட்டதாக அறிய முடிகின்றது.

இந்த பகுதி 2006.03.23 அன்று அஷ்ரப் நகர், ஒலுவில் முதலாம் பிரிவு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1952ஆம் ஆண்டிலிருந்து தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் என மூன்று இனத்தவர்களும் வாழ்ந்திருந்த போதும் முஸ்லிம் மக்களே அதிகளவில் இருந்துள்ளனர். அதாவது தீகவாபி விகார மலையை அண்மித்த பகுதிகளில் பௌத்த மதத்தை சேர்ந்த 11 குடும்பம், 07 தமிழ்க் குடும்பம், 30 இஸ்லாமியக் குடும்பம் காணப்பட்டதாக வாய்வழித் தகவல்கள் முலம் அறிய முடிகின்றது.

இதன் பின்னர் வருடா வருடம் குடியிருப்பாளர்கள் பெருகியுள்ளதோடு 1962 1964 காலப் பகுதிக்குள் முஸ்லிம்களுக்கான வணக்கஸ்தலமான பள்ளிவாசல் காயான்கேணியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் 156 இஸ்லாமியக் குடும்பங்கள் வசித்துள்ளதாகத் தெரிகின்றது. அதன் பின்னர் 1972 காலகட்டத்தில் 272 குடும்பங்களாகப் பெருகியிருந்த இஸ்லாமியக் குடும்பங்களின் வசதி கருதி தற்போது இயங்கி வரும் ஜும்மாப் பள்ளிவாசல் ஆலிம்சேனை எனும் இடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

1983 காலப் பகுதியில் ஏற்பட்ட பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக இங்கு வாழ்ந்த மக்கள் அகதி முகாம்களிலும், உறவினர் வீடுகளுக்கும் தஞ்சம் கோரினர். மீதமாக இருந்தோர் பள்ளிவாசலை அண்மித்த பகுதிகளில் வாழ்ந்து வந்தனர். இப்பகுதியில் சேனைப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அப்பாவிப் பொதுமக்கள் 16 பேர் 1990களில் இனந்தெயாதோரால் கைகள் பின்புறம் கட்டப்பட்டுக் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து மீதமிருந்த மக்களும் அச்சம் காரணமாக வெளியேறினார்கள். 1996ஆம் ஆண்டுகளில் மீண்டும் இப்பகுதி மக்கள் மீள் குடியேறத் தொடங்கினார்கள். எனினும் அரச திணைக்களத்தினர் காட்டு யானைகளின் தொந்தரவுகள் போன்றவற்றை இம்மக்கள் எதிர்கொண்டனர்.

வாழிடங்கள் மற்றும் வாழ்ந்த இடத்தை உறுதிப்படுத்தக் கூடிய சுவடுகள் அழிக்கப்பட்டிருந்த நிலையில் பெரும் இன்னல்களுக்கு மத்தியிலேயே புனரமைப்பு வேலைகளை இம்மக்கள் மேற்கொண்டனர். இதன் பின்பு 1998ஆம் ஆண்டளவில் இராணுவத்தினரும், சாமியார்களும், அரச திணைக்களத்தினரும் இணைந்து புதைபொருள் இருப்பதாகக் கூறிக்கொண்டு காணிகள் பலவற்றை ஆராய்ச்சிக்காக எடுத்துக்கொண்டனர். பின்னர் இப்பிரதேச மக்களது பிரச்சினைகள் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் மேற்கொண்ட பேச்சுவார்த்தை மூலம் தீகவாபி பிரதேசம் என எல்லை காட்டப்பட்ட பகுதியை அடையாளப்படுத்தப்பட்டு பிரச்சினை தீர்க்கப்பட்டது.

2009.10.12 சதாதிஸ்ஸ துட்டுகெமுனு விவசாயச் சங்கம் இணைந்து அப்பகுதியில் வசிக்கின்ற மக்களிடம் நிவாரணம் வழங்குவதாகக் கூறி வெற்றுத் தாளில் கையெழுத்துப் பெற்றுச் சென்றிருந்தனர்.
யானைவேலி எனக் குறிப்பிட்டு 69 குடும்பத்தினர் குடியிருந்து வந்த காஸங்கேணிப் பகுதியை சுற்றி 8.11.2010 அன்று யானை வேலி இட்டனர். ஆனால் இதுவரை யானைகளிடமிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டது எனக் கூறப்படும் யானை வேலிக்கு மின்சாரம் வழங்கபடவில்லை என்பதோடு யானைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த அவ்வேலி பயன்படவில்லை.

அதுமட்டுமின்றி யானை வேலியானது காட்டைத் தடுத்து கிராமங்களைப் பாதுகாக்கும் நோக்குடன் அமைக்கப்படாது காயான்கேணி என்ற 69 குடும்பங்கள் வசித்து வந்த கிராமத்தினை சுற்றி மட்டுமே அமைக்கப்பட்டிருந்தது.

