Lankamuslim.org

One World One Ummah

இஸ்லாம் ஓர் அறிமுகம்

leave a comment »

அஷ்ஷேய்க் A.J.M மக்தூம் இஹ்ஸானி (B.A)
தெரிவு எங்கள் கைகளிலேயே இருக்கிறது, எதைத் தெரிவு செய்யப் போகிறோம்?பூமி, செடிகொடிகள், பூச்சி இனங்கள், மிருகங்கள், பறவைகள், மீன் வகைகள், ஆகியவற்றோடு  ஏனைய படைப்புக்களும் எப்படி சிருஷ்டிக்கப் பட்டிருக்கின்றன? என்பது பற்றி நீங்கள் சற்று சிந்தித்துப் பார்த்ததுண்டா?

  1. அவற்றின் வாழ்வுக்கான வழிகாட்டலும், முறையான நிர்வாகக் கட்டமைப்பும் பற்றியெல்லாம் தெளிவு பெற்றிருக்கிறீர்களா?
  2. சூரியன், சந்திரன், கிரகங்கள், நட்சத்திரங்கள், மேகங்கள், வீசும் காற்று ஆகியவற்றோடு ஏனைய சிருஷ்டிப்புகளும் எவ்வாறு உலக வாழ்வுக்கான பங்களிப்பை உரிய முறையில் அளிக்கின்றன என்பதை அறிவீர்களா?
  3. தக்க முறையில் அமைந்துள்ள உங்கள் உடல் அமைப்பைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள், அவற்றின் உறுப்புக்கள் எப்படி இணைந்து செயற் படுகின்றன?.
  4. இத்தகைய சிந்தனைக்கு எட்டாத படைப்புக்களை சிருஷ்டித்தது யார்? அவற்றின் திட்டமான ஒருங்கிணைப்பை நிர்மாணித்தது யார்? சிக்கல்கள் நிறைந்த இப்பிரமாண்டமான அமைப்பை முழுமையாக நிர்வகிப்பது யார்?
  5. இந்தப் படைப்புக்களின் சிருஷ்டிப்பு விவகாரத்தில் யாரும் உரிமை கொண்டாட முடியாது. ஏன் முடி போன்ற ஓர் சிறிய படைப்பைக் கூட வேறு எவராலும் உருவாக்க முடியாது!
  6. படைத்தவனும், ஆளுபவனும் ஒரே இறைவனே, அவனே உண்மை இறைவனாவான். ஒரு இறைவனுக்கும் அதிகமாகப் பல இறைவன்கள் இருந்தால் வானங்களிலும், பூமியிலும் குழப்பங்கள் ஏற்பட்டு விடும். எனவே, ஒருவனான அல்லாஹ்வே உண்மையான இறைவனாவான்.
  7. எனவே இத்தகைய அடிப்படைகளின் படி எம்மைப் படைத்துப் பரிபாலிப்பவனுக்கு மகிமை கூறவும், எம்மை அர்ப்பணிக்கவும், சிறப்பும் அருளும் மிக்க அவனது வழிகாட்டலை ஏற்றுக் கொள்ளவும் வேண்டும்.
  8. எமது புத்தி நுட்ப விளக்கத்துக்காக சிருஷ்டிப்பாளன் அருள் புரிந்து, நேர்வழியைத் தெரிவு செய்ய சுதந்திரமும் தந்துள்ளான்.
  9. தனது தூதர்கள் மூலமும், வேதங்கள் மூலமும் அல்லாஹ் எமக்கு நேர்வழி காட்டியுள்ளான். முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்)  அவர்களுக்குப் பின் தூதுத்துவத்தை நிறைவு செய்ததோடு, அல்குர்ஆனோடு வேதங்களும் முற்றுப் பெற்றது.
  10. வாழ்வில் தனித்தனியே இரு வழிகள் உள்ளன. ஒன்று இவ்வாழ்விலும், மறு உலக வாழ்விலும் இனிமைப் பயக்கும், இதுவே ஒரே இறைவனுக்கு கட்டுப் படுதலா (இஸ்லாமா) கும். மற்றது இவ்வுலகிலும் துன்பம் விளைவிப்பதோடு மறுமையிலும் தண்டனையைப் பெற்றுத்தரும்.
  11.  (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் – அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான். (அல் குர்ஆன் 2:256)

தெரிவு எங்கள் கைகளிலேயே இருக்கிறது, எதைத் தெரிவு செய்யப் போகிறோம்?

அல்லாஹ் எங்களை நேர்வழியில் நடத்துவானாக! ஆமீன்.

எதற்காக இஸ்லாம் (ஓரிறைக் கொள்கை)?

  1. மனித சமூகத்துக்காக அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே மார்க்கம் இஸ்லாமே என்பதாலும்,
  2. ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) முதல் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் வரை அனைத்து நபிமார்களினதும் ஒரே மார்க்கம் இஸ்லாமே என்பதாலும்,
  3. இறைவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் மற்றும் ஏனைய நபிமார்கள் அனைவரும் அழைப்பு விடுத்த மார்க்கமும் இஸ்லாமே என்பதாலும்,
  4. அல்லாஹ்வின் வசனங்கள் அடங்கிய இறுதி வேதமாகிய அல் குர்ஆன் மற்றும் ஏனைய இறை வேதங்களின் மூலம் அங்கீகாரம் பெற்ற ஒரே மார்க்கம் இஸ்லாமே என்பதாலும்,
  5. மேலும் தனி மனித வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை, அரசியல், பொருளாதாரம் போன்ற அனைத்து துறைகளுக்குமான உயரிய வாழ்வு நெறிகளைக் கற்றுத்தருவதோடு மற்றுமின்றி அனைத்து பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வுகளை வழங்கும் உன்னத மார்க்கம் இஸ்லாமே என்பதாலும்,
  6. பாரபட்சமின்றி எத்தரத்தை சார்ந்தவராக இருந்தாலும் சரி, எக்குலத்தை சார்ந்திருந்தாலும் சரி, அனைவருக்கும், அனைத்து காலங்களுக்கும் பொருந்தும் விதமான நேர்மையான சட்டங்களையும், தீர்வுகளையும் கொண்டு சர்வதேச தன்மையுடன் விளங்கும் ஒரே மார்க்கம் இஸ்லாமே என்பதாலும்,
  7. அல்லாஹ்வின் மார்க்கத்தைவிட்டு (வேறு மார்க்கத்தையா) அவர்கள் தேடுகிறார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள (அனைத்துப் படைப்புகளும்) விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே சரணடைகின்றன; மேலும் (அவை எல்லாம்) அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படும். (அல் குர்ஆன் 3:83)
  8. இன்னும் இஸ்லாம் (ஒரே இறைவனுக்கு வழிப்படுதல்) அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார். (அல் குர்ஆன் 3:85)
  9. நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் (ஒரே இறைவனுக்கு வழிப்படுதல்) தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்.(அல் குர்ஆன் 3:19)

இஸ்லாத்தையே எமது மார்க்கமாக தெரிவு செய்து கொள்வோம்!

யாருக்காக இஸ்லாம் (ஓரிறைக் கொள்கை)?

