ஸ்ரீ லங்கா இஸ்லாமிய போரம் பிரிட்டன் அமைப்பின் ஸ்தாபகருடனான நேர்காணல்
இலங்கை முஸ்லிம்களால் இலங்கைக்கு வெளியில் உருவாக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட பலமான அமைப்பாக ஐக்கிய ராஜ்யத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ லங்கா இஸ்லாமிய போரம் பிரிட்டன் Sri Lanka Islamic Forum UK -SLIF UK- என்ற அமைப்பு கருதப்படுகின்றது. இந்த அமைப்பு கடந்த பத்து ஆண்டுகளாக இலங்கை முஸ்லிம்களின் சமூக, சமய, பண்பாட்டு, கலாசார மற்றும் சமூக, அரசியல் தளங்களில் ஒரு பறந்து பட்டதும் சமமானதுமான வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வரும் ஒரே அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது .
ஸ்ரீ லங்கா இஸ்லாமிய போரம் பிரிட்டன் என்ற இந்த அமைப்பை ஐக்கிய ராஜ்யத்தில் தோற்று வித்தவர்களில் ஒருவரும் அதன் முன்னாள் தலைவருமான அஷ்ஷெய்க் நஜா முஹம்மத் (இஸ்லாஹி). MA. இலங்கை வந்துள்ளார். இவர் இலங்கையில் சமநிலைச் சமுதாயம் , முன்மாதிரி இஸ்லாமிய அரசியல் சமூகம் என்ற எண்ணக் கருக்கள் மீதான செயற்பாட்டு ஆர்வத்தை வெளிப்படுத்துகின்றார். இந்த வகையில் lankamuslim.org அவருடன் ஒரு உரையாடலை செய்துள்ளது. இந்த உரையாடல் நேர்காணல் வடிவில் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு அதன் முதல் பகுதி தற்போது பதிவு செய்யப்படுகின்றது .
ஸ்ரீ லங்கா இஸ்லாமிய போரம் பிரிட்டன் என்ற இலங்கை முஸ்லிம்களை கொண்ட அமைப்பு 2000 ஆம் ஆண்டு பிரிட்டனில் உருவாக்கப்பட்ட அமைப்பாகும் , இது பிரிட்டனில் உள்ள முஸ்லிம்கள் மத்தியில் இஸ்லாமிய போதனைகளை மேற்கொண்டு வருவதுடன் இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சமூக, அரசியல் பிரச்சினைகள் தொடர்பாகவும் செயல்பட்டு வருகின்றது.
இதன் முன்னாள் தலைவர் அஷ்ஷெய்க் நஜா முஹம்மத் (இஸ்லாஹி) இஸ்லாஹியா அரபு கலாசாலையின் அரபு மற்றும் இஸ்லாமியத் துறை பட்டதாரியும், பேராதனிய பல்கலை கழகத்தின் அரசியல் துறை பட்டதாரியுமாவார் . இவர் பிரிட்டினில் இஸ்லாமிய அரசியல் துறைசார்ந்த முதுமாணிப் பட்டமும் பெற்றுள்ளார். மேலும் இவர் தென்கிழக்கு பல்கலை கழகத்தின்அரசியல் துறை உதவி விரிவுரையாளராகவும் இரண்டு வருடங்கள் கடமையாற்றியுள்ளார். அதேபோன்று பிரிட்டன் செல்வதற்கு முன்னர் ஜம்இயதுல் தளபதுள் இஸ்லாமிய என்ற அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினராகவும் அதன் தலைவராகவும் செயல்பட்டுள்ளார். இதன் போது சர்வதேச ரீதியாக இடம்பெற்ற பல மாநாடாடுகளிலும் பங்குபற்றியுள்ளார் இவ்வாறான அனுபவங்களை பெற்ற இவர் ஐக்கிய ராஜ்யத்தில் ஸ்ரீ லங்கா இஸ்லாமிய போரம் பிரிட்டன் என்ற அமைப்பை நிறுவி கடந்த பத்து வருடங்களாக செயல்பட்டு வந்துள்ளார்.
ஸ்ரீ லங்கா இஸ்லாமிய போரம் பிரிட்டன் என்ற அமைப்பு பற்றி கூறுங்கள்
கடந்த 2000 ஆம் ஆண்டு உயர் கல்விக்காக நானும் எனது சில நண்பர்களும் பிரிட்டன் சென்றோம். சென்று சில வாரங்களில் ஒரு கல்வி வட்டத்தை-study circle- ஆரம்பித்து படிப்படியாக 2001 ஆம் ஆண்டின் இறுதியில் ஸ்ரீ லங்கா இஸ்லாமிய போரம் பிரிட்டன் என்ற பெயரில் நாங்கள் அந்த அமைப்பை உருவாக்கினோம். இது 2003 ஆம் ஆண்டு தொடக்கம் ஆண்டுதோறும் அதன் மாநாட்டை நடாத்தி வருகின்றது. இவ்வாறு நாங்கள் செயல்பட்டு வரும்போது புலம்பெயர்ந்து பிரிட்டனில் வாழும் இலங்கை முஸ்லிம்களை பிரிட்டனின் சூழலில் இஸ்லாமிய முறைபேணி வாழ்வதற்கான வழிகாட்டல்களை வழங்க ஆரம்பித்தோம்.
அதேபோன்று இலங்கையில் முஸ்லிம்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் தொடர்பிலும் குறிப்பாக வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல வேலைத்திட்டங்களை மேற்கொண்டோம். இது ஆரம்பத்தில் இலங்கை முஸ்லிம்களின் சமூக, சமய, பண்பாட்டு, கலாசார பெறுமானங்களை பாதுகாத்து பேணி வரும் முயற்சியாக இருந்தாலும் அதன் பின்னர் சமூக அரசியல் விடயத்தில் கவனம் செலுத்தும் அமைப்பாகவும் பிரித்தானியா வாழ் ஏனைய முஸ்லிம் அமைப்புகள் குறிப்பாக முஸ்லிம் கவுன்சில் ஒப் பிரிட்டன்- The Muslim Council of Britain- என்று அழைக்கப்படுகின்ற 500 க்கும் மேற்பட்ட முஸ்லிம் புலம்பெயர் அமைப்புகளை கொண்ட குடை வலையமைப்புடன் உறவுகளை ஏற்படுத்தி கொண்டோம்.
அதேபோன்று சமூக, அரசியல் வேலைகள் அதிகரிக்கும்போது இலங்கை தமிழ் உறவுகளுடன் குறிப்பாக இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழ் அமைப்புகளுடனும், சிங்கள சகோதரர்களுடனும் உறவுகளை ஏற்படுத்திகொண்டோம். இலங்கையின் வடமாகாணத்தை விட்டு பலவந்தமாக வெளியேற்றப் பட்ட முஸ்லிம்கள் தொடர்பாக கடந்த 2009 ஆம் ஆண்டு வரையில் அவர்களின் பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்தும் வேலையில் கூடிய கவனம் எடுத்தோம். அதேவேளை தமிழ் சமூகத்தில் காணப்படும் ஜனநாயக விரும்பிகள்,பல்லின இலங்கையை ஏற்றுகொண்ட தமிழ் உறவுகளுடன் நெருக்கமான உறவுகளை நாம் ஏற்படுத்தி முஸ்லிம் சமூகத்தின் உரிமை தொடர்பான பிரச்சினைகளை நாங்கள் கூட்டாக சர்வதேச சமூகத்திற்கு எடுத்து செல்வதற்கான பல காத்திரமான முயற்சிகளில் ஈடுப்பட்டுள்ளோம்.
இவ்வாறு எமது அமைப்பின் செயல்பாடுகள பல் துறை சார்ததாக அமைத்து கொண்டோம். அதேபோன்று பிரிட்டனின் வெளிநாட்டு விவகாரங்களை கையாளும் அமைப்போடும், ஏனைய சர்வதேச அமைப்புகளோடும் மனித உரிமைகள் , அமைப்புகளோடும் மிகவும் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தி எங்களால் முடிந்த வரைக்கும் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை குறிப்பாக வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகளை முன்னெடுத்து செல்வதற்கு காத்திரமான பல பணிகளை செய்துள்ளோம்.
அதேபோன்று இலங்கையிலிருந்து வருகின்ற முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்து அவர்கள் எந்த கட்சியாக இருந்தாலும் அவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் அனுபவங்களையும் பெற்று எங்கள் பணிகளை மேற்கொண்டிருகின்றோம். இந்த அமைப்பு பிரிட்டன் புலம் பெயர் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் தாக்கமுள்ள அமைப்பாக இன்று உருப்பெற்றுள்ளது.
உங்களின் வேலைத்திட்டங்களில் இதுவரை நீங்கள் சாதகமான அடைவுகளாக பெற்றவை எவை ?
பிரிட்டனில் புலம்பெயர் முஸ்லிம்கள் பிரச்சினைகளை பல மட்டங்களில் கையாளக் கூடிய ஒரு இஸ்லாமிய அமைப்பை பத்து ஆண்டுகளில் உருவாக்கியுள்ளது ஒரு சாதகமான அடைவு என்று நினைக்கின்றேன். ஏனென்றால் மத்திய கிழக்கிற்கு வெளியில் அதிகமான இலங்கை முஸ்லிம்கள் வாழுகின்ற ஒரு நாடாக ஐக்கிய ராஜ்யம் காணப்படுகின்றது. அங்கு வேறு பல அமைப்புகள் காணப்பட்டாலும் அவைகள் சமூக, சமய, பண்பாட்டு, கலாசார மற்றும் சமூக, அரசியல் என்ற பரந்த மட்டத்தில் செயல்படவில்லை. நாம் சிங்கள , தமிழ் மக்களுடன் நெருக்கமான உறைவை வைத்துகொண்டு பிரித்தானியாவில் இருக்கும ஏனைய முஸ்லிம் அமைப்புகளுடனும் நெருக்கமான உறவை பேணி ஒரு முழுமையான அமைப்பை தோற்று வித்திருப்பது உண்மையில் ஒரு பெரிய அடைவு என்று நான் கருதுகிறேன்.
இந்த அமைப்பு இனங்களுக்கிடையே, சிங்கள, தமிழ் சமூகங்களுகிடையே ஒரு இணைப்பு பலமாக செயல்பட்டமைக்கான உதாரனங்களை எமது செயல்பாடுகளில் காணமுடியும் இந்த சமூக அணுகுமுறை ஒரு சிறிய மட்டத்தில் செயல்பட்டாலும் கூட இலங்கையில் அதை செய்வதற்கான முன்மாதிரியான வேலைகளை செய்திருக்கின்றோம் அந்த வகையிலும் இது ஒரு சாதகமான அடைவாக உள்ளது. இது எமது இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு கிடைத்த ஒரு பெரிய அனுபவமாக நான் பார்கிறேன்.
வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் பிரச்சினைகளை சர்வதேச மயப்படுதும் பணியில் நீங்கள் பெற்ற வெற்றிகள் என்ன ?
இதற்கு ஒரு உதாரணத்தை கூறமுடியும் கடந்த 2007 ஆம் ஆண்டு பத்து நாட்கள் தொடராக விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தினோம் இது வடமாகாண முஸ்லிம்களின் வெளியேற்றம் தொடர்பாக வெளிநாடு ஒன்றில் செய்யப்பட்ட ஒளுங்கமைக்கபட்ட முன்னெடுப்பாக கருதப்படும் விடயம். ஏனென்றால் இலங்கையில் இருந்து அரசியல் வாதிகள் சமூக தலைவர்கள் கொண்ட தூதுக் குழுவை வரவளைத்து நாங்கள அந்த பத்து நாள் நிகழ்ச்சியை மேற்கொண்டோம் அதன்போது தமிழ் , முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் பொது நிகழ்சிகளை நடாத்தினோம்.
இலங்கை முஸ்லிம்கள தவிர்ந்த ஏனைய முஸ்லிம்கள் மத்தியில் இது தொடர்பாக ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தது. அதேபோன்று ஊடங்களில் பல நிகழ்சிகளை செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். அதேபோன்று பிரிட்டனுக்கான இலங்கை துதரகத்தில் சிங்கள சமூக ஆர்வலர்கள், புத்திஜிவிகள், சமாதான விரும்பிகள் ஆகியோரை அழைத்து அவர்கள் மத்தியில் வடக்கு முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினோம் குறிப்பாக பிரித்தானிய பாராளுமன்றத்தில் விசேட நிகழ்ச்சி ஒன்றை நடத்தினோம் அதற்கு இலங்கை முஸ்லிம் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களில் முஸ்லிம்கள் செறிவாக வாழும் பிரதேசங்களை பிரதிநிதித்துவப் படுத்தும் ஏழு பேர் வரையில் கலந்து கொண்டார்கள் அந்த நிகழ்ச்சியில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ், சிங்கள , முஸ்லிம் புலம் பெயர் மக்களும் கலந்து கொண்ட ஒரு சிறப்பான பாராளுமன்ற நிகழ்ச்சியாக அதை நிகழ்ச்சியை நாங்கள் நடத்தினோம் .
அது தவிர பிரித்தானியா அரசாங்கதிற்கு கொள்கைகளை வகுத்து கொடுக்கின்ற ”சட்ஹம் ஹவுஸ்” – Chatham House: Independent thinking on international affairs – என்ற அமைப்பின் முக்கிய உறுபினர்களுடன் பல கலந்துரையாடல்களை நாங்கள் மேற்கொண்டோம். இப்படி பிரித்தானியாவில் பல்வேறுபட்ட தரப்புகளுக்கும் வடமாகாண முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம் பற்றிய ஒரு பெரிய விழிப்புணர்வை அந்த பத்து நாட்களாக மேற்கொண்டோம். இலங்கைக்கு வெளியே ஒரு நிறுவன மயப்படுத்தப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு இலக்கை மையமாக கொண்டு மிகவும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்ட ஒரு விழிப்புணர்ச்சி என்று அதனை வரலாற்றில் பதிய முடியும்.
இலங்கையில் யுத்தத்தின் பின்னரான நிலையில் முன்னெடுக்கப்படும் இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளில் முஸ்லிகள் பங்கு கொள்ளும் நிலை தொடர்பான மயக்கமான நிலை காணப்படுகின்றது. முஸ்லிம்கள சுமார் 7000 வரையான உயிர்களையும் பல ஆயிரம் கோடி சொத்துகளையும் இழந்ததன் பின்னரும் பேச்சு மேசைக்கு முஸ்லிகள் இன்னும் செல்லவில்லை. அது தொடர்பான தெளிவற்ற நிலை இருக்கிறது . இது தொடர்பாக சர்வதேச மட்டத்தில் தெளிவுபடுத்தவும் , முஸ்லிம்களுக்கும் பிரச்சினை இருக்கிறது என்று அவர்களும் பேசுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வேலைத்திட்டத்தை ஸ்ரீ லங்கா இஸ்லாமிய போரம் பிரிட்டன் மேற்கொள்ளுமா ?
விடை தொடரும் …..











உங்கள் வேவைகள் தொடர எனது வாழ்த்துக்கள் ,
MC.Haneef
November 29, 2011 at 9:41 am