ஒரே கட்சியின் இரு துருவங்கள் நள்ளிரவில் கூடி ஒன்றிணைந்ததன் மர்மம்தான் என்ன?
கல்முனை செய்தியாளர்
கல்முனை மாநகரத்தின் பிதா கலாநிதி ஸிராஸ் மீராசாஹிப் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல் ஆகியோர் கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல் காலத்தில் இரு துருவங்களாக செயற்பட்டவர்களாகும். ஜெமீலைப் பொறுத்தவரை அரசியலில் எதிர்கால நோக்கம் கடந்து தன்னிடம் வந்த அப்போதைய கலாநிதி ஸிராஸ் மீராசாஹிபை அரவணைத்து ஆறுதல் கூறி, சிராஸ் அரசியலுக்கு வர வேண்டும் என்று கூறிய கருத்தை ஏற்றுக் கொண்டு அவரது எதிர்பார்ப்பை நிறைவேற்ற பெரிதும் உதவி செய்திருந்தமை அப்போதைய அரசியல் களநிலவரங்களின் போது பரவலாக பேசப்பட்ட விடயங்களாகும்.
ஆனால் இந்த உறவு நிலை எடுத்த மாத்திரத்திலேயே பிரிந்தமையை நீங்கள் யாவரும் அறிவீர்கள். சிராஸ் அவர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்தது தொடக்கம் இருவருக்குமான உறவு பிரிந்து பல்வேறு வாதப்பிரதிவாதங்களுடன் மிகச் சூடுபறக்கும் அரசியல் பிரச்சாரங்களில் இருவரும் ஈடுபட்டிருந்தனர். ஜெமீல் தனது உயிர் இருக்கும்வரை சிராசை வெற்றியடைய விடமாட்டேன். என்ற கருத்துப்படக் கூறியிருந்ததையும் தாண்டி அப்போது மக்கள் வாக்களித்தமையால் சிராஸ் வெற்றியீட்டி முதல்வராக பல சாதனைகளையும் அதுபோல் தேனைகளையும் சந்தித்து துவண்டு விடாது மக்கள் பணி செய்து வருகிறார்.
இவர்கள் இனி ஒருகாலமும் ஒற்றுமைப் படமாட்டார்கள் என்ற நிலையில் தற்போது மாகாண சபைத் தேர்தலில் சாய்ந்தமருது பிரதேசத்தின் கிழக்கு மாகாண பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக் கொள்ளவும், பிரதேச அபிவிருத்திக்காகவும் ஒன்றிணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மக்களின் நலன் , ஊர் அபிவிருத்தி என்பவற்றுக்காக உண்மையில் இந்த முடிவினை இவர்கள் எடுத்திருப்பார்களானால் அது சாய்ந்தமருது மக்களால் மட்டுமல்ல முழு முஸ்லிம் சமூதாயமுமே வரவேற்க காத்திருக்கிறது. மாறாக தங்களது அரசியலைத்தக்க வைத்துக் கொள்வதற்கான முயற்சியாக மட்டும் இருந்துவிடக் கூடாது என்பதே எமது மக்களின் எதிர் பார்ப்பாகும்.
இதற்கான முயற்சியை முன் நின்று எடுத்த சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல், வர்த்தக சங்கம் உள்ளிட்ட பொது அமைப்புகளும் ஊர்ப் பிரமுகர்களுக்கும் உண்மையில் மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும். ஏனெனில் கிழக்குமாகாண சபைத் தேர்தலில் தேசிய ரீதியாக முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் மற்றும் அமைச்சர் றிஸாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கும், மு.கா விற்குமிடையிலான புரிந்துணர்வு இறுதி வேளையில் தவிடு பொடியானது. ஆனால் ஒரு ஊரின் இருதுருவங்களாவது ஒற்றுமைப்பட்டமையானது வரவேற்கத்தக்க விடயமாகும்.
அதேவேளை கடந்த ஆண்டு இடம்பெற்ற கல்முனை மாநகர சபைத் தேர்தலின் போது சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஏற்பட்ட முரண்பாடுகள், கசப்புணர்வுகள் மற்றும் அதனைத் தொடர்ந்து உருவான பகைமையுணர்வு தொடர்பிலும் அவற்றை எல்லாம் ஊர் நலன் கருதி முற்றாக களைந்து விட்டு இருவரும் புரிந்துணர்வுடன் ஒன்றிணைத்து செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் மேயர் சிராஸ் மீராசாஹிபும் வேட்பாளர் ஜெமீலும் இக்கலந்துரையாடலின் போது மனம் திறந்து பேசியுள்ளனர். அத்துடன் இருவரும் முஸாபஹா செய்து ஆறத்தழுவிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன் பிரகாரம் எதிர்வரும் காலங்களில் பிரதேச அபிவிருத்தி மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் கூட்டிணைந்து செயற்படுவது என இருவரும் உடன்பாடு கண்டதோடு, எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஜெமீலை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்கும் அவரது வெற்றிக்காக முழுமையாக உழைப்பதற்கும் மேயர் சிராஸ் மீராசாஹிப் இதன்போது உறுதியளித்ததாகவும் நம்பகமாகத் தெரிய வருகிறது.
இந்த சமரசப் பேச்சுவார்த்தையின் பயனாக ஊரில் நிலவி வந்த அரசியல் பிளவு முற்றுப் பெற்று, அணைவரும் ஒற்றுமையாக செயற்படவும் மக்களின் விருப்பத்தை நிறைவேற்றவும், மாகாண சபைக்கான எமது பிரதேச பிரதிநிதித்துவத்தை காப்பாற்றவும், அரசியல் அதிகாரங்களைப் பெறவும் எதிர்காலத்தில் இப்பிரதேசத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெறவும் உழைக்க வேண்டும். என்பதே மக்களின் முழுமையான எதிர்பார்ப்பாகும். நிறைவேற்றுவாரகளா? எமது அரசியல்வாதிகள்.
இன்றைய அரசியல் சூழ்நிலையில் எமது சமூகத்தின் மீது திணிக்கப்படும் அடாவடித்தனங்கள், அட்டூழியங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதானால் தேசிய அரசியலில் பிரிந்து செயற்படுகின்ற முஸ்லிம் தலைமைத்துவங்கள் அணைத்தும் ஒருவருக் கொருவர் முரண்டு பிடித்துத்கொண்டிருக்காமல் எமது மக்களின் அபிலாசைகளையும், உரிமைகளையும் வெண்றெடுப்பதற்காகவும் எதிர்கால எமது சந்ததிகளுக்காக மீண்டும் சிறந்ததோர் அடித்தளத்தை இட்டு வைக்க வேண்டும் என்பதே மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பும் ஏக்கமுமாகும். இதற்கான பல முயற்சிகள் எமது பொது அமைப்புக்களால் முன்வைக்கப்பட்டிருந்தும் அவை வெற்றியளிக்கவில்லை என்பதை எமக்கு முன்னுள்ள பெரும் சவாலாகவே நாம் கருதுகிறோம்.
இவ்வாறான நிலை தொடர்ந்தால் பள்ளிவாசல்களில் அடாவடித்தனம் மேலும் அதிகரிக்கும், காணிகள் சுவீகரிக்கப்படும், ஒட்டு மொத்த முஸ்லிம்களின் இருப்புக்கும் சாவுமணி அடிக்கப்படும். இந்த வரலாற்றுத் தவறை முறியடிப்பதற்கு பேரினவாதிகளின் கூட்டு எமக்கு பலம் அல்ல பலவீனத்தையே தரும்.
நாம் அரசியல் கள நிலவரங்களை நோக்கும் போது மக்கள் எமது தலைவர்களை புறந்தள்ளுகின்ற நிலையே காணப்படுகிறது. பதவியாசை பிடித்த எமது தலைவர்கள் அமைச்சுப்பதவிகளுக்காகவும், சுகபோக வாழ்க்கைக்காவும் இன்று மக்களுடைய எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறியுள்ளனர். இன்று படித்தவர்கள் முதற் கொண்டு பாமரர் வரை இந்த முஸ்லிம் தலைவர்கள் ஒற்றுமைப்படாமைக்கான காரணத்தை நன்கு அறிந்துள்ளனர். தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வரும் மக்களுக்கு இந்த அரசியல்வாதிகளை உதறித்தள்ள நீண்டகாலம் தேவைப்படாது. என்பதை எமது பெருந்தகைகள் புரிந்து கொண்டால் சரி. முடிவாக பதவி பட்டங்களைத்துறந்து மக்கள் பணிக்காக ஒன்றிணையும் சக்தி மிக்க அரசியல் குழுமம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பது மக்கள் எதிர்பார்க்கும் காலத்தின் தேவையாகும். முஸ்லிம் அரசியல் பெருந்தகைகளே இது உங்களின் கவனத்திற்கு!








Well said writer //சக்தி மிக்க அரசியல் குழுமம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பது மக்கள் எதிர்பார்க்கும் காலத்தின் தேவையாகும். முஸ்லிம் அரசியல் பெருந்தகைகளே இது உங்களின் கவனத்திற்கு!//— but add as சக்தி மிக்க Islamiya அரசியல் குழுமம்
Ilma Fareen
August 17, 2012 at 1:54 am