  1. இவ்வுலக வாழ்கையின் நோக்கத்தை புரிந்து கொண்டு, உண்மையான இலக்கை நோக்கி பயணிப்போர் அனைவருக்காகவும்,
  2. இறைவனால் வழங்கப் பட்ட புத்திநுட்பத்தை செயல்படுத்தி இறைவனை புரிந்துக் கொண்டோர் அனைவருக்காகவும்,
  3. இறைவனுக்கு  கட்டுப்பட்டு அவனின் அருளை காண விரும்புவோர் அனைவருக்காகவும்,
  4. இறைவனின் வார்த்தைகளை புரிந்து கொண்டு அதன் படி நடக்க விரும்புவோர்  அனைவருக்காகவும்,
  5. இறைவன் அருளியுள்ள அருட்கொடைகளைப் புரிந்து கொண்டு அதற்கான நன்றி உணர்வையும், இறை நேசத்தையும் உள்ளத்தில் கொள்வோருக்காகவும்,
  6. படைத்து பரிபாளிக்கும் இறைவனுக்கு தனது செயற்பாடுகள் அனைத்தையும் அர்ப்பணம் செய்ய விரும்புவோர் அனைவருக்காகவும்,
  7. இறைவேதங்கள், இறை தூதர்கள் அனைவரையும் ஏற்றுக் கொண்டோருக்காகவும்,
  8. வாழ்க்கைப் படலத்தை முன்னெடுத்துச் செல்வதில் சிரமங்களை எதிர் கொண்டு தீர்வுத் திட்டத்தை தேடுவோருக்காகவும்,
  9. நான், நீங்கள் உட்பட ஈருலகிலும் நிம்மதியான வாழ்வையும், இறைவன் சித்தப் படுத்தி வைத்துள்ள பேரின்பங்களையும் அடைய விரும்புவோர் அனைவருக்காகவும்,
  10. ஆகவே உங்கள் நாயன் ஒரே நாயன்தான்; எனவே அவ(ன் ஒருவ)னுக்கே நீங்கள் முற்றிலும் வழிப்படுங்கள்; (நபியே!) உள்ளச்சம் உடையவர்களுக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக! (22:34)
  11. ஆணாயினும், பெண்ணாயினும் இறை நம்பிக்கையாளராக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற் செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம்; இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம். (அல் குர்ஆன் 16:97)

இஸ்லாம் என்றால் என்ன?

சிலர் கருதுவது போன்று இஸ்லாம் சுமார் 14 நூற்றாண்டுகளுக்கு முன் முஹம்மத் என்பவரால் தோற்றுவிக்கப் பட்ட மதம் அன்று. மாற்றமாக மனித குலத்தைப் படைத்த கடவுளினால் அவர்களின் வாழ்வு சீர்பெற அவர்கள் படைக்கப் பட்ட நாள் முதல் கொடுக்கப் பட்ட வாழ்வு நெறியே இஸ்லாம். இஸ்லாம் என்ற அரபு வார்த்தை, பணிவு, கட்டுப்படல், வழிப்படல் என்ற அர்த்தத்தோடு, சாந்தி சமாதானம் என்ற கருத்தையும் பொதிந்துள்ளது. எனவே எவர் இறைவனின் கட்டளைகளுக்கு முழுமையாக கட்டுப் பட்டு நடக்கின்றாரோ, அவர் ஈருலகிலும் நிம்மதியையும், சாந்தத்தையும் அடைவார். ஒருவன் முஸ்லிமாக கருதப் படுவதற்கு, முஸ்லிம் பெற்றோருக்குப் பிறந்து இருக்க வேண்டும் அல்லது முஸ்லிம் மத்தியில் அறிமுகமான பெயர் வைத்திருக்க வேண்டும் என்ற எந்தவிதமான நிபந்தனைகளும் இல்லை. முஸ்லிம் என்றால் தன்னைப் படைத்த கடவுளுக்கு வழிப்படுபவன் என்பதே அர்த்தம். எனவே ஒருவன் தன்னைப் படைத்த இறைவனுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு, அவன் தனது செய்தியை கூறுவதற்காக அனுப்பிய தூதர்களையும், அவர்களில் இறுதியாக அனுப்பப்பட்ட முஹம்மத் (அவர்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தி உண்டாகட்டும்) அவர்களையும் ஏற்றுக் கொண்டால் போதும் அவன் முஸ்லிமாக மாறிவிடுவான்.

இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகள், மற்றும் நம்பிக்கைக் கொள்ள வேண்டிய அம்சங்களின் சுருக்கம் பின்வருமாறு அமைந்துள்ளது:

 

நம்பிக்கைப் பிரகடனம் (இஸ்லாத்தின் முதல் தூண்) :

அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹ், வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு”

 மொழி பெயர்ப்பு: 

“வணங்கத்தக்க நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் சாட்சி கூறுவதோடு, முஹம்மத் (ஸல்லல்லாஹு அளைஹிவஸல்லம்) அவர்கள் அவனின் அடிமையும், தூதருமாவார் என்றும் நான் சாட்சி கூறுகிறேன்”

ஒருவன் மேற்கூறப்பட்ட வசனங்களை உள்ளத்தினால் ஏற்றுக்கொண்டு நாவினால் மொழிந்தால் முஸ்லிமாக மாறிவிடுவான்.

  1. அதனைத் தொடர்ந்துள்ள இஸ்லாத்தின் அடிப்படை செயற்பாட்டுத் தூண்கள்: அவை தொழுகை (சலாஹ்), நோன்பு (சவ்ம்), ஏழைவரி (சகாத்), புனித மக்கா யாத்திரை (ஹஜ்)
  1. நம்பிக்கைக்கான தூண்கள்: அல்லாஹ், மலக்குகள், வேதங்கள், தூதர்கள், மறுமை நாள், விதி என்பனவற்றை நம்புவதாகும்.

 

நம்பிக்கைக்கான தூண்கள்

இஸ்லாமிய நம்பிக்கையின் தோற்றமும், உருவாக்கமும் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்)  அவர்களின் பின் நிகழவில்லை. ஏற்கனவே அருளப்பட்ட இறை வேதங்கள் பொதிந்ததும், இறைத்தூதர்கள் கூறிய தூதையுமே அன்னாரும் தொடர்ந்தார்கள். இஸ்லாமிய நம்பிக்கைக் கோட்பாடு எப்போதும் எவ்வித மாற்றங்களும் இன்றி அழியாமல் நிலைத்திருக்கும் உண்மையாகும். அது இறைவனைப் பற்றிய உண்மைகளையும், அவனது சிருஷ்டிகளோடுள்ள தொடர்ப்பையும், எமக்குப் போதிக்கிறது. இவ்வுலக வாழ்வின் உண்மை இதில் பொதிந்திருக்கிறது. அதில் மனிதனின் பங்களிப்பு என்ன? மறுமையில் அவனின் நிலை என்னவாகும்? அவன் படைக்கப் பட்ட நோக்கம் என்ன? என்பதைப் பற்றியெல்லாம் பேசுகிறது..

இஸ்லாத்தில் இறைக் கோட்பாடு

  1. அல்லாஹ் ஒருவனென்றும், அவனது இறைத்தன்மையிலும், படைத்து பரிபாலிப்பதிலும் அவனுக்கு நிகராக யாரும் இல்லை என்றும் நம்புதல், அல்லாஹ் ஒரே ஒருவனே, அவனது அதிகாரத்திலும், நிர்வாகத்திலும் எவருக்கும் பங்கு இல்லை.
  2. அல்லாஹ்வே அனைத்தையும் சிருஷ்டித்தவன், அவனைத் தவிர உள்ள அனைத்தும் அவனால் சிருஷ்டிக்கப் பட்டவையே, சிருஷ்டிப்பில் அவனுக்கு பங்காளியாக எவரும் இல்லை,
  3. அல்லாஹ் இல்லாமையில் இருந்து உருவாக்கும் ஆற்றல் மிக்கவன், அவனது படைப்பினங்களுக்கு உபகாரம் செய்பவன், வாழ்வாதாரம் வழங்குபவன், அவர்களது அனைத்து செயற்பாடுகளையும் அறிபவன், அவர்களின் செயலுக்கேற்ப கூலி வழங்குபவன் என நம்புவது,
  4. வணங்கி வழிப் பட தகுதி வாய்ந்த இறைவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் இல்லை என நம்புதல், அவனைத்தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது,
  5. மலக்கு (வானவர்) களும், நபிமார்களும் அல்லாஹ்வுக்கு பணிபுரியவும், வழிப் படவுமே படைக்கப் பட்டுள்ளனர்,
  6. அவன் மனித சமூகத்துக்கான வாழ்வு நெறியை அவனது தூதர்களினூடாகவும், வேதங்களின் மூலமும் அறிவித்துக் கொடுத்தான்,
  7. அல்லாஹ் என்றும் இருப்பவன், அவனுக்கு பெற்றோர் கிடையாது, குழந்தைகள் கிடையாது, அந்தம், ஆதி இல்லாதவன், யாரிடமும் எந்த தேவையும் அற்றவன், முதலுக்கு முதலானவன், முடிவுக்கு முடிவானவன்,
  8. அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன், அவனுக்கு இணைக் கற்பித்தலைத் தவிர அனைத்து குற்றங்களையும் மன்னிப்பவன்,
  9. அவனுக்கு அழகிய திருநாமங்களும், பூரண வருணனைகளும் உள்ளன, அதில் அவனுக்கு நிகராக யாருமில்லை,
  10. அவன் எம்மை எந்தவொன்றுமின்றி அனைத்து வளங்களோடும் அழகிய உருவில் சிருஷ்டித்து அநேக அருள்களைப் பாலித்திருக்கிறான்,
  11. எவரேனும் தொழுகைகள், பிற வணக்கங்கள், வணக்க சாஷ்டாங்கங்கள் போன்றவற்றை அல்லாஹ்வுக்கன்றி வேறு எவருக்கேனும் (ஒரு மலக்காகவோ, தெரிவு செய்யப் பட்ட நபியாகவோ இருந்தாலும் சரியே) நிறைவேற்றுவார்களாயின், தான் ஒரு முஸ்லிமென உரிமைக் கோரிக்கொண்ட போதும் அவன் ஒரு முஸ்லிமே அல்ல.
  12. “மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்” என  (நபியே!) நீர் கூறுவீராக”  (அல் குர்ஆன் 6:162)
  13. (நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (அல் குர்ஆன் 112:1-4)

ஒரு முஸ்லிமின் பண்புகள்

  1. ஒருமுஸ்லிம் எப்போதும் பொய் பேசாது உண்மையே பேச வேண்டும்.
  2. ஒரு முஸ்லிம் வாக்களித்தால் மாறு செய்யக்கூடாது. அவன் நம்பிக்கை நாணயத்துடன் நடக்க வேண்டும்.
  3. ஒரு முஸ்லிம் மற்றவர்களைப் பற்றி புறம் பேசவோ, மற்றவர்களின் குறைகளைத் துருவித் துருவி ஆராயவோ, மானப்பங்கப் படுத்தவோ கூடாது.
  4. ஒரு முஸ்லிம் தைரியமுள்ளவனாக இருக்க வேண்டும், கோழையாக இருக்கக் கூடாது.
  5. ஒரு முஸ்லிம் உண்மையை ஆதரிக்கும் விடயத்தில் நிலையானவனாகவும், உண்மையை எடுத்துக் கூறுவதில் தைரியமுள்ளவனாகவும் இருப்பான்.
  6. அடுத்தவர் தன்னை எதிர்த்த போதும் ஒரு முஸ்லிம் நீதமாக நடந்துக் கொள்ள வேண்டும். அடுத்தவரின் உரிமையை சட்ட விரோதமாக மீறவும் கூடாது. அடுத்தவர் மூலம் அநீதம் செய்யப் படுவதை அனுமதிக்கவும் கூடாது. அவன் வலிமை உள்ளவனாகவும் தன்மானத்தை எவரிடமும் இழக்காதவனாகவும் இருக்க வேண்டும்.
  7. ஒரு முஸ்லிம் தன செயற்பாடுகளை இயன்றவரை நேர்த்தியாக செய்ய வேண்டும்.
  8. ஒரு முஸ்லிம் கர்வமற்றவனாகவும், கருணையுள்ளவனாகவும் இருக்க வேண்டும்.
  9. அவன் நன்மை புரிவதோடு அடுத்தவரையும் நன்மை புரியத்தூண்ட வேண்டும். அவன் தீமை புரிவதை தவிர்த்துக் கொள்வதோடு அடுத்தவரையும் அதிலிருந்து தடுக்க வேண்டும்.

ஒரு முஸ்லிம் அல்லாஹ்வின் மார்க்கம் நிலைத்திருக்கவும், உலகம் முழுவதும் பரவுவதற்கு முயற்சிக்கவும் போராடவும் வேண்டும். இஸ்லாத்தின் வரையறையை மீறாதவனாக அனைத்து காரியங்களையும் மேற்கொள்வான், இஸ்லாத்தின் வெற்றிக்கென சட்ட விரோத செயல்கள் எதனையும் மேற்கொள்ளக் கூடாது

About these ads

Written by lankamuslim

July 2, 2012 at 11:00 pm

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,826 other followers

%d bloggers like this: