Lankamuslim.org

காணி நிலம் வேண்டும் , அந்த காணி நிலத்திடையே காவல் துறை வேண்டும்.!-II

leave a comment »

எஸ்.எம்.எம்.பஷீர்
“ஒரு மதத்தினால், ஒரு கலாச்சாரத்தினால் எங்களுக்கே சொந்தமான வாழ்க்கை முறையால் நாங்கள் ஒரு தனி இனத்தவராகவுள்ளோம். இவைகளை எல்லாக் காலங்களுக்கும் நாம் பாதுகாக்க வேண்டும் முன்னெடுத்துச் செல்லவேண்டும்.” தமிழ் பேசும் மக்கள்” என்ற கூற்றின் கீழ் அடக்கி, அதன்  மூலம் மறைமுகமாக  முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவும், அவர்களுக்காகப் பேசவும் உரிமை கொண்டாடவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியினதும், தமிழ் காங்கிரசினதும் முயற்சிகளை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்”

(1966 அக்டோபர் ஆறாம் திகதி கொழும்பில் நடைபெற்ற இஸ்லாமிய சோசலிஸ்ட் முன்னணியின் முதலாவது வருடாந்த  மாநாட்டில் முன்னாள் கல்வி அமைச்சர் மறைந்த கலாநிதி பதியுதீன் மஹ்மூத்  ஆற்றிய உரையிலிருந்து)

இலங்கையின் சட்டவாக்க சபையிலிருந்து இன்றைய ஜனாதிபதி ஆட்சிக் காலம் வரை இனரீதியான அரசியல் கூர்ப்பினை அரசியல் அதிகாரக் கட்டமைப்பினூடாக மிகச் சுருக்கமாக பார்த்தால், இலங்கையில் சுதந்திரத்துக்கு முன்பிருந்த  பிரதேச பிரதிநிதித்துவம் போதிய தகுந்த பிரதிநிதித்துவமின்மை போன்ற மனக்குறைகள் மெது மெதுவாக மாற்றமுற்று வந்துள்ளதால் மனக்குறைகள் தீர்வதற்கு பதிலாக அரசியல் ரீதியில் தமிழ் தேசியவாத அரசியலின் கள நிலவரங்கள் இன ரீதியான முரண்பாட்டு அரசியலை கூர்மையடையச செய்தன, அதனால் சிங்களவர்கள் தமிழர்கள் என்ற அரசியல் இனத்துவ முரண்பாடுகள் முஸ்லிம்களையும் தங்களின் தனித்துவம் தேட வேண்டிய சூழலை ஏற்படுத்திக் கொடுத்தன என்பது வரலாறு. எனவே மனக்குறைகள் கண்டிய சிங்களவர்-கரையோரச் சிங்களவர், முஸ்லிம்கள்- தமிழர், இலங்கை பூர்வீகத் தமிழர்-மலையகத் தமிழர் என்றெல்லாம் விரிவுபட்டு சென்றது என்பது நமது கண்முன் விரிந்து கிடக்கும் வரலாறு.

முஸ்லிம்களை பொறுத்தவரை பிரதேச பெரும்பான்மையற்ற போதும், தேர்தல் களத்தை சந்திக்காத போதும் தெற்கிலே முஸ்லிம் பல்லின சூழலில் கட்சி அடிப்படியில் மக்களால் தெரிவு செய்யப்பட ஆட்சியிலுள்ள அரசுகளில் நியமன அங்கத்துவம் பெற முடிந்தது. வடக்கு கிழக்கு தமிழ் தேசியவாத, தாயக கோட்பாட்டு அரசியல் வடக்கில் கிழக்கில் முஸ்லிம்களையும் நெருக்குவாரத்துக்குள்ளாக்கியது. அவர்களின் அரசியல் நகர்வுகளையும் வெகுவாக பாதித்தது.

