கட்டுவன துப்பாக்கிச்சூட்டுக்கு அரசே பொறுப்பு:JVP
ஹம்பாந்தோட்டை – கட்டுவன பகுதியில் இடம்பெற்ற ஆட்கொலை சம்பவத்துடன் ஜேவிபி உட்பூசலை காட்டி அரசாங்கம் தப்பித்துக் கொள்ளாமல் முறையான விசாரணை நடத்தி குற்றவாளிகளை அடையாளம் காண வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
கட்டுவன துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை மக்கள் விடுதலை முன்னணி கடுமையாகக் கண்டிக்கிறதென முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணி அலுவலகத்தில் இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு கண்டனம் வெளியிட்டார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
அரசாங்கத்தின் ஆட்கொலை கொள்கை தற்போது கட்டுவனயிலும் அரங்கேற்றப்பட்டுள்ளது. இந்த கொலைக்கு அரசாங்கம் முழுமையான பொறுப்பை ஏற்க வேண்டும். கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் குறித்து நாம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளோம்.
முறைப்பாடுக்கு அமைய விசாரணை நடத்தி குற்றவாளிகளை அடையாளம் காண வேண்டும். பொலிஸார் பொய் கூறாமல் முறைப்பாட்டின் அடிப்படையில் சாட்சிகளின் அடிப்படையில் நியாயமான விசாரணை நடத்த வேண்டும். வழமைபோன்று வேறு தரப்பினரின் தலையில் குற்றத்தை சுமத்தி அரசாங்கம் மக்களை ஏமாற்றி தப்பிக்க முயற்சிக்கக்கூடாது.
முன்னணி சோசலிசக் கட்சிக்கும் கொலைக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை. ஹம்பாந்தோட்டையில் அல்ல வேறு எப்பகுதியிலும் அவர்களால் அதனை செய்யவும் முடியாது. ஜேவிபி குழுக்களுக்கு இடையில் உள்ள உட்பூசல் என்று கூறினால் உட்பூசல்காரர்கள் யார் என அடையாளம் காட்ட வேண்டும்.
கட்டுவன கொலை தொடர்பில் அரசாங்கம், பொலிஸார் முறையாக, நீதி அடிப்படையில் செயற்படாவிட்டால் நாம் நாட்டு மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்.
இதன் முதல் போராட்டம் எதிர்வரும் 19ம் திகதி இடம்பெறும். அன்றைய தினம் சர்வதேச நாடுகளில் உள்ள ஜேவிபி குழுக்களும் ஆர்ப்பாட்டம் நடத்தும். துப்பாக்கியை காட்டி மக்களை பயமுறுத்துவதை இந்த அரசாங்கம் கைவிட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். (அத தெரண)







