வடக்கின் வசந்தத்தின் வெற்றிக்கு இன, மத, குல பேதமின்றி சகலரும் ஆதரவு வழங்க வேண்டும்
இன, மத, குல பேதமின்றி ஒரே அரசாங்கம் என்ற ரீதியில் வடக்கின் வசந்தம் செயற்றிட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல சகலரும் பூரண ஆதரவு வழங்க வேண்டுமென ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். அபிவிருத்தியின் மூலம் வடக்கு கட்டியெழுப்பப்பட்டு சகல மக்களும் சந்தோசமாக வாழவேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கம். அதனை நிறைவேற்றுவதற்கு அனைத்து அரச ஊழியர்களும் உதவ வேண்டும் எனவும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தார்.
வவுனியா, மன்னார் மாவட்டங்களுக்கான மாவட்ட விசேட அபிவிருத்திக் கூட்டம் நேற்று வவுனியா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர்கள் ரிசாட் பதியுதீன், டக்ளஸ் தேவானந்தா, பஷில் ராஜபக்ஷ, தினேஷ் குணவர்தன, ராஜித சேனாரட்ன, குணரத்ன வீரக்கோன், எஸ். எம். சந்ரசேன உட்பட அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில் :-
வவுனியா, மன்னார் மாவட்டப் பிரதேசங்களில் தமிழ், முஸ்லிம், சிங்களம் என மூவின மக்களும் ஒன்றாக இணைந்து வாழ்கின்றனர். சகல மக்களுக்கும் ஒரே விதமான வசதிகள் அரசாங்கத்தால் சமமாகப் பெற்றுக்கொடுக்கப்பட்டு வருகின்றன. இதில் எத்தகைய வேறுபாட்டுக்கும் இடமில்லை.
வடக்கில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் பற்றி அரசாங்க அதிகாரிகளுடன் கலந்துரையாடவே நான் இங்கு விஜயம் செய்துள்ளேன்.
இக் கூட்டத்தின் மூலம் அவை சம்பந்தமாக நாம் காத்திரமாகக் கலந்துரை யாட முடியும். இதற்கு சகலரதும் ஒத்துழைப்பு அவசியமாகும்.
இப்பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு மக்கள் மகிழ்ச்சியாக வாழ வழிவகை செய்வதே ‘வடக்கின் வசந்தம்’ அபிவிருத்திக் கருத்திட்டத்தின் நோக்கம். இனவாதம், குலபேதம் ஒருபோதும் வேண்டாம். நாம் பெற்றுக் கொண்ட சுதந்திரத்தை ஒன்றிணைந்து பாதுகாப்போம். இதில் அரச ஊழியர்களுக்கு முக்கிய பங்கு உண்டு.
அரசாங்கத்தின் சேவையைப் பெற்றுக் கொள்ள உங்களை நாடி வரும் மக்களை நீங்கள் கருணைக் கண் கொண்டு பார்க்க வேண்டும். அவர்களின் தேவைகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உங்களிடம் தமது பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்காக வருபவர்கள் அதனை முறையாகப் பெற்று போகும்போது சந்தோசமாக வீடு திரும்பும் வகையில் உங்கள் சேவை அமைவது அவசியம்.
இந்த நாட்டில் ஒரே அரசாங்கமே உள்ளது என்பதைக் கவனத்திற்கொண்டு அதற்கிணங்க நீங்கள் பணிபுரிய வேண்டும்.
மக்கள் சேவை மகேசன் சேவை என்பதை உணர்ந்து நீங்கள் அர்ப்பணிப்புள்ள மக்கள் சேவையை வழங்க முன்வர வேண்டும். அரச ஊழியர்களுக்கு நான் இதனை எப்போதும் கூறி வந்துள்ளேன். மக்களுக்கு நீங்கள் செய்யும் சேவையைக் கடவுளுக்கே செய்வதாக நினைத்து பணிபுரிய வேண்டுமென நாட்டின் சகல அரச அதிகாரிகளையும் கேட்டுக் கொள்கிறேன் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
மேற்படி மாவட்ட விசேட அபிவிருத்திக் கூட்டத்தில் வவுனியா மாவட்டச் செயலாளர் எம். கே. பந்துல ஹரிஸ்சந்ர, வவுனியா மாவட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் சம்பந்தமான விபரங்களை ஜனாதிபதிக்குச் சமர்ப்பித்தார். அத்துடன் மன்னார் மாவட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் சம்பந்தமான விபரங்களை மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் இக் கூட்டத்தில் முன் வைத்தார்.
வவுனியா மற்றும் மன்னார் மாவட் டங்களில் அரசாங்கத்தினால் மேற்கொள் ளப்பட்டு வரும் பல்துறை அபிவிருத்திச் செயற்பாடுகளின் முன்னேற்றம் அதன்போது முகங்கொடுக்க நேர்ந்துள்ள பிரச்சினைகள் அதற்கான தீர்வுகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தி இலக்குகள் தொடர்பில் மாவட்டச் செயலாளர்கள் இங்கு விடயங் களை முன்வைத்ததுடன் அவை தொடர்பில் இங்கு விரிவாக ஆராயப்பட்டன. சில பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வும் பெற்றுக் கொடுக்கப்பட்டன.-தகவல் தினகரன்







