முஸ்லிம் காங்கிரஸ் தனித்து கேட்டாலும் ஆட்சியமைதாலும் அதிகாரம் , மற்றும் உரிமையை பெற்றுத்தருமா ?
களத்திலிருந்து தொகுத்தவர் எமது கல்முனை செய்தியாளர்: ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் தரப்புடன் இருந்து கொண்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டும் கட்சியின் மரச்சின்னத்தில் தனித்துக் கேட்கும் முடிவை வேட்புமனுத்தாக்கல் செய்யும் இறுதி வேளையில் எடுத்தமையானது பெரும்பாலான மக்களிடையே பாரிய வரவேற்பை பெற்றிருந்தாலும், சமூகத்தின் மத்தியில் முறண்பட்ட கருத்துக்களையும் தோற்றுவித்துள்ளது என்றே கூற வேண்டும். கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய மாகாண சபைகள் கலைக்கப்பட்டு செப்டம்பர் 8ம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது.
பலத்த எதிர்பார்ப்புடனும், நம்பிக்கையுடனும் கிழக்கு தேர்தலில் முஸ்லிம் முதலமைச்சர் என்ற கனவுடன் களமிறங்கியுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சட்ட ரீதியாக மட்டும் அதிகாரங்களை கொண்டுள்ளதும், செயற்பாட்டு ரீதியாக கிழக்கு மாகாண ஆளுணரால் கட்டுப்படுத்தப்படுவதுமான “கிழக்கு முதலமைச்சர்” என்ற நாம நிர்வாகி பதவிக்காக முஸ்லிம், தமிழ் தரப்பினர் முட்டி மோதிக் கொள்வதில் எவ்வித பயனுமில்லை என்பதே சென்ற கால கிழக்கு முதலமைச்சரின் ஜனநாயக அதிகார செயற்பாடுகளுக்கான கட்டுப்பாடுகள் மூலம் நாம் விளங்கிக் கொள்ள முடியுமாக உள்ளது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இறுதி வேளையில் எடுத்த முடிவினை கிழக்கு மாகாணம் வரவேற்கின்றதா? என தமிழ் பேசும் சமூகங்களின் பல்துறை சார்ந்தோரிடம் வினவியபோது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு,
01) இஸ்லாமிய சமூக மேம்பாட்டுக்கான தேசிய அமைப்பின் தலைவர், சாய்ந்தமருதைச் சேர்ந்த எஸ். முபாறக் ஆசிரியர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இறுதிக்கட்ட முடிவானது காலத்தின் தேவையும் மக்களின் எதிர்பார்ப்புமாகும். ஏனெனில், அரசுடன் இணைந்து கேட்டிருந்தால் அது தமிழ் மக்களை ஆத்திரமூட்டும் ஒரு செயலாகவே இருந்திருக்கும். இந்தியா தமிழ் நாட்டிலும் எதிர்ப்புக்கள் தோன்றியிருக்கும். அதுபோல் தமிழர் தேசிய கூட்டமைப்புடன் இணைந்திருந்தால் அரசாங்கமும், சிங்கள மக்களும் மு.கா.வையும், முஸ்லிம்களையும் பிழையான கண்ணோட்டத்தில் பார்த்திருக்க வாய்ப்புண்டு. இந்தவகையில் தனித்து தேர்தலில் நிற்பது நிற்பது சிறந்த முடிவாகும்.
இருப்பினும், இம்முடிவு மக்களின் நன்மைக்காக எடுக்கப்பட்ட முடிவல்ல மாறாக ஒரு ஆசனம் குறைக்கப்பட்டதற்காகவும், கட்சியிலுள்ள சிலரின் விருப்புக்கு அமையவுமே எடுக்கப்பட்டுள்ளது. எனவே இதில் மகிழ்ச்சி அடைய முடியவில்லை.
உண்மையில் இந்த தேர்தலில் 3 பிரதான முஸ்லிம் கட்சிகளும் ஒன்றாக இணைந்து தேர்தல் களத்தில் குதித்திருக்க வேண்டும். அதுவே சிறந்த முடிவாக இருந்திருக்கும். ஆனால் தலைவர்களின் பதவியைக்காப்பதற்காக பாரிய வரலாற்றுத்தவறையும், சமூகத் துரோகத்தையும் முஸ்லிம் கட்சிகள் செய்துள்ளன.
