Lankamuslim.org

One World One Ummah

இஸ்லாமிய இயக்கங்களின் அரசியல் பிரவேசமும் இருபத்தோறாம் நூற்றாண்டில் இஸ்லாமும்

leave a comment »

அப்துல் ஹலீம்
இஸ்லாமிக் வியூ : அரசியல் ஒரு சாக்கடை என்பது யார் சொன்ன கருத்தாக இருந்தாலும் சரி சாக்கடைக்குள் இஸ்லாமிய வாதிகள் இறங்கக் கூடாது என்ற கோஷத்தை யார் தூக்கிப் பிடித்தாலும் சரி சாக்கடையாக இருக்கின்ற அரசியலை அதற்குள் இறங்கித் துப்புரவு செய்ய வேண்டிய கடமை நிச்சயம் இஸ்லாத்தை முன்னிறுத்திப் போராடுகின்றவர்களுக்கு இருக்கின்றது. அந்தக் கடமையை யாரும் மறுக்கவும் முடியாது தட்டிக் கழிக்கவும் முடியாது.

இன்று உலகெங்கும் அரசியல் என்பது சாக்கடையாகத்தான் மாறிப் போயிருக்கின்றது. காரணம் அரசியலுக்கு வர வேண்டியவர்கள் வராமல் ஒதுங்கிக் கொண்டதும் வர முடியாமல் தடுக்கப்பட்டதுமாகும். ஏனெனில் சாக்கடையை சாக்கடையாகவே வைத்துக் கொண்டிருப்பதால் பலருக்கு இலாபம் இருக்கின்றது. அந்த இலாபங்களையெல்லாம் இலகுவில் விட்டுக் கொடுக்க நிச்சயம் அதனை அனுபவிப்பவர்கள் விரும்ப மாட்டார்கள்.

இந்த அரசியல் சாக்கடையை சாக்கடையாகவே விட்டு வைத்து அதனால் இந்த முழு சமூகமுமே நாற்றமெடுக்கின்ற நிலை ஏற்பட்டால் அதற்கு பொறுப்பு சொல்ல வேண்டியவர்கள் தகுதியிருந்தும் வராமல் ஒதுங்கிக் கொண்டவர்கள் தான். (இங்கு தகுதியுள்ளவர்கள் என்பது இஸ்லாத்தின் பார்வையில் தகுதியுள்ளவர்களையே குறிக்கும்)

இந்த உண்மையைப் புரிந்து கொண்டு யாராவது சாக்கடையைத் துப்புரவு செய்யும் நோக்கோடு அரசியலுக்கு வந்தால் அவர்கள் இரண்டு பக்க நெருக்குதல்களுக்கு உள்ளாகின்றனர்.

ஒன்று அவர்களை வர விடக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்ற உலோகாயுத வாதிகள்.

அடுத்தது இஸ்லாத்துக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை என்று கருதிக்கொண்டிருக்கின்ற முஸ்லிம்கள்.

இந்த இரண்டு தரப்பினரின் எதிர்ப்புக்களை எதிர்கொண்டு எதிர்நீச்சல் போட்டு அத்தகையவர்கள் கரை சேர முன்னர் சட்டியிலிருந்த அரசியல் அடுப்பில் விழுந்திருக்கும். இத்தகைய உதாரணங்களை உலகம் பல கட்டங்களில் பல்வேறு வடிவங்களில் கண்டிருக்கின்றது.

‘அது சரி இதெல்லாம் எதற்கு இப்போது சமயா சம்பந்தமில்லாமல்’ என்ற எண்ணம் தோன்றுகின்றதா? இல்லை சமயா சம்பந்தங்கள் நிறையவே இருக்கின்றன. அவற்றையெல்லாம் ஒவ்வொன்றாக நோக்குவோம் இன்ஷா அல்லாஹ்.

இன்றைய உலகில் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழ்கின்ற பல நாடுகள் காணப்படுகின்றன. அதே போன்று முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பல நாடுகளும் காணப்படுகின்றன. இப்படி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற எல்லா நாடுகளையும் எடுத்துப் பாருங்கள். அங்கெல்லாம் நடக்கின்ற ஆட்சி எப்படியானதென்று… இஸ்லாமிய ஷரீஆ சட்டம் எமது நாட்டின் சட்ட யாப்பாக இருக்க வேண்டும் என்று கருதுகின்ற மக்களை மதச்சார்பின்மை என்ற மதத்தைப் பின்பற்றுபவர்கள் தான் ஆள்கிறார்கள்.

அல்லாஹ்வுடைய சட்டம் எங்கெல்லாம் அமுலில் இல்லையோ அங்கு அரசியல் நிச்சயம் சாக்கடை தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

மனிதனை இவ்வுலகில் தனது பிரதிநிதியாகப் படைத்த அல்லாஹுத் தஆலா அந்த மனித சமூகத்தின் மிகச் சிறந்த பகுதியாக முஸ்லிம் சமூகத்தையும் தன்னிடத்தில் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கமாக இஸ்லாத்தையும் ஆக்கியிருக்கின்றான். இந்தத் தெரிவுகளும் தகுதிகளும் எதற்காக??? நாம் தான் சிறந்தவர்கள் என்று மார்தட்டிக் கொள்வதற்கா? அல்லது படைத்தவன் எதிர்பார்க்கின்ற பணியை செய்வதற்கா? நிச்சயமாக அல்லாஹுத் தஆலா இவ்வுலகில் என்ன மாற்றம் வர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றானோ அந்த மாற்றத்தை ஏற்படுத்துகின்ற பணியில் ஈடுபடுவதற்காகத் தான் அந்த கண்ணியம் கிடைக்கப் பெற்றிருக்கின்றது.

எனவே அல்லாஹுத் தஆலா எதிர்பார்க்கின்ற அந்த மாற்றத்தை வெறும் நான்கு சுவர்களுக்குள் ஏற்படுத்தி விடுவதால் எமது பணியைக் கச்சிதமாக நிறைவேற்றி விட்டோம் என்று எம்மால் திருப்திப்பட முடியாது. அது அல்லாஹ் எம்மிடம் எதிர்பார்க்கும் பணியுமல்ல. மாற்றமாக முழு மனித சமூகமும் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் நிலையிலிருந்து அவனுக்கு இபாதத் செய்கின்ற நிலைக்கு மாறுவது தான் அந்தப் பணியின் இலக்காக இருக்க வேண்டும்.

இத்தகையதோர் இலக்கை தமது பணிக்காக எடுத்துக் கொண்டவர்களுக்கு அரசியலைப் பற்றி சிந்திக்காமல் இருக்க முடியாது. ஏனெனில் இன்று அரசியல் எனும் ஆயுதத்தை யாரெல்லாம் கையில் வைத்திருக்கின்றார்களோ அவர்கள் தான் எல்லா நாடுகளிலும் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றார்கள் என்பதை நாம் தெளிவாகவே பார்க்கின்றோம். அப்படியிருக்க இஸ்லாத்தை தீர்மானிக்கும் சக்தியாக மாற்ற நாம் கனவு கண்டால் அரசியலுக்கு இஸ்லாமிய வாதிகள் முழுக்குப் போட வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை. மாற்றமாக சாக்கடையாக நாறிக்கொண்டிருக்கும் அரசியலுக்குள் மூக்கைப் பொத்திக் கொண்டாவது அவர்கள் நுழைவதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் யார்? எப்போது? எப்படி? ஏன்? என்பன போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடை காணப்பட்ட பின்னரே முடிவு எடுக்கப்பட வேண்டும்.

இந்தப் பின்ணணியில் நோக்குகின்ற போது இஸ்லாமிய இயக்கங்கள் அரசியலில் ஈடுபாடு காட்டுவது காலத்தின் தேவை என்பதை எம்மால் உணரலாம். இதை நாம் உணர்ந்தோமோ இல்லையோ முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் அடக்கி ஒடுக்கப்பட்டு வந்த இஸ்லாமிய இயக்கங்கள் மிக நன்றாகவே உணர்ந்திருக்கின்றன.

இந்தப் பின்ணணியில் தான் கடந்த வருடம் இடம்பெற்ற அறபுலகப் எழுச்சிகளைத் தொடர்ந்து இஸ்லாமிய இயக்கங்களின் அரசியல் பிரவேசம் அமைந்தது. எழுச்சி நடந்தது. குட்டை குழம்பியது. இப்போது வாருங்கள் அதில் மீன் பிடிக்கலாம் என்ற ரீதியில் அமைந்ததல்ல அந்த அரசியல் பிரவேசங்கள். மிக நீண்ட காலத் திட்டமிடல்களினதும் மக்களின் எதிர்பார்ப்பினதும் விளைவுகள் தான் அவை.

ஆனால் தசாப்தங்களாகத் தொடர்ந்த முஸ்லிம் பெயர்தாங்கிகளது சர்வாதிகார கொடுங்கோல் ஆட்சியைப் பற்றி அலட்டிக் கொள்ளாதவர்களெல்;லாம் இப்போது சந்திக்கு சந்தி நின்று இஸ்லாமிய இயக்கங்களின் அரசியல் பிரவேசம் பற்றி விமர்சிப்பவர்களாக மாறியிருப்பது தான் வேடிக்கையான அம்சமாகும்.

அதாவது மக்களது சுதந்திரம் பறிக்கப்பட்டாலும் பரவாயில்லை. அவர்கள் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டாலும் பரவாயில்லை. இஸ்லாமிய இயக்கங்கள் மட்டும் அரசியல் பற்றி பேசக் கூடாது என்ற எண்ணம் இன்று உலகில் வாழ்கின்ற முஸ்லிம்கள் பலரிடத்தில் காணப்படுகின்றது. பிர்அவ்ன்கள் ஆட்சி செய்யட்டும் ஆனால் மூஸாக்கள் தேவையில்லை என்று முஸ்லிம்களே நினைக்கின்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது.

வாழ்க்கையின் அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்ட வந்த மார்க்கம் இஸ்லாம் என்று எல்லோரும் பேசுகின்றோம். அப்படியென்றால் அரசியல் மனித வாழ்க்கையில் சம்பந்தப்படுகின்ற முக்கியமான ஒரு விடயமில்லையா? இஸ்லாம் சொல்லித் தருகின்ற அரசியலொன்றிருக்கின்றது. அந்த அரசியலை இஸ்லாத்தின் கொள்கையையும் தூதையும் விளங்கி பணி புரிகின்றவர்களால் தான் மிகச் சரியாக செய்ய முடியும்.

அத்தகையவர்கள் அரசியலில் சம்பந்தப்படாமல் இருப்பதால் தான் திரும்புகின்ற பக்கமெல்லாம் அரசியல் சாக்கடையாகவே இருக்கின்றது.

மக்காவில் நபியவர்கள் குறைஷிகளின் அரசியலை ஏற்றுக்கொள்ளவில்லை. மாற்றமாக தனித்துவமிக்க இஸ்லாமிய அரசியலுக்கு மதீனாவில் முன்னுதாரணம் காட்டினார்கள். இன்று அல்லாஹ்வின் தூதர் செய்த அதே பணியை யாராவது செய்தால் ‘ஆட்சியைப் பிடிக்கப் போகிறார்கள்’ என்ற கோஷம் முஸ்லிம்கள் தரப்பிரலிருந்தே எழுப்பப்படுகின்றது.

இத்தகைய விமர்சனங்கள், எதிர்ப்புக்கள், சவால்கள் என அனைத்தையும் முறியடித்து இஸ்லாமிய எழுச்சிப் போராட்டம் அரபு வசந்தத்தினூடாக மேலெழுந்து வந்ததை நாம் நன்கறிவோம். ஆனால் அந்த எழுச்சியின் முழுமையான விளைவுகளை இன்னும் உலகம் பார்க்கவில்லை. இன்றைய உலகில் அரபு வசந்தம் மூன்று வகையான கண்களால் அவதானிக்கப்படுகின்றது.

ஒன்று இஸ்லாத்தையும் அதன் அடையாளங்களையும் உலகிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் செயற்பட்டு வருகின்ற சக்திகள்

இரண்டு இஸ்லாம் எழுச்சி பெற வேண்டும் அதன் வசந்தத்தில் உலக மக்கள் நிம்மதி பெற வேண்டும் என்ற வேட்கையோடு வாழ்கின்ற முஸ்லிம்கள்

மூன்று இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? என்ற உணர்வோடு எதையும் அலட்டிக் கொள்ளாமல் வெறும் தகவல்களுக்காக இதை அவதானித்து வந்த பிரிவினர்

இவற்றில் மூன்றாவது பகுதியினருக்கு இந்த எழுச்சிப் போராட்டங்களும் அதன் பின்னரான நிகழ்வுகளும் வெறும் செய்திகள் மாத்திரம் தான்.

ஆனால் இஸ்லாம் இந்த உலகின் தீர்மானிக்கும் சக்தியாக வரவேண்டும் என்ற எண்ணத்தோடு வேலை செய்பவர்களுக்கு இந்த நிகழ்வுகள் உலக வரலாற்றின் போக்கை மாற்றி எழுதுகின்ற திருப்புமுனைகளாகத்தான் தென்பட்டன. அதே போன்று இஸ்லாத்தின் எழுச்சியை விரும்பாத சக்திகளுக்கும் இது ஒரு திருப்புமுனையாக அமையப் போகின்றது என்ற உண்மை விளங்கியது. அதன் விளைவு தான் சில நாடுகளில் ஏற்பட்ட புரட்சி அலைகள் தீச்சுவாலைகளாக மாறி அந்த நாடுகளின் மனித உயிர்களையும் பௌதீக வளங்களையும் சம்காரம் செய்து கொண்டிருக்கின்றன.

புரட்சி நடைபெற்ற இடங்களையெல்லாம் ஒன்று திரட்டிப் பார்த்தால் எகிப்து ஏனைய நாடுகளை விட வித்தியாசமான நகர்வுகளை முன்னெடுத்து வந்ததையும் அதிலும் குறிப்பாக எகிப்தின் பலம் பொருந்திய இஸ்லாமிய இயக்கமான அல்இஃக்வானுல் முஸ்லிமூன் எகிப்துக்குள் எழுச்சியில் சம்பந்தப்பட்ட ஏனைய இஸ்லாமிய இயக்கங்கள் குழுக்களை விடவும் சற்று வித்தியாசமான காய்நகர்த்தல்களை மேற்கொண்டதையும் அவதானிக்க முடியுமாக இருந்தது.

சிரியா ஒரு வருடம் கடந்தும் இன்னும் எழுச்சியின் வெற்றி பற்றி சிந்திக்கவும் முடியாத நிலையில் இருக்கின்றது, யெமன் பல மாதங்கள் போராடியதன் பின்னர் ஓரளவு வெற்றியைப் பெற்றுக் கொண்டது. ஆனால் எகிப்தின் எழுச்சி வெறும் பதினெட்டு நாட்களில் முப்பது வருட இராணுவப் பின்புலத்துடனான சர்வாதிகாரத்தை மண்கவ்வ வைத்தது.

1928ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அல்இஃக்வானுல் முஸ்லிமூன் அமைப்பு கடந்த 84 வருடங்களாக அனுபவித்த அடக்குமுறைகளும் அநியாயங்களும் அவற்றின் விளைவாக அந்த இயக்கம் பெற்றுக் கொண்ட அனுபவங்களும் எகிப்து எழுச்சியின் விளைவுகளைத் தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகித்தன என்பதை மறுக்க முடியாது. ஏனெனில் முபாரக்கின் காலத்தில் மட்டுமல்ல முபாரக்குக்கு முந்திய சர்வாதிகாரிகளின் காலங்களிலும் திட்டமிட்டு அடக்கப்பட்ட இஃக்வான்களின் உணர்வுகள் இந்த அடக்குமுறைகள் எனும் கட்டுக்களையெல்லாம் உடைத்துக் கொண்டு வருவதற்கான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தன.

அதற்கான சந்தர்ப்பத்தை எகிப்தின் மக்கள் எழுச்சி ஏற்படுத்திக் கொடுத்தது. அது மட்டுமல்ல எகிப்தில் எழுச்சி ஆரம்பித்த போதே இனி யானையின் காலம் முடிந்து பூனைக்கான காலம் வரப்போகின்றது என்பதை இஸ்ரேலும் அமெரிக்கா தலைமையிலான அதன் நலன்விரும்பிகளும் புரிந்து கொண்டன.

எகிப்தின் இராணுவத்துக்காக மட்டும் அமெரிக்கா வருடாந்தம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டு வந்திருக்கின்றது. இது ஏன் தெரியுமா? இஃக்வான்கள் எழுச்சியடையாமல் முபாரக்கின் தலைமையில் அவர்களை அடக்கியொடுக்கும் விடயத்தில் அமெரிக்காவின் தலையாட்டு பொம்மையாக செயற்பட்டு வந்ததற்கான பரிசுதான் அது.

எனவே எகிப்தின் மக்கள் எழுச்சியானது உலகளாவிய அளவில் மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகக் காணப்பட்டது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அந்தளவு தூரம் உலகின் கவனத்தைத் தன் பக்கம் எகிப்து திருப்பிய போதிலும் எழுச்சிக்குப் பின்னர் எகிப்தின் ஆட்சியை முபாரக்கின் இராணுவம் தன் கைவசம் எடுத்துக் கொண்டதானது எகிப்துக்கு உள்ளேயும் வெளியேயும் பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவித்திருந்தன. அந்த சந்தேகங்கள் இன்னும் பல உள்நாட்டு ஆர்ப்பாட்டங்களுக்கும் பதற்ற நிலைக்கும் காரணமாய் அமைந்திருந்தன.

கடந்த வருட நடுப்பகுதியேலேயே பொதுத் தேர்தலையும் அதனைத் தொடர்ந்து ஜனாதிபதித் தேர்தலையும் வைத்து மக்களால் தெரிவு செய்யப்படும் அரசாங்கத்தின் கையில் அதிகாரத்தைக் கொடுத்து விடுவதாக இராணுவக் கவுன்சில் வாக்களித்திருந்த போதிலும் கூட அது தனது வாக்குறுதியைக் காற்றில் பறக்க விட்டு விடுமோ என்ற அச்சப்பாடு தோன்றுகின்ற அளவுக்கு தேர்தலைப் பிற்போட்டு வந்தது. இறுதியாக வருட மத்தியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த பொதுத் தேர்தல் கடந்த வருட இறுதியிலும் இவ்வருட ஆரம்பத்திலும் இடம்பெற்றது. உண்மையில் எகிப்து வரலாற்றில் இடம்பெற்ற மிக அமைதியானதும் நீதியானதுமான தேர்தலாக வரலாற்றில் இத்தேர்தல் பதியப்பட்டது.

உண்மையில் முபாரக்கின் காலத்தில் தடைசெய்யப்பட்ட அமைப்பாக இருந்த இஃக்வான்கள் கட்சியாக தேர்தல்களில் போட்டியிட முடியாத நிலை இருந்த போதிலும் கூட சுயேட்சையாகப் போட்டியிட்டு சகல தேர்தல் மோசடிகளையும் தாண்டி பிரதான எதிர்த் தரப்பாக பாராளுமன்றம் சென்றிருந்த சந்தர்ப்பங்கள் சிலவற்றையும் நாம் கடந்த கால கறுப்பு எகிப்தின் அரசியல் பக்கங்களில் பார்க்கின்றோம்.

ஆனால் இப்போது அத்தகைய தடைகளைத் தாண்டி ‘சுதந்திரத்துக்கும் நீதிக்குமான கட்சி’ என்ற பெயரில் பொதுத் தேர்தலில் களமிறங்கிய இஃக்வான்கள் 47% மான ஆசனங்களைக் கைப்பற்றியதும் மொத்த ஆசனங்களில் 70% மானவற்றை இஸ்லாமிய வாதிகள் கைப்பற்றியதும் எகிப்து மக்கள் எந்தளவு தூரம் இஸ்லாமிய ஆட்சியை எதிர்பார்த்திருந்திருக்கின்றார்கள் என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டியது.

நாட்டின் சட்ட சபையான பாராளுமன்றம் இதுவரை காலமும் முபாரக்கின் சட்ட சபையாகவே இருந்து வந்திருக்கின்றது. ஆனால் கடந்த பல தசாப்தங்களின் பின்னர் அது மீண்டும் நாட்டின் பாராளுமன்றமாக மக்களால் மட்டுமே தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றமாக மாறியதானது உண்மையில் எழுச்சிக்குக் கிடைத்த பாரிய வெற்றிகளில் ஒன்றாகும்.

ஆனாலும் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதிப் பதவிக்கான தேர்தலை இராணுவக் கவுன்சில் தொடர்ந்தும் பிற்போட்டே வந்தது. இறுதியாக கடந்த மே மாதம் இறுதிப் பகுதியில் எதிர்பார்க்கப்பட்ட அந்தத் தேர்தலும் ஆரம்பமானது.

ஆரம்பத்திலேயே இஃக்வான்கள் தாம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்திருந்தாலும் கூட பின்னர் தனது முடிவை மாற்றிக் கொண்டு தனது தலைவர்களுள் ஒருவரை வேட்பாளராக நிறுத்தியது. கிட்டத்தட்ட பன்னிரண்டு வேட்பாளர்களுடைய வேட்பு மனுக்கள் அங்கீகரிக்கப் பட இஃக்வான்களதும் அந்நூர் கட்சியினரினதும் வேட்பாளர்களுடைய வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. உண்மையில் இந்நிராரிப்பானது திட்டமிட்ட ஒன்றாகவே அமைந்திருந்தது என்றே நம்பப்படுகின்றது. ஏனெனில் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதிப் பதவி இஸ்லாமிய வாதிகளின் கரங்களைச் சென்றடைந்தால் தாம் இவ்வளவு காலம் கட்டிக்காத்து வந்த மதச்சார்பின்மை முகவரி தெரியாமல் போய் விடும் என்பதை அதிகாரத்தைக் கையில் வைத்திருந்த இராணுவ வர்க்கம் நன்கு புரிந்து வைத்திருந்தது.

ஆனால் சுமார் 80 வருட அடக்குமுறைகளையும் கடந்த கால அரசியல் அனுபவங்கள் பலவற்றையும் தமது வரலாற்றில் தொடர்ந்தும் கண்டு வந்திருந்த இஃக்வான்களுக்கும் புரட்சியின் பின்னர் தான் அரசியலைப் பற்றி சிந்தித்த ஏனைய இஸ்லாமிய அமைப்புக்களுக்குமிடையிலான வித்தியாசத்தை உலகம் புரிந்து கொண்ட இடமாக அந்த வேட்பு மனுக்களது நிராகரிப்பு அமைந்திருந்தது.

ஒரு வேட்பாளரை நியமிக்க ஐந்து இலட்சம் கையெழுத்துக்கள் தேவை என்ற நிலை இருந்த போதும் கூட தமது வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட உடனேயே இஃக்வான்கள் தமது அடுத்த வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர். இந்த இரண்டாவது வேட்பு மனுவினூடாக தேர்தல் களத்தில் குதித்தவர் தான் கலாநிதி முஹம்மத் முர்ஸி ஆவார். தமது வேட்பு மனு நிராகரிக்கப்படலாம் என்று ஏற்கனவே எதிர்பார்த்து ஆரம்பத்திலேயே இரண்டு மனுக்களைத் தாக்கல் செய்வதற்காக இஃக்வான்கள் தயாராக இருந்திருக்கின்றார்கள் என்பதையே இது காட்டுகின்றது. ஆனால் ஏனைய இஸ்லாமியக் கட்சிகளிடம் இந்த சாணக்கியத்தைக் காண முடியவில்லை, அவர்களது வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட போது எஞ்சியிருந்த நேரத்தில் இன்னுமொன்றைத் தாக்கல் செய்வதற்கான போதிய அவகாசம் அவர்களுக்கு இருக்கவில்லை.

இத்தகைய பின்னணியில் கடந்த மே மாதம் இறுதிப் பகுதியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் எவரும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறாததன் காரணமாக முதலிரண்டு இடங்களையும் பெற்றுக்கொண்ட வேட்பாளர்களுக்கிடையிலான இறுதிக்கட்டத் தேர்தல் ஜூன் மாத நடுப்பகுதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஜனாதிபதித் தேர்தலின் அந்த முதலாம் கட்ட வாக்கெடுப்புக்கும் இரண்டாம் கட்ட வாக்கெடுப்புக்கும் இடையிலான மூன்று வார காலப்பகுதிக்குள் எகிப்தில் மூன்று முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றன. அவற்றில் முதலாவது முபாரக்கின் ஆட்சியின் போது முக்கியமான பதவி வகித்தவர்கள் யாரும் குறைந்தது அடுத்த பத்து வருடங்களுக்கு அரசியலுக்கு வர முடியாது என்ற சட்டமூலம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

அடுத்ததாக ஜூன் இரண்டாம் திகதி எகிப்தின் முன்னால் சர்வாதிகாரியான முபாரக்குக்கு புரட்சியின் போது இடம்பெற்ற மக்கள் படுகொலையைத் தடுத்து நிறுத்தவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இறுதியாக அதிகாரத்தைக் கையில் வைத்திருந்த இராணுவக் கவுன்சிலால் ஜனாதிபதித் தேர்தலின் இறுதிச் சுற்றுக்கு இரண்டு தினங்கள் மீதமிருக்கின்ற போது பாராளுமன்றம் யாப்புக்கு முரணாகத் தெரிவு செய்யப்பட்டது என்ற குற்றச்சாட்டின் பேரில் கலைக்கப்பட்டது மட்டுமல்ல நாட்டின் அமுலிலிருந்த சட்ட யாப்பும் இரத்துச் செய்யப்பட்டது. அத்தோடு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்த ‘முபாரக்கின் கையாட்கள் யாரும் அரசியலுக்கு வர முடியாது’ என்ற சட்டமூலமும் செல்லுபடியற்றது என்று இராணுவத்தரப்பு சார்பாக உயர் நீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருந்தது.

உடனே எகிப்து மீண்டும் கொந்தளிப்பு மிக்க அரசியலுக்குள் நுழைந்தது. பாராளுமன்றமோ சட்டயாப்போ இல்லாத நிலையில் நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவதற்கான இறுதிச்சுற்றுத் தேர்தல்; கடந்த 16> 17ம் திகதிகளில் இடம்பெற்றது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட ஆரம்பித்த உடனேயே தாமே முன்னனியில் இருக்கின்றோம் என்ற செய்தி இரண்டு தரப்பினாலும் வெளியிடப்பட்டு வந்தது. இறுதியாக 52% மான வாக்குகளைப் பெற்று தமது வேட்பாளர் முஹம்மத் முர்ஸி வெற்றி பெற்றதாக இஃக்வான்களின் பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது மட்டமல்ல அம்மாநாட்டில் கலாநிதி முர்ஸி நாட்டு மக்களுக்கு தனது செய்தியையும் எத்திவைத்தார்.

அவரது அந்த உரை அல்ஜஸீரா தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அதில் அவர் இந்த வெற்றிக்காக அல்லாஹ்வைப் புகழ்ந்ததுடன் தனக்கு வாக்களித்தவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்ததுடன் எகிப்தின் ஒவ்வொரு குடிமகனும் தனது குடும்பத்தைச் சேர்ந்தவன் என்றும் தெரிவித்தார்.

ஆனால் மறுபக்கத்தில் போட்டியிட்ட முபாரக்கின் ஆட்சிக்கால இறுதிப் பிரதமரும் முபாரக்கின் வலதுகையாக செயற்பட்டு எழுச்சியை அடக்குவதில் முன்னின்றவர்களுள் ஒருவருமான அஹ்மத் ஷபீக் தானே இத்தேர்தலில் வெற்றி பெற்றிருப்பதாகவும் இஃக்வான்கள் பிழையான தகவல்களை வழங்குகின்றனர் என்றும் கூறி தனது வெற்றிக்கு உரிமை கோரினார்.

இதற்கிடையில் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி முழுமையான நிறைவேற்றதிகாரம் கொண்டவராக இருக்க மாட்டார் என்றும் முப்படைகளின் தலைவராக செயற்படும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட மாட்டாது எனவும் நாட்டில் யுத்தமொன்றை அறிவிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது என்றும் ஆளும் இராணுவக் கவுன்சில் அறிக்கை வெளியிட்டிருந்தது.

அத்தோடு ஆயுள் தண்டனை பெற்று சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் இருந்த முபாரக்கின் உடல் நிலை சரியில்லை என்று அவரை மருத்துவமனைக்கு இராணுவக் கவுன்சில் மாற்றியிருந்தது. இந்த இழுபறிகளுக்கியையிலும் சிக்கல்களுக்கிடையிலும் நடைபெற்று முடிந்த தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவை அறிவிப்பதை குறிப்பிட்டிருந்த நாளை விட மூன்று நாட்களுக்கு எகிப்தின் தேர்தல் ஆணையகம் தள்ளிப் போட்டிருந்தது.

நடைபெறுகின்ற அனைத்தையும் அவதானித்தையும் அவதானித்து வந்தவர்களது கருத்துப் படி ஷபீக்கை ஜனாதிபதியாக்குவதற்கான முயற்சிகளில் தேர்தல் ஆணையகம் இறங்கியிருக்கின்றது என்றே பெரும்பாலானவர்கள் நினைத்திருந்தனர்.

ஆனாலும் எகிப்தின் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஃபாரூக் ஸுல்தான் அவர்களது 45 நிமிடத்துக்கு மேல் நீடித்த தேர்தல் முடிவு தொடர்பான அறிக்கையில் அவர் தாக்கல் செய்யப்பட்டிருந்த 400க்கும் மேற்பட்ட முறைப்பாடுகளில் மிக முக்கியமானதாகக் கருதப்பட்ட ஷபீக்கின் இரண்டு முறைப்பாடுகள் ஆதாரமற்றது என்று நிரூபணமாகியதாகக் குறிப்பிட்டார்.

ஷபீக் ஏற்கனவே ஒரு மில்லியனுக்கும் அதிகமான வாக்குச் சீட்டுக்கள் ஏற்கனவே முர்ஸியின் பெயருக்கு புள்ளடியிட்ட நிலையில் இருந்தது என்றும் எகிப்தின் வட பகுதியில் கிறிஸ்தவர்கள் வாக்களிப்பதற்கு இஃக்வான்கள் தடை விதித்திருந்தனர் என்றும் முறைப்பாடு செய்திருந்தது குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் மொத்தமாக இரு வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் பக்கமிருந்து மொத்தமாக வெறும் 2154 வாக்குகள் மட்டுமே ஏற்கனவே புள்ளடியிடப்பட்ட நிலையில் கொண்டுவரப்பட்டிருந்ததாக அவரால் அறிவிக்கப்பட்டது.

அத்தோடு ஏற்கனவே இஃக்வான்கள் தாம் வெற்றி பெற்றிருந்ததாக அறிவித்த போது தாம் பெற்றுக் கொண்டதாக கூறிய வாக்குகளை விட 8167 வாக்குகளை முர்ஸியும் 3804 வாக்குகளை ஷபீக்கும் இறுதிக் கணிப்பீட்டின் பிரகாரம் குறைத்திருப்பதாக தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டார்.

இறுதியில் இஃக்வான்களின் வேட்பாளர் 13 230 131 வாக்குகளையும் ஷபீக் 12 347 380 வாக்குகளையும் பெற்றுக் கொண்டதாகவும் குறிப்பிட்ட ஆணையாளர் 51.57% வாக்குகளைப் பெற்று முர்ஸி எகிப்தின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவானதையும் குறிப்பிட்ட உடனேயே தஹ்ரீர் சதுக்கத்தில் ஒன்று திரண்டிருந்த மக்கள் வெள்ளம் மகிழ்ச்சிக் கடலில் தத்தளிக்க ஆரம்பித்தது.

இந்த உத்தியோகபூர்வ முடிவு வெளியாகிய உடனே கருத்துத் தெரிவித்த முர்ஸியின் உத்தியோகபூர்வ பேச்சாளர் ஜிஹாத் அல் ஹத்தாத் அவர்கள் ‘எகிப்தின் அரசியலில் மார்க்கத்தைத் திணிக்கின்ற நடவடிக்கைகள் இடம்பெற மாட்டா. அத்தோடு விடயம் இந்த முடிவோடு முடிவடையவில்லை இனித்தான் சவால்களும் பொறுப்புக்களும் முன்னால் இருக்கின்றன’ என்று தெரிவித்தார்.

சில மணித்தியாலங்கள் கழித்து நாட்டின் தேசிய தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கான தனது முதலாவது உரையை எகிப்தின் முதலாவது மக்கள் தேர்வு ஜனாதிபதியான கலாநிதி முஹம்மத் முர்ஸி நிகழ்த்தினார்.

‘‘இன்று எகிப்து வாழ் மக்களுக்கு ஒரு பெருநாள் தினமாகும் புரட்சி வெற்றி பெற்றிருப்பதை நீங்கள் நிரூபித்திருக்கின்றீர்கள். உங்கள் ஒவ்வொருவருக்கும் இந்த நன்னாளில் ஒரு செய்தியைச் சொல்லிக் கொள்கின்றேன். உங்கள் விருப்பத்தினாலும் தெரிவினாலும் என்னைத் தெரிவு செய்திருக்கின்றீர்கள். இன்று முதல் நான் ஒவ்வொரு எகிப்;தியனுக்கும் ஜனாதிபதியாவேன். எனக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல. இது புரட்சியில் வீரமரணம் எய்திய தியாகிகளின் —வெற்றியாகும். எனது அன்புக்குரிய எகிப்து வாழ் மக்களே! முஸ்லிம்-கிறிஸ்தவன் என்ற வேறுபாடு தாண்டி நாமெல்லாம் எகிப்தின் குடிமக்கள். நாம் ஒன்றிணைந்து எமக்கெதிரான சதிகளுக்கு முகம் கொடுப்போம். இந்த நன்னாளில் தேசிய ஒற்றுமைக்காக நான் அழைப்பு விடுக்கின்றேன். ஏனெனில் எமது பிரச்சினைகளுக்கான தீர்வை அந்த இடத்திலிருந்துதான் ஆரம்பிக்கலாம்’’

என்று தனது ஆரம்ப உரையில் அவர் குறிப்பிட்டார்.

கலாநிதி முர்ஸிக்கு வெள்ளை மாளிகை தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளதுடன் எகிப்தின் வரலாற்று நிகழ்வான சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கான இந்த மாற்றத்தின் பின்னர் எகிப்தின் புதிய ஜனாதிபதி சகல எகிப்தியர்களின் உரிமைகளையும் மதித்து செயற்பட வேண்டும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் வெள்ளை மாளிகை அறிக்கை விட்டிருக்கின்றது.

அத்தோடு எகிப்தின் இந்த வரலாற்று நிகழ்வானது ஏற்கனவே நிலவி வருகின்ற பிராந்திய அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அரசியல் உறுதிப்பாட்டுக்கும் ஊறு விளைவிக்காதென தாம் நம்புவதாகவும் எகிப்து வாழ் பெண்கள் மற்றும் சிறுபான்மைக் கிறிஸ்தவர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் வெள்ளை மாளிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது இப்படியிருக்க தன் பங்குக்கு இஸ்ரேலும் எகிப்தின் புதிய ஜனாதிபதியை வாழ்த்தியிருப்பதோடு இஃக்வான்களின் வேட்பாளர் வெற்றி பெற்றிருப்பதை நாம் மதிக்கின்றோம் எகிப்தியரின் தெரிவை நாம் கண்ணியப்படுத்துகின்றோம். அத்தோடு எகிப்தின் அமைதியான நிலை தொடர்ந்தும் புதிய தலைவரினால் பேணப்பட வேண்டும் என்று தாம் அழைப்பு விடுப்பதாகவும் இஸ்ரேலின் பிரதமர் காரியாலயம் அறிக்கை விடுத்துள்ளது.

அத்தோடு எகிப்துடன் கடந்த காலங்களில் தாம் கொண்டிருந்த ஆரோக்கியமான உறவுகளுக்கு எவ்வித குந்தகங்களும் விளையாது என தாம் நம்புவதாகவும் இருநாடுகளும் நட்புறவு பூண்டு வாழ்வதையே இரு நாட்டு மக்களும் விரும்புவதாகவும் இந்த விடயத்தில் புதிய நிர்வாகத்தின் ஒத்துழைப்;பை எதிர்பார்ப்பதாகவும் அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கின்றது.

பிரித்தானியாவின் வெளியுறவுச் செயலாளரும் எகிப்தின் வரலாற்று வெற்றிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

அவரது கருத்துக்களும் பெரும்பாலும் அமெரிக்க மற்றும் இஸ்ரேல் அறிக்கைகளையே ஒத்திருக்கின்றது.

இந்த அனைத்து நிலைகளையும் முன்னிறுத்திப் பார்க்கின்ற போது எகிப்தில் இஃக்வான்களின் போராட்டம் இனித்தான் அதன் முழு வடிவத்தை நோக்கிப் பயணிப்பதற்கான காலம் வந்திருக்கின்றது என்பது தெளிவாகின்றது.

ஏனெனில் இதுவரை காலமும் இஃக்வான்கள் எகிப்திய அரசாங்கங்களின் அடக்குமுறைகளிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதே பெரிய போராட்டமாக இருந்தது. ஆனால் இப்போது அமெரிக்க- இஸ்ரேல் கூட்டணியின் சதிகளிலிருந்தும் ஏனைய மேற்கத்தேய சக்திகளின் கெடுபிடிகளிலிருந்தும் ஏன் மதச்சார்பின்மையிலிருந்தும் அதனால் போஷித்து வளர்க்கப்பட்டிருக்கின்ற எகிப்திய இராணுவத்திடமிருந்தும் முழு எகிப்தையும் பாதுகாக்க வேண்டிய மாபெரும் பொறுப்பை இப்போது அவர்கள் சுமந்திருக்கின்றார்கள்.

இந்தப் போராட்டம் நிச்சயமாக அராஜகங்களிலிருந்து தம்மைப் பாதுகாக்க அவர்கள் மேற்கொண்ட தியாகங்களை விட மிக அதிகமான தியாகங்களையும் பொறுமையையும் வேண்டி நிற்கின்ற போராட்டம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதே நேரம் இப்போது எகிப்தில் இந்தப் போராட்டத்துக்கு முகம் கொடுக்கக் கூடிய சக்தியும் தகுதியும் உள்ள ஒரே அமைப்பு இஃக்வான்கள் தான் என்பதிலும் சந்தேகமில்லை.

இதற்கு முன்னர் சூடானும் துருக்கியும் தாண்டி வந்த பாதைகளிலிருந்து இஃக்வான்கள் கற்றுக் கொள்ள வேண்டிய விடயங்கள் பல இருக்கின்றன. ஏனெனில் இஸ்லாமிய ஆட்சி உலகில் எங்கு ஏற்பட்டாலும் அவற்றில் ஒற்றுமைகள் நிறையவே இருக்கின்றன. ஒன்றிலிருந்து இன்னொன்று கற்றுக் கொள்வதற்கும் நிறையவே இருக்கின்றன.

எகிப்தின் அரசியல் தொடர்பான சிக்கல் இன்னும் நிலவுகின்றது, இராணுவம் அதிகாரத்திலிருந்து முற்றாக ஒதுங்கும் வரை தஹ்ரீர் சதுக்கத்தை விட்டு வெளியேற மாட்டோம் என்று அங்கு ஒன்று திரண்டு கடந்த ஒரு வாரமாக கூடாரமடித்திருக்கும் இஃக்வான் ஆதரவாளர்களும் ஏனையவர்களும் கோஷமெழுப்பிக் கொண்டிருக்கின்றனர். பாராளுமன்றம் கலைக்கப்பட்டு விட்டது என்பதை இராணுவக் கவுன்சில் உறுதிப்படுத்தியிருக்கின்றது. ஆனால் அப்படிக் கலைக்கப்பட்டது சட்டவிரோதமானது யாப்புக்கு முரணானது என இஃக்வான்கள் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. ஷபீக்கின் ஆதரவாளர்கள் ஜனாதிபதித் தேர்தலின் முடிவின் பின்னர் வீதிக்கிறங்குவார்களா என்ற சந்தேகம் நிலவுகின்றது. விஷேட அதிரடிப் படையினரும் கலவரங்கள் ஏற்படின் கட்டுப்படுத்தவென விஷேட பொலிஸாரும் கெய்ரோவின் வீதிகளெங்கும் குவிக்கப்பட்டிருக்கின்றனர். ஆர்ப்பாட்டங்கள் புரட்சிகள் என்ற பெயரில் அரச சொத்துக்களுக்கு குந்தகம் விளைவிக்கப்படும் பட்சத்தில் இராணுவப் பலம் பிரயோகிக்கப் படும் என இராணுவக் கவுன்சில் மக்களை எச்சரித்திருக்கின்றது.

இத்தகைய இக்கட்டான சூழ்நிலைகள் தான் எகிப்தில் இந்த நிமிடம் வரை தொடர்கின்றது. அதே நேரம் முர்ஸியின் வெற்றியை காஸாவிலும் லிபியாவின் பெங்காஸியிலும் இன்னும் பல முஸ்லிம் நாடுகளிலும் மக்கள் தமது வெற்றியாகக் கொண்டாடுகின்றனர். உலக நாடுகளின் தலைவர்களிடமிருந்து கெய்ரோவுக்கு வாழ்த்துச் செய்திகள் வந்த வண்ணமுள்ளன.

ரோமர்களிடமிருந்து அன்று எகிப்தின் ஆட்சியை முஸ்லிம்கள் கைப்பற்றியதன் பின்னர் தான் எகிப்து உலகின் முதலாவது பல்கலைக்கழகத்தைப் பிரசவித்தது. இன்று அந்த மண்ணின் மைந்தர்களாகிய முஸ்லிம்கள் மதச்சார்பின்மைக்கு முகத்தில் குத்தி குப்புறத் தள்ளி விட்டு ஓர் இஸ்லாமிய இயக்கத்தின் கையில் தமது தலைமைத்துவத்தைக் கொடுத்திருக்கின்றது.

21ம் நூற்றாண்டு இஸ்லாத்தின் நூற்றாண்டு என்று கூறப்பட்டு வந்த ஆரூடங்கள் பலிக்குமா? அல்லது அதற்கு இன்னும் காலம் கனியவில்லையா? இன்ஷா அல்லாஹ் எகிப்தினதும் துருக்கியினதும் -துணூசியாவினதும்- நகர்வுகள்தான் இனி அதற்கான பதிலை சொல்ல வேண்டும்.

About these ads

Written by lankamuslim

July 2, 2012 at 12:07 am

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,816 other followers

%d bloggers like this: