நமது மண்ணை பாதுகாக்க பிரார்த்திப்போம்!
நமது முஸ்லிம் சகோதரர்கள் அனைவரும் அறிந்தவாறு இப்புனித ரமழான் மாதத்தில் பாவங்கள் அனைத்தும் சுட்டெரிக்கப்படு வதுடன் அல்லாஹுத்த ஆலாவின் அருளும் இம்மாதத்தில் நிறையவே கிடைக்கப்பெறுகின்றது. அதன் காரணமாகவே இப்புனிதமும், மகத்துவமுமிக்க மாதம் ஆரம்பித்த நாள் முதல் எமது முஸ்லிம் உடன் பிறப்புகள் நோன்பு நோற்று அல்லாஹ்வை இரவு, பகலாக நிறையவே நின்று வணங்கி, ஏழைகளுக்கு நிறையவே தானதர்மங்களில் ஈடுபட்டு இன்னும் பல நற் கிரியைகளில் அதிகளவும் பங்கேற்றுமிருந்தனர்.
இன்று அவர்கள் புனித ஈதுல் பித்ர் ஈகைத் திருநாளைக் கொண்டாடியவர்களாக எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு சுக்ர் செய்கின்றனர். அவர்களுக்காய் எனது நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மனநிறைவடைகின்றேன். வல்ல அல்லாஹ்வையும் புகழ்ந்து கொள்கின்றேன். இவ்வாறு தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ. எல். எம். அதாஉல்லா ஈதுல் பித்ர் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
நமது தாய் நாட்டில் கொடூரமும், துயரமும் நீங்கி நிலையான ஒரு அமைதிச் சூழலில் நாம் இன்று நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ‘அல்ஹம் துலில்லாஹ்’ இந்நிம்மதிச் சூழலை சகிக்க முடியாத சர்வதேச மற்றும் உள்நாட்டு விஷமிகள் நிலைமையை சீர்குலைக்கும் வகையில் நமது தாய் நாட்டினுள் பல பிரச்சினைகளை தூண்டிவிட்டும் தூண்விடவும் திட்டமிட்டு செயற்படுகின்றனர்.
அந்நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள நமது சமூகத்தையும் பாவிக்க முனைகின்றனர். இந்நிலையில் அவ்விஷமிகளின் தீய சதிவலைக்குள் சிக்கி விடாது நாம் பெற்ற சுதந்திரத்தையும் நிம்மதியையும் என்றும் பாதுகாத்து நிலை நிறுத்துவதும் எமது கடமையாகும். அதற்காய் எல்லாம் வல்ல அல்லாஹ்வை இருகரம் ஏந்தி பிரார்த்திப்போமாக! மேலும் நமது அழகிய சிறிய நாட்டில் இனங்களுக்கிடையில் பேதமற்ற ஒற்றுமை தொடரவும் நாடு வளம்பெறவும் எல்லாம் வல்ல அல்லாஹ்வை இருகரம் ஏந்தி பிரார்த்திக்கிறேன். ஆமீன்