எந்த முஸ்லிம் தலைவருக்கும் முஸ்லிம் முதலமைச்சர் வரவேண்டும் என்ற எண்ணமோ, நோக்கமோ உண்மையில் கிடையாது. அவர்களுடைய நோக்கமெல்லாம் எவர் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை. எதை விற்றாவது தன்னுடைய பதவியை காப்பாற்ற வேண்டும் எனபது மட்டுமேயாகும்.
அமைச்சுப்பதவியை அனுபவிக்கும் போட்டியிலேயே முஸ்லிம் காங்கிரஸ் உடைந்தது. அவ்வமைச்சுப்பதவியைப் பெற்றவர்கள் கூட அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு எவ்வளவோ பிரச்சினைகள் வந்தபோதும் காத்திரமான எந்த நடவடிக்கையும் எடுக்கவோ அமைச்சுப்பதவியை துறக்கவோ, அரசாங்கத்தை விட்டு வெளியேறவோ இல்லை. எனவேதான் எனது கருத்து இவர்களது கட்சிகள் சமூகத்திற்கான கட்சிகளல்ல. மாறாக சிலரின் சுய இலாபத்திற்கான கட்சிகளே ஆகும். மாற்று வழி இல்லாத்தனால் இவர்களுக்கு வாக்களித்துவரும் எமது சமூகமும் ஏமாற்றப்பட்டே வருகின்றனர்.
02) கல்முனை சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த ஏ. அற்புதன் என்ற தமிழ் சகோதரரிடம் இது விடயமாக கேட்டபோது,
கிழக்கு மாகாண சபைத் தேர்தலைப் பொறுத்தமட்டில் பெரும்பாண்மையினக் கட்சிகளுடன் சிறபாண்மையினக்கட்சிகள் இணைந்து தேர்தலில் களமிறங்கியிருக்கிறார்கள். பொதுவாக பார்ப் போமானால் தமிழ் பேசுநம் மக்களுடைய உரிமைகள், சமூக நலன்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை தமிழ் பேசும் மக்களை சார்ந்துள்ள கட்சிகளுக்கு உள்ளது. அந்த அடிப்படையில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனித்துக் கேட்பது போல் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் தனித்துக் கேட்கும் முடிவுக்கு வந்துள்ளமை வரவேற்கத்தக்கது. இந்த முடிவு தமிழ் பேசும் மக்களுடைய பொருளாதாரம், சுயநிர்ணயம், உரிமைகள் என்பவற்றை பாதுகாப்பதற்கான வழியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
ஏலவே, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து இருந்து செயற்பட்ட வேளையில் தமிழ் பேசும் மக்கள் அதிருப்தி அடைந்த நிலையில் காணப்பட்டார்கள். தற்போதைய இந்த கருத்தொற்றுமை தமிழ் பேசும் சமூகங்களுக்கு மத்தியில் வலுவானதாக தொடர வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
இதனை எமது அரசியல் தலைவர்களும் உணர்ந்து எதிர்கால சுபீட்சமான வாழ்விற்கு வழியமைத்துத்தர வேண்டும். கடந்த கால கசப்பாண உணர்வுகளை மறந்து நிம்மதியாகவும், சந்தோசமாகவும் இனங்களுக்கிடையே ஒற்றுமையுடனும், விட்டுக் கொடுப்புகளுடனும் வாழ்வதற்கான வழியை ஏற்படுத்தப் பாடுபட வேண்டும். இந்த நாட்டில் எமது சமூகங்கள் சுய கௌரவத்துடன் வாழ்வதற்கான வழியை ஏற்படுத்துவதுடன், பெரும்பாண்மைகளுக்கு எமது பலத்தை நிரூபிக்கும் தருணத்தில் நாம் இருக்கிறோம்.
எமது ஒற்றுமையைக் குலைக்கக்கூடிய வகையில் இன்று தேசிய ரீதியாக பல்வேறு சதிவலைகள் பின்னப்பட்டு வலுகிறது இவை அணைத்தையும் வெற்றிகொள்வதற்கு எமக்குள் ஒற்றுமை நிலைக்க வேண்டும். யார் ஆட்சியைக் கைப்பற்றினாலும் பரவாயில்லை. எமக்கு நிம்மதியான, சந்தோசமான, அச்சமற்ற நிலை ஏற்பட வேண்டும். அதற்கான முதல் வெற்றியை
நாம் அடைந்து விட்டோம் என்ற நிம்மதி எமக்கு தற்போது தமிழ் பேசும் தலைவர்களால் ஏற்பட்டுள்ளது. இதற்கு எமது மக்கள் சார்பாக நன்றிகளை தெரித்துக் கொள்கின்றோம் என்றார்.
03) திருகோணமலை மாவட்டம் தோப்பூரைச் சேர்ந்த ஏ.எல்.எம். தானிஸ் என்பவர் குறிப்பிடும் போது,
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரசைத் தவிர்த்து ஏனைய பிரதான முஸ்லிம் கட்சிகள் இரண்டும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து தேர்தலில் களமிறங்கி உள்ளமையானது முஸ்லிம் காங்கிரஸினால் எதிர்பார்க்கப்படுகின்ற முழுமையான வெற்றியை பெற்றுத்தருமா? என்ற கேள்வி எழுகின்றது. அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் மற்றும் அமைச்சர் றிஸாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் ஒப்பிடும்போது அபிவிருத்தி என்ற விடயத்தில் பூச்சியமாக உள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெறும் உரிமை கோசங்களை மட்டும் முன்வைத்து அரசியல் செய்வது மக்கள் மத்தியில் வெறுப்பையே கொண்டு வருவதை சென்ற உள்ளுராட்சி தேர்தல் முடிவுகளில் சில இடங்களை முஸ்லிம் காங்கிரஸ் பறிகொடுத்தமையிலிருந்து நமக்கு தெளிவாகிறது.
அதுமட்டுமல்லாமல் அண்மைக்காலமாக முஸ்லிம் மதத்தலங்கள் காணிகள் மீது கட்டவிழ்த்து கயவர்களால் மேற்கொள்ளப்படும் அடாவடித்தனங்களை தட்டிக்கேட்கும் திராணியற்றவர்களாகவே எமது முஸ்லிம் தலைவர்கள் இருக்கிறராகள். வன்னி முஸ்லிம்களுக்கு எதிராக சதிவலைகள் பின்னப்பட்டிருக்கின்ற இத்தருணத்தில் அமைச்சர் றிஸாத் பதியுதீன் மட்டுமே காத்திரமான,உளப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்கள். இதனால் அவர் வேறு வழிகளில் தற்போது பழிவாங்கப்படுகிறார். இது எமது சமூகத்திற்கு கிடைத்த மாபெரும் அப கீர்த்தியாகும். எமது முஸ்லிம் சகோதரருக்காக நாம் ஒற்றுமைப்படுவதோடு, எமது அபிலாசைகளை அரசாங்கத்தின் பக்கம் இருந்தே தீர்த்துக் கொள்ள முணைய வேண்டும்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் களத்தில் முஸ்லிம் காங்கிரஸின் வியூகம் வெற்றியளித்தால் கூட முஸ்லிம் கட்சிகள் ஒன்று சேராதவரை எமது சமூகம் மாற்று இனத்தவர்களிடம் கைகட்டி நிற்பதை யாராலும் தடுக்க முடியாமல் போகலாம். இந்த அடிப்படையில் முஸ்லிம் கட்சிகள் அணைத்தும் ஒற்றுமைப்பட வேண்டிய தருணத்தில் முஸ்லிம் காங்கிரஸின் முடிவினால் எதிர்பார்ப்பு சிதறுண்டு போனமை வருந்தத்தக்க விடயமே.
04) மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனையைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் கே.சுபைர் அவர்களை தொடர்பு கொண்டபோது,
கிழக்கு மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணையாது தனித்துகேட்பது முட்டாள் தனமான முடிவாகும். மறைந்த மாமனிதர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களினால் கிழக்கிலங்கை முஸ்லிம்களை கருத்தில் கொண்டு தோற்றுவிக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் பின்னர் இலங்கை முஸ்லிம்களை மையமாகக் கொண்டு வியாபித்தது. மட்டுமல்லாது மக்களின் அடிப்படையான சுய நிர்ணயம், கரையோர மாவட்டம், சுயாதீனமான நிர்வாக உரிமை, கல்வி, தொழில் வாய்ப்புக்கள், அபிவிருத்தி போன்ற இன்னோரன்ன விடயங்களைக் கொண்டு அவ்வப்போது ஆட்சியமைக்க காரணமாக இருந்த மாபெரும் சிறுபாண்மைக் கட்சிகளில் ஒன்றாக முஸ்லிம் காங்கிரஸ் அப்போதிருந்தது. ஆனால் தலைவர் மறைந்த பின்னர் மனைவி தொடக்கம் விசுவாசம், பற்று என்றெல்லாம் வாய் கிழியப் பேசிய குழுக்களின் தலைவர் வரை மக்களை தலைவரின் பெயரைச் சொல்லி ஏமாற்றத் தவறவில்லை. எங்களின் தனித்துவத்தை காக்க தனித்துக் கேட்;கின்றோம் என்பதற்கு இது தருணமல்ல. ஏனெனில் சுயநிர்ணயம், உரிமை என்று சொல்லிக் கொண்டு தானும் தவிசாளருமாக மாறி மாறி கொள்கைகளை ஏலம் போடும் வியாபாரிகளாக மாறிவிட்டார்கள்.
அரசியல் கள நிலவரத்தில் இதற்கு முதல் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கு பல சந்தர்ப்பங்களில் ஆட்சியாளர்களின் பக்கம் சார்ந்து முஸ்லிம்களின் இருப்பை பாதுகாக்க வாய்ப்பிருந்தும் அதையெல்லாம் துச்சமாக எண்ணிவிட்டு சுயலாபத்திற்காகவும், புத்தி சாதுரியமற்ற முறையிலும் முடிவுகளை எடுத்தமையால் பல்வேறு இன்னல்களை எமது சமூகம் கண்டது.
இப்போதும் அரசின் ஆதரவுடன் தனித்து கேட்பதாக பாசாங்கு செய்கின்றனர். கிழக்கு முஸ்லிம்கள் விழித்து விட்டார்கள். தேர்தல் காலங்களில் மாத்திரம் வருவதும் வாக்குருதிகளை அள்ளி வீசுவதும் காங்கிரஸ் என்றால் மரக் குச்சியை வேட்பாளராக நிறுத்தினாலும் மக்களின் வாக்குண்டு என்ற நிலை மாறி வருகிறது. இறுதிவரை அரசுடன் இணைந்து கேட்பது என்று கூறிவிட்டு இறுதியில் தனித்து கேட்கப் போகின்றோம் என்று இத்தருணத்தில் எடுத்த இம்முடிவு தலைவரின் சுய நலத்தையே காட்டுகின்றது.
எவ்வாறாயினும், மர்ஹூம் அஷ்ரபிற்குப் பிறகு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எமது சமூதாயத்திற்கு என்னவிடியலைப் பெற்றுத்தந்துள்ளது. எந்த விடயத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் பூச்சியமாகவே எமது கட்சி உள்ளமை இன்று புலனாகிறது. எனவே, அரசுடன் இணைந்து தேர்தல் கேட்டிருந்தால் அதுவே மக்கள் மத்தியில் பெரு வரவேற்பைப் பெற்றிருக்கும்.
05) ஒலுவில் அஸ்ரப் நகரைச் சேர்ந்த எம். இப்றாலெப்பை தனது கருத்தினை வெளியிடுகையில்
நான் அஸ்ரப் நகரில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறேன். ஒலுவில் பிரதேச மக்களே இங்கு கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர் எமது வாழ்விடங்களைவ விட்டு இன்று நாங்கள் வெளியேற்றப்பட்டுள்ளோம். இதனைத் தட்டிக் கேட்டு எங்களுக்கு உரிய தீர்வைப் பெற்றுத்தர முடியாத நிலையிலேயே இன்றுள்ள எமது தலைவர்கள் உள்ளனர். இவ்வாறு நடுத் தெருவில் விடப்பட்டுள்ள நாம் ஒரு அரசியல் வாதியையும் நம்பத்தயாராக இல்லை. இதனால் மாற்று வழிகளையே கையாள வேண்டி உள்ளது.
தொடர்ந்தும் முஸ்லிம் தலைவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து இருப்பதனால் முஸ்லிம் மக்களுக்கு என்ன பயன் ஏற்படப் போகுது. தம்புள்ளயில் ஆரம்பித்து இலங்கையின் நாலாபுறங்களிலும் நடைபெற்றுவரும் முஸ்லிம்களுக்கெதிரான அத்துமீறல்களை கண்டித்து சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டும் வகையில் எமது முஸ்லிம் அமைப்புக்கள் ஒன்று திரண்டு தமது எதிர்ப்;பினைக் காட்ட வேண்டிய தருணத்தில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம். வெறுமனே அரசியல் லாபங்களுக்காக வெற்றுக் கொசங்களை எழுப்பி மாகாணசபையில் தமது வெற்றியை உறுதி செய்து கொள்ளக்கூடிய வகையில் அரசியல் யாசகம் கேட்பதற்கு இன்று பலர் களமிறங்கி உள்ளனர். இவர்களில் சிறந்த ஆளுமைமிக்கவர்களையே எமது ஜனநாயக பலத்தால் நாம் வெற்றியடையச் செய்ய வேண்டும். அப்போதுதான் எமது தமிழ் பேசும் சமூகங்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அநியாயங்களுக்கு தீர்வைப் பெற முடியும்.
முஸ்லிம்களின் ஏகபோக கட்சி என்ற அந்தஸ்தில் ஆரம்பகாலத்தில் இருந்து வந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று பல்வேறு கூறுகளாகப் பிரிந்து செயற்படுகிறது. இவை அணைத்திற்கும் எமது முஸ்லிம் தலைமைகளிடத்தில் ஒற்றுமை இல்லை என்பதே காரணமாகும். ஒரு காலத்தில் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாகக் கூட நமது கட்சி இருந்திருக்கிறது. ஆனால் அந்த நிலை தற்போது இல்லை என்கின்ற போது மிகவும் மனவேதனையளிக்கிறது.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் இறுதி வேளையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துக் கேட்கும் முடிவை எடுத்தாலும், ஆட்சியமைத்தாலும் கூட எமக்குரிய அதிகாரங்கள் உரிமைகள் பெற்றுக் கொடுக்கப்படுமா? என்ற கேள்வி இருக்கிறது. ஏனெனில் அதிகாரத்தின் ஊற்றாக ஆளுணர் உள்ளமையால் தமது அதிகாரங்களை முதலமைச்சர் முதற் கொண்டு, சகல உறுப்பினர்கள் வரையிலும் செயற்படுத்த கட்டுப்பாடுகள் இருக்கும் என்ற நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் எடுத்த முடிவினால் எதிர்காலத்தில் எந்த காத்தியமான தீர்வும் எமது சமூகங்களுக்கு எட்டப் போவதில்லை. இதனால் எந்த முடிவினை கட்சிகள் எடுத்தாலும் நாங்கள் அலட்டிக் கொள்ளத்தேவையில்லை.








வெட்கம்கெட்ட, கேவலம்கெட்ட லங்கா முஸ்லிம் இணையம் இந்த புனித ரமழானிலும் திருட்டை கைவிடவில்லை. விடிவெள்ளி பேப்பரில் வந்ததை அப்படியே திருடிவிட்டு, தமது செய்தியாளர் என்று போட்டுள்ளது பச்சை வெட்கக்கேடு…!!
kabir
August 10, 2012 at 1:47 pm
உங்கள் முட்டாள் தனமான கருத்துக்களை வாசகர்களும் பார்வையிட வேண்டும் என்பதற்காக மேற்படி பதிவை அனுமதித்தோம் -
இங்கு பதிவு செய்திருக்கும் தகவல் தொகுப்பு எமது கல்முனை செய்தியாளரினால் தொகுக்கப் பட்டு எமக்கு அனுப்படட்டவையாகும் -அதன் ஒரு பிரதிதான் விடிவெள்ளியிலும் வந்துள்ளது .நாம் பதிவு செய்யும் அணைத்து கட்டுரைகள் , செய்திகள் என்பன எமது கட்டுரையாளர்கள் செய்தியாளர்களினால் அனுப்பப்படுப்பதை. நாம் வேறு ஒரு தகவல் மூலத்தில் இருந்து பெற்றால் அதை குறிப்பிட தவறுவதில்லை என்பதை எமது நீண்ட நாள் வாசகர்கள் அறிவார்கள் .
நாம் தினமும் பல செய்திகளையும் வாரத்தில் குறைந்தது இரண்டு கட்டுரைகளையும் அதை நாம் எதிர்பார்க்கும் குறைந்த தகமைகளை கொண்டிருகாமையல் நிராகரித்து வருகிறோம் .என்பதையும் கண்டதை எல்லாம் பதிபவர்கள் நாமல்ல என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறோம் .
கடந்த இரண்டு வாரங்களில் மாட்டும் 40 வரையான செய்திகளையும் , 07 கட்டுரைகளையும் நாம் எதிர்பார்க்கும் நிபந்தனைகளை கொண்டிருகாமையால் (பலர் தம்மை பற்றிய தகவல்களை எம்முடன் பகிராமையாலும் ) எமது செய்தி மட்டும் கட்டுரை ஆசிரியர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
lankamuslim
August 10, 2012 at 3:03 pm