இதனால் மக்களுக்கான நடமாட்டத்திற்கான இடப்பகுதி மட்டும் கட்டுப்படுத்தப்பட்டதே தவிர யானைகள் ஏனைய கிராமங்களுக்கு வருவதைக் கட்டுப்படுத்த முடியாதிருந்தது. அத்தோடு காயான்கேணி மக்களுக்கும் ஏனைய கிராம மக்களுக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது.

இதன் பின்னர் 2011 எட்டாம் மாதம் இடம் பெற்ற கிறீஸ் பூதம் எனும் அச்ச நிலை காரணமாக பயமுற்ற மக்கள் இப்பகுதியிலிருந்து தற்காலிகமாக இடம்பெயந்தார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி 2011.11.05 காலப்பகுதியில் இராணுவத்தினர் காயான்கேணிப் பகுதியில் குவிக்கப்பட்டார்கள். தற்காலிகமாகத் தங்குவதாகவே கூறிவந்தவர்கள் பின்பு மக்கள் குடியிருக்கும் இருப்பிடத்திற்குள் முகாம்களை அமைத்தனர்.

அதுமட்டுமின்றி தமக்கு முகாம் அமைத்து நிரந்தரமாகத் தங்குவதற்கான நோக்கத்துடன் ஏற்கனவே மக்களுக்காக அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் யானை வேலியில் இருந்த கம்பிகளை அகற்றி எடுத்து அவற்றைத் தமக்கு மின்சாரத்திற்காகப் பயன்படுத்தி வருவதோடு, தமது முகாமைச் சுற்றி அதாவது காயான்கேணியைச் சுற்றி முட்கம்பி வேலியை அமைத்துள்ளனர்.
இங்கு இராணுவ மயமாக்கமானது மக்கள் பாதுகாப்பிற்கான யானைவேலி என்ற போர்வையில் அமைக்கப்படும். புதைபொருள் ஆராய்ச்சி எனும் போர்வையிலும் மக்களைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் இடம்பெறு வது கண்கூடு.

இதனை அவதானித்த மக்கள் அவர்களது நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 2011.11.08 அன்று ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அன்று தொடக்கம் அங்கு பலகாலம் வாழ்ந்து வந்த மக்களை வெளியேறும்படியும், அம்மக்களது ஜீவனோபாயத் தொழிலை தடை செய்தும் வருகின்றனர். இதனால் இப்பகுதி மக்கள் தமது இருப்பிடங்களை இழப்பதைக் காட்டிலும் அவர்களுக்கான ஜீவனோபாயத் தொழிலை மேற்கொள்ளும் நிலத்தை அதாவது சேனைப் பயிர்ச் செய்கை நிலத்தை இழப்பதே பேரவலமாகும். காலம் காலமாகப் பயிர் செய்து வாழ்ந்த பூமியை விட்டுத் துரத்தப்படும் அவலம் எமது நாட்டில் மிகச் சாதாரணமாகக் கருதப்படுகிறது.

தற்போது இராணுவ முகாமாக மாற்றப்பட்டுள்ள காயான்கேணிக் கிராமத்தில் 4 குடும்பங்களே இராணுவத்தினரின் அறிவிப்பைத் தொடர்ந்தும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் சிலடம் இராணுவக் குவிப்பு பின்னரான காயான்கேணி பற்றியும், அக்கிராமத்தின முன் வாழ்க்கை முறைமை மற்றும் தொழில் நடவடிக்கை பற்றியும் கருத்துக் கேட்டோம்.

அகமது லெவ்வை ஹதீஜா உம்மா (வயது 48) என்பவர் கருத்துக் கூறும் போது ‘எனக்குப் புத்தி தெரிஞ்ச நாள் முதலா இங்கதான் இருக்கோம். எங்க வாப்பாவுக்கு 6 பொம்புளைப் புள்ளையும் 5 ஆம்புளையும். 2 ஏக்கர் காணி சீதனம் தந்திருந்தார். சோளம், பயிற்றை, கச்சான், நெல்லு விதைப்போம். பெண்கள் கைத்தொழில் செய்வம். பாய், பெட்டி இழைக்கிறது. தட்டு செய்வது, தறி, பன்பாய் இழைக்கிறது. அதோடை கோழி, ஆடு, மாடு வளர்க்கிறது என தொழில் நிறைய இருந்திச்சு.

இப்ப ஒன்டும் இல்லை. ஆம்பிளைகள் கூலித் தொழில் செய்யறது. எனக்கு 2 ஆம்புளப் பிள்ளையள். ஒருத்தருக்கு மனநோய் வருத்தம். இப்ப நாங்கள் எங்கட கிராமத்தில் 5 குடும்பம் மட்டுமே இருக்கம்.
2011.11.05 இராணுவமும், வனவிலங்குப் பாதுகாப்புப் பிரிவினரும் வந்தினம். முதலிலை தற்காலிகமாக என்டு வந்தார்கள். எங்களை எழும்பச் சொல்லலை. பிறகு கொஞ்ச நாளாலை ஒரு வீட்டுக்கு 2 பேர் வீதம் சோதனைச் சாவடி போட்டார்கள். ஆமிப் பயத்தால் குமர் பிள்ளைகளை வச்சிருக்க ஏலாமல் வெளியாலை தங்க வச்சிட்டு வயசான நாங்கள் வீட்டில இருந்தம். இப்ப கெடுபிடி அதிகம்.

சொந்தக்காரர்கள் உள்ள வர ஏலாது. வெளி ஊருக்குப் போறவை ஆமி வச்சிருக்கிற பெயர் விபரத்தில் பெயர் இருந்தால் மட்டுமே உள்ள வரலாம். கையெழுத்து வாங்குவார்கள்.

வெளியில இருந்து உள்ள நெல் கொண்டு வர முடியாது. இனித் தோட்டம் செய்ய முடியாது விவசாயத்தை அழிக்கிறார்கள். பசளை போட முடியாது. சைக்கிள் மோட்டார் சைக்கிள் உள்ள கொண்டு வர முடியாது. குடிசைகளை அழித்து விட்டார்கள். ஆக்கள் இல்லாத வீடுகளை அழிக்கிறார்கள்.
குடிசையில் உள்ள சீமெந்து தரையை உடைக்கிறார்கள். அதில் இருக்கிற சாமான்களை எடுத்து சோதனைச் சாவடிக்குப் பயன்படுத்துகிறார்கள். நாங்கள் வாழ்ந்த இடம், ஆமி இப்ப தாங்கள் வெள்ளாமை செய்கினம். நாங்கள் பயிர் நாட்டியிருந்தோம். அதெல்லாத்தையும் அவர்களே எடுக்கினம், வருமானம் இல்லாமல் நாங்கள் இருக்கிறம். வருமானம் இல்லாட்டில் தோட்டம் செய்யாட்டில் எங்களாலை வாழுறது கஷ்டம். வருமானம் வராது.

இது அவயளுக்கு நல்லாத் தெரியும். அதை தெரிஞ்சு கொண்டு வெள்ளாமையைத் தடுக்கினம். இராணுவப் பயத்தால் முதலில் பகல்ல சனம் நிக்கும். இரவில் சொந்தக்காரர் வீட்டுக்குப் போவார்கள். கடைசியில் 9 குடும்பம் போக மாட்டம் என்று இருந்திட்டம். அவையளுக்கு 9 நம்பர் குடுத்தார்கள். பிறகு அதே மாதம் நள்ளிரவு 11.30 போல் வேலிச் செத்தை பிரித்து சத்தம் கேட்டது. யானை எனப் பயந்து சத்தம் போட்டம். வந்தது ஆமி. பொலிஸ்ல சொன்னம். பொலிஸ் வந்து ஆமிக் கப்படனிட்டை சொன்னார்கள். அவர்கள் வந்தது தாங்கள் இல்லை எனப் பொய் சொன்னார்கள். போன் நம்பர் தந்தார்கள். இரவில் அசம்பாவிதம் என்டால் போனிலை சொல்லச் சொன்னார்கள். பாஷைப் பிரச்சினை சிங்களம் தெரியாது. இதைவிட தண்ணிப் பிரச்சினை இருக்கு. பவுசரில தண்ணி வாறது. 2 நாள் தண்ணி தந்தார்கள். இப்ப இல்லை.

தண்ணி தாறது போல தந்து கொண்டு பொம்புளையளுக்கு தொந்தரவு கூடுது. பவுசர் வாறயில்லை. 1 கிணறு இருந்தது. அதில் தண்ணி வத்தி விட்டது. மலசலகூட வசதி இல்லை. அதால காட்டைத்தான் பாவிப்போம். இப்ப பெண்கள் காட்டைப் பாவிக்க ஏலாமல் இருக்கு. எங்க அந்தரங்கத் தேவையைக் கூடப் பூர்த்தி செய்ய ஏலாமல் இருக்கோம். வேட்டைக்குப் போகும்போது ஆமியிட்டை கையெழுத்துப் போட்டுத்தான் போக வேணும். ஒரு நாளைக்கு வயித்தைக் கலக்குது என்டு ரெண்டு மூன்டு தரம் போனால் ஏனென்டு கேக்கிறார்கள். இதுக்கு அவையளுக்கு பொம்புளையள் நாங்கள் எப்பிடி பதில் சொல்லுறது?

சுவைதா 55 வயது கூறும்போது, நான் ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொண்டேன். எங்களிலை 13 பெண்களுக்கு சொந்தமாகப் பெமிட் இருக்குது. அது எங்களுக்கு சீதனமாகத் தந்தார்கள். என்ரை படம் பேப்பரில் வந்தது. அதுக்குப் பிறகு வீட்டுக்குப் போக விடுகிறார்கள் இல்லை. குடிசையை அழித்து விட்டார்கள், ஒலுவிலிலை இருக்கேன். சாமான்களை எடுக்க விடலை. எடுக்கப் போக வீடியோ எடுக்கினம். எனக்கு உம்மா, வாப்பா தந்த காணி. எனக்கு 3 பிள்ளைகள், 2 பெண், 1 ஆண். அவர்கள் படிக்கிறார்கள். இப்போ உள்ளுக்கை 5 குடும்பம் மாத்திரம் இருக்குது.

இருக்கிறவர்களுக்கும் தொல்லை குடுக்கிறார்கள். நாங்கள் ஏழைகள் கஷ்டப்பட்டவர்கள். கஸ்டத்துடன் சீவிக்கிறம். சொந்த ஊருக்கு விட்டால் காணும். கோழி வளர்ப்பு, பன்பின்னுறது என்டு வீட்டோடையே வேலை செய்தம். ஏன்டை மாப்பிள்ளை மன நோயாளி.

சேனைப் பயிருக்கு வாங்கின விதைகள் அநியாயமாய்ப் போச்சு. எங்கட பூமியில பயிர் செய்ய விடலை. அழிச்சுப் போட்டினம். போக விடுறாங்கள் இல்லை. அதிகார வர்க்கம் ஒத்து நிக்கினம்.

யுத்தத்திற்குப் பின்னர் வடக்கு கிழக்கு மக்கள் நிம்மதியாக வாழ்கின்றார்கள் என அதிகாரம் படைத்தோர் கூறுகின்ற போதும், வடக்குக் கிழக்குப் பகுதியில் பல பகுதிகளில் நாளுக்கு நாள் மக்களது இருப்பிடம் மற்றும் தொழில் வளம்மிக்க பகுதிகள் பாதுகாப்புப் பிரிவினரால் அபகரிக்கப்படுகின்றது. முள்ளிக்குளம், வேதத்தீவு, இலங்கைப் பட்டினம், சம்பூர், முள்ளிவாய்க்கால், காங்கேசன்துறை, சிலாவற்றுறை, அஷ்ரப் நகர் என நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இன்னம் சொந்த வாழ்விடங்கள் இன்றி அகதி வாழ்க்கை வாழும் துர்ப்பாக்கியம் இன்னம் தீரவில்லை.

பரம்பரை பரம்பரையாக உறவுகளோடு ஒத்து வாழ்ந்து தொழில் செய்து தமது சமய கலாசார விழுமியங்களைப் பேணி வந்த மக்கள் இருப்பிடத்தில் இருந்து பெயர்க்கப்படும் போது தமக்கான தனித்துவத்தை இழப்பதோடு மட்டுமின்றி உளவியல் ரீதியில் அடையும் தாக்கம் என்பன சொல்லில் விளங்க வைக்கக்கூடியவை அல்ல.

யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களான சுனாமி, வெள ளப்பெருக்கு மற்றும் வனவிலங்குகளின் அட்டகாசம் எனப்பாதிக்கப்பட்ட இப்பகுதி மக்கள் மீண்டும் மீட்சியின்றி துரத்தப்பட்டவர்களாவே காணப்படுகின்றார்கள். எமது நாட்டில் வறுமைக்குட்பட்ட மக்களே தொடர்ந்தும் இக்கட்டான சூழலுக்கு தள்ளப்படுவதும் முடிவின்றிய அல்லல் வாழ்க்கையை மேற்கொள்வதும் தொடர்ச்சியாகி விட்டது. இதனூடாகப் பார்க்கும்போது வறுமைப்பட்டோருக்குத் தொழில் வாய்ப்பை வழங்கி அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதா? அல்லது ஏற்கனவே இருக்கின்ற வாழ்வாதாரத்தை பறித்தெடுப்பதுதான் அரசாங்கத்தின் கடமையோ? என எண்ணத் தோன்றுகின்றது.

நாட்டின் பாதுகாப்பு என்னும் போர்வையில் தொழில் வளமிக்க இடங்களின்றி பிறந்த நாட்டிலேயே இடம்பெயர்ந்து வாழும் அவலத்தில் இருந்து எப்போது வடக்குக் கிழக்கு மக்கள் மீள்வார்கள் என்பது பற்றியாராலும் விடை கூற முடியாத கேள்வியாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான எமது முந்திய செய்திகள்

Advertisements

Written by lankamuslim

ஏப்ரல் 8, 2012 இல் 4:17 பிப

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: