தம்புள்ளை மஸ்ஜித் முற்றுகைத்தாக்குதல் இடம்பெற்று இரண்டு மாதங்கள் பூர்த்தி: ஆபத்து நீங்கிவிட்டாதா ?
M.ஷாமில் முஹம்மட்
கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி தம்புள்ள கைரிய்யா ஜும்ஆ மஸ்ஜித் பெளத்த தீவிரவாதிகளால் முற்றுகை இடப்பட்டு தாக்கப்பட்டு ஜூம்ஆ தொழுகை நடாத்த விடாது முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு இன்றுடன் இரண்டு மாதங்கள் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் தம்புள்ளை மஸ்ஜிதை சூழந்த ஆபத்து நீங்கிவிட்டதா இல்லையா என்பதை அறியாத நிலையில் முஸ்லிம் சமூகம். இதை பற்றி இங்கு பார்ப்போம்
அந்த கறைபடிந்த சம்பவம் இடம்பெற்று மூன்றாவது தினம் 24.05.2012 அன்று காலையில் தம்புள்ளையில் புத்த சாசன அமைச்சின் ஏற்பாட்டில் அமைச்சின் செயலாளர், மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் மற்றும் மஸ்ஜிதை தாக்கிய தம்புள்ளை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி இனாமலுவே சுமங்கள தேரர் ஆகியோர் கலந்துகொள்ள , தம்புள்ளை நகரில் உள்ள ரஜமஹா விகாரையின் புனிதப் பிரதேசம் என்று அவர்கள் கூறும் பகுதியை விகாரைக்காக அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்தை வரும் 6 மாதங்களுக்குள் நிறைவேற்றி முடிக்க வேண்டுமென்று தீர்மானம் எடுக்கப்பட்டது .இதனால் வரும் 6 மாதங்களுக்குள் புனித பிரதேசம் என்று கூறப்படும் பகுதியிலுள்ள சகல சட்ட விரோதமான கட்டடங்கள் அகற்றப்படும் என்று தீர்மானிக்கப்பட்டதாக இனாமலுவே சுமங்கள தேரர் தெரிவித்திருந்தார் .
அதேதினம் 24.05.2012 மாலையில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ,மாத்தளை மாநகர மேயர் ஹில்மி கரீம் ஆகிய இருவரும் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் பெரேராவுடன் இனாமலுவ மகா நாயக்க தேரரை சந்தித்து பேசினர். அதன்போது தம்புள்ள இனாமலுவே சுமங்கள தேரர் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விடம் மூன்று மாதங்களுக்கு -மட்டும் -எவ்வித பிரச்சினைகளும் இன்றி குறித்த பள்ளிவாசலில் சமய அனுஷ்டானங்களை பிரதேச மக்கள் நிரைவேற்ற முடியுமென என அறிவித்தார் .
அதை தொடர்ந்து நாட்டின் பிரதமர் தம்புள்ள மஸ்ஜித் அங்கிருந்து அகற்றப்படும் என்று அறிவித்தார். அந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் மஸ்ஜித் அகற்றப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பு இன்று வரை வாபஸ் பெறப்படவில்லை.
இந்த நிலையில் அண்மையில் தம்புள்ளை புனித பூமி பிரதேச அபிவிருத்தி பணிகளை நகர அபிவிருத்தி அதிகார-UDA- சபையிடம் கையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று தம்புள்ளை ரங்கிரி ரஜமஹா விகாரையின் விகாராதிபதி இனாமலுவ சுமங்கள தேரர் தெரிவித்தார். அதன் பின்னர் தம்புள்ள மஸ்ஜித் பகுதி நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளால் அளவைக்கு உட்படுத்தப் பட்டதாக தம்புள்ள மஸ்ஜித் நிர்வாகம் அறிவித்தது .
இந்த நிலையில் மஸ்ஜித் தாக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்துள்ளது. அதாவது தம்புள்ள இனாமலுவ மகா நாயக்க தேரர் தம்புள்ள பள்ளிக்கு வழங்கிய மூன்று மாத கால கொடுவில் இரண்டு மாதங்கள் முடிவுக்கு வந்துள்ளது. இன்னும் ஒரு மாத காலம் எஞ்சியுள்ளது என்பதுதான் உண்மை . கடந்த மே மாதம் சண்டே லீடர் ஊடகவியலாளர் நிரஞ்சலா ஆரியவன்ஷாவுக்கு வழங்கிய பேட்டியில் ” இன்று நாங்கள் எங்கள் கையில் பெளத்த கொடியுடன் வந்தோம் . ஆனால் அடுத்த முறை இது வித்தியாசமாக இருக்கும்” என்று பகிரங்கமாக கூறினீர்கள். அப்படியானால் அடுத்த முறை மதவன்முறை ஏற்பட்டு ,இரத்தம்சிந்தும் நிலை ஏற்பட்டால் அதற்கு நீங்கள் பொறுப்பு கூறுவீர்களா ? என்று வினவினார்.
அதற்கு இனாமலுவ சுமங்கள தேரர் அதற்கான பொறுப்பை இந்த நாட்டின் செயலற்ற ஆளும் தரப்புதான் பொருப்பு கூறவேண்டும் . இந்த பள்ளியை பற்றி அவர்களின் அரசாங்கத்தின் முஸ்லிம் தலைவர்கள் பொய்களை பரப்புகிறார்கள் .இந்த நாட்டின் பிரதமர் இதன் மீது ஒரு தீர்மானத்தை எடுத்துள்ளார். என்பதை அவர்கள் கண்டிப்பாக விளங்கிக் கொள்ள வேண்டும். பிரதமர் இந்த நாட்டின் இரண்டாவது குடிமகன். அவர் பெளத்த சாசன அமைச்சரும் கூட. அவர் அரசாங்கத்தின் முடிவை பிரதிபலித்துள்ளார். என்று தெரிவித்திருந்தார். மஸ்ஜித் அகற்றப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பால்தான் அவர்கள் இன்று மௌனமாக இருக்கிறார்கள். அதாவது மஸ்ஜித் அகற்றப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பு வாபஸ் பெறப்படாமையால் மஸ்ஜித் அகற்றப்படும் என்ற நம்பிக்கையில் காத்திருகிறார்கள் .அதுவல்லாமல் அவர்கள் அரச தரப்பால் சாத்தப்படுத்தப் படவில்லை , அல்லது அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை என்று எதுவும் இடம்பெறவில்லை என்பது கவனத்தில் கொள்ளப் படவேண்டும்.
ஜனாதிபதி நாடு திரும்பியதும் சிறந்த தீர்வை தருவார். என்று முஸ்லிம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது, ஆனால் முஸ்லிம்கள் எதிர்பார்த்த அந்த அறிவிப்பும் இன்னும் வெளிவரவில்லை ,பாதிக்கப்பட்ட முஸ்லிம் தரப்பு விடையத்தில் எந்த நடவடிகையும் இடம்பெற்றதாக தெரியவரவில்லை.
அரசு தரப்பு பெளத்த தீவிரவாத தரப்புடன் இது தொடர்பாக பேசி அவர்களை சாந்தப்படுத்தவில்லை அதுதான் உண்மையாக இருக்கவேண்டும். அப்படி ஒரு சம்பவம் இடம்பெற்றிருந்தால் தம்புள்ள மஸ்ஜிதுக்கு வழங்கப் படும் 24மணிநேர போலீஸ் பாதுகாப்பு நீக்கப்பட்டிருக்கும். ஆனால் இரவும் பகலும் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர் . இது அரசு தரப்பு எந்த காத்திரமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதைத்தான் காட்டுகிறது . பெளத்த தீவிரவாதிகளுடனும் பேசவில்லை , முஸ்லிம் தரப்புடனும் பேசவில்லை எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கவும் இல்லை. மறுபுறம் அரசாங்கம் இரட்டை வேடம் பூண்டுள்ளதாகத்தான் பார்க்க முடிகிறது. இது மிகவும் ஆபத்தானது .
தம்புள்ள மஸ்ஜித் நிலை இவ்வாறு இருக்க, இன்று தம்புள்ள மஸ்ஜித் தொடர்பாக எந்த ஆளும் தரப்பு முஸ்லிம் அரசியல்வாதியும் பேசுவதை கண்டிப்பாக தவிர்த்து வருகிறார்கள் , மறுபுறம் பெளத்த தீவிரவாதிகள் தொடந்தும் ஒன்றன் பின் ஒன்றாக முஸ்லிம் எதிப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகிறார்கள் . அதை தொடர்ந்தும் நியாயப்படுத்தி வருகிறார்கள். தம்புள்ளை ரங்கிரி ரஜமஹா விகாராதிபதி. 65 ஆண்டுகால மஸ்ஜிதுக்கு எதிரான தனது வன்முறைகளையும் நியாயப்படுத்திவருகிறார்.
இன்று அரசியல்வாதிகளின் மௌனம், அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் மௌனம் என்று மௌனங்கள் தொடர தம்புள்ள மஸ்ஜித் முற்றுகை தாக்குதல் மூன்றாவது மாதத்தை எட்டியுள்ளது. மஸ்ஜிதுக்கான தொடரும் போலீஸ் பாதுகாப்பு ஆபத்து இன்னும் நீங்கவில்லை என்பதை காட்டுகிறது. பெளத்த தீவிரவாத தரப்பு தாம் விதித்த காலக் கெடுவை எதிர்பார்த்து இருக்கிறது.
ஆகவே முஸ்லிம் தரப்பு மௌனம் கலைக்கவேண்டும். முஸ்லிம் அரசியல்வாதிகள் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் சீட்டுக்காக தம்புள்ளை மஸ்ஜிதை தாரைவார்த்து கொடுக்க முற்படக் கூடாது . தீர்வுகாண அழுத்தங்களை கொடுக்கவேண்டும் .