அதனால்தான் முஸ்லிம் அரசியல் தமிழ் தேசியவாத அரசியலை ஒத்த அரசியல் வியூகங்களை முஸ்லிம்களும்  (அன்றைய முஸ்லிம் ஐக்கிய விடுதலை  முன்னணியும் ) வகுக்கத் தொடங்கினர். தமிழரசுக் கட்சியினை தூக்கி எறிந்த கிழக்கு முஸ்லிம் அரசியல் தலைமைகள், தேசிய அரசியலுடன் பிரவேசித்தனர். தமிழ் ஆயுத “போராட்ட  அடக்கு முறையினால் பின்னர் தனித்துவ இன அடையாள அரசியலுக்கு களமமைத்தனர். இந்திய சமாதானப்படை தலையீடு முஸ்லிம் அரசியல் தனித்துவ எழுச்சிக்கு , -இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் முஸ்லிம்களை புறக்கணித்திருந்தாலும் – வடக்கு கிழக்கு மாகாண சபை தேர்தல் மூலம் அரசியல் பிரவேசத்துக்கு வலுவூட்டியது.

கொள்ளுபிட்டியில் முஸ்லிம் மாகாணசபை

வடக்கு கிழக்கு மாகாணங்கள்  இணைந்த வட கிழக்கு மாகாண சபை ஆட்சிக் காலத்தில் முஸ்லிம் மாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினர் அலி உதுமானை ஆகஸ்து மாதம் முதலாம் திகதி  1989 ஆண்டு மாகாண சபையில் கூட்டாட்சி நடத்திய ஈ என் டீ எல் எப் (ENDLF) அக்கரைப்பற்றில் சுட்டுக் கொன்றபோது (அவருடன் சேர்த்து  நயீம் எனும் உதர்தர பாடசாலை மாணவனும் சுட்டுக் கொல்லப்பட்டார்), முஸ்லிம் காங்கிரசின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான மருதூர்க்கனி பின்வருமாறு கண்டித்தார். அந்த கண்டனத்தில் முஸ்லிம்களுக்கு தனித்த மாகாண சபையை தீர்வாக வைத்தார்.

“வட-கிழக்கு மாகாண ஆட்சிக் கட்டிலில் அமர்திருந்திருக்கும் EPRLF –ENDLF    கூட்டரசாங்கத்தின் பங்காளியான ENDLF  குழுவினால் – இவ்வெறிச் செயல் நிகழ்தப்பட்டிருப்பதானது, இப்பிரதேச முஸ்லிம்களுக்கான பாதுகாப்பு வட கிழக்கு மாகாணசபையால் வழங்கப்பட முடியாது என்பதையும் , சமூக  ரீதியில் அமைந்த அதிகாரப் பரவலாக்கல் அலகு மூலமே -அதாவது முஸ்லிம்களுக்கான தனித்த மாகாணசபைதான் முஸ்லிம்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய  உறுதியானதும், இறுதியானதுமான தீர்வு என்பதை மேலும் நிச்சயமாக்குகின்றது.”

ஆனால் நடைமுறையில் பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் அட்டவணை ஒன்பது;  நிரல் ஒன்று காவல் துறை பற்றி பேசினாலும் தேசிய பாதுகாப்பினை, ஆயுதப்படையினை, அரச கட்டுப்பாட்டிலுள்ள எந்தப் படையினரையும் உள்ளடக்கியதல்ல. காவல் துறை சட்டத்தையும் நீதியையும் நிலை நாட்டவே மாகாண சபை நிரலில் அமைந்தது. பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் தேசிய பாதுகாப்பினை, பிரதேச பாதுகாப்பினை உள்ளடக்கியதல்ல.

வட கிழக்கு மாகாண சபையை தேர்தல் மூலம் அங்கீகரித்தவர்கள் முஸ்லிம் மாகாண சபை மூலமே தங்களை பாதுகாக்க முடியும் என்று சொல்லிக் கொண்டு வட கிழக்கு மாகாண சபை ஆட்சி செய்தவர்கள் முஸ்லிம்கள் மீது இந்தியப் படையுடன் சேர்ந்து கொண்டு செய்த அட்டூழியங்களை தங்களின் அரசிய எழுச்சிக்கு முதலீடாக்குவதில் வெற்றி பெற்றனர். இதனையே தமிழ் தேசிய அரசியலும் செய்தது. ஆனால் ஒரே ஒரு வேற்றுமை முஸ்லிம் அரசியல் ஆயுத பரிமாணம் எடுப்பதை அல்லது முஸ்லிம் இளைஞர்கள் தமிழ் ஆயுத குழுக்களுடன் இணைவதை முஸ்லிம் காங்கிரஸின் வருகை தடுத்தது.

