Lankamuslim.org

One World One Ummah

அவர்களும் இவர்களும் ஒன்றேயானால் மக்கள் யார்?

leave a comment »

எஸ்.எம்.எம்.பஷீர்- பாகம் நான்கு

கிழக்கு மாகாணத்திலே தமிழர் இயக்கங்கள் முளைவிட்டு கிளைவிட்டு வளர்ந்த காலங்களில் அரசியல் செய்து கட்சி உருவாக்கிய அஸ்ரப் தான் உருவாக்கிய கட்சியை ஒரு இயக்கம் என்று குறிப்பிடவில்லை ,”இயக்கம்” என்ற சொல்லே அவருக்கு அலேர்ஜியாக (Allergy) இருந்தது. ஆனால் ஹக்கீமுக்கு தனது கட்சியை இயக்கம் என்று சொல்லி உணர்வு வலுச்சேர்ப்பதில் ஒரு அலாதி பிரியம் இருந்து வருகிறது. அடிக்கடி தாம் ஒரு இயக்கத்தின் தலைவர் என்று முஸ்லிம் காங்கிரசை குறிப்பிட்டுள்ளார். (இலங்கையில் தமிழர் இயக்கங்களை விடுவோம் மாறாக இயக்கத்தலைவர் என்ற வகையில் பாலஸ்தீன ஹமாஸ் அல்பாதா இயக்கம் ஞாபகத்துக்கு வந்தால் மன்னிக்கவும்)

“முஸ்லிம் சமுதாயத்தின் தன்மானத்திற்கு ஆப்பு வைத்த இந்த நபர்கள் இவ்வளவு காலமும் முஸ்லிம் சமுதாயத்துக்கு செய்ய முடியாது போனவற்றை தற்போது ஆட்டம் கண்டுள்ள அரசியல் சூழ் நிலையில் எவ்வாறு `சாதிக்க’ப் போகின்றார்கள்?

தனி மனிதராக ஜனாதிபதி தனது அரசியல் அதிகாரத்தை நிலை நிறுத்தி கொள்வதிலேயே ஆர்வம் காட்டி வருகிறார். இன்று நாடு அகல பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு இந்த நாட்டை நிர்வகிக்க முடியாது தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கிறது என்று ஹக்கீம்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் அச்சமின்றி சிறுபான்மை மக்களுக்காகப் பேசுகின்றது. இதற்குக் காரணம் இத் தலைமைத்துவம் ஓர் இயக்கத்தின் தலைமைத்துவமாக இருப்பதாகும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதித்துவம் மாகாண சபைத் தேர்தலில் உறுதிப்படுத்தப்பட வேண்டும். எந்தக் கட்சியும் முஸ்லிம் காங்கிரஸை பலவீனப்படுத்த இடமளிக்க மாட்டோம”

புலிகள் குற்றுயிரும் குலையுயிருமாக இருந்த காலகட்டத்தில் ந‌டைபெற்ற கிழக்கு மாகான தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் துனிச்சலாக முடிவெடுக்கவில்லை என்பதனை விட தீவிர மஹிந்த எதிர்ப்பும் ரனில் மீதான அசாத்தியமான நம்பிக்கையையும் தமிழ் கூட்டமைப்புடனான காதலும் தவிர வெறு எந்த நியாயமான காரண‌ங்களும் இருந்திருக்க முடியாது என்பதை அவர்களின் இன்றைய குத்துக்கரணம் சொல்லாமல் சொல்லி நிற்கிறது. அக்கால கட்டத்தில் முஸ்லிம் அரசியல் தொடர்பில் சமூக ஆய்வாளர் கலாநிதி சலீம் தனது கட்டுரையொன்றில் குறிப்பிட்டதும் இங்கு நோக்கற்பாலது. ‌

“ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளிப்படையாக ஒரு புதிய தந்திரங்களை கொண்டுள்ளதாக தோன்றுகிறது. நாடாளுமன்ற பதவிகளை மாகான‌சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக கைவிடுவது என்பது ஒரு விந்தை ஆனால் அது நம்பிக்கையிழந்து போன முஸ்லிம் அரசியல் சமூகத்தினதும் அவர்களின் தேய்ந்து செல்லும் ஆதரவிலிருந்தும் கட்சியை காப்பாற்ற வழியில்லாமல் செய்யப்பட்ட ஒரு சூழ்ச்சிதான் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அன்மைக்கால கோஷங்களும் பிரகடண‌ங்களும் பிளவுபடும் தன்மையும் இன ஒருமைப்பாடு தேவையான இன்றைய காலகட்டத்தில் மற்றய சமூகத்தினருக்கு பிழையான சமிக்ஞையை வழஙுகுவதாகும். யதார்த்தத்தில் முஸ்லிம்களை யானையால் வழிந‌டத்த‌ப்படும் முடிவினை ஏனைய எல்லா முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு குடையின் கீழ் ஒன்றுபடுவோம் என்ற வேன்டுதல்களை புற‌க்கனித்து விட்டு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுத்ததன் மூலம் முஸ்லிம்களை பிரித்து விட்டனர்..( The SLMC obviously seems to be having new tricks: giving up parliamentary seats to contest the provincial elections is a novelty but it is seen as a desperate ploy to save the party from the disillusioned Muslim polity and fading support from them.

The SLMC’s recent slogans and pronouncements, smack of divisiveness will send wrong signals (to other communities) when communal cohesion is the need of the hour. In reality, the SLMC has divided the Muslims with its decision to be led by the elephant while disregarding appeals from all the other Muslim parliamentarians to unite under a common banner ) என்று குறிப்பிட்டுள்ளார் .

எம்.பீ பதவிகளை விட்டு நீங்கி கிழக்கு மாகான சபையில் போட்டியிடுவது என்ற முடிவினை கூட அவர்கள் ‌ ‌‌‌ எடுத்த போது அதனை தமது தலைவரின் அடக்கஸ்தலத்துக்கு சென்று (ஜாவத்தை பள்ளியில்) சியாரம் செய்த பின்னரே மேற்கொண்டனர்.

சில வருடங்களுக்குள் கட்சி சகல யுக்திகளையும் (அஸ்திரங்களையும்) பிரயோகித்து இனிமேல் வேறு வழியில்லை என்றவுடன் இப்போது புதிய புதிய சிந்தனையியல் பற்றி பேசி தமது குத்துக்கரணத்துக்கு அரசியல் காரண‌ம் கற்பித்து வருகிறார்கள் ‌ கூட்டுத் தேசியவாத அடிப்படையில் தாங்கள் மகிந்த அரசின் பதினெட்டாவது திருத்த சட்டத்திற்கு ஆதரவளித்துள்ளதாகவும் சேகு தாவூத் பசீர் சில பத்திரிக்கையாளர்களுக்கு குறிப்பிட்டிருந்தார். தேச, சர்வதேச அரசியல் கருத்தியல் குறித்த விவாதங்கள் தொடர்பில் கூட்டுத்தேசிய வாதம் (corporate nationalism) என்ற பதப்பிரயோகம் பற்றி தெளிவான விளக்கமின்றி கேட்போரை கவர வேண்டுமென்பதற்காக அவர் பயன்படுத்திய சொல் தான் கூட்டு தேசியவாதம். ஏனெனில் கூட்டு தேசிய வாதம் பற்றிய வரைவிலக்கணம் பரந்ததும் கூட்டுத்தாபனங்கள் ஒரு நாட்டின் முதன்மையான நாட்டு நலன்களுடன் செயற்படும் கூட்டுக்கள் குறித்த பதப்பிரயோகமாகும். மேலும் அதனை ( collective nationalism) என்று பார்த்தாலும் அதுவும் ஒரு கணதியான கருத்து செறிவுடன் வாத விவாதங்களுக்குள் தனி மனித உரிமைகளுடன் போட்டியிடும் தேசியவாதம் சிக்கியிருக்கின்ற பதப்பிரயோகமுமாகும்.

எனவேதான் ஒரு ஆங்கில பத்திரிகை நிருபர் இவர் குறிப்பிட்ட சொற்றொடரை மேற்கோள் குறிக்குள் காட்டி ( “ Corporate Nationalism”) . அப்பத பிரயோகம் குறித்து தான் உடன்படாததை சொல்லாமல் சொல்லியிருந்தார். ஆனால் சாதாரண மக்கள் இதுவெல்லாம் அரும் பெரும் அரசியல் ஆளுமையின் அதி விவேக கருத்துக்களாகவே உள்வாங்கி கொண்டிருப்பார்கள்.

தாம் தூம் என்று குதித்து முஸ்லிகளுக்கு ஆபத்து வந்துவிட்டது என்று உண‌ர்சிப் பிரவாகம் பொங்க தமிழரசுக் கட்சி பாணியிலும், பாசையிலும் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்டு இப்போது கப் சிப் என்று அடங்கிப்போய் “கூட்டு தேசியவாதம்” பேசுகிறார்கள். இதனை ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகள் பேசியபோது துரோகிகளாக காட்டினார்கள். அச்ரஃப் இறந்த பின்னர் புதிய முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் தேசிய இனவாத கருத்தியல்களுக்கு முட்டுக்கொடுக்கும் அதற்கொத்த கருதியல்களை கட்டமைக்கும் பணியில் செயற்பட அதிக காலம் செல்லவில்லை.

2001ம் ஆன்டு பொதுத் தேர்தலில் யாழ்ப்பாண‌த்தில் சுதந்திர இலங்கையின் தமிழ் இனவாத அரசியலை கட்டம் கட்டமாக நகர்த்தி தமிழ் இளைஞர்களை ஆயுத மேந்திப் போராட காள்கோளிட்டு தமிழ் சமூகத்தை தமிழ் ஈழ‌மெனும் மாயமானை தொடர வழிகாட்டி மறைந்த எஸ் ஜே. வீ செல்வநாயகம் வழியில் தமிழ் முஸ்லிம் மக்களின் தனித்துவம் காக்க மரக்கட்சியில் மரச்சின்னத்துடன் போட்டியிடும் அளவுக்கு முஸ்லிம் காங்கிரஸின் தனித்துவம் காக்க இன்றைய முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் ஆனந்தராஜா எனும் தமிழரை போட்டியிடச் செய்ததன் மூலம் தமிழ் தேசியவாத பிற்பொக்கு அரசியல் சக்திகளுடன் தன்னை அடையாளப் படுத்த முயற்சித்துள்ளது.

இரண்டாயிரம் ஆண்டு பொதுத் தேர்தலினை அடுத்து (அஸ்ரப் தேர்தலுக்கு முன்னர் “விமான விபத்தில்” உயிர் இழந்த பின்னர் (கொல்லப்பட்டபின்னர்) அந்த இழப்பினூடாக கிடைத்த அனுதாப செல்வாக்கினால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அன்றைய சந்திரிகா அரசுடன் இணைவதற்கு ஹக்கீமின் தலைமையில் சந்திரிகாவுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தி ஆட்சியமைக்க உதவினர். அப்போது நீலிக தே சில்வா என்ற பத்திரிக்கையாளர் நீங்கள் ஜனாதிபதியிடம் (சந்திரிக்காவிடம்) என்ன பெற்றீர்கள் என்று கேட்டபோது ஹகீம் ” நாங்கள் என்ன கேட்டோமோ அவைகளை பெற்றோம் ; எங்களுக்கு நாடாளுமன்றத்தில் எம் பிக்கள் இருக்கிறார்கள் ஆகக்குறைந்தது அவர்களில் அரைவாசிப்பேர் போதியளவு வெகுமதி பெற்றிருக்கிறார்கள்.” அப்போதெல்லாம் வெகுமதிகள் தான் கட்சி தாவலை, ஆட்சி அமைக்க உதவுவதனை தீர்மானித்தன.

மேல் மாகான சபை தேர்தலின் போதும் மஹிந்த அரசுக்கெதிராக அதன் புலிகளுக் கெதிரான நடவடிக்கைகளுக் கெதிராக கொழும்பு கோல் பாஸ் ஹோட்டலில் மேல் மாகாண சபை தேர்தல் தொடர்பாக நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் ரவூப் ஹக்கீம் ‌”கருணாவை ஒரு கருவியாகப பயன்படுத்தி தமிழீழ விடுதலைப் புலிகளை பலவீனமடையச்செய்ய அரசாங்கம் மேற்கொள்ளும் சதிச்செயல்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கண்டிக்கிறது. முஸ்லிம் சமூகத்தை சில துரோக கும்பல்கள் சிதைக்க முயற்சிப்பது போல புலிகள் இயக்கத்தை சிதைக்கமுடியாது. அரசாங்கத்தின் இந்த சுத்துமாத்து பலிக்காது பலமிக்கதான ஒரு புலிகள் அமைப்புடனெயெ எதையும் பேசமுடியும் ஜனநாயக விரோத செயல்களை கட்டுப்படுத்தவே எதிர்கட்சிகளின் கூட்டமைப்பை உருவாக்கி இருக்கிறோம்.

ஹக்கீம் சொல்வதுபோல் அரசாங்கம் கருணாவை பயன்படுத்தி தமிழீழ விடுதலைப் புலிகளை பலவீனமடையச்செய்ய மேற்கொள்ளும் செயல்களை சதிசெயல்கள் என்றே ஒரு விவாதத்துக்கு வைத்துக் கொள்வோம் . புலிகளை அப்படி அழித்தால் ஹக்கீமுக்கு என்ன வந்தது , புலிகளை அழிக்க கூடாது என்று தமிழ் தேசிய கூட்டணி போல் ஹக்கீமும் உரத்து குரல் கொடுத்து வந்தவர் என்பதை யாரும் மறுத்து விட முடியாது. புலிகள் எனும் கொடூரமான பயங்கரவாதிகளை அழிப்பதில் என்ன தப்பிருக்கிறது. புலி இருந்தால் தாங்களும் தமில் தேசியமும் முஸ்லிம் தேசியமும் பேசி அரசியல் செய்யலாம் வடக்கு கிழக்கில் முஸ்லிம்களுக்குள் தனிக்காட்டு ராஜா அரசியல் செய்யலாம் என்பதை தவிர வேறு என்ன நோக்கமிருந்திருக்க முடியும் . சரி புலிகளை அளிக்க முடியாது என்று புலிகளும், புலிகளின் முகவர்களில் சில குறிப்பிடத்தக்க முகவர்களான மாவையும் சுரேஷ் பிரேமச்சந்திரனும் அரியேந்திரனும் கூறுகின்ற அதே உத்வேகத்துடன் அதே உச்சஸ்தாயியில் ஹக்கீமும் கூறக் காரணம் என்ன. அச்ரஃப் மிகக் கவனமாக கையாண்ட தேசியவாதமோ தமிழ் தேசியவாதிகளுடனான கூட்டோ புலி விரோதமோ ஏன் அச்ரஃபின் மறைவுடன் மறைந்து போய்விட்டது என்ற கேள்விகள் மறைக்கப்பட கூடியதல்ல.

முஸ்லிம் காங்கிரஸ் மட்டும் தான் முஸ்லிம் சமூகம் (முஸ்லிம் காங்கிரஸ்=மூஸ்லிம் சமூகம்)என்ற தொணியில் “முஸ்லிம் சமூகத்தை சில துரோக (எதிர் முஸ்லிம் அரசியல்வாதிகள்) சிதைக்க முற்படுவது போல் புலிகளை சிதைக்க முடியாது” என்று தமது கட்சியினை துரோக கும்பல்களை கொண்டு சிதைக்க முடியலாம் ஆனால் புலிகளை அசைக்க முடியாது என்று இவர் குறிப்பிட்டு நீண்ட நாட்கள் செல்லவில்லை நிசாம் காரியப்பர் பிறிதொரு தொலைக்காட்சி பேட்டியில் மகிந்த ராஜபக்ச ஒரே நேரத்தில் சர்வ கட்சி மாநாட்டை அரசியல் தீர்வுக்காக நடத்தி கொண்டே யுத்தத்தையும் நடத்தி வென்றிருக்கிறார் என்று விதந்துரைத்தார்

சர்வதேச அரசியல் பரப்பிலும் முஸ்லிம்களின் அரசியல் தொடர்பாக பல பிற்போக்குதனமான அரசியல் முடிவுகளை மேற்கொன்டும் பிரச்சாரங்களை மேற் கொன்டும் வந்திருக்கிறது.உதாரணமாக கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய வாத சக்திகளுடன் ஏகாதிபத்திய சதிவழை நிகழ்சி நிரழ்களுக்கு அமைய சுவிஸ் மாநாட்டில் “முள்ளை முள்ளாள் எடுக்கும்” தீர்மானம் மேற் கொண்டமை உட்பட பல தனிப்பட்ட ராஜரீய சந்திப்புக்களில் யுத்த வெற்றி பற்றி கடின விமர்சனங்களை முன்வைத்தமை மட்டுமல்ல கடந்த ஆன்டு இலன்டனில் இடம்பெற்ற மறைந்த தமிழர் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கம் நினவு நிகழ்வில் மஹிந்தவின் ஆட்சி பற்றி குறிப்பிடும் போது “”மிகவும் கரிய மேகங்கள் இலங்கைக்கு மேல் படிகின்றது. மிகவும் ஆபத்தான போக்கு ஒன்று உருவாகின்றது” ” என்றவாறான கருத்துக்களை சொன்னவர்தான் இப்போது அந்த “கரிய மேகத்துள்” தன்னை ஒளித்துகொண்டுள்ள ஹக்கீம் பொன்சேகா முள்ளை தூக்கி எரிந்து விட்டு “மஹிந்த முள்ளை” விழுங்கியே விட்டார்.

அது மாத்திரமல்ல ஐரோப்பாவிலுள்ள வாணொலி ஒன்றில் பேட்டியளித்த போது ஹக்கீம் சொல்லிய கருத்தும் இப்போது ஞாபகத்துக்கு வருகிற‌து. அந்த பேட்டியில் “தமிழ் முஸ்லிம் மக்கள் இந்த அரசின் அபிவிருத்தி மாயைக்கு அள்ளுப்பட்டு போகமாட்டர்கள் என்பதிலும் நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம், குறுகிய சுயநலங் கருதி சோரம் போகிற நிலை உருவெடுத்தாலும் அது நீன்ட காலம் நீடிக்கப் போவதில்லை. பசில் ராஜபக்ச பற்றியும் அவரின் தேசத்தை கட்டியெளுப்பும் நடவடிக்கை பற்றியும் பரிகாசம் பன்னி அப்பேட்டியில் கருத்துரைத்த ஹக்கீம் இப்போது தனது தவிசாளர் வீட்டில் பசில் ரஜபக்சவுக்கு விருந்தளித்து மகிழ்விக்கிறார்.

சற்று பின்னோக்கி பார்த்தால் ஜனாதிபதி அதிகாரம் பற்றிய பல சுவாரசியமான நிகழ்வுகளும் நமது ஞாபகத்துக்கு வருகின்றது. 1978ம் ஆன்டு அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதென்பது அதனை மாற்றுவற்கான மூன்றில் இரண்டு பெரும்பான்மை நாடாளுமன்ற அங்கத்தவர்களின் ஆதரவினை பெற்றே செய்யமுடியும் என்பதால் அதற்கான சூழ்நிலை இலங்கையின் நாடாளுமன்ற தேர்தல் முறையினூடாக சாத்தியமாகுமா என்ற நீன்டநாள் கேள்விக்கு இப்போது விடை கிடைத்திருக்கிறது. 1994 ஆம் ஆண்டில் திருமதி குமாரதுங்க பிரதமராக செயற்பட்டார் அதே வருடம் நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அவர் போட்டியிடும் போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை 1995 ஆண்டு ஜூலை 15 ம திகதிக்கு மாதத்திற்கு ஒழிக்கப்படுமென எழுத்துமூல உறுதி ஒன்றை அப்போது ஜே வீ .பீ பாராளுமன்ற உறுப்பினரான நிஹால் கலப்பதிக்கு வழங்கியிருந்தார், ஆனால் செயலளவில் அதை நிறைவேற்ற அவர் தயாராக இருக்கவில்லை இனிமேல் ஜனாதிபதி ஒழிப்பு ஒரு நிறை வேறாத ஒரு நீன்ட கனவாகவே அதனை எதிர்க்கும் அர‌சியல் கட்சிகளுக்கும் இருக்கப் போகிறது.

சந்திரிக்கா அரசின் ஆட்சிக்காலத்தில் ரவுப் ஹக்கீம் அரசிலிருந்து விலக்கப்பட்டதும் நடந்த தமது கட்சி நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்ட அஸ்ரபின் மனைவி பேரியல் அஸ்ரபை கட்சி தலைமைக்கு கட்டுப்படும் விசுவாசப்பிரமான பத்திரத்தில் கையொப்பமிட்டால் தாங்கள் அவருக்கு கட்சியின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் பதவியினை தரலாம் என்று ஹகீம் கேட்டதாகவும் ஆனால் பேரியல் அஸ்ரப் அதற்கு உடன்படவில்லை அக்கூட்டத்தின் பின்னரும் அவர்கள் ஜாவத்தை பள்ளிக்கு சென்று தொழுகை நடத்தினார்கள் என்பதையும் அறியமுடிகிறது. அப்போதும் அவர்கள் மறைந்த தலைவரை சியாரம் செய்தார்களா என்பதை அறியமுடியவில்லை , ஆனால் அவாறான திடீர் சியார நடவடிக்கைகள் இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கைகளை பாதிக்கின்றதா என்ற கேள்வியும் எழுகிறது. ஏனெனில் அன்று நாடாளுமன்றத்தில் எதிர் கட்சியில்வரிசையில் தன்னுடன் உடன்பட்ட தனது கட்சி உறுப்பினர்கள் ஆறு பேருடன் மாறி அமர முன்னர் அன்று நாடாளுமன்றத்தில் அவர் (ஹக்கீம் )ஆற்றிய உரையில் தனது தலைவரின் முடிவினை ஒரு வேத வாக்ககாக கருதி இருந்ததையும் அதனை தான் மீறிவிட்டதாகவும் கருதி எமது மறைந்த தலைவரின் கடைசி விருப்புக்கு எதிராகவே நாங்கள் பொதுஜன ஐக்கிய முன்னணியை ஆதரித்தோம் அதனை மீறி நாங்கள் பொது ஜன ஐக்கிய முன்னணி அரசை அமைக்க உதவியதாகவும் அதனால்தான் அவர் தண்டிக்கப்பட்டதாகவும் கூறினார்.

1982ல் நாடாளுமன்றத்தை 1977ல் ஜே ஆர் அரசு பெற்ற மூன்றில் இரன்டு பலத்தை தொடர்ந்தும் தக்க வைப்பதற்காக சர்வஜன வாக்கெடுப்பை (Referendum) நடத்தி தனது ஜனாதிபதி பதவியை நீடித்து நாடாளுமன்றத்தையும் ஆறான்டு நீடிக்கும் மக்கள் ஆணையையும் ஜே ஆர் பெற்றார். அதனால் 1982 நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படாமல் செய்யும் ஜனாதிபதி ஆட்சிக்காலத்தை நீடிக்கும் ஜே ஆரின் சர்வஜன வாக்கெடுப்பு நடவடிக்கையை எதிரணிகள் ஜனனாயக விரோத செயற்பாடாக எதிர்த்த போதும் ஜே ஆர் சர்வஜன வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்.பின்னர் பிரேமதாசாவும் தனக்கெதிராக குற்றப்பிரேரனை கொன்டுவரப்பட்ட போது தனது ஜனாதிபதி அதிகாரத்தை பயன்படுத்தி நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து மாற்று அணியினரை ” வாங்கி” தனது அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொண்டார்.சந்திரிக்காவும் தான் கவிழும் நிலை வந்தபோது நாடளுமன்றத்தை ஒத்திவைத்தார். ஆயினும் அவர் மீன்டும் ஒரு ஜனாதிபதி தேர்தல் மூலம் தன்னை இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதி பதவியில் தன்னை தக்க வைத்து கொன்டார்.

பிரேமதாசாவின் ஜனாதிபதி தேர்த்தலில் அவரது வெற்றிக்கு அஸ்ரப் பங்களித்தார் என்பது மட்டுமல்ல பிரேமதாசாவுக்கு எதிரான குற்றப் பிரேரணை தோல்வி அடைவதற்கும் அஸ்ரப் உதவி புரிந்தார். அதற்கு பகரமாக தனக்கு ஒரு மந்திரிப்பதவி கிடைக்கும் என்று அவர் நம்பும்படி பிரேமதாச செயற்பட்டார் அஷ்ரபும் எதிர்பார்த்தார் காத்திருந்தார். ஆனால் பிரேமதாசா இறக்கும் வரை அவர் அஷ்ரபுக்கு அமைச்சர் பதவி வழங்குவதை தந்திரோபமாக தவிர்த்துவந்தார். ஆயினும் பின்னர் சந்திரிக்கா அரசும் அதனுடனான பேரமும் தான் அஷ்ரபை அமைச்சுப் பதவிக்கு இட்டுச்சென்றது. அவரது கனவும் நனவாயிற்று. பிரேமதாசவுடன் மிக நெருக்கமான உறவை பேணி பல அனுகூலங்களை தமது ஆதரவாளர்களுக்காக அவரால் பெற முடிந்தாலும் அஷ்ரப் தன்னை ஒரு ஜனாதிபதி சட்டத்தரணியாக பிரேமதாசா நியமிப்பார் என்பதிலும் நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால் அதனை கூட பிரேமதாசா கண்டு கொள்ளவில்லை.

அது மாத்திரமின்றி ஜனாதிபதி தேர்தலில் அஸ்ரப் பிரேமதாசாவுக்கு செய்த உதவிக்கு பகரமாக அதனை அடுத்துவந்த நாடாளுமன்றத் தேர்தலில் அன்று திகாமடுல்ல மாவட்டத்தில் தனக்கு தனது கட்சியின் எழுச்சிக்கு சவாலாக அமைந்த ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட முக்கிய இரு அமைச்சர்களான எம்.ஏ . மஜீத் , ஏ.ஆர்.எம். மன்சூர் ஆகியோரை தேர்தலில் போட்டியிடாமல் செய்யுமாறு பிரேமதாசாவை வேண்டிக்கொண்டார். பிரபலமற்ற நபர்களை அவர்களுக்கு பதிலாக போட்டியிடச் செய்ததன் மூலம் தனது அரசியல் பிரவேசத்தினை அஸ்ரப் உறுதி செய்ததுடன் இந்திய படை காலத்தில் தமது கட்சி மாகாண சபையில் பெற்ற வெற்றியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தினார் என்பதும் இங்கு எப்படி செய்தார் என்பதைவிட பிரேமதாசாவும் அஷ்ரபும் பரஸ்பரம் தங்களை பயன்படுத்திக் கொண்டனர்.

எம். எம்.சுஹைர் ௨௦௦௦ம் ஆண்டின் பிற்பகுதியில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து அஸ்ரபினால் இடை நீக்கம் செய்யப்பட தீர்மானிக்கப்படுமளவுக்கு அவருக்கும் அஸ்ரபுக்குமிடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு எம்.எம்.சுஹைர் கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட பின்னரும் அஸ்ரப் மீண்டும் அவரை கட்சியில் இணைத்துக்கொள்ள முயற்சித்தார். அதற்காக சுஹைரின் சம்பந்தியும் தனது அமைச்சின் (துறைமுக அபிவிருத்தி , புனர் வாழ்வு புனர் நிர்மாணத்துறை) செயலாளருமான எம்.என் ஜூனைத் மற்றும் ஹிஸ்புல்லாஹ் என்போரை தூது அனுப்பி மீண்டும் கட்சியில் சேர சுகைருக்கு ஒரு நிபந்தனையையும் விதித்திருந்தார். அந்த நிபந்தனை சுஹைர் தனது எம்.பீ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அதற்கு பகரமாக அவருக்கு வெளிநாட்டு தூதுவர் பதவியை பெற்றுத் தருவதுடன் ஜனாதிபதி சட்டத்தரணியாகவும் ஆக்கப்படுவார். ஆனால் சுஹைர் அதனை நிராகரித்து தான் விரும்பியிருந்தால் ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்பட நேரடியாகவே ஜனாதிபதியிடம் கோரி அதனை பெற்றிருக்கலாம் என்று அஸ்ரபின் வேண்டுகோளை நிராகரித்துவிட்டார் (நன்றி: நவமணி.) இங்கு நான் சொல்ல வருவது என்னவென்றால் தனக்கு பிரேமதாசா ஜனாதிபதியாகவிருந்தபோது கிடைக்கும் என்று எதிர்பாத்து காத்திருந்து கிடைக்காமல் போன ஜனாதிபதி சட்டத்தரணி நியமனத்தை இன்னோமொருவருக்கு பெற்றுத்தரும் அளவு அரசியல் அதிகாரமும் செல்வாக்கும் பெற்ற நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஸ்ரப் இருக்கும் நிலை பின்னர் சந்திரிக்காவின் காலத்தில் ஏற்பட்டிருந்தது என்பதாகும்.

முஸ்லிம் காங்கிரஸ் இஸ்லாம் மதத்தை தமது அரசியலுக்கு பயன்படுத்தி அதன் ஆரம்பகால அரசியலை அஸ்ரபின் தலைமையில் முன்னெடுத்து இன்றுவரை அதனையே அதன் கட்சித் தலைவர்கள் செய்து வருகிறார்கள். தமது கட்சியே இஸ்லாமிய கட்சி என்பதையும் தாமே இஸ்லாம் மதத்தின் அடிப்படையில் செயற்படும் அரசியல் பிரதிநிகள் என்பதாகவே இவர்கள் நடந்து கொண்டு வருகிறார்கள். இதற்கு மிக அண்மைய உதாரணமாக எம்.சீ பைசால் காசீம் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இஸ்லாமிய அடிப்படை கொள்கை சம்பந்தப்பட்ட -இஸ்லாம் மதத்தின் இறை நம்பிக்கை தொடர்பான- நயவஞ்சகர்கள் (குர்ரானிலும் , ஹதீஸிலும் சொல்லப்பட்ட வரைவிலக்கனத்துடன் ) என்று சொல்லப்பட்ட முனாபிகீன் என்ற பதத்தை மிக சாதாரணமாக பயன்படுத்தி பின்வருமாறு பத்வா வழங்கியிருந்தார்..

“முஸ்லிம் காங்கிரசில் அபேட்சகர்களாக வந்து தெரிவு செய்யப்பட்ட பின்னர் கட்சியையும் மக்களை காட்டிக்கொடுத்துவிட்டு அரசாங்கத்தின் ஆசை வார்த்தைகளுக்கும் அற்ப சொற்ப சலுகைகளுக்கும் அரசாங்கத்தின் எலும்புத் துண்டுகளுக்காகவும் முதுகில் குத்திவிட்டுச செல்லும்

முனாபிக்குகளும் (நயவஞ்சகர்கள்) இக்கட்சியைத தேர்தல்களுக்கு மட்டும் பாவிப்பதாலேயே மக்கள் இவ்வாறு கூறுகின்றனர் இனிவரும் காலங்களிலாவது கட்சிக்கு விசுவாசமானவர்களை மக்கள் அடையாளம் கண்டு வாக்களிப்பதன் மூலமே நயவஞ்சகர்களைத் தனிமைப் படுத்த முடியும் இது வாக்காளர்களின் கைகளிலே தங்கியுள்ளது.”

இஸ்லாம் மதத்தின் ஏகபோக பிரதிநிகள் போலவும் இவர்கள் மத சாயத்துடன் தொடர்ந்தேர்ச்சியாக அரசியல் செய்து வருவதும் விமர்சனம் செய்யப்படாமால் அங்கீகரிக்கப்பட்டே வருகின்ற‌து.

முற்றும்

Advertisements

Written by lankamuslim

ஒக்ரோபர் 31, 2010 இல் 12:02 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: