தனி ஈழ வாக்கெடுப்பு கோரி கருணாநிதியின் டெஸோ தீர்மானம்
BBC Tamil: தனித் தமிழ் ஈழம் அமைந்திட ஐ.நா.மன்றம் தமிழர் வாழும் பகுதிகளில் கருத்தறியும் வாக்கெடுப்பு ஒன்றை நடத்த வேண்டும் என்றும் அதற்கு இந்திய அரசு எல்லா விதமான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பின் முதல் அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு (Tamil Eelam Supporters Organisation – TESO) ஏறத்தாழ 27 ஆண்டுகளுக்குப் பிறகு திமுகவால் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தலையீட்டினையடுத்து பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, கொசோவோ, தெற்கு சூடான், கிழக்கு திமோர், மாண்டிநீக்ரோ போன்றவை தனி நாடுகள் என்ற அங்கீகாரத்தை ஏற்கனவே பெற்றிருக்கின்றன என்று இத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுபோல இலங்கையில் வாழும் தமிழர்கள் மற்றும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் இலங்கையில் தமிழர் பகுதிகளில் புதியதாகக் குடியேற்றப்பட்ட சிங்களர்களுக்கு இந்தப் பொது வாக்கெடுப்பில் வாக்குரிமை வழங்கப்படக் கூடாது என்றும் நடத்தப்படும் பொது வாக்கெடுப்பு முடிவின் அடிப்படையில் தனி ஈழம் அமைவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அத்தீர்மானம் மேலும் கூறுகிறது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் திமுகதலைவர் கருணாநிதி, ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டுவிட்ட நிலையில், இலங்கைப் பிரச்சினையை தான் கையிலெடுத்துக் கொண்டுள்ளதாகக் கூறுவது தவறு, எப்போதுமே திமுக இலங்கைத் தமிழர் நல்வாழ்விற்காக போராடிவந்துள்ளது என்று வாதிட்டார்.
போரின் இறுதிக்கட்டங்களில் தாம் உண்ணா நோன்பு மேற்கொண்டும் மஹிந்த ராஜபக்ச அரசால் தான் ஏமாற்றப்பட்டதாகவும் அவர் கூறினார் .
தங்களது கோரிக்கையை வலியுறுத்தும் வண்ணம் திமுக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகுமா எனக் கேட்டபோது, எப்படி ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தீர்மானத்தின் போது மத்திய அரசின் மீது அழுத்தம் கொடுத்து அம்முயற்சியில் திமுக வெற்றி பெற்றதோ, அவ்வாறே இப்போதும் செய்யமுடியும் என தான் நம்புவதாக அவர் கூறினார்.
தமிழக மக்களின் ஆதரவைத் திரட்டி மத்திய அரசை இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படவைக்க முடியும் என்றார். பிரபாகரன் இறந்துவிட்டாரா என்ற கேட்டபோது, வீரர்களுக்கு மரணமில்லை என்று கருணாநிதி கூறினார்







