கேசன்கேணி காணிகளை இராணுவம் சுவீகரிக்க இடைக் காலத்தடை
BBC Tamil : இராணுவ முகாம் ஒன்றை அமைப்பதற்காக அம்பாறை மாவட்டம் ஒலுவில் கேசன்கேணி கிராம மக்களின் காணிகளை சுவீகரிக்கும் இராணுவத்தின் நடவடிக்கைக்கு இலங்கை உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இரண்டு கிராமவாசிகளால் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றை விசாரித்த பின்னரே உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன்படி இந்த வழக்கு அடுத்த விசாரணைக்கு வரும்வரை, அதாவது அடுத்த மாதம் 23ஆம் திகதிவரை இந்த இடைக்காலத்தடை அமலில் இருக்கும்.
கடந்த டிசம்பர் மாதத்தில் தமது கிராமத்துக்கு வந்த இராணுவத்தினர், அங்கு தாம் முகாம்களை அமைக்கவுள்ளதால், அங்கிருந்து கிராம மக்கள் வெளியேற வேண்டும் என்று கூறியதாக தமது மனுவில் தெரிவித்து மனுதாரர்கள், இந்த உத்தரவை அடுத்து சில கிராமவாசிகள் ஏற்கனவே அங்கிருந்து வெளியேறிவிட்டதாகவும், இந்த முகாம் காரணமாக சுமார் 50 குடும்பங்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கு விசாரணையில் கருத்து வெளியிட்ட அரச சட்டவாதி, மனுதாரர்களுக்கு வழங்கப்பட்ட காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் கடந்த ஒக்டோபர் மாதத்துடன் காலாவதியாகியுள்ளதால், அவற்றை கையகப்படுத்த அரசாங்கத்துக்கு அதிகாரம் உள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன் இது குறித்து பிரதிவாதிகளிடம் மேலதிக ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள கால அவகாசம் வேண்டும் என்றும் அரச சட்டவாதி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.இதற்கமைய வழக்கு விசாரணை அடுத்த மாதம் 23 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. -BBC Tamil
……………………………………………………………………………………………………………………
குறிப்பு
மேற்படி வழக்கு மனு ஏ.எல்.கதீஜா உம்மா, ஆதம்பாவா இப்ராலெப்பை ஆகியோர் தமது சார்பிலும் கிராம மக்கள் சார்பிலும் இம்மனுவை தாக்கல் செய்துள்ளனர். இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரிய, கிழக்கு மாகாண இராணுவத் தளபதி, அம்பாறை மாவட்ட செயலாளர் சுனில் கன்னங்கர, அம்பாறை மாவட்ட பிரதி காணி ஆணையாளர், காணி ஆணையாளர், சட்டமா அதிபர் ஆகியோர் இம்மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.







