கிறிஸ்தவ பாடசாலையில் சரஸ்வதி உருவச்சிலை வைத்தமையும், அகற்றியமையும்: கண்டங்கள்
எமது காத்தான்குடி செய்தியாளர்கள்: மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையினுள் சரஸ்வதி உருவச்சிலை நிர்மாணித்த விவகாரமானது கிஸ்த்தவ மக்களின் உள்ளங்களை புண்படுத்தும் செயலாகுமென வடக்கு கிழக்கு திரு மாவட்ட அவையின் செயலாளரான அருட்தந்தை ஷாம் சுரேந்திரன் தெரிவித்தார். இந்த உருவச்சிலையை உடனடியாக அகற்றுமாறு மட்டக்களப்பு மெதடிஸ்த்த திருச்சபை பாடசாலை கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பசில் ராஜபக்ச உட்பட ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டு வந்ததை அடுத்து கடந்த -23.2.2012- வியாழக்கிழமை காலை இந்த உருவச்சிலை அகற்றப்பட்டுள்ளது.
அதேவேளை பாராளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும் கிழக்கு இந்து ஒன்றியத் தலைவருமான சீ.யோகேஸ்வரன் உருவச்சிலை அகற்றப்பட்டதிற்கு கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரபல வின்சன்ட் பெண்கள் பாடசாலையில் பல காலமாக இருந்து வந்த சரஸ்வதி சிலை உடைக்கப்பட்டமையின் பின்னனியில் முதலமைச்சரும் அரசியல் வாதிகளும் செயற்பட்டதை அனுமதிக்க முடியாது என மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும் கிழக்கு இந்து ஒன்றியத் தலைவருமான சீ.யோகேஸ்வரன் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார். வெளியிட்டுள்ளார். பாடசாலையில் கல்வி பயிலும் இந்து மாணவர்களும் பெற்றோர்களும் மனம் உடைந்துள்ளதாக அறிய முடிகிறது. இயலுமான வரையில் உடைத்த இடத்தில் சிலை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் இதனை சம்மந்தப்பட்டவர்களின் கவனத்திற்கும் கொண்டு வரப்படும்
கல்வியின் தெய்வத்தை கல்வித்தளம் ஒன்றில் வைத்து வழிபடுவதில் எந்த தப்பும் இல்லை அந்த வகையில் இச் சிலை இருந்ததில் எந்தத் தவறும் இல்லை. தமிழர்களையும் நினைவிடங்களையும் விற்று அரசியல் செய்யும் கிழக்கு முதலமைச்சர் இந்துக்களின் மத சின்னங்களை அழிக்க கங்கணம் கட்டி அலைவது எதிர் காலத்தில் பாரிய சிக்கல்களைச் சந்திப்பதை யாரும் தடுக்க முடியாது.
எது எவ்வாறிருப்பினும் சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலே கிழக்கு முதல்வரின் செயற்பாடு சிங்களத்தை திருப்திப்படுத்த எவ்வளவு கரிசனையே அதைப் போல் தமிழர்களை நினைக்காமல் தேர்தல் காலத்தில் தமிழர்களிடம் என்ன மனநிலையுடன் இருக்கிறார் என்பது புரியாத புதிராக உள்ளது. எவ்வாறாயினும்; இவ்வாறான செயற்பாட்டை அனுமதிக்க முடியாது என தனது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை வடக்கு கிழக்கு திரு மாவட்ட அவையின் செயலாளரான அருட்தந்தை ஷாம் சுரேந்திரன் தெரிவித்துள்ள தகவலில் :மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையினுள் சரஸ்வதி உருவச்சிலை நிர்மாணித்த விவகாரமானது கிஸ்த்தவ மக்களின் உள்ளங்களை புண்படுத்தும் செயலாகுமென வடக்கு கிழக்கு திரு மாவட்ட அவையின் செயலாளரான அருட்தந்தை ஷாம் சுரேந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையினுள் கடந்த புதன் -22.2.2012- இரவு 12 மணியளவில் சரஸ்வதியின் உருவச்சிலையொன்று நிர்மாணிக்கப்பட்டு அது -23.2.2012- அமைச்சர் பசில் ராஜபக்சவினால் திறந்து வைக்கப்படவிருந்தது.
இந்நிலையில் இந்த உருவச்சிலையை உடனடியாக அகற்றுமாறு மட்டக்களப்பு மெதடிஸ்த்த திருச்சபை பாடசாலை நிருவாகத்தை கேட்டுக்கொண்டதுடன் இதற்கான கண்டனத்தையும் பாடசாலை நிருவாகத்திடம் தெரிவித்தது.
இது அகற்றப்படாத நிலையில் நாம் கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பசில் ராஜபக்ச உட்பட ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டு வந்தோம்.
இதையடுத்து -23.2.2012- வியாழக்கிழமை காலை இந்த உருவச்சிலை அகற்றப்பட்டது.
இந்தப்பாடசாலை 1820 ஆம் ஆண்டு அருட்தந்தை வில்லியம் ஓல்ட் எனும் இங்கிலாந்து மிஸனரியினால் ஆரம்பிக்கப்பட்டது. இந்தப்பாடசாலை கிறிஸ்த்தவ மெதடிஸ்த்த திருச்சபையின் ஆலோசனைப்படியே வழிநடாத்தப்பட்டு வருகின்றது.
அரசாங்கத்திற்கு 1963 ஆம் ஆண்டு மெதடிஸ்த்த திருச்சபையினால் பாடசாலைகளை கொடுக்கும்போது செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாடசாலையின் வழமையான நடைமுறைகளுக்கு மாறான விதத்தில் எந்தவொரு புதிய காரியத்தையும் அறிமுகப்படுத்தும் போது மெதடிஸ்த்த திருச்சபையை கலந்து ஆலோசிக்க வேண்டுமென்பதே அந்த ஒப்பந்தத்தின் சரத்தில் ஒன்றாகும்.
இது ஒரு கிறிஸ்த்தவ பாடசாலையாகும் இந்த பாடசாலையில் சகல சமயத்தையும் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்கின்றனர். தேவையற்ற விதத்தில் சமய முறுகலான நிலையை ஏற்படுத்த முயற்சிக்கக் கூடாது.
இந்த பாடசாலை நிருவாகம் இந்த செயலை மேற்கொண்டுள்ளது. ஒற்றுமையாக வாழ்கின்ற சமய சமூகங்களுக்கிடையில் அமைதியற்ற சூழலை ஏற்படுத்த இந்த பாடசாலை நிருவாகம் இவ்வாறான விடயங்களை ஏற்படுத்துகின்றது.
இது இந்துக்களுக்கெதிரான செயற்பாடல்ல கிறிஸ்த்தவ மக்களும் இந்துக்களும் ஒன்றாகவே செய்றபடுகின்றோம்.ஆனால் மெதடிஸ்த்த திருச்சபையின் எந்த வித ஆலோசனைகளையும் பெறாமல் இந்த உருவச்சிலை நிர்மானிக்கப்பட்டது. இவர்கள் இந்த உருவச்சிலையை நிர்மானித்து இருக்கக் கூடாது.
இது நிர்மாணிக்கப்பட்டமைக்கு எமது திருச்சபையினால் வன்மையான கண்டனங்களை தெரிவிக்கின்றோம்.இப்பாடசாலையை பொறுத்தவரைக்கும் இங்கு இவ்வருட புதிய மாணவர்கள் அனுமதியின் போது கிறிஸ்த்த மாணவர்கள் திட்டமிட்டு குறைக்கப்படுகின்றனர்.
ஓவ்வொரு வருடமும் புதிய மாணவர்கள் அனுமதியின் போது கிறிஸ்த்தவ மாணவர்கள் திட்டமிட்டு குறைக்கப்படுவதை மக்கள் எமது திருச்சபையிடம் முறையிட்டு சுட்டிக்காட்டி வருகின்றனர்.
இவ்வருடம் இப்பாடசாலையில் அனுமதிக்கப்பட்ட 134 புதிய மாணவர்களில் 12 கிறிஸ்த்தவ புதிய மாணவர்கள் மாத்திரமே இவ்வாண்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் ஒரு மாணவர் கல்வியமைச்சுக்கு சென்று அனுமதி பெறவேண்டிய நிலை ஏற்பட்டது.
எனவே பல் சமய சூழலில் இவ்வாறு இவர்கள் நடந்து கொள்வதை கண்டிக்க வேண்டியுள்ளது.மெதடிஸ்த்த திருச்சபை சமய சமூக வேறுபாடின்றி சகலருக்கும் திருப்பணி மற்றும் உதவிகளையும் வழங்கி வருகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அதேவேளை திறக்கப்படவிருந்த சரஸ்வதி சிலை அங்கிருந்து நேற்று அகற்றப்பட்டமைக்கும் அதிபர், ஆசிரியர்களை அவமதித்தமைக்கும் எதிராக இன்று காலை முதல் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று புதிய கட்டத்திறப்பு விழாவிற்கு வருகைதந்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ்வினால் திறக்கப்படவிருந்த சிலையே அகற்றப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இ.ஜெயகரன் மன்னிப்புக் கோரவேண்டும், மாணவரின் குறிக்கோள் கல்வி மட்டுமே, யாழ்ப்பாணம், திருகோணமலை மெதடிஸ்த பாடசாலைகளிலும் கல்வித் தெய்வத்தின் சிலை உண்டு.
கிழக்கு மாகாண கல்விச் செயலாளரே உடனடித் தீர்வு தேவை, குருவை மதி, அதிபரை அவமதியாதே, கல்வித் தெய்வத்தை அவமதியாதே, பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளரின் பணி பாடசாலைக்கா, மெதடிஸ்த திருச்சபைக்கா, வேண்டாம் வேண்டாம் மதவெறி வேண்டாம் போன்ற கோசங்களை எழுப்பினர்.