இந்திய படைகள் வெளியேறிய பின்னர் கிழக்குக்கு செல்லமுடியாமல் முஸ்லிம் காங்கிரஸ் மீது தடையினை புலிகள்  விதித்தனர். அன்று முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் மேடைகளில் முழங்கிய முஸ்லிம் மாகான சபை கோசம் முஸ்லிம்களுக்கு ஒரு சந்தோஷமான, அதேவேளை அதிர்ச்சியான கோஷமாக இருந்தது. ஆனால் நடைமுறையில் முஸ்லிம் மாகாணசபை பற்றி கிழக்கிலோ வடக்கிலோ முஸ்லிம் காங்கிரசினருக்கு பின்னர் பேசக் கூட முடியவில்லை.

1991 ஆண்டு அளவில் கொள்ளுபிட்டியிலுள்ள   ஹக்கீமின் (இன்றைய முஸ்லிம் காங்கிரசின் தலைவரின் ) வீட்டில் வட கிழக்கில் பரந்து விரிந்து கிடக்கும் நிலத்தொடர்பற்ற முஸ்லிம் வாழிடங்களை உள்ளடக்கி முஸ்லிம் மாகாண சபையை எப்படி உருவாக்கலாம் என்று ஆராய்வதற்காக முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் மறைந்த அஸ்ரப் ஒரு கூட்டத்தைக் கூட்டியிருந்தார். அந்த தனிப்பட்ட கூட்டத்தில் அம்பாறை மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு கிழக்கிலுள்ள முஸ்லிம் வாழிடப் பகுதிகளை (கிராமங்களை நகரங்களை ) தமிழ் வாழிடப் பகுதிகளுக்காக  (கிராமங்களை நகரங்களை) இடப் பரிமாற்றம் செய்து அதனை முஸ்லிம் மக்களின் செறிவு மிக்க பிரதேசமாக உருவாக்கி, ஏனைய நிலத்தொடர்பற்ற சகல முஸ்லிம் பிரதேசங்களையும் உள்ளடக்கியதாக முஸ்லிம் மாகாண சபை ஒன்றை உருவாக்குவது பற்றிய ஒரு ஆலோசனையை அவர் முன்வைத்த போது, அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம் காங்கிரஸின் அன்றைய மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் காத்தான்குடியை எப்படி இடப் பரிமாற்றம் செய்வது என்ற கேள்வியை அஸ்ரபிடம் முன் வைத்தார்.

அஸ்ரப் அதற்கு பதிலாக காரைதீவை காத்தான்குடிக்கு பகரமாக மாற்றிக் கொள்ளலாம் என்று குறிபிட்டார். அதனை கேட்டதும் ஹிஸ்புல்லா, அதை ஒரு பரிகாசமான ஆலோசனையாக எடுத்துக் கொண்டதுடன், அவ்வாறான பரிமாற்றம் சாத்தியமற்றது என்பதை வலியுறுத்தினார். எப்படியாயினும் சுதந்திரத்தின் பின்னரான காணி நிலப் பிரச்சினை என்பது கல்லோயா சிங்களக் குடியேற்றத்துடன் கிழக்கில் தொடங்கி, இன்றுவரை தொடர்வதாக  குறிப்பட்டு, வடக்கு கிழக்கில் உள்ள காணி நிலம் தமிழர் தாயகத்துக்குரியது. சிங்கள குடியேற்றங்கள் எமது “நாட்டின்” மீது ஆக்கிரமிப்பு செய்கின்றன என்பது தமிழ் தேசியவாதிகளின் தொடர்ச்சியான தணியாத அரசியல் அஸ்திரம். இதனயே தமிழ் தேசிய அரசியல்வாதிகளிடம் இனவாத அரசியல் மூலம் தமது அரசியல் இருப்பை உறுதி செய்ய கற்றுக் கொண்ட முஸ்லிம் காங்கிரசினரும், அந்த இலகுவான அரசியல் கோசங்களையே தேர்தல் கால அஸ்திரங்களாக பாவித்து வருவதையும், ஆளும் அரசுடன் கூட்டு சேர்ந்தவுடன் அந்த கோசங்களை மறந்து போவதையும் காண்கிற பின்னணியில் காணி நிலம் என்பது  எப்போதும் தமிழ் முஸ்லிம் பிரதான கட்சிகளின் அரசியல் இயங்கு விசையாக இருந்து வரும் என்பதில் மாற்றங்கள் காணப்படவில்லை.

In or about 1991, a meeting was convened at Hakeem’s house in Colpitiya to explore how a Muslim Province could be formed when the Muslim pockets were noncontiguous and out stretched far and low in the North and East. Ashroff suggested that a part exchange of villages and towns with Tamil Villages and Towns would make the Ampara District into a Muslim District and by its expansion of land it would be demarcated as a Muslim Province. When he suggested that Karaitivu could be part exchanged for Kattankudy, Hisbulla reacted with scorn and disapproved Ashroff’s suggestion. However the demand for Muslim province was shrunk to a “South eastern Unit” and has been re-evaluated periodically to establish an autonomous Muslim region in the East.(http://www.bazeerlanka.com/2011/03/shape-of-muslim-nation-in-east.html)

ஆக அவ்வாறான கடந்தகால அரசியல் சித்து விளையாட்டக்கள் ஒருபுறமிருக்க, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரிசாத் பதுருதீனும்  தேசிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்  அதாவுல்லாவும், இருவரும் முறையே அடிப்படியில் வடக்கையும் கிழக்கயையும் கருத்திற்கொண்டு அவ்வாறான அதிகாரங்கள் தேவையில்லை என்றும், அவை இன உறவுக்கு குந்தகமாக அமையும் என்றும் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.

அரசு காணி போலீஸ் அதிகாரம் வழங்கப்பட மாட்டது என்று ஜனாதிபதி, நாட்டின் தலைவர் என்ற கோதாவிலும் ஆட்சி அதிகாரத்தில் உள்ள சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற வகையிலும் கூறினாலும் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைகளில் அதுபற்றி பேச முடியாது என்று திட்டவட்டமாக கூறவில்லை என்றபடியால்தான் பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்திய கூட்டமைப்பினர் மீண்டும் பேச்சவார்த்தை மேசைக்கு வந்துள்ளார்கள் என்பதுடன், பேச்சுவார்த்தை என்பது இன்றைய சர்வதேச இலங்கை அரசுக் கெதிரான நிலவரங்களில் அவசியமானது என்பதும் அது நிலம் போலீஸ் நிதி என்று நிராகரிக்கப்பட்ட கோரிக்கையினூடாக முறிவடைந்தால் இந்தியா உட்பட சர்வதேச ரீதியில் அனுதாபத்தையும் ஆதரவையும் பெற்று இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகித்து, தமது “இறுதி இலக்கை” (தமிழர் தாயக கோட்பாட்டினை , சுயாட்சியினை) அடைந்து விடலாம் என்று மனப்பால் குடிக்கிறார்கள். அந்த இலக்குகள் அடைவதற்கு முஸ்லிம்கள் தேவைப்படுகிறார்கள்.

அரசு காணி போலீஸ் அதிகாரம் வழங்கப்பட மாட்டது என்று ஜனாதிபதி, நாட்டின் தலைவர் என்ற கோதாவிலும் ஆட்சி அதிகாரத்தில் உள்ள சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற வகையிலும் கூறினாலும் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைகளில் அல்லது நாடாளுமன்ற தெரிவுக் குழு பேச்சுவார்த்தைகளில் அதுபற்றி பேச முடியாது என்று திட்டவட்டமாக கூறவில்லை என்றபடியால்தான் பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்திய கூட்டமைப்பினர் மீண்டும் பேச்சவார்த்தை மேசைக்கு வந்துள்ளார்கள் என்பதுடன், பேச்சுவார்த்தை என்பது இன்றைய சர்வதேச இலங்கை அரசுக் கெதிரான நிலவரங்களில் அவசியமானது என்பதும் அது நிலம் போலீஸ் நிதி என்று நிராகரிக்கப்பட்ட கோரிக்கையினூடாக முறிவடைந்தால் இந்தியா உட்பட சர்வதேச ரீதியில் அனுதாபத்தையும் ஆதரவையும் பெற்று இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகித்து , தமது “இறுதி இலக்கை ” ( தமிழர் தாயக கோட்பாட்டினை ,சுயாட்சியினை) அடைந்து விடலாம் என்று மனப்பால் குடிக்கிறார்கள். அந்த இலக்குகள் அடையப்பெற  வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் தேவைப்படுகிறார்கள்.

மாகாண சபை முறைமையை எதிர்த்தாலும் அதற்கான அதிகாரங்களை கேட்டு கோரிக்கை விடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கோரிக்கையுடன் முஸ்லிம் காங்கிரசும் இணைந்தே செல்கிறது. முஸ்லிம் காங்கிரசின் சார்பில் கட்சியின் உயர் பீட உறுப்பினர்களுள் ஒருவரும் கல்முனை மாநகர பிரதி மேயருமான நிசாம் காரியப்பர் வடக்கு கிழக்கில் காணி போலீஸ் அதிகாரம் வேண்டும் என்று கூறியுள்ளார். அதுவே கட்சியின் நிலைப்பாடாக கொள்ளலாம். அக்கருத்தின் நீட்சியாக வேண்டுமென்றால் இன்னும் சில நாட்களின் பின்னர் முஸ்லிம் காங்கிரசின் ஏனைய தலைவர்கள் அதற்கு பொழிப்புரை கூறுவார்கள். ஏனெனில் போலீஸ் காணி அதிகாரம் வடக்கு கிழக்கு என்று இரு மாகாணங்களுக்கும் தனித்தனியாக வழங்கப்பட்டால், கிழக்கிலே காவல் துறையில் கணிசமான பங்கு தங்களுக்கு கிடைக்கும். மாறாக, தமிழ் தரப்பினர் கேட்பதுபோல் இணைந்த வடக்கு கிழக்கு என்றால், அதில் முஸ்லிம்கள் வடக்கு கிழக்கில் 18 விழுக்காடாக எண்ணிக்கை பலமிழந்து போவதால், முஸ்லிம்களுக்கான நிலத்தொடர்பற்ற தனியலகு (தென் கிழக்கு அலகு) என்று கோருகின்ற பொழுது அந்த முஸ்லிம் தனியலகுக்கு போலீஸ் அதிகாரம் காணி அதிகாரம் தனித்து தரப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுவார்கள்.

வட கிழக்கில் தமிழ் சிங்கள இன முரண்பாடுகளின் சாத்வீக,  யுத்த போராட்டங்கள் யாவும் முடிவுற்று கிழக்கு மாகாணமும் பிரிக்கப்பட்டு அங்கு தேர்தல்கள் நடந்து ஒரு தனி மாகாணமாக ஆட்சி நிர்வாகத்தினை கொண்டுள்ள நிலையில்  இப்போது முஸ்லிம் முதலமைச்சர் கோசத்தினை முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்து கிழக்கில் வாழும் அனைத்து முஸ்லிம் மக்களையும் ஒன்றிணைக்க அதேவேளை தமது ஏக போக அரசியல் அதிகாரத்துக்கு சவால் விடும் ஏனைய முஸ்லிம் கட்சிகளையும், தேசிய கட்சிகளில் உள்ள முஸ்லிம் அரசியல் தலைமைகளையும் இடம் தெரியாமல் செய்யலாம் என்று கருதுகிறார்கள். மறுபுறத்தில் “கிழக்கில் தமிழ் மக்களை விட முஸ்லிம் மக்களே அதிகம் வாழ்ந்து வருகிறார்கள் கிழக்கு மாகாணத்தின் அரசியல்  அதிகாரம் முஸ்லிம் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என முஸ்லிம் காங்கிரசின் பிரதிச் செயலாளர் நிசாம் காரியப்பர் கருத்து வெளியிட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சென்ற மாகாண சபைத் தேர்தலிலும் தமது பதவிகளையே இராஜினாமா செய்து, தாங்கள் பதவிகளை துச்சமென மதிப்பவர்கள் என்றும், அரசு அரச பயங்கவாதம் மூலம் ஆயுதபாணிகளை கொண்டு தேர்தலை நடத்துகிற தென்றும், இந்த ஆட்சியில் ஜனநாயகம்  கருமேகம் சூழ்ந்து காணப்படுகிறது என்றெல்லாம் சொல்லி முஸ்லிம் முதலமைச்சராக முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டமைத்தும் வெற்றிபெற முடியவில்லை என்பதும் ஞாபகத்துக்குரியவை.

அன்று, தமிழர் கூட்டணியினர் ராஜீவ் காந்திக்கு வழங்கிய மகஜரில் சொன்ன விடயத்துடன் சமாந்தரமாக இப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாவை சேனாதிராஜா ”வடக்கு கிழக்கில் வாழ்ந்து யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் காணிகளை இராணுவம் கைபற்றி முகாம்களை அமைத்து வருகினறது. வடக்கு கிழக்கு மாகாண சபைக்கு அதிகாரம் இல்லாததாலேயே இந்த நில ஆக்கிரமிப்பு நடைபெறுகின்றது.” அவர் மேலும், இவ்விரு மாகாணங்களும் இணைக்கப்பட்டு, அவற்றிற்கு போலீஸ் காணி அதிகாரம் வழங்கப்பட்டால்தான் தீர்வினைக் காண முடியும் என்று நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

“போலீஸ் அதிகாரம் வழங்குவது என்பது பிரிவினைக்கு வழிகோலும் என்ற பழங்கதை  கற்பனையானது போலவே வேடிக்கையானதுமாகும்” என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் சர்வதேச பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் குறிப்பிடுவதும் பெரும்பான்மை இலங்கை அரசின் ஐயத்தை போக்கும் வெறும் சொல்லாடாலாக கருதப்படக் கூடியதொன்றல்ல.

இந்த பின்னணியில் கிழக்கு முஸ்லிம்கள் பற்றிய குறிப்புக்களில் காணப்படும் வரலாற்று நிகழ்வையும் திரும்பிப் பார்க்காமலிருக்க முடியவில்லை.

தெற்கிலே மேற்கு கரையோரப் பிரதேசத்தில் வணிகத்தில் சிறப்புற்றிருந்த முஸ்லிம்களை  போர்த்துக்கேயர் அடித்து துரத்தி கொன்றழித்தபோது, முஸ்லிம்களே இலங்கையின் அந்நிய ஆதிக்க ஆக்கிரமிப்பு காலத்தில் முதல் உள்நாட்டு அகதிகளாக மாறினார்கள்.  கண்டி மன்னன் செனரத் அவர்களுக்கு கண்டியில் புகலிடம் அளித்ததும், அவர்களில் சுமார் நாலாயிரம் பேர் வரை முதன் முதலில் கிழக்கிலே அரச திட்டமிட்ட குடியேற்றம் செய்து வைத்ததும் பதிவு செய்யப்பட்டுள்ள வரலாறு.  ஆக முதல் அகதிகள், முதல் அரச அனுசரனை பெற்ற குடியேறிகள், மறுபுறம் எதிர்வினையாக ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சிங்கள இனவாதத்தின் கலவரங்களில் உயிரும் உடமையும் இழந்தவர்கள். அதற்கும் முஸ்லிம்களுக்கு எதிராக துணை போனதும் தமிழ் தலைமைகள்தான் எனபதும் ஜீரணிக்க கஷ்டமான வரலாறுதான் என்றாலும் காணி நிலப் பிரச்சினை என்பதும் கால காலமாக  இலங்கையில் சகல சமூகங்களாலும் எதிர்கொள்ளப்படுகிற ஒரு பிரச்சினையாகவே இருந்தும் வந்திருக்கிறது, இன்றும் வருகிறது.

சிங்களவர்களின் காணிகள் பறிக்கப்பட்டதும் அவர்கள் தமிழ் தேசிய ஆயுத வெறியாளர்களின் அடக்கு முறைக்கு ஆளாகிப்போனதும் ஆயுத போராட்ட காலங்களில் சாதாரணமாக நடைபெற்ற நிகழ்வுகள். அதுபற்றிய தனிப்பட்ட சோகம் தளும்பிய தகவலகள், இன மத வேறுபாடுகளுக்கபால் மனிதர்கள் என்ற வகையில் மாறுபட்டவையல்ல.

தொடரும்…

Advertisements

Written by lankamuslim

மார்ச் 3, 2012 இல் 9:08 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: