நீதிமன்ற நியாயாதிக்கம் ஆராய்வதற்காக குழு நியமனம்
F.M.பர்ஹான்: நீதிமன்ற நியாயாதிக்கம் தொடர்பாக 2010 நவம்பர் மாதம் 10 ஆம் திகதிய 1679/40 ஆம் இலக்க அரசாங்க வர்த்தமானி அறிவித்தல் சம்பந்தமாக எழுந்துள்ள சிக்கல்களை ஆராய்வதற்காக பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சிப்லி அஸீஸ் ஆகியோரிடம் கலந்தாலோசித்த பின்னர் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் ஒரு குழுவை நியமித்துள்ளார்.
அக் குழுவின் தலைவராக உயர் நீதிமன்ற நீதியரசர் காமினி அமரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். அதன் ஏனைய உறுப்பினர்களாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர், சட்டத்தரணி ஜயந்த பதிரண, நீதியமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர்(சட்டம்) திருமதி. பியுமந்தி பீரிஸ் ஆகியோர் கடமையாற்றுவர்.
இக் குழு நீதிமன்ற நியாயாதிக்கங்கள் பற்றிய அரசாங்க வர்த்தமானி சம்பந்தமாக சிக்கல்கள் எழுந்துள்ள ஒவ்வொரு பிரதேச சட்டத்தரணிகள் சங்கங்களினாலும் முன்வைக்கப்படும் முறைப்பாடுகளை கொழும்பில் கூடி விசாரணை செய்யவுள்ளது. இக் குழுவின் முதலாவது கூட்டம் இம் மாதம் 23 ஆம் திகதி (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது.







