Lankamuslim.org

One World One Ummah

இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆளுமை பேராசிரியர் அல்லாமா மா.மு. உவைஸ்

leave a comment »

வைத்திய கலாநிதி. தாஸிம் அகமது -கொழும்பு
இஸ்லாமியத் தமிழ் இலக்கியத் தேட்டத்தில் பெருவெற்றி கண்டு, அயராது உழைத்து 2000க்கும் மேற்பட்ட இஸ்லாமிய படைப்புக்களை உலகறியச் செய்த பெருமகன் பேராசிரியர் உவைஸ்.; அல்லாமா உவைஸைப் பற்றி மறைந்த தமிழ் அறிஞர் பேராசிரியர் கார்திகேசு சிவதம்பி இவ்வாறு கூறுகிறார்.

“இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு உவைஸ் எனும் வாய்க்கால் வழியாகவே ஓடி வளம் பெருக்கியது. உவைஸ் அவர்களின் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய அறிவு வரன்முறையான தமிழ் அறிவு எனும் அடித்தளத்தில் இருந்து கட்டியெழுப்பப்பட்டதாகும். காலத்துக்கு முற்பட்ட தமிழ் இலக்கிய, தமிழ் இலக்கண பாரம்பரியத்தில் உவைஸ் அவர்களுக்கு ஆழமான ஈடுபாடு உண்டு. உவைஸ் அவர்களின் தமிழ்ப் புலமை சுடர் விடுவதற்கு அவரிடத்துள்ள மூன்று மனித பண்புகள் மிக மிக முக்கியமானதாகும். முதலாவது அறிவடக்கம், இரண்டாவது தொடர்ந்து படிக்க விரும்புதல், மூன்றாவது தன் ஆசிரியர்பால் கொண்டுள்ள மதிப்பு. இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆய்வுகள் பற்றிய ஞாபகம் வரும் போது பல தெய்வ வழிபாட்டுக்குப் பழக்கப்பட்டுப் போன தமிழ்ப் பாண்பாட்டில் ஏக தெய்வ கொள்கையை எடுத்துக் கூற இஸ்லாமிய இலக்கியங்கள் தொழில்பட்டுள்ள முறைமை நினைவுக்கு வருகின்றது. தமிழ் இலக்கிய வரலாறு நன்றியுடன் போற்ற வேண்டிய பெயர்களுள் ஒன்று பேராசிரியர் ம.மு. உவைஸ் ஆகும்.”

பேராசிரியர் ம.மு. உவைஸ்; 1922ஆம் ஆண்டு கொழும்பு – காலி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கொறக்கானை எனும் சிற்றூரில் பிறந்தார். தகப்பன் பெயர் மகுமூது லெப்பை, தாயார் பெயர் சைனம்பு நாச்சியார் இவர்களுக்கு இவர் ஒரே மகனாவார். ஆரம்பக் கல்வியை ஹேனமுல்ல அரசினர் முஸ்லிம் பாடசாலையில் கற்றார். ஆங்கிலக் கல்வியை சரிக்க முல்லையில் அமைந்திருந்த தக்ஸலா வித்தியாலயத்தில் பயின்றார்;. அதே விததியாலயத்தில் சிங்களத்தையும் பாளியையும் பயின்றார். பாளியைக் கற்றதன் விளைவு பிற்காலத்தில் இலக்கிய ஈடுபாட்டுக்கு வழி வகுத்திருக்கலாம். இவர் 1946ம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் சேரும்வரை தமிழை ஒரு பாடமாக படிக்கும் வாய்ப்பை பெறவில்லை. ஆசிரியர் எவரும் இல்லாமலே தமிழ் கற்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது.

1945ம் ஆண்டில் முக்கியமான நிகழ்வு ஒன்று உவைஸின் ; வாழ்க்கையில் நடைபெற்றது. அதே ஆண்டில் பல்கலைகழக நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றும் வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்வு இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றினை தோற்றுவிக்கும் நிகழ்வாகவும் அமைந்திருந்தது. நேர்முகத் தேர்வுக்குழுவில் சுவாமி விபுலானந்தர்; ஒரு உறுப்பினராக இருந்தார் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்ட உவைஸிடம் சுவாமி விபுலானந்தர் இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய ஒரு காப்பியத்தைக் குறிப்பிடும்படி கேட்டார். உவைஸுக்கு; பதிலளிக்க முடியவில்லை. சீறாப்புராணத்தைப் பற்றி விபுலானந்த அடிகள்; கூறியது, உவைஸுக்கு இஸ்லாமியத் தமிழ் இலக்கியத் தேடலுக்கு வித்திடும் சவாலாக மாறியது.

பல்கலைக்கழக விதிமுறைகளின் மாற்றத்துக்கேற்ப பல்கலைக்கழக அனுமதி உவைஸுக்குக் கிடைத்தது. இதற்கு வழிவகுத்தவர் பெருந்தகை விபுலானந்த அடிகளாவார். கலைமாணிப் பட்டப்படிப்பை மேற்கொண்ட உவைஸுக்கு கௌரவப்பட்டம் கிடைத்தது.

பேராசிரியர் சு. வித்தியானந்தன், பேராசிரியர். க. கணபதிபிள்ளை ஆகியோரின் வழிகாட்டல்களில் கலைமுதுமாணிப்பட்டத்துக்கான படிப்பை உவைஸ் மேற்கொண்டார். முஸ்லிம்கள் தமிழுக்காற்றிய தொண்டு பற்றிய ஆய்வில் அவர் ஈடுபட்டார். அதற்காகத் தமிழகம் செல்லும் வாய்ப்பும் கிட்டியது. இவ்வாய்வினை தமிழ் நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் தீக்சிதர், போராசிரியர் ஹுஸைன்; நெய்னார் ஆகியோரின் உதவியுடன் மேற்கொண்டார். சீறாப்புராணம் மஸ்தான் சாஹிபு பாடல்களுடன் தொடங்கிய ஆய்வு சுமார் இரண்டாயிரம் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய நூல்களைத் தேடி ஒன்று சேர்த்து ஆய்வு செய்ய காலாக அமைந்து இஸ்லாமியத் தமிழ் இலக்கிய உலகுக்கு அவற்றை வழங்குவதற்கு வழி வகுத்தது. இது ஒரு பெரிய சாதனையாகும். இக்கால கட்டத்தில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய இருக்கை நிறுவப்பட்டது. முஸ்லிம்கள் தமிழுக்காற்றிய தொண்டு எனும் நூலை தயாரிக்கத் தொடங்கினார் பேராசிரியர; உவைஸ்; அது முதுமாணிப்பட்டதுக்காக இலங்கை பல்கலைக்கழகத்துக்கு சமர்பிக்கப்பட்டு முதுமாணிப்பட்டமும் கிடைத்தது.

முதுமானிப்பட்டம் கிடைத்த பின்னர், திருமணம் நடைபெற்றது. மணமகள் பேருவளையைச் சேர்ந்த சித்தி பாத்துமா ஆவார். இத்திருமணத்தின் மூலம் நான்கு ஆண்மக்களும், ஒரு மகளும் உள்ளனர். மா.மு. உவைஸூக்கு பல்கலைகழக சேவையில் பணியாற்றும் பாக்கியம் கிடைத்தது. வித்தியோதய பல்கலைக்கழகத்தில (இன்றைய ஜயவர்தனபுர பல்கலைகழகம்) நவீன கீழைத்தேச மொழிகள் துறையின் தற்காலிக தலைவராகவும் பதவியேற்றார். கொழும்பு ஸாஹிராக் கல்லூரியிலும் பணியாற்றினார். பரீட்சை திணைக்கள மொழி பெயர்பாளர், இலங்கை வானொலி இஸ்லாமிய நிகழ்ச்சித் தயாரிப்பாளர், இலங்கை அரச கரும மொழி திணைக்கள மொழிபெயர்ப்பாளர் ஆகிய பதவிகளில் பணியாற்றி நிறைந்த அனுபவங்களை பெற்ற உவைஸ், தமிழ,; சிங்கள, ஆங்கில மொழி பெயர்ப்பு நூல்களையும் வெளியிட்டார். அவற்றில் குறிப்பிட்டு கூறக்கூடியது. மார்ட்டீன் விக்கிரம சிங்கவின் “கம்பெரலிய” நாவலை “தமிழ் கிராம பிறழ்வு” எனும் பெயரில் மொழி பெயர்த்தமையாகும்.

இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் கருவூலங்கள் உலகறிய பேசப்பட வேண்டும் என 1966ம் ஆண்டு முதன் முதலாக இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்த மருதமுனை கிராமத்தில் ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் பற்றி உரத்துப் பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து பல மாநாடுகள் உலகளாவிய ரீதியில் நடைபெற்;றன. 1973ம் ஆண்டு திருச்சியில் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு நடைபெற்றது. 1974ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் “திருச்சித்திருப்பம்” என்ற நூலை உவைஸ் வெளியிட்டார். நான்காவது மாநாடு 1978களில் இலங்கையில் கொழும்பில் நடைபெற்றது. உவைஸ் அதை முன்னோடியாக நின்று நடத்தி வைத்தார். “முஸ்லிம் தமிழ்க் காப்பியங்கள்” எனும் நூலுக்காக அவருக்கு கலாநிதி பட்டம் வழங்கப்பட்டது.

மதுரை காமராச பல்கலைகழகத்தில் இஸ்லாமிய தமிழ் இலக்கியத் துறைக்கான இருக்கை அமைக்கப்பபெற்றதும் இதே கால கட்டத்தில்தான். இஸ்லாமிய தமிழ் இலக்கிய பேராசிரியராக கலாநிதி. ம.மு. உவைஸ் மதுரை காமராச பல்கலைக்கழகத்தில் 1979ம் ஆண்டு ஒக்டோப் 15ம் திகதி பதவியேற்றார். பதவியேற்றதும் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆய்வில் ஈடுபட்டதன் விளைவாக ஒவ்வொன்றும் 600 பக்கங்கள் கொண்ட 6 தொகுதிகள் வெளியாகின. பேராசிரியர் அஜ்மல்கான் அவருக்கு உறுதுணையாக இருந்தார். சுமார் 55 ஆக்கங்கள் அவரின் வாழ்நாளில் வெளிவந்திருக்கின்றன.

பல்சந்த மாலையில் இருந்து 1950கள் வரையான இஸ்லாமிய இலக்கிய கருவூலங்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் இவரால் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1992ம் ஆண்டு தேசிய வீரர் தினத்தில் தேசிய விருது வழங்கி ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ,; பேராசிரியர் உவைஸை கௌரவித்தார். 2 நூல்களுக்கு தமிழக அரசின் பரிசு கிடைத்தது. தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் பல பட்டங்கள் வழங்கப்பட்டு அவர் கௌரவிக்கப்பட்டார்.இவரது தொகுப்பு நூல்களை படிக்கும் போது, தமிழ் இலக்கிய வரலாற்றை முற்று முழுவதுமாக படித்த உணர்வு ஏற்படும். ஒப்பாய்வு வழங்கும் வல்லமை கொண்டவராகவும் உவைஸ் விளங்கினார்.

அர்ப்பணிப்பு, அயராத உழைப்பு, சமூகத்தின் மீதும் மொழியின் மீதும் கொண்ட பற்றுதல், பிற மதத்தவர்களுடன் நல்ல முறையுடன் நட்பை பேணல், இஸ்லாமியர் – முஸ்லிம்கள் -தம் வாழ்வு இலக்கியமாக்கப்பட்ட வரலாற்று ஆய்வு அதன் தொகுப்பு, கடமை தவறாத அக்கறை, இஸ்லாமிய நெறியில் நின்று இம்மியளவும் பிசகாத வாழ்க்கை, எளிமையான பண்புகள், அழகிய குணங்கள், பெருமானாரின் நடைமுறையை பின்பற்றுதல் போன்ற ஆளுமைகள் கொண்டவராக அல்லாமா உவைஸ் காணப்பட்டார;. அவரை கௌரவிப்பதற்காக அப்போதைய முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சராக இருந்த ஏ.எச்.எம். அஸ்வரின் முயற்சியால் அல்லாமா பட்டம் வழங்கப்பட்டது. கவிஞர் அல்லாமா இக்பாலுக்கு பிறகு அல்லாமா பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டவர் உவைஸே.

கலாநிதி அல்லாமா ம.மு. உவைஸ்; 1996ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் திகதி இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். 2012மார்ச் 25ம் திகதி அன்னாரது 16வது நினைவு தினமாகும். இதனை முன்னிட்டு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் தினைவு தின ஒன்று கூடல் நிகழ்வு சிறப்பாக நடந்தேறியமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் நீதியமைச்சர் ரஊப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர; உட்பட அரங்கு நிறைந்த புத்திஜீவிகள், கலை இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் அல்லாமா மா.மு. உவைஸ் அவர்களின் 16வது நினைவு தினம் 25.03.2012 நினைவுகூரப்பட்டது

Advertisements

Written by lankamuslim

மார்ச் 26, 2012 இல் 5:28 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: