Lankamuslim.org

One World One Ummah

புலிகளின் புதிய தலைவரை குறிவைக்கும் அதிகாரிகள்

leave a comment »

டி.பி.எஸ். ஜெயராஜ்

விநாயகம் என்னும் இயக்கப்பெயரில் ஐரோப்பாவில் தொழிற்படும், தன்னைத் தானே தமிழீழ விடுதலைப்புலிகளின் புதிய தலைவரென கூறிக்கொள்ளும் நபர்மீது நடவடிக்கை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை சென்ற வாரம் இலங்கை பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விரைந்து மேற்கொண்டனர்.

சேகரபிள்ளை விநாயகமூர்த்தி அல்லது விநாயகம் என்பவரை கைது செய்வதற்கான பிடியாணையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திலிருந்து பொலிஸ் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் நவம்பர் 24 ஆம் திகதி கேட்டுப் பெற்றுக்கொண்டனர் விரிவாக பார்க்க

இந்த நபர் தேசத்தின் நியாயாதிக்க எல்லைக்கு அப்பால் தொழிற்படுவதால், விநாயகமூர்த்தி அல்லது விநாயகம் செய்ததாக கூறப்படும் பயங்கரவாத குற்றங்கள் தொடர்பில் ‘ INTERPOL சிவப்பு அறிவித்தல்’ வழங்க, INTERPOL என அழைக்கப்படும் சர்வதேச குற்றச்செயல் பொலிஸ் அமைப்பின் சேவைகளை, இலங்கை அதிகாரிகள் கேட்டுப் பெற்றுள்ளனர்.

‘ INTERPOL சிவப்பு அறிவித்தல்’ என்பது சர்வதேச பிடியாணை அல்ல. இது சம்பந்தப்பட்ட நபர் தேசிய நியாயாதிக்கத்தினால் அல்லது சர்சவதேச குற்றச்செயல் நியாயசபைகளால் தேடப்படும்போது வழங்கப்படுபவதாகும்.

குற்றமிழைத்ததாக கருதப்படுபவர்களை கைது செய்து அவரின் நாட்டுக்கு ஒப்படைக்கும் நோக்கில் குறித்த நாட்டுப் பொலிஸாருக்கு அவர்களை தேடிப்பிடிக்க உதவுவதே ‘இன்ரபோலின்’ வேலையாகும்.

சொந்த நாட்டுக்கு ஒப்படைப்பதற்காக, தேடப்படும் நபரை கைது செய்ய வேண்டும் என்னும் வேண்டுகோளுடன் பிடியாணையை உலகம் முழுதும் விநியோகிக்க சிவப்பு அறிவித்தல்கள் அனுமதிக்கும்.

இலங்கை அதிகாரிகளால் முன்வைக்கப்டப்ட ஆவணங்களின்படி, விநாயகம் 46 வயதானவர், நவம்பர் 10, 1964 இல் பிறந்தவர் ஆவார.; 1.53 மீற்றர் உயரமானவர், ஆங்கிலம் தமிழ் ஆகிய மொழிகளை பேசுவார். இவர் கண், தலைமயிர் ஆகியன கறுப்பு.

விநாயகம் என அழைக்கப்படும் இந்த நபரின் முக்கியத்துவத்தின் காரணமாக, இலங்கை இன்ரபோலினதும் மேற்கத்தைய நாடுகளின் சட்ட அமுலாக்கல் நிறுவனங்களினதும் ஒத்துழைப்பை புதிய எல்.ரீ.ரீ.ஈ தலைவரை கைதுசெய்வதற்கு கோரும் என்பதில் சந்தேகம் இல்லை.

விநாயகம் பற்றிய விபரமான ஆவணத்தொகுப்பு ஒன்று தயாரிக்கப்பட்டுவிட்டதாகவும் விரைவில் அது உலகளாவிய ரீதியில் பொருத்தமான சட்ட அமுலாக்கல் நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படுமெனவும் கொழும்பிலுள்ள நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

குழப்பம்

விநாயகம் என அறியப்படும் நபரின் உண்மையான ஆளடையாளம் பற்றி காணப்படும் எந்தவொரு குழப்பத்தையும் அகற்ற விசேட கவனம் எடுக்கப்படும். ஐரோப்பாவில் உள்ள எல்.ரீ.ரீ.ஈ. இன் ஒரு பகுதியினர் விநாயகத்தை சிரேஷ்ட கடற்புலி தளபதியாக காட்ட முற்படுவதே இதற்கான காரணம் ஆகும். மருதங்கேணியை சேர்ந்த தங்கவேலு விநாயகம் அல்லது ‘மைக்போஃர்’ முன்னர் பிரதி கடற்புலி தளபதியாக இருந்தவர். படிநிலை அமைப்பில் சூசை, செழியன் ஆகியோருக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் இருந்தவர்.

இடது பக்க கண்ணில் குறைபாடு உள்ள விநாயகம் பெபர்வரி 4 ,2009 இல் சண்டையின்போது உயிழந்தார். பிரிகேடியர் பிரசன்ன சில்வாவினால் தலைமை தாங்கப்பட்ட 55 படையணி சாளை கடற்புலி தளத்தை தாக்கியபோது தளத்தை பாதுகாக்கும் போரில் விநாயகம் கொல்லப்பட்டார்.

விநாயகத்தின் உடலம் கிடைக்காவிடினும் கெமுனு வோச் துருப்பினர் அவரது அடையாள அட்டையை கண்டெடுத்தனர். 2009 இன் இறுதிப் பகுதியில் ஐரோப்பாவில் வெளிப்பட்ட சேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி அல்லது விநாயகம், தான் புலிகளின் புலனாய்வு பிரிவிலிருந்ததாக எல்.ரீ.ரீ.ஈ. இற்கும் எல்.ரீ.ரீ.ஈ. சார்பு வட்டாரங்களுக்கும் கூறிக்கொண்டார்.

ஆயினும் தந்திரோபாய ரீதியில் விநாயகம், இறந்துபோனதாக அறிவிக்கப்பட்ட கடற்புலி விநாயகம் தானேதான் என 2010 இல் நடிக்கத் தொடங்கினார். இவர், எல்.ரீ.ரீ.ஈ. புலனாய்வு தலைவர் பொட்டு அம்மானினால் தான் ஒரு முக்கிய வேலையின் பொருட்டு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டதாகவும் தனது மரணம் பற்றிய அறிக்கைகள் தவறானவை எனவும் கூறினார்.

ஐரோப்பாவிலிருந்த சில எல்.ரீ.ரீ.ஈ. செயற்பாட்டாளர்களும், இந்த விநாயகம், உண்மையில் இறந்து போனதாக அறிவிக்கப்பட்ட கடற்புலி சிரேஷ்ட தளபதிதான் என்ற தவறான கருத்தை பரப்பத் தொடங்கினார். கடற்புலி தளபதிக்கு கண்ணில் குறைபாடு இருந்தமையால் இந்த பாசாங்குக்காரரும், சில சமயங்களில் ,தனது கண்களை மறைக்க கறுப்புக்ககண்ணாடி அணிந்துக்கொண்டார்.

ஐரோப்பாவில் உள்ள தகவல் தரவல்ல தமிழ் வட்டாரங்கள், எல்.ரீ.ரீ.ஈ. இன் சில பிரிவினருக்கும், எல்.ரீ.ரீ.ஈ. சார்பான சிலருக்கும் ஐரோப்பாவில் வெளிப்பட்டு;ள்ள விநாயகம், சிரேஷ்ட, கடற்புலி தளபதி அல்ல என்றும் அவர் எல்.ரீ.ரீ.ஈ. இன் உளவுத்துறையை சேர்ந்த ஒரு முக்கிய தலைவர் என்றும் தெரியுமென கூறுகின்றன.

மாறுவேடம்

இருப்பினும் இவர்கள் சில குறிப்பிட்ட காரணங்களுக்காக இந்த மாறுவேட நாடகத்தை அனுமதித்துள்ளனர். இதற்கான முக்கிய காரணம் ‘புலனாய்வு’ விநாயகத்தின் உண்மையான ஆளடையாளம் பற்றி மக்களிடையே குழப்பத்தை உண்டாக்குவதாகும். இவரை ‘உயிர்த்தெழுந்த’ விநாயகமாக காட்டுவது இந்த நோக்கத்தை அடைய உதவியுள்ளது.

இறந்தாக அறிவிக்கப்பட்ட ஒருவர் உயிரோடு இருப்பதாக அறிவிக்கப்படுவது உற்சாகம் இழந்துபோன புலி செயற்பாட்டாளர்களின் உற்சாகத்தை தூண்ட உதவியது இன்னொரு பிரதான காரணமாகும். இது இலங்கை அதிகாரிகளை பொய்யர்களாக காட்டி அவர்களை முகத்தில் கரிபூசும்.

இதைவிட முக்கியமாக, எல்.ரீ.ரீ.ஈ. தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், புலனாய்வுத் தலைவர் பொட்டு அம்மான் ஆகியோர் உயிருடன் உள்ளனர் என்னும் கட்டுக்கதையை பரப்பவும் உதவும். 2009 இல் இறந்தாக அறிவிக்கப்பட்ட விநாயகம், ஐரோப்பாவில் உயிருடன் தோன்ற முடியுமாயின் மே 2009 இல் இறந்தாக அறிவிக்கப்பட்ட பிரபாகரனும் , பொட்டுவும் உயிரோடு இருந்து சரியான தருணத்தில் வெளிப்பட முடியும் என்பதே இந்த தர்க்கமாகும்.

இந்த காரணங்களுக்கு மேலாக, புதிய எல்.ரீ.ரீ.ஈ. தலைவரை, சிரேஷ்ட கடற்புலி தளபதியாக காட்டுவது இன்னுமொரு நடைமுறை நோக்கத்தை நிறைவு செய்கின்றது. வெளிநாட்டு புலிகள் இலங்கை மீதான கடல்வழி தாக்குதல் ஒன்றை மேற்கொள்ளும் ஆயத்தங்கள் நடப்பதாக கதை பரப்பிவருகின்றனர். இது ஏமாளிகளிடமிருந்து நிதிசேகரிப்பதற்கான ஒரு சோடிப்பு ஆகும்.

ஒப்பீட்டளவில் அதிகம் அறியப்படாத புலனாய்வு தொழிற்படுநருக்கு பதிலாக ஓர் அனுபவம் மிக்க கடற்புலி தளபதி, தன் இராணுவ சாதனைகளால் பிரபலமானவர் இந்த கடல்வழி படையெடுப்புக்கு தலைமை தாங்குகிறார் என்று கூறுவதால் இவ்வாறான கடல்வழி படையெடுப்பு சாத்தியமென நம்பவைப்பது இலகுவாக இருந்தது.

இந்த பின்னணியில்தான் விநாயகம் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டார். இருப்பினும் இது முற்றுமுழுதான மாறுவேடம் அல்ல. ஏனெனில் ஐரோப்பாவில் உள்ள பல முக்கியமான எல்.ரீ.ரீ.ஈ.யினர் விநாயகத்தின் உண்மையான ஆளடையாளத்தை அறிந்திருந்தனர். எனவே இவரால் சில பிரிவினரை மட்டுமே கடற்;புலி தளபதி விநாயகம் என பிழையாக நம்பவைக்க முடிந்தது.

விநாயகம் நடிக்கின்றார் என்ற விடயம் வெளிக்கொணரப்பட்டபோது சில புலி சார்ந்த இணையத்தளங்கள் அடைந்த குழப்பம் நகைப்புக்கு உரியதாயிற்று. முன்னரே தமக்கு விநாயகத்தின் உண்மையான ஆளடையாளம் தெரியும் எனக்காட்டும் அவதியில் இந்த இணையத்தளங்கள் ஆள்மாறாட்டத்தை உறுதியாக அம்பலப்படுத்தும் விவரங்களை வழங்கின.

கடற்புலி விநாயகத்தைவிட, புலனாய்வு பிரிவு விநாயகம் குறைவாக அறியப்பட்டவராக இருந்தாலும், பின்னையவரின் முக்கியத்துவத்தையும் ஆற்றலையும் குறைத்து மதிக்க முடியாது. எல்.ரீ.ரீ.ஈ இன் புதிய தலைவர், முன்னர் எல்.ரீ.ரீ.ஈ.யின் நாசகர நடவடிக்கைகளில் ஈடுபட்டவர். இவருக்கு வருங்காலங்களில் அழிவை ஏற்படுத்தும் ஆற்றல் உள்ளது. இதனால்தான் இலங்கை அதிகாரிகள் இவரை கைது செய்ய விரைந்து நடவடிக்கை மேற்கொள்கின்றனர் போலும்.

தென்மராட்சி

சேகரபிள்ளை விநாயகமூர்த்தி அல்லது விநாயகம் நவம்பர் 10, 1964 இல் பிறந்தவர். இவரது குடும்பம் தென்மராட்சி பிரதேசத்தின் வரணியில் இடைக்குறிச்சி என்னும் இடத்தை சேர்ந்தது. இருந்தாலும் இவர், குடும்பம் சாவகச்சேரியில் சில காலம் வாழ்ந்தது.

விநாயகமூர்த்தி 1985 இல் தன் இருபதாவது வயதில் எல்.ரீ.ரீ.ஈ. இல் முறையாக இணைந்தார். இதற்கு முன் மாணவனாக இருந்த காலத்தில் இவர் எல்.ரீ.ரீ.ஈ. உதவியாளாக இருந்தார். யாழ்ப்பாண குடாநாட்டில் தெற்கு மற்றும் தென்மேற்கு பிரதேசத்தில் உள்ள, மாசார் மற்றும் புலோப்பளை, கிளாலி பகுதியில் தன் உள்ளுர் பயிற்சியை பெற்றதாக கூறப்படுகின்றது.

விநாயகம் முதலில், புலி வட்டாரத்தில் ‘லொஸ் ஏன்ஜெல்ஸ்’ என குறிப்பிடப்படும் புலிகளின் தென்மராட்சி பிரிவில் நிலைகொண்டார். அப்போது திலீபன் அல்லது கேடில்ஸ் தென்மராட்சி பிரதேசத்துக்கு பொறுப்பாக இருந்தார்.

சூசையின் கீழிருந்த வடமராட்சி பிரிவு கலிபோர்ணியா எனவும் ஜொனியின் கீழிலிருந்த வலிகாமம் பிரிவு சிக்காக்கோ எனவும் அழைக்கப்பட்டன. சதாசிவம்பிள்ளை கிருஷ்ணகுமார் அல்லது கிட்டு, யாழ்ப்பாண மாவட்ட புலிகிள் மீதான ஒட்டுமொத்த பொறுப்பையும் கொண்டிருந்தார்.

விநாயகத்தின் பிரதேச பொறுப்பாளராக இருந்த கேடில்ஸ், கைதடி பவுஸர் குண்டு வெடிப்பில் பெப்ரவரி 14 இல் கொல்லப்பட்டார்.

அதன்பின் சிறிது காலத்துக்கு குஞ்சன், பாக்கியராஜ் ஆகியோரின் கூட்டு பொறுப்பில் தென்மராட்சி விடப்பட்டது. பின்னர் புதிய பொறுப்பாளராக நரேன் நியமிக்கப்பட்டார்.

யூலை 29, 1987 இந்திய இலங்கை ஒப்பந்தத்தை தொடர்ந்த யுத்த நிறுத்த காலத்தில் நரேன் மாற்றப்பட்டு அப்துல்லா நியமிக்கப்பட்டார்.

குமரப்பா, புலேந்திரன் ஆகிய சிரேஷ்ட புலித் தலைவர்கள் உட்பட 12 எல்.ரீ.ரீ.ஈ. போராளிகள் கைது செய்யப்பட்டு தற்கொலை செய்துகொண்டதை தொடர்ந்து குறுகிய ஓய்வைத் தந்த சமாதானம் சிதறிப்போயிற்று.

பலாலியில் சயனைட் அருந்தி தற்கொலை செய்துக்கொண்டவர்களுள் தென்மராட்சியின் புதிய தளபதி அப்துல்லாவும் இருந்தார்.

இந்த நிகழ்வின் பின் இந்திய இராணுவத்திற்கும், எல்.ரீ.ரீ.ஈ. இற்கும் இடையில் யுத்தம் மூண்டது. அப்போது தினேஷ் என அறியப்பட்ட முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ. அரசியல் பிரிவு தலைவர் சுப்பையா பரமு தமிழ்செல்வன் தென்மராட்சி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

அவர், அதே பிரதேசத்தில் மட்டுவில் என்னும்; இடத்தை சேர்ந்தவர். அதே பிரதேசத்து மந்துவிலை சேர்ந்த பாப்பா அவருக்கு அடுத்த நிலையில் நியமிக்கப்பட்டார்.

கேடில்ஸிலிருந்து தமிழ்செல்வன் வரையிலான இந்த மாற்றங்களின்போது விநாயகமூர்த்தி எல்.ரீ.ரீ.ஈ. இன் தென்மராட்சி பிரிவிலேயே வேலை செய்தார். இவர் பாப்பாவின் கீழ் நேரடியாக வேலைசெய்ததாகவும், அம்பன் – குடத்தனை வரணி பகுதிகளில் நிலைக்கொண்டிருந்ததாகவும் அறியப்படுகிறது.

1990 இல் இந்திய இராணுவம் இலங்கையிலிருந்து வெளியேறிய பின், எல்.ரீ.ரீ.ஈ. யாழ்ப்பாண குடாநாடு உட்பட வட மாகணத்தின் பெரும்பகுதியின் கட்டுப்பாட்டை எல்.ரீ.ரீ.ஈ. பெற்றுக்கொண்டது. எல்.ரீ.ரீ.ஈ நிறுவனம் முற்றுமுழுதாக புனரமைக்கப்பட்டது.

ஐயன்னா

இந்த புதிய மாற்றங்களின்போது விநாயகமூர்த்தி, பொட்டு அம்மான் தலைமையிலான புலி நிறுவன பாதுகாப்பு புலனாய்வு சேவை (TOSIS) என்று அழைக்கப்பட்ட புலிகளின் புலனாய்வு பிரிவில் உள்ளீர்க்கபட்டார்.

இவர் இரண்டாம் லெப்டினென்ட் ஆக பதவி உயர்த்தப்பட்டு ஐயன்னா என்னும் இயக்கப்பெயர் சூட்டப்பட்டார். (எல்.ரீ.ரீ.ஈ. இன் சர்வதேச ஆயுத கொள்வனவாளரான பொன்னையா ஆனந்தராஜாவின் இயக்கப் பெயரான அய்யன்னா வேறு.)

விநாயகமூர்த்தி அல்லது ஐயன்னா 1990-1993 காலப்பகுதியில் நேரடியாக பொட்டு அம்மானின் கீழ் வேலை செய்தார். இவர், தனது அடிமைத்தனமான பக்தி மூலம் பொட்டு அம்மானின் நேயத்துக்குரியவர் ஆனார்.

‘ஐயன்னா பொட்டுவின் அலுவலகத்தில் ‘பீயோன்’ ஆகவும் பொட்டுவின் வீட்டில் அவரது மனைவிக்கு வேலையாளராகவும் இருந்தார்.” – இது ஐயன்னாவின் முகஸ்துதி பற்றி மேற்கத்தைய நாட்டில் வாழும் முன்னாள் புலி உறுப்பினர் ஒருவர் பரிகாசமாக கூறியது.

1994 இல் விநாயகமூர்த்தி லெப்ரினென்ட் ஆக உயர்த்தப்பட்டு, வவுனியா மாவட்டத்துக்கான புலனாய்வு தலைவராக வவுனியாவுக்கு அனுப்பப்பட்டார். 1996 இல் இவரிடம் வட, வடமத்திய மாகாண காடுகளில் உளவு பார்த்தல் அல்லது ‘றெக்கி’ எடுக்கும் பொறுப்பும், அரச கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் ஊடுருவி காட்டுப்பாதைகளை உருவாக்கும் பொறுப்பும் வழங்கப்பட்டது.

பின்னர், 1997 இல் இவர் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ. இராணுவ புலனாய்வு தலைவர் சாள்ஸுடன் இணைந்து தொழிற்படுமாறு அனுப்பப்பட்டார். சாள்ஸ், கொழும்பு மற்றும் வடக்கு, கிழக்கு, அல்லாத பிற மாவட்டவங்களில் நாசவேலைகள், அரசியல்வாதிகளின் கொலைகள் என்பவற்றுக்கு பொறுப்பாக இருந்தவர். வவுனியாவும் மட்டக்களப்பும் இப்படியான நடவடிக்கைகள் திட்டமிடப்படுவதற்கும் கட்டளை வழங்குவதற்கும் உரிய முக்கிய இடமாக காணப்பட்டன.

மட்டக்களப்பு – அம்பாறைக்கான புலனாய்வு தலைவர் ரமணன், வவுனியா மாவட்ட புலனாய்வு தலைவர் விநாயகமூர்த்தி அல்லது ஐயன்னா ஆகியோர் தமது அந்தங்களிலிருந்து தேவையான பொருட்களை அனுப்பிவைக்கும் வேலைகளை கவனித்தனர். இந்த காலத்தில் எல்.ரீ.ரீ.ஈ. ஆல் மேற்கொள்ளப்பட்ட அரசியல் கொலைகள் பலவற்றின் தயாரிப்பு வேலைகளுக்கு இந்த இருவரும் பொறுப்பாக இருந்தனர்.

இவர், 1990 இல் கப்டனாக பதவி உயர்த்தப்பட்டு புதிய கடமைகள் வழங்கப்பட்டு பெரும்பாக கொழும்பு பகுதிக்கு அனுப்பப்பட்டார். இவர் சாள்ஸுடன் இணைந்து வேலை செய்தார்.

இவர் நீர்கொழும்பில் நிலைகொண்டதாக கூறப்படுகிறது. அக்காலத்தில் இவர் தனது பெயரை விநாயகம் என சுருக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இவர் விநாயகம் என்றே அழைக்கப்பட்டார். 1985 இல் இவர் எல்.ரீ.ரீ.ஈ. இல் சேர்ந்தபோது இவர் விநாயகம் என்றே அறியப்பட்டிருந்தார்.

இவர் நீர்கொழும்பு- கொழும்பில் பணிப்பொறுப்பிலிருந்த காலத்தில் இவரது பிரதான ‘சாதனை’யாக ஜுலை 12, 2001 இல் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் மீதான தாக்குதலுக்கு அடித்தளம் இட்டமையாக அமைகின்றது. இந்த பொறுப்பு வெற்றிகரமாக சாதிக்கப்பட்டதன் பின், இவர் வன்னிக்கு அழைக்கப்பட்டு மேஜர் பதவி வழங்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டார்.

புலனாய்வு

ஒஸ்லோ ஆதரவு சமாதான செயற்பாடு பெப்ரவரி 23, 2002 இல் போர் நிறுத்தத்திற்கு வழிவகுத்தது. இக்காலத்தில் எல்.ரீ.ரீ.ஈ., உலகளவில் தமிழ் புலம்பெயர்ந்தோரிடையே அதிகளிவில் வேலை செய்வதில் கவனத்தை செலுத்தியது. யுத்த நிறுத்தத்தை பயன்படுத்தி புலம் பெயர்ந்தோரிடையே புலிகளின் பிடியை வலுவாக்குவதே திட்டமாக இருந்தது.

இராணுவ நடவடிக்கைகளில் அனுபவம் பெற்ற புலி உறுப்பினர்களை, புலிகளின் கிளைகளையும், முகப்பு நிறுவனங்களையும் நிர்வகிக்க பல நாடுகளுக்கும் அனுப்புவதே இந்த உத்தியின் பிரதான கூறாக காணப்பட்டது. போர்க்கள அனுபவம் பெற்ற முழுதாக இயக்கத்தில் ஈடுப்பட்ட புலிகள், புலம் பெயர்ந்தோர் மீது கூடிய கட்டுப்பாட்டை கொண்டிருப்பர் என்றும் ஈவிரக்கமற்ற முறையில் விடயங்களை அச்சொட்டாக முன்னெடுப்பர் எனவும் எல்.ரீ.ரீ.ஈ. உயர்பீடம் கருதியது.

இந்த உத்திக்கு இணைந்ததாக எல்.ரீ.ரீ.ஈ. புலனாய்வு பிரிவி;ன் பாத்திரம் அமைந்தது. பல புலி புலனாய்வு தொழிற்படுநர்கள் இந்தியாவுக்கும் பல மேற்கத்தைய நாடுகளுக்கும் அனுப்பப்பட்டனர். சிலர் எதையும் காணாதவர் போலிருந்து நடப்பவற்றை நன்கு அவதானித்து அறிக்கை அனுப்பும் பணிக்காக நியமிக்கப்பட்டவர்கள்.

மற்றவர்கள் எல்.ரீ.ரீ.ஈ. கிளைகள், முகப்பு நிறுவனங்களின் பிரதான தொழிற்படுநர்களுடன் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் புலிகளின் செயற்பாடுகளில் ஈடுபடவேண்டும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

இதே போன்று எல்.ரீ.ரீ.ஈ. புலனாய்வு தொழிற்படுனர்களை இந்தக் காலத்தில் இலங்கையின் பல பகுதிகளுக்கும் அனுப்பிவைத்தனர். இவர்களில் சிலர் தமது தலைமையகத்துடன் தொடர்பிலிருந்தாலும், ஏனையோர், தேவை ஏற்படும்போது மட்டும் தொழிற்பட பணிக்கப்படும் நோக்கில் அடக்கத்தில் இருந்தவர்கள் ஆவர்.

வன்னிக்கு அப்பால் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் தொழிற்படுவோர் தொடர்பான விடயங்களை மேற்பார்வை செய்யும் நோக்கில் எல்.ரீ.ரீ.ஈ. இன் உளபிரிவு விசேட அலகு ஒன்றை உருவாக்கியது. இந்த விசேட புலனாய்வு அலகு ‘வெளிநாட்டு – உள்நாட்டு புலனாய்வு விவகாரங்கள்’ என அழைக்கப்பட்டது.

விநாயகமூர்த்தி 2002 இல் இந்த விசேட அலகின் தலைவராக்கப்பட்டார். இந்த புதிய பொறுப்பு கொடுக்கப்பட்டபோது இவரது இயக்கப்பெயர் மீண்டும் மாற்றப்பட்டது. இப்போது அவர் அறிவழகன் என அழைக்கப்பட்டார்.

ஒரு கட்டத்தில் மேஜர் அறிவழகன், போலி கடவுச்சீட்டில் இந்தியாவுக்கு பயணமாகி சில காலம் அங்கு தங்கி ஆதரவு வலையமைப்பு ஒன்றை ஏற்படுத்தினார். இவர், போலி கடவுச்சீட்டுடன், சமாதான பேச்சுவார்த்தைக்காக ஐரோப்பியாவுக்கு சென்ற எல்.ரீ.ரீ.ஈ. தூதுக்குழுவோடு பயணமாகி பல ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று அமைதியான முறையில் புலம்பெயர்ந்தோருடன் கலந்துரையாடினார்.

இந்தக் காலத்தில் விநாயகத்தின் செல்வாக்கு வளர்ச்சி கண்டது. இவரது சகோதரரான சக்தி, வன்னியில் எல்.ரீ.ரீ.ஈ.இனால் உருவாக்கப்பட்ட மரசபை தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த மர சபைக்கு, கட்டுமான வேலை மற்றும்; விறகு தேவைக்காக மரம் வெட்டுதல் தொடர்பான சகல விடயங்களையும் கட்டுப்படுத்தியது. இச்சபை மரம் வெட்டுவோர், மரவியாபாரிகள் ஆகியோரிடமிருந்து வரி அறவிட்டது. சக்தியின் இந்த நியமனத்துக்கு காரணமாக இருந்தது அவரது சகோதரனின் செல்வாக்கே.

தொடர்பாடல்

நவம்பர் 2005 இல் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக வந்த பின் நிலைமை தலைகீழாக மாறியது. பலவீனமான சமாதான செயற்பாடு பூரணமாக செயலிழந்தது. விரைவில் முழுவளவிலான யுத்தம் வெடித்தது. வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ. அமைப்புகளுக்கும் வன்னியிலிருந்த புலி உயர்பீடத்துக்கும் இடையில் தொடர்பாடல் கடினமாயிற்று. இராணுவம் முன்னேறி வர புலிகள் பின்வாங்கி சென்றமையால் வெளிநாட்டு கிளைகளுடனும், முகப்பு நிறுவனங்களுடனுமான தொடர்பு அறுந்து போயிற்று.

வன்னியில் பெரும் சண்டை நடந்தபோது விநாயகத்தின் பாத்திரம் என்னவாக இருந்து என்பது தெளிவாக தெரியவில்லை. இவர் பொட்டு அம்மானுக்கு நெருக்கமாக இருந்தார் எனவும் தேசிய புலனாய்வு நிறுவன தலைவருக்கு நெருங்கிய உள்வட்டத்தில் பத்துப்பேரில் ஒருவராக இருந்தார் எனவும் தெரிகிறது.

ஜனவரி 2, 2009 இல் கிளிநொச்சி வீழ்ச்சியடைந்தமை எல்.ரீ.ரீ.ஈ வட்டாரத்தில் பெரும் பதகளிப்புக்கு காரணமாகிற்று. எல்.ரீ.ரீ.ஈ. அச்சுறுத்திக் கொண்டிருந்த தோல்வியை தாமதிக்கும் வகையில் விளைவைப்பற்றி சிந்தியாது, அந்தரப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதில் ஒன்றாக , கரும்புலி தற்கொலை அணியொன்றை, தெற்கில் வன்முறை தாக்குதல்களையும் அழிவுச்செயல்களையும் மேற்கொள்வதற்காக அனுப்பியமை இருந்தது.

இந்த குழுவுக்கு தலைமை தாங்கியவர் விநாயகம்தான். அவர் இப்போது லெப்.கேணலாக தரமுயர்த்தப்பட்டிருந்தார். ஆனால் விநாயகமூர்த்தி நேரடியாக தற்கொலை தாக்குதலில் ஈடுபடவேண்டும் என எதிர்பார்க்கப்படவில்லை.

அவர் இந்த தற்கொலைத் தாக்குதல்களை திட்டமிட்டு, இணைப்பு செய்து, மேற்பார்வையும் செய்ய வேண்டுமென எதிர்பார்க்கப்பட்டது.

ஜனவரி 2009 இல் எல்.ரீ.ரீ.ஈ. இனால், விநாயகம் தலைமையில் அனுப்பப்பட்ட 15-20 வரையிலான கரும்புலிகள், வவுனியா – அனுராதபுரம் பிரதேசத்திலிருந்த காட்டுப்பாதைகள் ஊடாக வடமத்திய மாகாணத்தினுள் நுழைய முயன்றபோது பேரிடரில் சிக்கினார். ரோந்து சென்ற படையினருடனான சண்டையில் இந்த அணியின் அரைபங்கினராவது கொல்லப்பட்டனர் என கூறப்படுகிறது.

தப்பிப்பிழைத்த ஒரு சிலரில் விநாயகமும் ஒருவர். இந்த அணியின் வேறு சில அங்கத்தவர்களும் பின்னர் வந்து சேர்ந்தனர். விநாயகம் எஞ்சியோருடன் தெற்குக்கு சென்றார். எல்.ரீ.ரீ.ஈ. இன் தலைமைபீடம் பெரும் அழிவுச் செய்தியை எதிர்பார்த்திருந்தாலும் அப்படி ஏதும் நடக்கவில்லை. எதிர்பார்த்த மாதிரி விநாயகத்தால் சாதிக்க முடியவில்லை. இந்த நடவடிக்கை புஷ்வாணமாயிற்று.

இந்த நடவடிக்கையின் தோல்வி விநாயகத்திற்கு இன்னொரு வகையில் நன்மை ஆயிற்று. எல்.ரீ.ரீ.ஈ. நிலைகளை இராணுவம் கைப்பற்றி வந்த நிலயில் விநாயகம் வன்னிக்கு வெளியே தொடர்ந்து இருக்க முடிந்தது. தெற்கில் பாரிய தாக்குதலை மேற்கொள்ள தான் முயன்றாலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக இருந்தமையால் எதுவும் செய்யமுடியாது இருந்தது என்ற சாட்டு அவருக்கு இருந்தது.

இந்தத் தோல்வி, எல்.ரீ.ரீ.ஈ.இன் உயர்பீடத்தின் நலனுக்கு பாதகமாக இருந்தாலும் விநாயகத்திற்கு நன்மையாயிற்று. எல்.ரீ.ரீ.ஈ. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுரைப்பற்று உதவி அரசாங்க பிரிவில் முற்றுகைக்கு உள்ளான நிலையில் இறுதிப்போரில் ஈடுபட்டிருந்த போது அவர் ஒப்பீட்டு ரீதியில் வன்னிக்கு வெளியே பாதுகாப்பாக இருந்தார். இதனால் முள்ளிவாய்க்கால் அனர்த்தத்தின்போது ஏனைய எல்.ரீ.ரீ.ஈ. சிரேஷ்;ட தலைவர்கள் போன்று விநாயகம் இறந்துபோகவில்லை. எல்.ரீ.ரீ.ஈ. இன் தோல்விக்கு முன்னரே இவர் இந்தியாவுக்கு போய்விட்டார்.

அறிவழகன்

இந்தியாவுக்கு சென்றவுடன் விநாயகம் மீண்டும் அறிவழகன் என்னும் பெயரை சூடிக்கொண்டார். கதிர்காமத்தம்பி என்பதையும் இதனோடு சேர்த்து ஒரு மரியாதையான தோற்றப்பாட்டை தன்பெயருக்கு ஏற்படுத்திக்கொண்டார். தன் வசமிருந்த நிதிவளத்தையும், தொடர்புகளையும் பயன்படுத்தி வன்னிக்கு வெளியே பல்வேறு இடங்களில் விடப்பட்டிருந்த பல்வேறு எல்.ரீ.ரீ.ஈ. உளவுப்படையினரின் மீட்புக்கு ஒழுங்கு செய்தார். இவர்களில் பலர் விமானம் மூலம் இந்தியா, சிங்கப்பூர், மலேஷியா ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர். கிழக்குக் கரையிலிருந்து ஒரு சில படகுகளும் ஏற்பாடு செய்யப்பட்டன.

பிரபாகரன் இறந்துவிட்டதாக செல்வராசா பத்மநாதன் அல்லது கே.பி. அறிவித்தபோது கதிர்காமத்தம்பி அறிவழகன் என்ற பெயரில் இயங்கிய விநாயகம் செய்திகளில் இடம்பிடித்தார். அறிவழகன் பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதை மறுத்தார். பின்னர் பிரபாகரன் உண்மையில் இறந்துவிட்டார்தான் என இன்னொரு அறிக்கையை வெளிவிட்டார். முதல் அறிக்கையை விட்டார் முதல் அறிக்கைக்காக பகிரங்க மன்னிப்பு கேட்கப்பட்டது.

விநாயகம் அல்லது அறிவழகனின் அறிவுறுத்தலின் பேரில் உலகின் பல்வேறு பகுதிகளிலுமிருந்த எல்.ரீ.ரீ.ஈ. புலனாய்வு தொழிற்படுநர்கள் நெருங்கிய உறவை கொண்ட ஒரு அலகில் இணைக்கபட்டனர். அறிவழகன், எல்.ரீ.ரீ.ஈ.இன் வெளிநாட்டு புலனாய்வுக்கு பொறுப்பாக இருந்தமையாலும் அநேகமான தொழிற்படுநர்களை தனிப்பட்ட முறையிலும் அறிந்திருந்தமையாலும், தன் அதிகாரத்தை நிலைநிறுத்துவது கடினமாக இருக்கவில்லை.

அறிவழகனின் கீழிருந்த புலி புலனாய்வு பிரிவின் பிரதான நடவடிக்கைகளில் ஒன்றாக தலைமைத்துவம் பற்றிய நெருக்கடியை தீர்ப்பது இருந்தது.

உயிருடன், சுதந்திரமாக காணப்பட்ட செல்வராஜா பத்மநாதன் அல்லது கேபி, எல்.ரீ.ரீ.ஈ. இன் அதி சிரேஷ்ட தலைவராக பொறுப்பேற்றிருந்தர். எல்.ரீ.ரீ.ஈ. யின் வெளிநாட்டு கிளைகளின் நிர்வாகத்துக்கு பொறுப்பாக இருந்த பேரின்பநாயகம் அல்லது நெடியவன் இதை எதிர்த்தார். வெளிநாடுகளிலிருந்த எல்.ரீ.ரீ.ஈ. பிரிவு அங்கத்தவர்கள், எல்.ரீ.ரீ.ஈ. க்கு தலைமை தாங்க கூடுதலான தகைமையுடையவர் யார் என்பது பற்றி ஒரு அபிப்பிராய வாக்கெடுப்பை புலம்பெயர்ந்தோரிடையே காணப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ . விசுவாசிகளிடையே நடத்தினர். பேட்டி காணப்பட்டவர்களில் பலர் கேபியை விரும்பினர்.

இதனடிப்படையில் கதிர்காமத்தம்பி அறிவழகனால் தலைமைத்தாங்கப்படும் எல்.ரீ.ரீ.ஈ. புலனாய்வு பிரிவு கே.பி.யுடன் சேர்த்துகொள்ள தீர்மானித்தது. இது நெடியவனுடனான பேச்சுவார்த்தையில் கே.பியின் கையை ஓங்கச் செய்தது. இதனால் மீளமைக்கப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ. இன் தலைமைச் செயலராக கே.பி. தலைமைத்துவத்தை பெற்றுக்கொள்ள வழிவகுத்தது. இந்திய அதிகாரிகள் ஒரு சிரேஷ்ட எல்.ரீ.ரீ.ஈ. புலனாய்வு தொழிற்படுநர் இந்திய மண்ணிலிருந்து செயற்படுவதாக சந்தேகிக்க தொடங்கினார். சுருக்கு இருகத் தொடங்கியது. ஆனால் சுருக்கு இறுகியபோது விநாயகம், இந்தியாவைவிட்டு ஒரு தென்கிழக்கு ஆசிய நாட்டுக்கு போயிருந்தார். அவர் அங்கிருந்து ,தனது உறவினர் ஒருவரின் உதவியுடன் போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி லண்டனுக்கு சென்றார். இது நடந்தது ஒக்டோபர் அல்லது நவம்பர் 2009 இல் ஆகும்.

ஐரோப்பா

பிரித்தானியாவில் சிறிதுகாலம் ஓய்விலிருந்த பின் விநாயகம் கண்டப் பெருநிலப்பரப்புக்கு சென்றார். இவர் ஒரு தாராளவாத ஐரோப்பிய நாடு ஒன்றில், போலி ஆளடையாளத்துடன் அரசியல் அடைக்கலம் கோரியதாகவும் பின்னர் சிறிது காலத்தின் பின் வேறு நாட்டுக்கு சென்றதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. விநாயகம், புலம்பெயர்ந்த முக்கியஸ்தர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு போய்க் கொண்டிருந்தார்.

கே.பி. மலேஷியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டுசெல்லப்பட்டதுடன் பல மாற்றங்கள் விரைந்து ஏற்பட்டன. இந்த நிகழ்வுடன் புலம்பெயர்ந்தோரிடையே காணப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ. யினரிடையே நெடியவனின் ஆதிக்கம் அதிகரித்தது.

முன்னர் கே.பி.யை ஆதரித்த விநாயகமும் மாறத் தொடங்கினார். ஆவர் நெடியவனுடன் சமாதானமாக தொடங்கி ‘உயரமான’ மனிதனுடன் ஒரு தந்திரோபாய கூட்டில் சேர்ந்து கொண்டார்.

நெடியவனுக்கும் விநாயகத்துக்கும் இடையில் அதிகாரப்பிரிப்பு வரம்புகள் தெளிவான வரையறைகளை கொண்டதாக தெரிகிறது.

விநாயகம் பல்வேறு புலனாயவ்வு தொழிற்படுநர்களையும் நெருக்கமான அலகொன்றில் இணைத்து அதன் முற்றுமுழுதான பொறுப்பையும் ஏற்றுள்ளார். புலிகளின் புலனாய்வு பிரிவில் நெடியவனுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. புலனாய்வு பிரிவு ,தனி அமைப்பாக வெளிப்படையாக இயங்குவதில்லை. ஆனால் அதன் அங்கத்தவர்கள், கண்ணில்படாமல் பல்வேறு புலி அமைப்புகளில் வேலை செய்கின்றனர்.

அதேபோல நெடிவன் எல்.ரீ.ரீ.ஈ. கிளைகள், முகப்பு நிறுவனங்கள் என்பவற்றிற்கு பொறுப்பாக உள்ளார். விநாயகம் இந்த அமைப்புகளின் அன்றாட நிர்வாகத்தில் தலையிடுவதில்லை. ஏதாவது ஒரு கிளை அல்லது முகப்பு நிறுவனம் ஒரு காரியத்தை செய்யவேண்டுமென விரும்பினால் அவர் நெடியவனின் தயவையே நாடவேண்டும்.

மூன்று பேர்

மூன்று பேர் விநாயகத்துக்கும் நெடிவயனுக்குமிடையில் இணைப்பை ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதில் ஒருவர் அரவிந்தன் அல்லது இரும்பொறை. மற்ற இருவரும் நந்தகோபன், அன்புச்செல்வன் ஆவர். இரும்பொறை, எல்.ரீ.ரீ.ஈ. இராணுவ புலனாய்வு பிரிவைச்சேர்ந்த ஒரு முக்கிய தொழிற்படுநர் என கூறப்படுகிறது. இவர் 2008 இல் பின்பகுதியில் கொள்வனவுக்காக லாவோஸுக்கு அனுப்பப்ட்டார். 2009 இல் சண்டை முடிந்தபோது இரும்பொறை ஐரோப்பாவில் நிலைகொண்டார்.

அன்புச்செல்வன், யுத்தத்த நிருந்த காலத்தில் நோர்வேக்கு அனுப்பப்பட்டார். தமிழ் புலம்பெயர்ந்தோரிடையே காணப்பட்ட இளைய தலைமுறையினால் மேற்கொள்ளப்பட்ட அநேகமான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் தமிழ் வாலிபர் நிறுவனத்தின் (ரி.வை.ஓ.) பொறுப்பாளராக இவர் இருந்தார்.

நந்தகோபன் மணிவண்ணன் அல்லது கஸ்ட்ரோவின் நெருங்கிய சகாவாக உள்ளார். இவர் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் பொதுமகன் போல இராணுவத்திடம் சரணடைந்தார்.

இவர் அரசாங்கத்துடன் வேலைசெய்யும் ஓர் அரசியல் கட்சிக்கு இலஞ்சம் கொடுத்து அகதி முகாமிலிருந்து வெளியேறினர். இந்த கட்சி நந்தகோபனை கொழும்புக்கு கொண்டுவந்தது. பின் பொய்யான பெயரில் கடவுச்சீட்டு பெற்றுக்கொடுத்து இவரை தாயலாந்துக்கு அனுப்பியது. கொடுக்கப்பட்ட இலஞ்சம் மில்லியன்கள் கணக்கில் இருந்திருக்கும் எனப்படுகிறது.

இரும்பொறை, அன்புச்செல்வன், நந்தகோபன், ஆகிய மூவரும், நெடியவனுக்கும் விநாயகத்துக்கும் இடையில் இணைப்பு செய்கின்றனர். இவர்கள் இருவரையும் நெருக்கமாகச் செய்து ஒரு தந்திரோபாய கூட்டை உருவாக்குவதில் பெரும்பங்கு வகித்தனர்.

நெடியவன்

நெடியவனைப் பொறுத்தவரையில் எல்.ரீ.ரீ.ஈ. இன் வெளிநாட்டு அமைப்புகள் மீது தனது கட்டுப்பாட்டை தொடர்வதிலும் எல்.ரீ.ரீ.ஈ.க்கு உரித்தான வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சொத்துக்களை சேதமின்றி பேணுவதிலுமே அவரது அக்கறை உள்ளது. அவரது தொழிற்படுநருக்கு ‘சம்பளம்’ என்ற பெயரில் பெரும் பணம் கொடுக்கப்படுவதால், அவருக்கு தொடர்ச்சியான நிதிசேகரிப்பை உறுதி செய்யவேண்டியுள்ளது.

நெடியவன் பணம் மீதான கட்டுப்பாட்டை தக்க வைத்துக்கொள்ளும் நோக்கம் கொண்ட வீண்பெருமை பேசும் நபர் என்பதை அவரது கடந்தகால செயல்கள் எடுத்துக்காட்டுகின்றன. பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்ற கட்டுக்கதையை இவர் பரப்பிக்கொண்டிருந்தாலும் தலைவரையும் குடும்பத்தினரையும் ஹெலிக்கொப்டரை பயன்படுத்தி மீட்கும் முயற்சிக்கு தேவையான 3.5 மில்லியன் அமெரிக்க டொலரை கேபிக்கு கொடுக்க மறுத்தவரும் இவரே.

தனது இலட்சியம் எனக் கூறிக்கொள்ளும் எதற்காகவும் ஆபத்துக்கு முகங்கொடுக்கத் தயாராக உள்ளவராக நெடியவன் காணப்படவில்லை. இவர் ஒரு வகையில் புலம்பெயர்ந்தோரிடையே உள்ள எல்.ரீ.ரீ.ஈ. சார்பு ஆட்களிடையே காணப்படும் ஆஷாடபூதிகளின் குறியீடாக உள்ளார்.

எல்.ரீ.ரீ.ஈ. இன் இலட்சியத்தின் மீதான பற்று உறுதியானதாகவும் நேர்மையானதாகவும் உள்ளதென்ற வகையில், விநாயகம், நெடியவனிலிருந்து வேறுபடுகிறார். அவர் தன்செயற்பாட்டில் பற்றும் உறுதியும் உடையவராக தென்படுகிறார். இலங்கையிலிருந்து தப்பி வந்தப்பின் அவரது நடத்தையில ஒழுங்குமுறை, அர்ப்பணிப்பு என்பவற்றுக்கான சான்றுகள் தெரிகின்றன.

விநாயகம்

விநாயகம், புலம்பெயர்ந்தோரிடையே உள்ள எல்.ரீ.ரீ.ஈ. ஆதரவாளர்களுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டுள்ளார். சிலரை நேரிலும் சந்திக்கின்றார். ‘எல்லாம் முடிந்து போகவில்லை, கெதியாய் ஏதோ நடக்கப்போகுது’ என்று சொல்லி அவர்களிடம் மீண்டும் உற்சாகத்தை உருவாக்க முனைகிறார்.

சுவாரஷ்யமான விடயம் என்னவென்றால் இவர் தன்னை ‘கேணல்’ என அறிமுகம் செய்வதே. ஆனால் இவர் இயக்கத்தினால் ‘கேணல்’ அந்தஸ்து வழங்கப்பட்டவரா என்பதும் சந்தேகமாக உள்ளது.

விநாயகம், ஐரோப்பிய பெருநிலப்பரப்பில் பல நாடுகளிடையே சுதந்திரமாக பயணம் செய்துவந்ததாக கூறப்படுகிறது. இவர் மீது ஊடகங்களின் கவனம் திரும்பியபோது விநாயகம் தனது பயணங்களை மட்டுப்படுத்திக்கொண்டார்.

ஐரோப்பாவில் உள்ள புலிகள், விநாயகம் கனடாவுக்கு சென்றுவிட்டார் என கதை பரப்பி வருகின்றனர். ஆனால் இது உண்மையல்ல. சிலர், விநாயகம் தற்போது ஸ்கண்டிநேவிய நாடொன்றில் இருப்பதாக கூறிவரினும் அவர் ஐரோப்பாவில்தான் தொடர்ந்தும் இருக்கின்றார்.

நீண்ட காலத்தில் நோக்கும்போது பிரபாகரன் உயிரோடு உள்ளார் என்ற கட்டுக்கதையால் இடம்பெயர்ந்தோரிடையே புலிகளை பலமாக நிலைநிறுத்த முடியாது. 12000 போராளிகள் இரகசியமான ஓர் இடத்தில் பயிற்றப்படுகின்றனர், விரைவில் கடல்வழி படையெடுப்பு நடக்கும் என்ற பொய்களிலும் தங்கியிருக்க முடியாது.

வன்முறை

புலிகளின் எச்சசொச்சங்களுக்கு புலம்பெயர்ந்தோரிடையே தம்மை நிலைநிறுத்திகொள்ள தேவையாக இருப்பது இலங்கையில் பாரிய வன்முறை சம்பவம் ஒன்றை அரங்கேற்றுவதே. இது நடந்தால், வெளிநாட்டில் உள்ள தமது ஆட்களுடன் வரிந்துக்கட்டிக் கொண்டு பெரும் நிதிசேகரிப்பு இயக்கத்தை தொடக்க முடியும். கரடியானாறு வெடிப்பு நடந்தபோது புலிகள் வட்டாரத்தின் சந்தோஷப்பரபரப்பைக் காண வேடிக்கையாக இருந்தது.

இப்படியிருக்கும்போது விநாயகம் இலங்கையில் ஒரு ‘நிகழ்வை’ நடத்தமுடியும். பாதுகாப்பு அமைப்பின் தயார்நிலை என்பவற்றை பார்க்கும்போது எந்தவொரு பெரிய தாக்குதலும் எவ்வகையிலும் சாத்தியமற்றது.

ஒரு அரசியல்வாதியின் கொலை அல்லது குண்டுவெடிப்பு போன்ற ஒப்பீட்டளவில் சிறிதான ஒரு நிகழ்ச்சி சாத்தியமாகலாம்.

கருதுகோள் ரீதியாக, வெளிநாட்டு புலிகளால் அவர்கள் வசமுள்ள பணத்தின் வலுவால், இலங்கையில் உள்ள ஒருவருக்கு பணம் கொடுத்து ஒரு கைக்குண்டொன்றை வீசவைக்கவோ அல்லது குண்டொன்றை வெடிக்கவைக்க முடியும். நன்கறியப்பட்ட ஒருவர் சுட்டுக் கொல்லப்படலாம்.

இவர்களின் பணபலத்துடன், வெளிநாட்டு புலிகள் வறுமைப்பட்ட முன்னாள் புலிபோராளியை அல்லது எல்லைப்படையை சேர்ந்த ஒருவரை இவ்வாறான வன்முறைக்கு பயன்படுத்தலாம். கருதுகோள் ரிதீயாக முன்னாள் படைவீரரை அல்லது ஊர்காவற் படையை சேர்ந்த ஒருவரை கூட பயன்படுத்துவது சாத்தியமே பாதாள உலக கோஷ்டியில் ஒருவரையும் பயன்படுத்தலாம்.

எல்.ரீ.ரீ.ஈ.க்கு தேவையானது ஒரு கைக்குண்டு, ஒரு குண்டு அல்லது ஒரு துப்பாக்கி மட்டுமே.

ஆற்றல்

இப்படியான நிலைவரத்தில், விநாயகமே தனது சாதனை, அநுபவம் என்பவற்றின் காரணமாக கொழும்பிலே அல்லது இலங்கையின் வேறு பாகத்திலோ தாக்குதல் ஒன்றை மேற்கொள்ளக் கூடியவராவார்.

விநாயகம் சாள்ஸுடன் சேர்ந்து தென்பகுதியில் பல வன்முறை செயல்களை திட்டமிட்டு செயற்படுத்திக் கொண்டிருந்தார் என்பதை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும். விநாயகம் தற்போதும், வன்செயலில் ஈடுப்படுத்துவதற்கு ஒருவரை அல்லது ஒரு சிலரை பெற்றுக்கொள்வதற்கான தொடர்புகளை கொண்டிருக்கலாம் என கருதுவது தர்க்க ரீதியானதே.

நெடியவனுக்கும் விநாயகத்துக்கும் இடையிலான தந்திரோபாய கூட்டு ஒருவருக்கொருவர் தேவையானவர் என்ற அடிப்படையிலே உருவானது. வெளிநாட்டு புலி அமைப்புகளை, உற்சாகப்படுத்தவும், நிதிசேகரிப்பை அதிகரிக்கவும் நெடியவனுக்கும் விநாயகம் தேவை. அதைவிடவும் முக்கியமாக விநாயகத்தால் மட்டும்தான் வன்செயல்களை இலங்கையில் ஏற்பாடு செய்யமுடியும் என்பதை நெடியவன் அறிவார்.

விநாயகத்தை பொறுத்தளவில், தனது புலனாய்வு பிரிவை இயக்குவதற்கு நெடியவனின் வசமுள்ள நிதிவளம் அவருக்கு தேவையாகும். அவருக்கு தான் எண்ணியுள்ள ‘செயற்றிட்டத்தை’ நடைமுறைக்கு கொண்டுவர நிதி தேவை.

இதைவிட முக்கியமாக, தான் நெடியவனை புறம்பு காட்டினால் தன்னால் வினைத்திறனுடன் இயங்க முடியாது என்பதை விநாயகம் அறிவார். கேபியின் நன்னோக்க முயற்சிகளை நெடியவன் எவ்வாறு குழப்பினார் என்பது விநாயகத்துக்கு ஒரு நல்ல பாடமாக இருக்கிறது.

இவைதான் கூடிய சிரேஷ்டரான விநாயகம், தனது கனிஸ்டரான நெடியவனின் வழியில் செல்லவும், தந்திரோபாய கூட்டில் சேரவும் வைத்த காரணங்களாகும்.

நெடியவன் இப்போதைக்கு எல்.ரீ.ரீ.ஈ. இன் தலைமைப் பொறுப்பை விநாயகத்துக்கு கொடுப்பதில் திருப்தியோடு உள்ளார். விநாயகம் தற்போது எல்.ரீ.ரீ.ஈ. பின்னணியோடு உள்ளவர்களை அணுகுவதிலும், அவர்களை, தன்னால் உருவாக்கப்படும் எல்.ரீ.ரீ.ஈ. மத்திய குழுவில் சேர்க்கவும் அழைத்துவருகிறார். விநாயகத்திக் முயற்சிகள் எதிர்காலத்தில் எவ்வளவு தூரம் வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சிவப்பு அறிவித்தல்

கொழும்பு, விநாயகத்தின் ஆற்றலை குறைத்து மதிப்பிடுவதாக இல்லை. ஆகக் குறைந்த அளவில் பிரச்சினைக்குரியவராகவும் ஆகக் கூடியளவில் தொல்லை தருபவராகவும் இருப்பதற்கான வளங்களை எல்.ரீ.ரீ.ஈ. இன் புதிய தலைவர் விநாயகம் கொண்டுள்ளதாக பாதுகாப்பு உயர்பீடங்களில் உள்ளோர் கருதுகின்றனர்.

இதனால்தான் ‘இன்ரபோல்’ சிவப்பு அறிவித்தலை விடுப்பதற்கான விரைவான ஏற்பாடுகள் நடந்தன. இதன்பின், விநாயகம் இருக்கும் இடத்தை கண்டுப்பிடித்து கைதுசெய்து இயலுமாயின் இலங்கைக்கு கொண்டுவரவும் மேற்கத்தைய நாடுகளின் சட்ட அமுலாக்கல் நிறுவனங்களில் ஆதரவை அரசாங்கம் பெற்றுக்கொள்ளும்.

எல்.ரீ.ரீ.ஈ. இன் நிறுவுனர் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன், மே, 2009 இல் நந்திக்கடல் கடனீரேரியின் கரையில் கொல்லப்பட்டார். அவரின் பின் தலைமையை ஏற்ற செல்வராசா பத்மநாதன் அல்லது கேபி கைதுசெய்யப்பட்டு ஓகஸ்ட் 2009 இல் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டார். இவரது புதிய எல்.ரீ.ரீ.ஈ. தலைவர் ஐரோப்பாவில் தோற்றம் பெற்றுள்ளார்.

சேகரப்பிள்ளை விநாயகமூர்த்தி அல்லது ‘கேணல்’ விநாயகமூர்த்தியின் விதி என்னவாகும்?

DBS Jeyaraj can be reached at இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்

(தமிழில். ந.கிருஷ்ணராசா)

(சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் டெய்லி மிரர் ஆங்கில பத்திரிகைக்காக எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது. – நன்றி தமிழ்  மிரர்)

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 6, 2010 இல் 8:05 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: