Lankamuslim.org

One World One Ummah

மன்னார்: விடத்தல்தீவு முஸ்லிம்களின் வரலாறு

leave a comment »

எம்.எ.அப்துல் மஜீத்
விடத்தல்தீவு முஸ்லிம்களது வரலாற்றை நோக்குகின்ற போது, இலங்கை முஸ்லிம்களின் நீண்ட பாரம்பரிய வரலாற்றைக் கொண்ட குடியிருப்புகளில் இதுவும் ஒன்றாகும். இங்கு முஸ்லிம்கள் மிக நீண்ட காலமாகத் தமது தனித்துவ அடையாளத்தைக் கொண்டவர்களாக வாழ்ந்து வந்துள்ளனர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன.

அராபிய முஸ்லிம்கள் வர்த்தகர்களாக மாந்தை துறைமுகத்துடன் மிக நீண்ட காலமாக தொடர்பு வைத்திருந்ததுடன், அங்கு குடியேறினர் என்பதை பின்வரும் வரலாற்று நூல்கள் சான்று பகர்கின்றன. பெரிய பிரித்தானியாவினதும், அயர்லாந்தினதும், அரசு ஆகிய கழக நிலை அறிக்கையில் கொழும்பில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு சம்பந்தமாக சேர் அலக்ஸாண்டர் ஜோன்ஸ்டன் நைட் வீ. பீ. ஆர். ஏ. எஸ் என்பவர் செயலாளருக்கு அனுப்பிய கடிதம் இலங்கையில் அரேபிய முஸ்லிம்களது பூர்வீக குடியிருப்புக்கள் பற்றி பின்வருமாறு எடுத்தியம்புகிறது விரிவாக பார்க்க

இலங்கையில் குடியேறிய முதல் முகம்மதியர்கள், அவர்களின் வழித்தோன்றல்களிடையே வழக்கில் உள்ள மரபு வரலாற்றின் படி எட்டாம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் கலீபா அப்துல் மலிக் பின் மர்வானின் கொடுங்கோன்மை காரணமாக அரேபியாவிலிருந்து துரத்தப்பட்ட ஹாசிம் குடும்பத்தைச் சேர்ந்த அரபிகளின் ஒரு பிரிவினராவர். அவர்கள் யூப்பிரடீஸிலிருந்து தெற்கு நோக்கி வந்து கொங்கனியிலும், இந்திய தீபகற்பத்தின் தென் பகுதியிலும் இலங்கைத் தீவிலும், மலாக்காவிலும் குடியேறினர். அவர்களில் இலங்கைக்கு வந்த பிரிவினர் எட்டுப் பெரிய குடியிருப்புக்களை தீவின் வடகிழக்கு, வடக்கு, மேற்குக் கரைகளில் ஆக்கிக் கொண்டனர். அவை திருகோணமலை, யாழ்ப்பாணம், மாதோட்டம் – மன்னார், குதிரை மலை, புத்தளம், கொழும்பு, பாபரீன், காலி முனையிலும் ஆகும்..’ என்று தொடர்கிறது.

’11ம், 12ம், 13ம், நூற்றாண்டுகளில் மன்னாரையும், மாதோட்டத்தை- யும் சேர்ந்த முகம்மதிய பெருவணிகர்கள் பலவிதமான வர்த்தகப் பொருட்களை உற்பத்தி செய்த பிரதேசங்களின் சுற்றுப் புறங்களில் அமைந்த வேவ்வேறு துறைமுகப் பிரதேசங்களில் வசித்த தங்களின் கீழுள்ள துணையாட்களிடமிருந்து இந்த வர்த்தக மத்திய நிலையத்திலமைந்த மிகப்பெரிய பண்டகசாலைகளுக்கு தீவின் அதிகம் பெறுமதி வாய்ந்த விளை பொருட்களைப் பெற்றனர்….’ என்று கூறுகிறது.

‘இலங்கையின் வடமேல் பாகத்திலுள்ள மாதோட்டத்திலும், மன்னாரிலும் அமைந்த குடியேற்றப் பிரதேசமானது இந்திய தீபகற்பத்தோடு ஒப்பிடும் போது அது அமைந்திருந்த இடம் காரணமாகவும, ஆதாமின் பாலத்தினூடு அமைந்த இடம் காரணமாகவும், அதனூடு அமைந்த 2 வழிகள் காரணமாகவும், மதுரையினதும், இலங்கையினதும் கரைகளில் சங்கு முத்துக்குளிப்பின் காரணமாகவும் அனைத்து வர்;த்தகத்தினதும் பெரும் மத்திய நிலையமாக விளங்கியது’.

செனவிரட்ன என்ற வரலாற்று ஆசிரியர் மாந்தையுடனான முஸ்லிம்களின் வரலாற்றுக்கால வர்த்தகத் தொடர்புகளை பின்வருமாறு குறிப்பிடுகிறார். மாதோட்டத் துறைமுக நகரத்தில் இஸ்லாமிய சமயத்தைத் தழுவிய அறாபிய முஸ்லிம் வர்த்தகர்களின் சந்ததியினர் மிக நீண்ட காலமாக வாழ்ந்தார்கள். இவர்களின் வீடுகள் டமஸ்கஸ், பக்தாத் ஆகிய நகரங்களில் காணப்பட்ட வீடுகளுக்கு ஒப்பான கட்டிடக் கலையைக் கொண்டவையாகக் காணப்பட்டமை இவர்கள் மிகவும் வசதியான வர்த்தகர்களாக இருந்தனர் என்பதற்கு சான்றாகும். இவர்களது வீடுகள் மாடி அமைப்பினையும், கூரைகள் தட்டையானதாகவும், காற்றோட்டமுள்ள உப்பரிகையைக் கொண்டவையாகவும் இருந்தன’.3 (Seneviratne – 1979)

விடத்தல் தீவு முஸ்லிம்களது வரலாற்றை ஆராயும் போது இங்கு முஸ்லிம்கள் எட்டாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்து ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தோடு மட்டுமல்லாமல் முத்துக்குளித்தல், சங்கு எடுத்தல் போன்ற நடவடிக்கைகளுடனும், படகோட்டிகளாகவும், தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்கள் (Van 1888 and stevart 1843) ஏறக்குறைய இதே போன்ற நடவடிக்கைகளில் மன்னாரின் வடபுறமான மாந்தைப் பிரதேசத்தில் முஸ்லிம்களின் வரலாற்றுக்கால ஈடுபாடு சங்கு குளித்தலாகக் காணப்பட்டது.

உலகில் மிக முக்கியமாக விளங்கும் சங்கு, சிப்பிகளின் இருப்பிடமாக மாந்தைப் பிரதேசம் சார்ந்த கடல் வலயம் காணப்பட்டதால் இப்பிரதேசத்தின் சங்குத் தொழில் பற்றி Twynan (1902) என்ற வரலாற்று ஆசிரியர் குறிப்பிடும் போது,

‘மன்னாரின் வட பிரதேசம் சங்கு குளிப்பதற்கு மிகவும் பிரபல்யமானதாக காணப்பட்டது. அறேபியாவிலிருந்தும், கீழைக் கரையிலிருந்தும் வந்த முகம்மதிய சுழியோடிகள் இத்தொழிலில் மிகக்கூடுதலாக ஈடுபட்டார்கள். பின்னர் இவர்கள் இப்பிரதேசத்தில் குடியேறினர்’. (Twynan – 1902)

மேற்கூறிய சில ஆதாரங்களை அடிப்படையாக வைத்து நோக்கும் போது முஸ்லிம்கள் மாந்தை, மகாதித்த என அழைக்கப்பட்ட பிரதேசமாகிய தற்போதைய விடத்தல் தீவின் மிக நீண்ட காலத்தொடர்பு கொண்டவர்களாகவும், இப்பிரதேசத்தின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்தவர்களாகவும் வாழ்ந்துள்ளார்கள் என அறியக்கூடியதாக உள்ளது.

புராதன காலத்தில் நடைபெற்ற ஆசிய நாடுகளுடனான வணிகத்தில் மாதோட்டம் முக்கிய பங்கு வகித்தது. வெளிநாட்டு வர்த்தகத்தில் மட்டுமன்றி உள்ளூர் வர்த்தகத்தின் மைய நிலையமாகவும், களஞ்சிய சாலைகளாகவும் மன்னார் – மாந்தை, விடத்தல் தீவு கிராமம் இருந்து வந்துள்ளது.

1ம் விஜயபாகு உருகுனையிலிருந்து அனுராதபுரத்தை நோக்கி படையெடுத்த போது மாதோட்டத்திலிருந்து, மகிங்யகணை வரையிலான பாதையே பயன்படுத்தப்பட்டது. தென்னிந்தியாவிலிருந்து படையெடுப்புக்கள் மாந்தை துறைமுகத்தினூடகவே இடம்பெற்றுள்ளன. இவ்வாறு வரலாற்றில் நிகழ்ந்த தென்னிந்தியப் படையெடுப்புக்களின் போதும், இலங்கையின் காலனித்துவ ஆட்சியாளர்களின் படையெடுப்புக்களின் போதும் இப்பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லிம்களின் பரம்பல் வெகுவாகக் குறைந்த போதும் தமது தனித்துவத்தைப் பாதுகாப்பதில் தவறவில்லை.

போர்த்துக்கேய, ஒல்லாந்து காலனித்துவ ஆட்சியாளர்கள் வர்த்தகத்தைக் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர இப்பிரதேச முஸ்லிம்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்தனர். போத்துக்கேய, ஒல்லாந்தர்களையும் அவர்களின் படையெடுப்புக்களையும், கடுமையாக எதிர்த்தவர்கள் இலங்கையின் கரையோரங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள் என்பதாலும், சிங்கள, தமிழ் மன்னர்களுடன் இணைந்து இவர்கள் செயற்பட்டதாலும் இவர்களை அழிப்பதில் கடுமையான நடவடிக்கைகளை காலணித்துவ வாதிகள் மேற்கொண்டனர். இதனால் இவர்களது வர்த்தக முயற்சிகள் குறைவடைந்தன. இவர்களது சமய, கலாசார வளர்ச்சியைத் தடுப்பதற்கான பலவழிமுறைகளையும் மேற்கொண்டனர். இதனால் இப்பிரதேசத்திலிருந்து குறிப்பாக கரையோர ஆதிக்கத்தில் இருந்து முஸ்லிம்கள் நாட்டின் உட்பகுதி நோக்கி இடம்பெயரவும் வழிவகுத்தது. ஆனால் மாந்தைப் பிரதேச முஸ்லிம்கள் தமது இருப்பை தொடர்ந்து பேணியதாக வரலாறு சான்று பகர்கின்றது. உதாரணமாக ஒல்லாந்தர் கால அரசாங்க அறிக்கையின் படி மன்னார் பிரதேச கரையோர குடியிருப்புக்களில் வாழ்ந்த முஸ்லிம்கள் காலனித்துவ ஆட்சியாளர்களினால் முத்துக் குளிப்பதிலும் ஈடுபடுத்தப்பட்டவர்கள் என்பதற்கான குறிப்புகள் அதிகமாகக் காணப்படுகின்றன.

(The Dutch Record of the Ceylon Government 1972) எனவே இத்தொழிலில் இவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தமையே இவர்களை காலனித்துவ வாதிகள் பயன்படுத்தக் காரணமாகும்.

மேற்குறித்த சான்றுகளை பார்க்கின்ற போது மாந்தைப் பிரதேசத்தில் அமைந்த, விடத்தல் தீவில் மிக நீண்ட காலமாக முஸ்லிம்கள் தமது வரலாற்றுக்கால தொடாச்சியைப் பேணியுள்ளனர் என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றது.

பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக் காலத்தில் இக்கிராம முஸ்லிம்கள் தொடர்பான மிகவும் தெளிவான வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கப் பெறுகின்றன. இப்பிரதேச முஸ்லிம் மக்கள் சங்கு, அட்டை குளித்தல் போன்ற கடல்வளப் பொருளாதார நடவடிக்கைகளிலும், நெல், புகையிலை போன்ற விவசாய நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவந்ததாக அறிய முடிகின்றது. பிரித்தானிய ஆட்சிக்கால முக்கிய ஆவணமான டென்ஹாம் (Denham) என்பவரால் எழுப்பப்பட்ட Mnnar Geseteer எனும் நூல் 19ம் நூற்றாண்டின் இறுதிக்காலகட்ட குடிசனக்கணிப்பீடுகளையும், அரசாங்க நிர்வாக அறிக்கைகளையும் ஆதாரமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டதாகும். Denham (1902) என்பவரது கூற்றுப்படி அக்காலத்தில் மன்னார் மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவு முஸ்லிம் செறிவைக் கொண்ட 29 குடியிருப்புக்கள் காணப்பட்டன. இதில் 11 பிரிவுகள் மாந்தை – நானாட்டான் பிரதேசங்களில் அமைந்திருந்தன. அதில் விடத்தல் தீவும், விடத்தல் தீவு சார்ந்த விளாங்குளி, வட்டக்கண்டல் ஆகிய கிராமங்களும் உள்ளடங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இக்கிராம முஸ்லிம் மக்கள் தமது குடியிருப்புப் பரம்பலில் தனித்துவப் போக்கையே மிக நீண்ட காலமாக பின்பற்றி வந்துள்ளனர் என்பதை எடுத்துக்காட்டும் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன. முதலில் காலனித்துவ காலத்தில் கரையோரப் பிரதேசங்களில் இருந்து மக்கள் உள்நோக்கி இடம்பெயர குடிசன வளர்ச்சியினால் ஏற்பட்ட நிலமின்மை, வேலையில்லாப் பிரச்சினை, இயற்கை அழிவுகள் குறிப்பாக பெரும்புயல், வெள்ளப்பெருக்கு, வரட்சி போன்ற காரணங்களின் விளைவாக தமது குடியிருப்புக்களை விட்டு உள்நோக்கி இடம்பெயர்ந்து வேறு குடியிருப்புக்களை அமைத்துள்ளனர். ஆனால் மேற்படி இடப்பெயர்வுகள் விடத்தல் தீவு கிராம குடியிருப்பின் தனித்துவத்தையோ, நிரந்தரத் தன்மையையோ வரலாற்றுத்தொடர்பையோ பாதிக்கவில்லை. இப் பிரதேசத்தில் பல பரம்பரைகள் பாரம்பரியங்களைக் கொண்ட மக்களாக இவர்கள் வாழ்ந்து வந்தார்கள்.

மேலும் இக்கிராம மக்களின் சமய, சமூக, கலாசார தனித்துவத்தை அடையாளப்படுத்தும் பல அம்சங்களைக் காணக்கூடியதாக உள்ளது. இம்மக்களது சமய கலாசார வளர்ச்சிக்கு இப்பிரதேச தனித்துவ வழிபாட்டு, கலாசார, சமூக கட்டமைப்பு மட்டுமன்றி இக்கிராமத்தோடு தொடர்புடைய அண்மையிலுள்ள ஏனைய முஸ்லிம் குடியிருப்புக்களின் செல்வாக்கும் காரணமாகும். குறிப்பாக மன்னார் தீவு, வவுனியா, யாழ்ப்பாணம், முசலி போன்ற பிரதேசங்களின் சமூக, கலாசார, சமய வளர்ச்சியும் பங்களிப்பு செய்துள்ளன.

மேலும் இக்கிராம மக்களது வரலாற்றுத் தொடர்ச்சியை உறுதிப்படுத்தும் மற்றுமொரு அம்சமாக 1921ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சனத்தொகைக்கணக்கெடுப்பு உள்ளது. இக்கணக்கெடுப்பின் படி ‘உடையார் பிரிவான மேற்கு முனை’ யில் மொத்த சனத்தொகையில் சுமார் 40மூ முஸ்லிம்கள் காணப்பட்;டனர் என்பதை உறுதிப்படுத்துகின்றது. இக்கிராமம் பெரும்பான்மையாக தமிழ் மக்களால் சூழப்பட்ட நிலையிலும் இம்முஸ்லிம்கள் தமது வரலாற்றுத் தொடர்ச்சியையும், இன, சமய, கலாசார தனித்துவத்தை பாதுகாத்துக் கொண்டமையையும் உறுதிப்படுத்துகின்றன. இவ்விடயம் பற்றி மேலும் ஆழமாக ஆராய வேண்டியுள்ளது.5

மேலும் இவற்றிற்கு ஆதாரமாக நெடுவரம்பு என்பது மிகப்பழைய முஸ்லிம் கிராமமாகும். இங்கு வாழ்ந்த மக்கள் விவசாயம், கால்நடை வளர்ப்பு ஆகிய தொழில்களில் ஈடுபட்டு வந்தனர். இங்குள்ள மக்கள் சிறந்த பழக்கவழக்கங்களிலும், விருந்தோம்பலிலும் சிறப்புற்று இருந்ததாக வெளிக்கள ஆய்வுகள் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளன. இக்கிராமத்தில் உள்ள புராதன பள்ளிவாசலும், கிணறும் 1906ம் ஆண்டு வரையப்பட்ட இலங்கைப் படத்தில் குறிப்பிட்டிருந்தமை அதன் தொன்மையை எடுத்துக் காட்டுகின்றது. காலப்போக்கில் இக்கிராம மக்கள் மருதோண்டிவான் வேளாகுளம், பள்ளிவாசல் பிட்டி, ஆண்டான் குளம், இசங்கர் குளம் ஆகிய கிராமங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றனர்.

மேலும் யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாற்றை எழுதிய றஹீம் என்பவர் (1979), இன்றைய விடத்தல் தீவு முஸ்லிம்கள் யாழ்ப்பாண முஸ்லிம்களின் வழித்தோன்றல்களாக இருக்கலாம் என்று குறிப்பிடுகிறார். இவர் போர்த்துக்கேயராட்சி காலத்தில் ஷமீரா| எனும் பெயருடைய முஸ்லிம் ஒருவர் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி இன்றைய விடத்தல் தீவுக் கிராமத்தில் குடியேறியதன் மூலமாக உருவாகியதே இக்கிராமமாகும் என்கிறார். ஆரம்பத்தில் விடத்தல் தீவில் குடியேறிய முஸ்லிம்கள் கடலுடன் தொடர்புடைய சங்கு, அட்டை குளித்தல், படகோட்டுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்று குறிப்பிடுகிறார். மேலும் விவசாயம் காரணமாகவும் தொடர்பு ஏற்பட்டதாகவும் குறிப்பிடுகிறார். இங்கு குடியேறிய முஸ்லிம்கள் புகையிலைச் செய்கையில் ஈடுபட்டனர். அத்துடன் புகையிலை வர்த்தகத்திலும் ஈடுபட்டனர் என பிரித்தானிய கால அரசாங்க அறிக்கைகளும், நூல்களும் குறிப்பிடுகின்றன.

(Denham – 1906 and Bcake – 1888)

யாழ்ப்பாண முஸ்லிம்களின் வாழ்க்கையோடு விடத்தல் தீவின் தரை, கடல் போக்குவரத்தும் விருத்தியடைந்து இருந்தது. பல பிரதேசங்களிலிருந்து வர்த்தகர்களும், மீனவர்களும், சங்கு குளிப்பவர்களும் விடத்தல் தீவுக்கிராம அபிவிருத்தியால் கவரப்பட்டனர். யாழ்ப்பாணத்திலிருந்த கடந்த நூற்றாண்டில் விடத்தில் தீவில் குடியேறிய சு. மீ. முகம்மது முகிதீன், கை வண்டில் முகம்மது கான், செய்னுல் ஆப்தீன் முகம்மது அப்பா போன்ற பெரியார்கள் பற்றிய விபரங்கள் கிடைத்துள்ளன.

மேற்படி வரலாற்று ஆதாரங்களை மையமாகக் கொண்டு நோக்கும் போது விடத்தல் தீவு முஸ்லிம் கிராமம் புராதன கிராமமாகும். இதனை தரைப்பாதையும் கடற்பாதையும் இணைக்கின்றன. உதாரணமாக திருக்கேதீஸ்வரத்திலிருந்து ஒரு புராதன பாதை விளாங்குழியின் மத்திய பகுதியினூடாக மாற்று வழியாக விடத்தல் தீவை அடைகிறது. இப்பாதை நெடுகிலும் பெரும் வைர மரங்களை நடுகல்லாக நாட்டி இருப்பதை அறியக்கூடியதாக இருக்கிறது. தென் இந்தியாவிலுள்ள தொண்டி, காயல் பட்டினம், கீழக்கரை ஆகிய இடங்களில் இருந்து வந்த முஸ்லிம்கள் இங்கு குடியிருப்பை அமைக்கவும், தமது வியாபார மையங்களை அமைக்கவும் உதவியாக இருந்தனர் என்பதை இவை நிரூபிக்கின்றன. அத்துடன் யாழ்ப்பாண முஸ்லிம்களும், விடத்தல் தீவை ஸ்தலமாகக் கொண்டிருந்தனர். போக்குவரத்திற்காக பெரிய தோணிகளையும், பாய் மரக்கப்பல்களையும் உபயோகித்தனர் என்பதை அறியக்கூடியதாக உள்ளது. எனவே இவ்விடத்தல் தீவுக்கிராமம் அரேபிய, இந்திய, யாழ்ப்பாண முஸ்லிம்களால் அமைக்கப்பட்ட புராதன குடியிருப்பாகும்.

மேலும் இக்கிராமத்துடன் இந்திய முஸ்லிம்களுக்கும் அதிக தொடர்புகள் இருந்தன. இந்தியாவின் கீழக்கரை, தொண்டி போன்ற இடங்கிலிருந்து இஸ்லாமிய மார்க்கப் பெரியார்கள் இக்கிராமத்துக்கு வந்து குடியேறியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதற்கு உதாரணம் விடத்தல் தீவு முகைதீன் ஜும்ஆப்பள்ளியில் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஷமௌலானா அப்பா| ஆவார்கள். இவருடன் இவரின் சீடர்களான அப்துல் ரஹ்மான், கான் முகம்மது, கப்புடையார் அப்பா, செய்யது குட்டி அப்பா, கவனியா அப்பா ஆகிய பெரியார்கள் இந்தியாவிலிருந்து விடத்தல் தீவுக் கிராமத்திற்கு வந்து இக்கிராமத்தை தமது வாழ்விடமாக ஆக்கிக் கொண்ட இஸ்லாமிய மார்க்க ஞானிகளாவர்.

இவ்வாறு ஆராயும் போது விடத்தல் தீவுக் கிராமத்தின் வரலாறு நீண்டதும், பாரம்பரியதுமானது என்பதை இத்தகவல்களும், வரலாற்று ஆதாரங்களும் நீரூபிக்கின்றன.

எம்.எ.அப்துல் மஜீத் -ஓய்வுபெற்ற அதிபர்-

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 11, 2010 இல் 2:15 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: